Headlines News :
முகப்பு » » இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழ் இலக்கியத்தின் செல்நெறி: சில அறிமுகக் குறிப்புகள் - லெனின் மதிவானம்

இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழ் இலக்கியத்தின் செல்நெறி: சில அறிமுகக் குறிப்புகள் - லெனின் மதிவானம்

இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத் தமிழ் இலக்கியத்தின் செல்நெறி எனும் தலைப்பு கடந்த ஒன்றரை தசாப்த காலத்தில் மலையக தமிழ் இலக்கியத்தில் முகிழ்ந்துள்ள இலக்கியப் போக்குகளை ஆதாரமாக கொண்டமைந்த ஒன்றாகும். சமகால மலையக இலக்கியத்தில் முளைவிட்டுள்ள - முனைப்படைந்துள்ள இலக்கியப் போக்குகள் குறித்த தேடலும் ஆய்வுகளும் அவசியமானதாகும். கலை -இலக்கியம்- பண்பாடு அரசியல் சார்ந்த துறைகளில் இவற்றை அடையாளப்படுத்தும்; போது மலையக மக்களின் பிரச்சனைகளை இனங்காண்பதற்கும், தீர்வுகளை முன் வைப்பதற்கும், அதற்கான செயற்பாடுகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் ஏதுவாக அமையும். அந்த வகையில் அத்தகைய  ஆய்வின் தேவையை உணர்த்தும் வகையில் அதற்கான அறிமுகத்தினை வழங்க முற்படுவது இக்கட்டுரையின் நோக்காகும்.

கடந்த நூற்றாண்டில் மலையக இலக்கியம் என்பது மலையக மக்களின் பெருந்தோட்ட வாழ்வை மாத்திரமே ஆதாரமாக கொண்டதாக அமைந்திருந்தது. புவியியல் அடிப்படையைக் கொண்டு மலையக எல்லைக்குள்ளிருந்த நகர்புறத்தை மற்றும் அதனை அண்மித்திருந்த சேரிப்புறத்தைக் கூட அது உள்ளடக்கத் தவறியிருந்தது. இலக்கியத்தில் ஜனநாயகப் பண்பு வளர, வளர அதன் எல்லைப்பரப்பு விரிவாகியுள்ளது. இன்று மலையக மக்கள் என்ற வரையறைக்குள் உள்ளடக்க கூடிய- மலையகத் தேசியத்துடன் பொருந்தி வரக் கூடிய அனைத்து மக்களையும் உள்ளடக்க வேண்டும் என்ற குரல் மலையக இலக்கித்தில் எழுந்திருக்கின்றது. ஒரு நிலப்பரப்பை கொண்டிராத அதே சமயம் மலையக மக்களுடன் ஒன்றிணையக் கூடிய தனித்துவமான வரலாற்றுக் காரணியையும் கலாசாரப் பண்புகளையும் கொண்டிருப்பின் அம்மக்கள் குழுவினர் ஏனைய மக்கள் பிரிவினரால் மலையகத்தவராக நோக்கப்படுபவாராயின் அவர்கள் குறித்த பதிவுகள் மலையக இலக்கியத்துடன் சேர்க்கலாம் என்பதில் இருநிலைப்பட்ட கருத்துகளுக்கு இடமில்லை. இந்தவகையில் மலையக இலக்கியத்தின் தளம் இருபத்தோராம் நூற்றாண்டில் விரிவடைந்துள்ளது என்றே கூறத் தோன்றுகின்றது. கடந்த காலங்களில் மலையக இலக்கிய கர்த்தாக்கள் மற்றும் மலையக ஆளுமைகள் மலையக ஆளுமைகளாகவே பார்க்கப்பட்டார்கள். இன்று அந்நிலை மாறியிருக்கின்றது. எடுத்துக்காட்டாக மலையக இலக்கியத்தில் இன்று சிரேஸ்டராக விளங்கும் தெளிவத்தை ஜோசப் மலையக இலக்கியப் படைப்பாளியாக நோக்கபட்ட காலம் போய் இன்று இலங்கை தமிழ் இலக்கியத்தில் முக்கிய படைப்பாளியாக நோக்கப்படுகின்ற நிலை தேன்றியிருப்பதை உதாரணமாக குறிப்பிடலாம். அவ்வாறே தெளிவத்தை ஜோசப்பின்; மீன்கள், தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள், ஆகிய தொகுதிகளில் அமைந்துள்ள கதைகளிலும், இக்கட்டுரையாசிரியரின் ஆய்வுகளிலும் மலையக இலக்கியம் பற்றிய சிந்தனைகள் மலையகத்தின் எல்லையைத் கடந்து ஒரு பரந்துபட்ட தளத்தில் நிலை நிறுத்தப்படுவதைக் காணலாம். அண்மையில் புதிய பண்பாட்டுக் தளத்தின் வெளியீடான 'மா. பா.சி. கேட்டவை' என்ற நூல் மலையக இலக்கிய கர்த்தாக்கள் எவ்வாறு இலங்கைத் தமிழ் இலக்கியத்துடன் நெருங்கிய உறவை பேணிவருகின்றார்கள் என்பதை சிறப்பாக எடுத்துக் காட்டுகின்றது.

