செம்பனையால் நமது நாட்டுக்கு ஏற்படப்போகும் இழப்புகள் பற்றிய அபாய அறிவிப்பை செய்யவேண்டுமாயின் உலகில் செம்பனை உற்பத்தியில் ஈடுபட்ட முன்னணி நாடுகளின் நிலையை நாம் ஆராய்வது அவசியம். அந்த வகையில் உலகின் செம்பனை ஏற்றுமதியில் இரண்டாவது பெரிய நாடாக திகழும் மலேசியாவை இன்று பார்ப்போம்.
மலேசியாவில் 1870 ஆம் ஆண்டு செம்பனைச் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டுவந்து அதனை நட்டார்கள் ஆங்கிலேயர்கள். அப்போது அதனை ஒரு அலங்காரத்துக்காகத் தான் அறிமுகப்படுத்தினார்கள். 1917 இல் தான் வர்த்தக ரீதியில் செலாங்கூர் என்கிற பகுதியில் தென்னமரன் எஸ்டேட்டில் (Tennamaran Estate)இதனை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.
இந்திய வம்சாவளியினர்
ஆனால் 1960 களில் அதுவரை இறப்பர் தோட்டங்களில் தங்கியிருந்த வர்த்தகத்தை மாற்றி அதற்கு மாற்றீடாக அரசு செம்பனை உற்பத்தியில் இறங்கியது. ஏற்கெனவே இருந்த இறப்பர் தோட்டங்கள் மெதுமெதுவாக அழிக்கப்பட்டதுடன் அங்கு இருந்த வளமான பசுமைக் காடுகளை அழித்தும் செம்பனை பயிர்ச்செய்கையில் மும்முரமாக இறங்கியது அரசு.
பினாங்கு துறைமுகத்தில் வந்திறங்கும் இந்திய வம்சாவளியினர். |
ஆங்கிலேயர் காலத்தில் தென்னிந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தொழிலாளர்களில் இலங்கைக்கு அடுத்ததாக அதிகளவு கூலித் தொழிலாளர்களை ஏற்றுமதி செய்தது மலேசியாவுக்குத் தான். மலேசியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தென்னிந்தியர்களில் 80 சதவீதமானவர்கள் தென்னிந்தியத் தமிழர்கள். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்து 9 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் 1957 இல் மலேசியா பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது.
ஆரம்பத்தில் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் பணியாற்றுவதற்காக பல தமிழர்கள் கொண்டுசெல்லப்பட்டார்கள். மலேசியாவின் ஏற்றுமதியில் இறப்பருக்கும் முக்கிய இடம் உண்டு. அதேவேளை கணிசமான இறப்பர் தோட்டங்கள் அழிக்கப்பட்டு மாற்றீடாக செம்பனைத் தோட்டங்களாக ஆக்கப்பட்டபோது இறப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களும் அதில் வேலை செய்யும் நிலைக்கு உள்ளானார்கள். அதேவேளை செம்பனைத் தோட்டத் தொழிலுக்கு என்றே 1920 தொடக்கம் தமிழகத்திலிருந்து பெருமளவு தொழிலாளர்கள் இடைத்தரகர்கள் மூலம் கொண்டுவந்து குடியேற்றப்பட்டார்கள்.
குறிப்பாக கேறித் தீவு என்கிற தீவுக்கு அவர்கள் 20ஆம் நூற்ற்றாண்டின் ஆரம்பத்தில் குடியேற்றப்பட்டார்கள். 90% இந்தியர்கள் வாழும் இந்தத் தீவில் பல வருடங்களுக்கு முன்னர் பரவிய மலேரியா நோயினால் பாதிக்கப்பட்டு பலர் இறந்து போனார்கள். அப்போது ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை சரிசெய்வதற்காக மாஹ் மேரி (Mah Meri tribe) என்கிற பழங்குடியினரைக் கொண்டுவந்து குடியேற்றி அவர்களைக் கொண்டே அந்தத் தீவின் நிலத்தையும், கிணறுகளையும், பாதைகளையும் நீர் நிலைகளையும் சுத்தம் செய்து செம்பனை உற்பத்தியை அதிகரித்தார்கள்.
