எதிர்வரும் 21ம் திகதி ( சனி மாலை) நடைபெறவுள்ள, பிரதிகள் மீதான வாசிப்பும் –கலந்துரையாடலும் நிகழ்வில் உரையாட எடுக்கப்பட்டுள்ள இலங்கை –மலையகத்தினை சேர்ந்த பெண் எழுத்தாளரான பிரமிளா பிரதீபனின் “கட்டுபொல்” நாவல், வெளிவந்த பின் பலரது கவனத்தினைப் பெற்றது.இதன் உள்ளடக்கத்தில் மலையக மக்களின் துயர வாழ்வின் இன்னுமொரு பக்கத்தினை பதிவு செய்திருப்பது முக்கியமானதுடன் மலையக இலக்கியத்தில் நான்கு தசாப்தத்திற்குப்பின் ஒரு பெண் நாவலாசிரியரை கொண்டு வந்து சேர்த்திருப்பதுமாகும். இந்த நாவல் பற்றி மு. நித்தியானந்தன் அவர்கள் பேச உள்ளார்.
இந்தப் பிரதி பற்றி மலையகத்தின் மூத்த எழுத்தாளர் மு. சிவலிங்கம் பின்வருமாறு சொல்கிறார் .
“பெருந்தோட்டத் தொழிலின் ஈர வாழ்க்கையை நெடுங்கதைத் தகவலாக இலக்கியத்தில் பதித்திருக்கும் முதல் மலையகப் பெண் படைப்பாளர் திருமதி பிரமிளா பிரதீபன், தென் மாகாணத்தில் ஆர்ப்பிக்கோ கம்பெனிகாரர்களால் உருவாக்கப்பட்டிருக்கும் தாவர எண்ணெய் தயாரிக்கும் கட்டுபொல் பெருந்தோட்டத் தொழில் கொடிதிலும் கொடிதாக எப்படி இந்த ஏழை மக்களை வருத்துகிறது என்பதை சித்தரிக்கிறது.
கோப்பி...கரும்பு...பருத்தி...தேயிலை...தென்னை.... றப்பர்...இன்று 'கட்டு பொல்" என்னும் 'முள்ளுத்தேங்காய்" ... ...மலேசியாவில் 'செம்பனை" என்ற பெயரிலும் அழைக்கப்படும் புதியதொரு பெருந்தோட்டத் தொழிலில் கடைசியாக மாட்டிக்கொண்டு சீரழியும் மலையகத் தொழிலாளர்களின் மீண்டும்...மீண்டும்...துயரத்தில் தோய்ந்து..ஈரமாகிக் கிடக்கும் இன்னொரு பக்க வாழ்க்கையை இந்த நெடுங்கதை மூலம் அறிந்து ஆச்சரியப்படலாம் என்கிறார் மு. சிவலிங்கம்.
நாவலாசிரியர் பிரமிளா பிரதீபன் தனது குறிப்பில்,
- “தேயிலை, தென்னை, இறப்பர், கோப்பி போன்ற உற்பத்திகளினூடாக மாத்திரமே பரவலாக பேசப்படும் மலையக மக்களுக்கு இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறதென காட்டுவதே எனதிந்த முயற்சியின் பிரதான நோக்கம். கட்டுபொல் (முள்தேங்காய்) எனும் மரச்செய்கை இலங்கையின் தென்பகுதியில் பல தோட்டப் பகுதிகளில் நடைமுறையில் காணப்பட்டாலும், அவை பேசப்படுவது மிகவும் குறைவென்றே எனக்குத் தோன்றியது. எம்மவர்கள் இங்கே தம் உயிர்ப்பயம் மறந்து தமது உழைப்பை உச்சளவில் அர்ப்பணிக்கின்றனர் என்பதுவும், அது யோசிக்கப்படாத ஒன்றாக புறக்கணிக்கப் பட்டிருக்கின்றமையும் என்னை உறுத்தத் தொடங்கியதன் விளைவே இந்நாவல்.
இந்நாவலை பொருத்தவரை நான் நேரடியாக பார்த்துணர்ந்த எம்மக்களது இன்னல்களை தெளிவாக சுட்டாமல் தொக்கு வைத்த நிலையிலேயே இக்கதை கருவை நகர்த்தியிருக்கிறேன். என்னதான் அழகியலினூடாக இக்கதைக் களத்தை நான் நகர்த்தியிருந்தாலும், இக்கருவின் பின் எங்கோ ஒரு மூலையில் எப்போதுமே உலராத ஈரப்பசையாய் தாங்கொணா வலியொன்று ஊடுருவிக் கிடப்பதை என்னால் உணர முடிகின்றது.