இவ்விடத்தில் மிக முக்கியமனாதொரு விடயம் குறித்து நோக்குதல் காலத்தின் தேவையாக உள்ளது. இன்று மலையக சமூகத்தில் பலம் பொருந்திய மத்திய தர வர்க்கத்தின் தோற்றம் உருவாகியிருக்கின்றது. தளமற்ற நிலையில் தோன்றியுள்ள இவ்வர்க்கம் பிரதானமாக இரண்டு குணாதியங்களைக் கொண்டதாக காணப்படுகின்றது. முதலாவது பிரிவினர், தமது உயர்வு ஒன்றினையே குறிக்கோளாக கொண்டு செயற்படுகின்றவர்கள். தமக்கு தேவையேற்படுகின்ற போது அதற்கு சாதகமான வகையில் உழைக்கும் மக்களை தமக்கு பகடை காயாக பயன்படுத்திக் கொள்கின்றனர். குறிப்பாக இவ்வர்க்கம் இந்திய இலங்கை நட்புறவின் ஊடாக தமக்கான சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தம்மை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். இலக்கியத்தில் இவர்களின் பிரவேசம் பலமானதாக இல்லாவிடினும் அதில் தாக்கம் செலுத்துகின்றவர்களாக காணப்படுகின்றனர். இரண்டாவது பிரிவினர், சமூகத்தில் தம்மையொத்த மக்களைப் பற்றி சிந்தித்து அவர்களின் விடுதலையோடு தமது செயற்பாடுகளை இணைத்துக் கொள்கின்றவர்கள். இவர்களின் சிந்தனைகள் - செயற்பாடுகள் ஓர் உழைக்கும் மக்களின் நலனிலிருந்து அந்நியப்படாமல் இருப்பது இப்பிரிவினரின் பலமான அம்சமாகும். இவர்கள் தம்மை மலையக மக்கள் என்றே அழைக்கின்றனர். இவ்விரு பிரிவினருக்கும் இடையில் ஊசலாடுகின்ற வர்க்கத்தினர் சகலரையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்தியவம்சாவழித் தமிழர்கள் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

இவ்வாறிருக்க, சென்ற நூற்றாண்டின் இறுதியிலும் இந்நூற்றாண்டிலும் மலையக இலக்கியத்தின் அடையாளம் தொடர்பில் பல்வேறுபட்ட முரண்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. மலையக இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் 'மலையகம்' என்ற அடையாளமே பொருத்தமானது என்ற குரல் ஜனநாயகமானதாகவும் பலமானதாகவும் காணப்படுகின்றது. மலையகம் என்ற அடையாளத்தை மேலோட்டமாக அடையாளப்படுத்திப்  பார்க்கும் போது அது குறுகிய வாதமாகவோ பிரதேசவாதமாகவோ படலாம். அதனை மலையக சமூகப் பின்புலத்தில் வைத்து பார்க்கின்ற போது தான் அக் குரல் குறித்த மக்கள் கூட்டத்தினரின் சமூகவுருவாக்கத்தையும் விடுதலையைக் குறிப்பதாக அமையும் என்பதை அறியலாம். இது பற்றி தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய 'மலையகம் எனும் அடையாளம்;: மலையக இலக்கியத்தின் வகிபங்கு என்ற நூலும், கட்டுரையாசிரியரின் 'சமூக இலக்கியத் தளங்களில் படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்' என்ற நூலில் இடம் பெறுகின்ற மலையகம் சார்ந்த கட்டுரைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும்.