அந்தத் தீவில் உள்ள மிகப்பெரிய செம்பனை ஆலையான Sime Darbyயில் இன்றும் பலர் பணி புரிகிறார்கள். அந்தத் தீவில் தமிழர்கள் தமக்கான கோயில்கள், தமிழ் பள்ளிகள், மருத்துவமனை ஆகியனவற்றையும் உருவாக்கி தமது பாரம்பரியங்களைப் பேணி வருகிறார்கள். பல வீதிகளுக்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டுள்ளன. அந்தத் தீவின் பெரும்பான்மையினர் தமிழர்களே. அத்தோடு இங்கு வாழும் பழங்குடியினரும் மலாய் மக்களும் கூட தமிழ் பேசுகின்றனர். அதே போல தமிழ் மக்கள் மலாய் மொழியோடு பழங்குடியினர் மொழியையும் பேசுகின்றனர்.
இலங்கையின் பரப்பளவுக்கு சமன்?
இன்றைய செம்பனை உற்பத்தியில் 60 சத வீதம் பெரும் தனியார் நிறுவனங்களிடமே இருக்கிறது. மிகுதி 40% வீதம் சிறு தோட்ட உரிமையாளர்களிடம் உள்ளன.
செம்பனை உற்பத்தியில் மலேசியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மலேசியாவின் நிலப்பரப்பில் 70% சதவீதமான நிலம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மொத்த நிலத்தில் 15.8% வீதமான நிலம் செம்பனை உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது 5.23 மில்லியன் ஹெக்டயார் நிலம். (இது 2014 ஆம் ஆண்டின் தரவு)
இன்றைய தகவல்களின் படி மலேசியாவின் நிலப்பரப்பில் 58,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவு செம்பனை செய்கைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கையின் பரப்பளவு 65,610 சதுர கிலோமீட்டர் தான் என்பதையும் எண்ணிப்பார்த்தால் இது எத்தனை பெரியது என்கிற உண்மை உங்களுக்குப் புலப்படும்.
இந்த நிலையில் இந்தோனேசியாவும் மலேசியாவும் செம்பனை உற்பத்தியை 2050 ஆம் ஆண்டு இரண்டு மடங்காக அதிகரிக்கப்போவதாக தெரிவித்திருக்கிறது உலக செம்பனை உற்பத்தியில் 80 சத வீதத்தை கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியாவும் மலேசியாவும் நிரப்புகின்றன. செம்பனை எண்ணெய் ஏற்றுமதியில் உலகின் இரண்டாவது நாடாக விளங்குகிறது.
ஐரோப்பா, சீன, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளே மலேசியாவிலிருந்து செம்பனை எண்ணெய் இறக்குமதி செய்கின்ற பிரதான நாடுகள். இவற்றில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பெரும்பாலும் செம்பனை எண்ணெயை சமையல் என்னைக்குப் பயன்படுத்திவருகிறார்கள். அந்த நாடுகளில் செம்பனை எண்ணெய் கணிசமான அளவில் உற்பத்தி செய்யப்பட்டுக்கொண்டிருந்தாலும் அது தமது தேவையின் சிறிய எண்ணிக்கையே.
மேற்கின் எச்சரிக்கை
ஒருபுறம் 2020 இலிருந்து ஐரோப்பிய ஒன்றியம் செம்பனை எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கபோவதாக கடந்த ஜனவரி மாதம் முடிவு செய்திருக்கிறது. குறிப்பாக உயிரி எண்ணெய்க்காக செம்பனை எண்ணெயைப் பயன்படுத்துவதைத் தடுப்பதன் மூலம் உலக அளவிலான காடழிப்பை கட்டுப்படுத்த முன்னோடியாக இருக்க முடியும் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது.