'தன்னை சிலிர்த்துக்கொண்டிருக்கும் ஒரு முள்ளம்பன்றியை போல...' என நாவலில் ஓரிடத்தில் கட்டுபொல் கொப்பை விபரித்திருக்கின்றேன். அது வெறும் அழகியல் விபரிப்பல்ல. நிஜமாகவே கூரான முட்கள் இடைக்கிடை நீண்டு துருத்திக் கொண்டிருக்கின்றன. கூடவே ஒத்த விஷத்தன்மையையும் கொண்டிருக்கின்றன.முப்பது தொடக்கம் அறுபது கிலோவரை பாரம் காணும் கட்டுபொல் கொப்புக்கள் ஒவ்வொன்றையும் பெண்கள் தம் தலையில் சுமந்து பாதையில் சேகரிப்பதென்பது எத்தனை கொடூரமான விஷயம்..........! பெண்மையின் மென்மையினை தொலைத்த இக்கதைக்கருவில் அழகியல் புனைவை நான் புகுத்தியதும் பெருந்தவறுதானோ என்றொரு குற்றவுணர்வும் என்னை உறுத்திக்கொண்டேயிருக்கிறது. பெண்களது மாதவிலக்கு காலப்பகுதியில் பாரம் சுமத்தல் அறவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று எனும் பட்சத்தில், இங்கே கட்டுபொல் கொப்புக்களை தூக்கும் பெண்கள் அத்தகைய நாட்களை எப்படி கடந்து செல்கின்றார்கள்....? அவர்களது உடல் உபாதையையும், மன உளைச்சளையும் எங்கேனும்...... எப்போதேனும் வெளிப்படுத்தியிருப்பார்களா என்ன....? என்பவை இன்னுமே என்னை குடைந்து கொண்டிருக்கும் கேள்விகள்......... “ என்கிறார் இந்த நாவலாசிரியர் பிரமிளா பிரதீபன் .
பெருமளவு மலையக மக்களை கூலிகளாக வைத்து நடாத்தப்படும் ......... “பாம் ஒயிலுக்கான “முள்ளுத் தேங்காய் உற்பத்தி தொடர்பாக ஊடகவியளாளர் என்.சரவணன் பின்வருமாறு இதன் பின்புலம் பற்றி தெரிவிக்கிறார்....
..... “முள்ளுத்தேங்காய் உற்பத்தியின் மூலம் பல்வேறு சுற்றுப்புறச்சூழல், சமூக பொருளாதார பின் விளைவுகள் ஏற்படுவதுடன் தொழிலாளர் உரிமைகளும் மீறப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதே வேளை கடந்த வருட இறுதியில் நுவரெலியா மாவட்டத்தில் லிந்துல ஹென்போல்ட் தோட்டத்தில் இப்பயிர்செய்கையை மேற்கொள்ள எடுத்த முயற்சிகளை மக்கள் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தியதுடன், பாராளுமன்றம் வரை பேசப்பட்டமையானது இங்கு சுட்டிகாட்ட தக்கது.
இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு கம்பெனிகளால் மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியை நாம் ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அதற்காக ஒன்றிணைந்து செயற்படவேண்யது கட்டாயமானதாகும். என்கிறார்.
இந்தப் பிரதி பற்றி மூத்த எழுத்தாளர் மேமன்கவி பின்வருமாறு சொல்கிறார்....
“கட்டுபொல் எனும் இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் குறிப்பாக மலையக நாவல் இலக்கியத்தில் மிகக்கவனத்தினைப் பெறுவதற்குக் காரணம் இது வரை காலம் மலையகச் சமூக அரசியல் துறையினராலும் மலையக இலக்கியத்தின் புனையாக்கத்துறையிலும் பேசப்படாத ஈழத்தின் தென்பகுதி பெருந்தோட்டப் பகுதி ஒன்றின் மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது என்ற வகையிலும், இதுவரை இந்தப் பெருந்தோட்டத்தின் பயிர் செய்கையான கட்டுபொல்(முள் தேங்காய்) எனும் பயிர் செய்கை பற்றிப் பேசுகின்ற,அப்பயிர் செய்கையில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலையும் பேசுகின்ற முதல் மலையக நாவல் என்ற வகையிலும் இந்த நாவல் நமது கவன ஈர்ப்பைப் பெறுகிறது என்கிறார். இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உங்களை தோழமையுடன் அழைக்கிறோம்.தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...