 மேலும், மலையக இலக்கியத்தின் அண்மைக்காலப் போக்குகளை அவதானிக்கின்ற போது, உழைப்பிலிருந்து அந்நியப்பட்டு உழைக்கும் மக்களைக் கிண்டலடிக்கும் போக்கு: உழைக்கும் மக்களைப் பாத்திரங்களாக படைக்கப் பட்டிருப்பினும் அதனை நையாண்டி நிலையில் பார்க்கும் நிலை என்பன முனைப்படைந்துள்ளதைக் காணலாம். எடுத்துக் காட்டாக மு.சிவலிங்கத்தின் 'மலைகளின் மக்கள்' என்ற சிறுகதை தொகுப்பில் காணப்பட்ட சிறுகதைகளில் இந்த போக்கு முளைவிட்டிருந்தாலும் சமூகப் பின்புலத்தில் வைத்து மக்களைப் பாத்திரமாக படைப்பாக்கி தருவதில் அமைந்துள்ள கதைகள் அதன் இப்பலவீனங்களை மீறி வெற்றிபெறுகின்றன.  அதேசமயம், பின்னாட்களில் வெளிவந்த அவரது கதைகளில் இந்த போக்கு மாற்றமடைந்து காணப்படுவதை அவதானிக்கலாம். அவரது ஒப்பாரி கோச்சி சிறுகதை தொகுதியில் வருகின்ற 'பல்லு பெருமாள்'; என்ற கதை இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும். வாழ்வியலிலிருந்து அந்நியப்பட்டு உழைக்கும் மக்கள் அவலமாக அசிங்கமாக பார்க்கும் தன்மையை இக்கதையில் காணலாம். அவ்வாறே சிவனு மனோஹரனின் ஆரம்ப காலக் கதைகளிலும் இப் பலவீனம் காணப்பட்டது.  இப்படைப்புகள் குறித்த காத்திமான  விமர்சனங்கள் இதே காலப்பகுதியில் எழுந்தன. அதன் பின்னர் வெளிவந்த   மு.சிவலிங்கத்தின் 'பஞ்சம் பிழைக்க வந்த சீமை' என்ற நாவல் முக்கியமானதொன்றாகும். இந்நாவல் மலையகத்தின் வரலாற்றை முறையாக கற்று அதனைச் சமூக பின்புலத்தில் வைத்து படைப்பாக்க முனைந்த ஆரோக்கியமான முயற்சியாக அமைந்திருக்கின்றது. இந்நாவல் மலையகத்தின் பழைய நினைவுகளைக் கொண்டு மலையக வரலாற்றை படைப்பாக்க முனைகின்ற போது (வரலாற்றை பதிவாக்குவது என்பதற்கும் சமகால வாழ்க்கை பிரச்சனைகளிலிருந்து தப்பியோடுவதற்கும் வித்தியாசம் உள்ளது). சமகால பிரச்சனைகளிலிருந்து தப்பியோடவோ, ஒப்பாரி வைக்கவோ அல்லது உல்லாச பிரயாணிகள் மனோபாவத்தில் தோட்ட வாழ்க்கையை இன்பமயமானதாக காட்டுவதற்கு  முனையவில்லை. அங்கும் வாழ்க்கை முரண்பாடுகளும் அது ஏற்படுத்தக் கூடிய நசிந்த போக்குகளும் காணப்படும் என்பதையும் இவரது கதை வெளிக்கொணர்கின்றது.     இவ்வாறே இக்காலப் பின்னணியில் வெளிவந்த மாத்தளை வடிவேலனின் 'அட்சய வடம்'; என்ற சிறுகதை தொகுப்பில் உள்ள சில கதைகள் மலையக வாழ்வை யதார்த்தம் குன்றாதவகையில் சித்திரித்துக் காட்டுகின்றது. இவ்வாறே வே. தினகரனால் தொகுக்கப்பட்ட 'இசை பிழியப்பட்ட வீணை'(மலையக பெண் கவிஞர்களின்) கவிதை தொகுப்பு குறிப்பிடத்தக்கதொன்றாகும். இவ்வாக்கங்கள் மலையக பெண்களின் உணர்வுவுகளை சமூக பின்புலத்தில் வைத்து நோக்க முற்படுகின்றது.

சம காலத்தில் வெளிவந்த படைப்புகளில் உள்ளடக்கம் மட்டுமன்று வடிவ அமைப்பிலும் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் காணலாம். மலையக படைப்பாளிகள்  வாழ்க்கையின் பல கோணங்களை- மனிதர்களின் பல முகங்களை ஆழ்ந்த சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடனும் பதிவாக்கியுள்ளனர். இங்கு வடிவப் பரிசோதனை என்றவுடன் வெறும் வார்த்தை ஜாலங்களை வைத்து, குறியீடு - படிமம் புனைவுகள் என்ற போதைகளுக்கு மலையக படைப்பாளிகள் ஆளாகவில்லை. இவர்களது படைப்புகளில் புனையப்பட்டுள்ள கற்பனைப் பாத்திரங்கள் கூட வாழ்விலிருந்து அந்நியப்படாமல் மக்களையொட்டியதாக வேர்கொண்டுள்ளது. யதார்த்தத்தில் காலூன்றி மக்களின் வாழ்வுடன் இரண்டற கலந்துவிட்ட படைப்பாளிக்கு தான் சந்திக்க நேர்ந்த மனிதர்கள்-சம்பவங்களையே படைப்பாக்க முடியும் என்பதை அண்மைக்கால மலையக படைப்புகள் அழகுற எடுத்துக் காட்டுகின்றன. தற்கால மலையக மலையக படைப்புகளில் தனிப்பட்ட பாத்திரங்கள் மாத்திரம் மட்டுமல்ல சமுதாயத்தின் நானாவிதமானவர்களின் கூட்டுச் சிந்தனையும் அனுபவமும் படைப்பாக்கப்பட்டுள்ளன. இவையாவும் புதிய பண்பாட்டு புரட்சிக்கு அவசியமாகின்றன. கவிதைத்துறையில் தவச்செல்வனின் 'சிவப்பு டைனோசர்கள';, 'டார்வினின் பூனைகள்' ஆகிய கவிதைத் தொகுப்புகள் இதற்கு தக்க எடுத்துக் காட்டுகளாகும்;. இவ்விடத்தில்  வே. தினகரனின் கவிதைகளும் குறிப்பிடத்தக்கவைகளாக அமைந்துக் காணப்படுகின்றன.   சமூக முரண்களைப் பற்றிய கவிஞரின் மனப்பதிவை கவித்துவமான படிமங்களை உருவாக்கி கவிதை படைப்பதில் முக்கிய இடத்தினை வகிக்கின்றார். இந்தப் போக்கினை மலையக இலக்கியத்தின் பொதுவான அம்சமாகவும் கொள்ளலாம். இவ்வம்சம் இந்நூற்றாண்டில் தோன்றிய மலையக இலக்கியத்தின் இன்னொரு சிறப்பு அம்சமாகும்.