கடந்த 2017 ஏப்ரலில் ஐரோப்பிய பாராளுமன்றம் நிலைப்பேன்தகு அற்ற முறையில் தயாரிக்கப்படும் செம்பனை எண்ணெயை இறக்குமதி செய்வதை 2020 இலிருந்து தடைசெய்யப்போவதாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்திற்கு 640 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டிருந்த அதே வேளை வெறும் 18 வாக்குகள் தான் எதிர்த்து அளிக்கப்பட்டிருந்தன. 28 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. ஐர்ரோப்பாவிற்கு இறக்குமதி செய்யப்படும் செம்பனை எண்ணையில் 46% வீதம் உயிரி எண்ணெய்க்காகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
2018/2019 ஆம் ஆண்டுக்கான செம்பனை எண்ணெய் இறக்குமதியை சீனா குறைத்திருக்கிறது. செம்பனை எண்ணைக்கு மாற்றீடாக அவர்கள் சோயா எண்ணெய் உற்பத்தியை உள்ளூரில் அதிகரித்திருக்கிறார்கள். அது போல கடந்த மார்ச் மாதம் இந்தியா செம்பனை எண்ணெய் இறக்குமதி வரியை உயர்த்தியதும் கூட மலேசியா, இந்தோனேசியா நாடுகள் அதிருப்திக்கு உள்ளாயின.
மேற்கை எச்சரித்து வந்த முன்னாள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் |
செம்பனை வர்த்தகத்தில் பெரும்பாதிப்பை காடழிப்பு பற்றிய குற்றச்சாட்டு பெரும்பங்கை வகிப்பதால் மலேசியா பல வாக்குறுதிகளை வழங்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் மொத்த தேசிய வருவாயில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது செம்பனை தொழிற்துறை. அந்த வருமானத்தை நம்பிய நீண்டகால அபிவிருத்திக்கான வேலைத்திட்டம் அங்கு போடப்பட்டிருக்கிறது அப்படி இருக்க பெருமளவு வருவாயை இழக்கும் நிலையை அது எதிர்கொள்கிறது. சர்வதேச நாடுகளின் நிபந்தனைகளை ஏற்றால் அது செம்பனை தொழிற்துறையின் வருவாயில் பாதிப்பை செலுத்தும் என்று நம்புகிறது.
செம்பனைக்காக நிகழ்த்தப்பட்ட காடழிப்பு பற்றி மலேசிய அரசு வழங்கிய தகவல்கள் உண்மைக்குப் புறம்பானது என்று சில வருடங்களுக்கு முன்னர் வெட்லேன்ட் இண்டர்நஷனல் (Wetlands International) என்கிற அமைப்பு குற்றம்சாட்டியது. அதற்கு ஆதாரமாக செட்டலைட் படங்களை வெளியிட்டது. மலேசிய அரசு கூறிய பரப்பளவை விட அதிகளவு நிலம் பயன்படுத்தப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தினார்கள்.
செம்பனை உற்பத்திக்காக மலேசியா கட்டாய ஊழியர்களாக பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் பல குழந்தைத் தொழிலார்களும் அடங்குவர் என்று “மனித உரிமை முன்னுரிமை” (Human Rights First) என்கிற அமைப்பு தெரிவித்திருந்தது. இது நவீன அடிமைத்துவம் (modern slavery) என்று அந்த அமைப்பு வரைவிலக்கணப்படுத்தியிருந்தது. உலக தொழிலாளர் நிறுவனம் (ILO) சர்வதேச மன்னிப்புச் சபை (Amnesty international), அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இவ்வாறு குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்துவது பற்றி தமது கண்டனங்களை வருடாந்தம் தெரிவித்து வருகின்றன.
1990ஆம் ஆண்டு 14.5 மில்லியன் தொன் உற்பத்தி செய்யப்பட்ட செம்பனை எண்ணெய் 2018இல் 70.5 மில்லியன் தொன் உற்பத்திசெய்யப்பட்டிருக்கிறது என்றால் எந்தளவு நிலம் விரிவாக்கப்பட்டிருக்கிறது அதில் எந்தளவு காடுகள் அழிக்கபட்டிருக்கிறது. எந்தளவு கார்பன் டை ஆக்சைட் வெளியிடப்பட்டிருக்கிறது. காற்றுக்கு எந்தளவு கேடு விளைவிக்கப்பட்டிருக்கது. மண்ணுக்கு எந்தளவு கேடு விளைவிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை உயிரினங்களின் வாழ்க்கை நாசமாக்கப்படிருக்கிறது. என்கிற கணக்கைப் போட்டுப் பார்க்கலாம். இப்போதைய உறபத்தியை 2050 இல் இரட்டிப்பாக்குவோம் என்கிற நாடுகளின் செய்தியை டைம் போம் அச்சுறுத்தல் என்றல்லவா விளங்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...