இது இவ்வாறிருக்க, ஒரளவு படைப்பாளுமையுடன் வெளிப்பட்ட மலையக படைப்பாளிகள் தன் காலத்தில் எத்தகைய காத்திரமான விமர்சனங்களை எதிர் கொண்டிருந்த போதும் சமூகம் குறித்த ஆழமாக சமூக அரசியல் பார்வையை வளர்த்துக் கொள்ளாமையினால் சமூகப் பிரச்சனைகளையும் முரண்பாடுகளையும் வெறுமனே தனிமனித முரண்பாடுகளையும் பாலியல் வக்கிரங்களையும்- மனோ விகாரங்களையும் படைப்பாக்கி தருவதில் அமைதி காணுகின்ற போக்கும் இன்று தோன்றியுள்ளது.

இந்நூற்றாண்டில் மலையக இலக்கியத்தில் முக்கிய அம்சமாக இடம் பெறுவது விமர்சன இலக்கியமாகும். கடந்த காலங்களில் மலையகத்தில் விமர்சனம் என்பது மலையக படைப்பிலக்கியத்திற்கு அவசியமற்ற ஒன்றாகவே கருதப்பட்டது. கட்டுரையின் தேவைகருதி மலையக சமூக விமர்சகர் எல். சாந்திகுமார் அவர்களின் மேல் வரும் கூற்று அவதானத்திற்குரியது.

'மலையகத்தில் ஊற்றெடுத்த படைப்பிலக்கியப் பிரவாகம், ஒருவகையில் இலங்கையில் சமகால இலக்கிய போக்குகளிலிருந்து வேறுப்பட்டிருந்தது என்றே கூறலாம். இலங்கையில் முக்கியமாக வட பகுதியில் ஏறக்குறைய இதே உத்வேகத்துடன் உருவாகிய இலக்கிய எழுச்சி பெரும்பாலும் விமர்சன வட்டத்தினரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்ததோடு, அவ்வாதிக்கம் இலக்கிய வழிகாட்டியாக மட்டுமின்றி படைப்பிலக்கியப் போக்கினையும் திசையையும் தீர்மானிக்கம் அளவிற்கு செல்வாக்கையும் பெற்றிருந்தது. இந்நிலை மலையகத்தில் இருக்கவில்லை. ஒப்பீட்டளவில் இலங்கை தமிழ் இலக்கியத் துறையில் வட பகுதியில் எழுந்த விமர்சனத் துறையின் ஆதிக்கத்திற்கு மறுபுறத்தில் மலையகத்தில் படைப்பிலக்கியப் படைப்பிலக்கியச் சுதந்திரம் பிரவாகம் கொண்டது எனலாம்' (எல். சாந்திகுமார், தினகரன் 23.06.85).

மலையகத்தின் பிறிதொரு ஆய்வாளரான சாரல் நாடன் தமது  'மலையகம் வளர்த்த தமிழ்'(1997) எனும் நூலில் இக்கருத்தை மேற்கோள் காட்டுவதுடன் அதனை வலியுறுத்தியும்- ஆதரித்தும் இருக்கின்றார். மலையகத்தில் தானே தம்மளவில் விமசகர்களாக இருந்தவர்களிடையே இக்கருத்து நிலவுகின்றது என்றால் படைப்பாளியிடையேயும் வாசகர்களிடையேயும் இக்கருத்து எத்தகைய தாக்கத்தை செலுத்தியிருக்கும் என்பதை வலியுத்தித்தி கூற வேண்டிய அவசியமில்லையென்றே தோன்றுகின்றது. இவ்வடிப்படையில் நோக்குகின்ற போது  பின்வரும் அம்சம் கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
அதாவது மலையக இலக்கியங்கள் குறிப்பாக மலையக மக்களுடைய வாழ்வை வெளிக்கொணர்ந்த அளவு அவர்கள் செய்த கலகங்களையும் போராட்டங்களையும் வெளிக்கொணந்தனவா என்பது சுவாரசியமான கேள்விதான். ஓர் ஒப்புவமை வசதி கருதி வடபுலத்து படைப்புகளோடு ஒப்புநோக்கினால் வடக்கில் எழுந்த தொழிற்சங்க போராட்டங்களை நீர்வை பொன்னையனுடைய படைப்புகள் வெளிப்படுத்தியிருக்கின்றன.
  அவ்வாறே அங்கு எழுந்த சாதியத்திற்கு எதிரான போராட்டங்களை கே. டானியலின் எழுத்துக்கள் பிரதிபலித்து நிற்கின்றன. இவ்வகையில் மலையக இலக்கியத்தை நோக்குகின்றபோது மலையகப் படைப்பாளிகளின் படைப்புகளில் சமூக இயக்கங்களும், போராட்டங்களும் படைப்பாக்கப்படாத நிலை காணப்படுவதை அவதானிக்கலாம். எனினும் அம்மக்களிடையே தோன்றிய 'முச்சந்திப் பாடல்கள்'; (பெ. முத்துலிங்கத்தின் தொகுப்பு அவதானத்துக்குரியது) மலையக மக்கள் சார்ந்த இயக்கங்களையும் போராட்டங்களையும் ஓரளவு பதிவாக்க முனைந்திருப்பதாகவே தோன்றுகின்றது.

இதற்கு இரண்டு காரணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் படுகின்றது. ஒன்று, மலையக படைப்பாளிகள் ஒரு மத்தியதர வர்க்க குணாதிசயத்துடன் படைப்பை உருவாக்கியமை. இரண்டு தம் அனுபவங்கள் சார்ந்தும் ஏனைய படைப்புக்களில் பெறப்பட்ட அனுபவங்கள் சார்ந்தும் மட்டுமே படைப்புகளை உருவாக்க முனைந்தமை இன்னொரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வாகும். இந்நிலையில் மலையக இலக்கியத்தில் விமர்சனம் என்பது அந்நியப்பட்ட ஒன்றாகவே இருந்து வந்துள்ளமை ஆச்சரிப்படவேண்டியதில்லை. பத்தி எழுத்துக்கள் விமர்சனமாக கணிக்கப்பட்டதுடன், சமூக தளத்திலிருந்து எழுந்த விமர்சனங்கள் கொடுங்கோன்மையாக நோக்கப்பட்டது இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். இந்த மௌனம் களையப்பட வேண்டும்.

அந்தவகையில் மலையக ஆய்வுகள் விமர்சனங்கள் சார்ந்து பல கட்டுரைகளும் நூல்களும் இக்காலப்பகுதியில் எழுந்துள்ளன. திருவாளர்கள் தெளிவத்தை ஜோசப்,  மு. நித்தியானந்தன், சாரல் நாடன்,மு. சிவலிங்கம், இரா. சடகோபன், லெனின் மதிவானம், பொன். பிரபாகரன், திருமதிகள். ஆர்.சர்மிளாதேவி, ஜோதிமலர் ரவிந்திரன், திருவாளர்கள் பெ. சரவணகுமார், சு. தவச்செல்வன் ஆகியோரின் ஆய்வு- விமர்சன நூல்களும் திரு. வ. செல்வராஜா, மல்லியப்பூ சந்தி திலகர், ஜெயசீலன் முதலானோரின் ஆய்வுக் கட்டுரைகளையும் இதற்கு தக்க எடுத்துக் காட்டாக குறிப்பிடலாம். இவ்வாய்வுகள் யாவும் ஒரே தர முடையது என்றோ ஒரே பார்வையைக் கொண்டனவென்றோ குறிப்பிட முடியாது. ஆனால் மலையக தமிழர் வரலாற்றை அறிவியல் பூர்வமாக, சமூகவியல் நோக்கில் ஆராய்கின்றவை என்றளவில் இவை முக்கியத்துவமும் ஒற்றுமையும் உடையவை. இருப்பினும் மலையகத்தின் வேர்களைத் தேடிச் செல்கின்ற போது மலையகத்தில் சமூகமாற்றத்திற்காக செயற்பட்ட ஆளுமைகளைப் பின்னிறுத்துகின்ற அபாயங்களும் தோன்றாமல் இல்லை என்பதற்கும் மு. நித்தியானந்தனின் அஞ்சுகம், கருமுத்து தியாகராச செட்டியார் பற்றிய ஆய்வுகள் அமைந்து விடுகின்றது. அதே சமயம் மலையகத்தில் தோன்றிய ஆரம்ப கால எழுத்துக்களைத் தேடி பிடிப்பதிலும் அவரது ஆய்வுகளுக்கு முக்கிய இடமுண்டு. பெரும் பாலான ஆய்வுகள் மார்க்சியம் சாராத அதேசமயம் மார்க்சியத்தை நிராகரிக்காத நிலையில் பார்வையை முன் வைக்கின்றன. ஒருவகையில் வரலாறு குறித்த வளர்ச்சிக்கு இது ஓர் ஆரோக்கியமான பங்களிப்பாகும். அதேசமயம் மார்க்சியத்தை முன்னிறுத்தி சமூக முரண்களைப் பார்க்கின்ற ஆய்வுகளும் இன்று முனைப்படைந்து வருகின்றன. 

இன்றைய உலகமயமான சூழலில் என்றும் இல்லாதவாறு மக்களின் உழைப்பு ஏகாதிபத்திய நாடுகளினால் அபகரிக்கப்படுகின்றது. இவர்களின் திருடி வாழும் பண்பு நீங்கலாக அதனை நியாயப்படுத்தும் தத்துவங்கள், கோட்பாடுகள் தோன்றிய வண்ணமே உள்ளன. இவ்வாறானதோர் சூழலில் இவற்றை எதிர்த்து மாற்று இயக்கங்களும் தோற்றம் பெற்றுள்ளன. இந்த பின்னணி நமது எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், வாசகர்கள், உண்மையான ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட வேண்டியுள்ளது. நம் வாழ்வின் எல்லாத் துறைகளிலும் வணிக நோக்கமும், தனிநபர் போட்டிகளும் பெருகி தனிநபர் வாழ்விலும் பொது வாழ்விலும் தாக்கம் செலுத்தி வருகின்றன. மனிதப் பண்புகள் வீழ்ச்சியுற்று சிறுமையும் கயமையும் பெருகியுள்ளன. இந்நிலையில் மக்களை விட்டு பிரிந்த உதிரித் தன்மையும் மலையக இலக்கியப் படைப்பாளிகளிடையே தோன்றியுள்ளது. 1980 களின் பின் இந்த போக்கை நாம் இனங்கண்ட பொழுதிலும், இன்று தான் அப் போக்கு முனைப்படைந்திருப்பதைக் காண்கின்றோம்.  

தலைகுனிய வேண்டிய தனிமனித சண்டைகளாலும் எழுத்தாளனைத் தனிமைப்படுத்தி தாக்கும் குழுமனப்பாங்காலும் வலுவிழந்து கிடக்கும் மலையக இலக்கியம் அதனை இம்மண்ணுக்கே உரித்தான மக்கள் தத்துவத்தால் கட்டமைக்கின்ற போது எமது தேசத்திற்கு மாத்திரமன்று, உலகிற்கே நன்மையளிக்க கூடியதாக மிளிரக் கூடிய வாய்ப்பு உண்டு. அரசியலில் எவ்வாறு ஒரு புரட்சிகர ஐக்கிய முன்னணி அவசியமோ அவ்வாறே கலை இலக்கியத்திலும் அத்தைய புரட்சிகர ஐக்கிய முன்னணியின் அவசியம் உள்ளது. சிநேக முரண்பாடுகளைப் பகை முரண்பாடுகளாக காட்ட முனையும் தனிமனித முரண்பாடுகளைத் தெளிவாக உணர்ந்து கொள்ளல் அவசியமாகும். உலகமயமாதல் சூழல் எவ்வாறு பொது மக்களை பாதித்திருக்கின்றதோ அவ்வாறே தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் பாதித்திருக்கின்றது என்பதை அண்மைகால கலை இலக்கிய செயற்பாடுகள் எமக்கு எடுத்துக் காட்டப்படுகின்றன. சமூதாயம் சார்ந்த கோட்பாடுகளை ஆழமாக கற்பதன் மூலமாவும் அது தொடர்பான நடைமுறையில் ஈடுப்படுவதனாலும் இப்பிரச்சனைக்கான தீர்வினைக் காண முடியும் என்பதை நாம் புரிந்துக் கொள்ள இயலும்;. 

இதே காலகட்டத்தில் நம்பிக்கைமிக்க ஒளிக் கீற்றுகளாக மலையக இலக்கியப் படைப்பாளிகளின் செயற்பாடுகளை புதிய படைப்பாளிக்களின் மத்தியில் உருவாகி வருவதை அவதானிக்கலாம். தனிமனித தாக்குதல்களுக்கும் புலம்பல்களுக்கும் அப்பால் - தன் காலத்து வேடிக்கை மனிதர்களிலிருந்து அந்நியப்பட்டு புதிய மனிதனுக்கான , புதிய வாழ்க்கைக்கான, புதிய கலாசாரத்திற்கான பயணத்தில் இந்த வளர்ச்சி- மலையக இலக்கிய கர்த்தாக்கள் தம்மை நிலைநிறுத்திக் கொள்வார்கள் என நம்பலாம். 

மலையக இலக்கிய கர்த்தாக்கள் தேசிய- சர்வதேச  நீரோட்டத்தில் தம்மை இணைத்துக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்த துறை மொழிபெயர்பபு ஆகும். ஏனைய மொழியிலுள்ள இலக்கியங்களை நமது பண்பாட்டுத் தளத்தில் மொழிபெயர்பு செய்கின்ற போதும் நமது இலக்கியங்களைப் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்கின்ற போது, இலக்கியத்தின் இலட்சியம் பரவலாக்கப்படுகின்றது. மலையக இலக்கியத்தில் மொழிபெயர்ப்பு துறைக்கு வளம் சேர்த்தவர்கள் கே. கணேஷ், பண்ணாமத்து கவிராயர் ஆகியோராவர். சமகால மலையக இலக்கியத்திலும் மொழிபெயர்ப்பு இலக்கியத்தின் தளம் பரந்து விரிந்துள்ளது. எடுத்துக்காட்டாக இரா. சடகோபன் கிறிஸ்ரின் வில்சன் எழுதிய 'Bitter  Berry'  என்ற ஆங்கில நாவலை 'கசந்த கோப்பி' என்ற தலைப்பிலும் பந்துபால குருகே எழுதிய 'செனஹசின் உப்பன் தருவோ' என்ற சிங்கள நாவலை 'உழைப்பால் உயர்ந்தவர்கள'; என்ற தலைப்பிலும் மார்ட்டின் விக்கிரமசிங்காவின் 'அபே கம' என்ற சிங்கள நாவலை 'எங்கள் கிராமம்' என்ற தலைப்பிலும் மொழிபெயர்த்துள்ளார். மலரன்பன் பியதாஸ வெலிகண்ணகேயின் 'அவன் ஓர் அபூர்வ சிறுவன்' என்ற சிங்கள நாவலை மொழிபெயர்த்திருகின்றார். ஸி. வி. வேலுப்பிள்ளையின் 'In Ceylon Tea Garden'  என்ற கவிதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு காலத்திற்கு காலம் இடம் பெற்று வந்திருப்பினும் அவை மூல நூலிலிருந்து- வாழ்வியரிருந்து அந்நியப்பட்டதாகவே இருப்பதை அண்மைக்கால கவிதை பற்றிய விமர்சனங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அன்னாரின் நூற்றாண்டை முன்னிட்டு  தொழிலாளர் தேசிய சங்கம் வெளியிட்ட நினைவு மலரில் திரு. பி.பி.தேவராஜ் எழுதிய கட்டுரையில் ஸி.வி.யின் கவிதைகள் சிலவற்றினை மொழிபெயர்த்துள்ளார். அம் மொழிபெயர்ப்பு உள்ளடக்க ரீதியிலும்  உருவ ரீதியிலும் சிறப்பானதாக உள்ளது எனலாம். இம்முயற்சி முழுமை பெறல் காலத்தின் தேவையாகும்.இதே போன்று பிற நாட்டு நல்லறிஞர்கள் பற்றியும், தமிழ் நல்லறிஞர்களை பிற மொழியில் அறிமுகம் செய்து வைக்கும் பணியிலும் மலையக படைப்பாளிகள் முனைந்துள்ளனர் என்பதற்கு  சு. முரளிதரன் எழுதிய மகாகவி 'பாப்லோ நெருடா- வாழ்வும் படைப்பும்', 'மார்ட்டின் விக்கிரம சிங்க- நவீன சிங்கள இலக்கிய முன்னோடி',  ஆகிய நூல்கள் சான்றாக அமைகின்றன. இவ்விடத்தில் முக்கியமாக மனங்கொள்ளத்தக்க விடயம் குறித்து நோக்குதலும் அவசியமானதாகும். பப்லோ நெருடா குறித்த மதிப்பீடகளிலும் ஆய்வுகளிலும் அவரது புரட்சிகர பணிகளையும்- படைப்புகளையும் நிராகரித்து  விட்டு அவர் பெண்னொருவருடன்(இலங்கையில்) உடலுறவு கொண்ட அவரது செய்தியை பிரதானப்படுத்தும் அபத்தம் தொடர தான் செய்கின்றது. இந்த பலவீனம் முரளிதரனின் பப்லோ நெருடா பற்றிய நூலிலும் காணப்படுவது துரதிர்ஸ்டவசமாகும்.  மேலும், முரளிதரன் புதுமைபித்தன், ஜெயகாந்தன் ஆகியோர் பற்றி சிங்களத்தில் எழுதிய அறிமுக நூல்களும் கவனத்தில் கொள்ளத்தக்கவையாகும். இந்நிலையில் மலையக இலக்கியப் படைப்புகள் சிங்கள ஆங்கில மொழிகளில் மொழிப்பெயர்க்க வேண்டியதும் இன்றைய சமூகத் தேவையாக உள்ளது.

இது இவ்வாறிருக்க, மலையகத்தில் கட்சி அமைப்புகள் தோன்றி பலமாக செயற்பட்டன என்ற போதிலும் கட்சி இலக்கியம் தோன்றாதிருப்பது துரதிஷ்டமானதொன்றாகும். 1970களில் செங்கொடி சங்க கூட்டங்களில் கட்சி சார்ந்த பாடல்கள் சில இயற்றப்பட்டு திரையிசை பாடல்களின் மெட்டுகளில் பாடப்பட்டன. அவை போராட்டத் தீ - 1, போராட்ட தீ - 2 என இரு சிறிய நூல்களாக வெளிவந்தன. அப்பாடல்கள் உள்ளடக்க ரீதியாகவோ உருவ ரீதியாகவோ மலையக சமதாயத்தின் யதார்த்தை பிரதிப்பலிப்பதாக அடைந்திருக்கவில்லை. அந்தவகையில் மலையகத்தில் கட்சி இலக்கியம் என்பது இனித்தான் தோன்ற வேண்டியுள்ளது. கட்சி இலக்கியம் என்பது பாட்டாளி வர்க்க கட்சியை முதன்மைப்படுத்தியே படைப்பாக்கப்பட வேண்டும் என்பது அதன் நியதியாகும். கட்சியின் போராட்டங்களைச் சரியான திசை மார்க்கத்தில் முன்னெடுத்து செல்வதற்கான தளம் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இத்தகைய மக்கள் எழுச்சிக்காகவும் புரட்சிகரப் பணிக்காகவும் பரந்துபட்ட மக்களை விழிப்புக் கொள்ளச் செய்வதும் அணி திரட்டுவதும் கட்சி இலக்கியத்தின் பிரதான இலட்சியமாகும். மாறாக கட்சியை மிகைப்படுத்தி, கட்சி உறுப்பினர்களைப் புனிதர்களாகக் காட்ட முனைவது கட்சி இலக்கியமாகா. அதே சமயம் கட்சியில் உள்ள சிறு சிறு முரண்பாடுகளைப் பிரதானமாக்கி அதனை வெகுசனத் தளத்திற்குக் கொணர்ந்து கட்சியை சிதைப்பது கட்சி இலக்கியமாகாது. மாக்ஸிம் கோர்க்கியின் தாய், யங்கமோவின் 'இளமையின் கீதம்" முதலிய படைப்புகள் கட்சி இலக்கியத்திற்கான சிறந்த எடுத்துக் காட்டுகளாகும். புரட்சிகர சக்திகளைப் பிளவுபடுத்த முனைவது எதிர்ப் புரட்சிகரமானது. மக்கள் மத்தியில் முரண்பாடுகளைக் கையாள்வது தொடர்பாகவும் கட்சி அமைப்பு தொடர்பாகவும் மாவோ தெளிவானதோர் நிலைப்பாட்டினை முன் வைத்திருக்கின்றார். அந்த வகையில் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டே கட்சி இலக்கியம் படைக்கப்படுகின்றது. மலையக இலக்கியத்தில் கட்சி இலக்கியம் தோன்றுவதற்கான பின்னணியும் அதற்கான சமூகத் தேவையும் இந்நூற்றாண்டில் தோன்றியிருக்கின்றது. 

நமது பண்பாட்டுச் சூழலில் இத்தகைய விபரீதங்கள் இருந்தபோதிலும் இனி ஒரு விதி செய்வோம் என்ற பாரதியின் நாகரிகத்தில் கால் பதித்து, மக்களையொட்டி செயற்படுகின்ற அரசியல் சமூக பண்பாட்டு இயக்கங்களும் அதன் வெளியீடுகளும் இல்லை என்பதல்ல. இத்தகைய பின்னணியில் மலையக மக்கள் குறித்த அக்கறைமிக்க மலையக இலக்கியவாதிகள் மலையக மக்களின் எதிர் காலம் குறித்து சிந்தித்தலும் சமூக மாற்றத்திற்கான சிந்தனைகளை இலக்கியத்தின் ஊடா முன்னெடுத்தலுமே இன்றைய யதார்த்த தேவையாக உள்ளது. இதற்கான மக்கள் இலக்கியத்தின் ஊடாக வெகுசனங்களை ஜக்கியப்படுத்தலும் ஜக்கிய முன்னணியை உருவாக்குதலும் இன்றைய வரலாற்றுத் தேவையாகும். இதில் மலையக இலக்கியவாதிகள் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்க முடியும். 

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates