பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தீர்வு காணப்படாமல் தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருகின்றது. இந்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும், அடுத்த மாதம் சம்பள உயர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
பெருந்தோட்டத் தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் சம்பள உயர்வு உள்ளிட்ட கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஏற்பட்டுள்ள இழுபறியால் தொழிலாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
2015 மார்ச் 31 ஆம் திகதி 2013 2015 காலப் பகுதிக்கான கூட்டு ஒப்பந்தம் காலாவதியானது. எனவே 2015 2016 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு அது கடந்த 2015 ஏப்ரல் முதலாம் திகதியுடன் நடைமுறைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இன்றுவரை அது பற்றிய எந்தவொரு முன்னெடுப்பும் மேற்கொள்ளப்படவில்லை.
தற்போது 18 மாதங்கள், அதாவது 1 ½ வருடமாகிவிட்ட நிலையில் புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை. இது தொடர்பாக முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் 8 தடவைகள் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டன. எந்தவொரு தீர்வும் எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட இரண்டு தரப்பினரும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற உண்மையான அக்கறையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களில் பிரதான சங்கமான இ.தொ.கா. 1000 ரூபா நாட் சம்பள கோரிக்கையை முன்வைத்தது. அதேவேளை அந்தக் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் 1000 ரூபாவை நாட்சம்பளமாக வழங்க முடியா தெனவும் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்து வருகிறது.
இந்த இழுபறி இன்னும் எத்தனை காலத்திற்கு தொடர வேண்டும்? ஒரு வழி இல்லாவிட்டால் இன்னொரு மாற்று வழி என்பதற்கமைய மாற்றுவழியை தேட வேண்டாமா? அதாவது, இரு தரப்பினரும் கலந்து பேசி தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஒரு தொகையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தால் என்ன?
இதற்கென நாள் ஒன்றுக்கு 500 ரூபா அடிப்படை சம்பளம் என்ற ரீதியிலும், 20 கிலோ கொழுந்து நாட் சம்பளத்துக்காக பறிக்க வேண்டும் என்பதும், மேலதிகமாக பறிக்கப்படும் ஒரு கிலோ கொழுந்துக்கு 23 ரூபா 50 சதம் கொடுப்பதாகக் கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.
தனியார் மரக்கறித் தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளிக்கு காலை, பகல் உணவு மற்றும் தேநீர் வழங்கி, நாள் ஒன்றுக்கு 1000 முதல் 1500 ரூபா வரை சம்பளம் வழங்கப்படுகிறது.
அதேபோன்று வெளியிடங்களில் வேலை செய்வோருக்கும் 1000 ரூபா முதல் 1500 ரூபா வரை சம்பளம் வழங்கப்படுகிறது. நிலைமை இவ்வாறிருக்க தோட்டத் தொழிலாளருக்கு மட்டும் 500 ரூபா அடிப்படை சம்பளம் என்பதை ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.
தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் விலைவாசி ஏற்றத்தைப் பார்க்கும்போது 500 ரூபாவினால் என்ன செய்ய முடியும்? இரண்டு, மூன்று பிள்ளைகள் உள்ள குடும்பங்களில் கணவன் மனைவி இருவரும்வேலை செய்து கிடைக்கும் சம்பளத்தில் அனைவரும் வயிறார சாப்பிட முடியுமா? பிள்ளைகளை பராமரிக்க முடியுமா? அல்லது படிக்கவைக்க முடியுமா? மனிதாபிமானத்துடன் இந்தப் பிரச்சினையை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
500 ரூபா அடிப்படை சம்பளத்தைவிட தற்போது வழங்கப்படும் இதர கொடுப்பனவுகளுடனான 620 ரூபா சம்பளமே மேல். எவ்வாறெனினும் 1000 ரூபா அடிப்படை நாட் சம்பளமாகக் கேட்டதைக் கொடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் 850 ரூபாவையாவது அடிப்படை நாட் சம்பளமாக வழங்கலாமல்லவா? இதைப் பற்றி ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை?
மாற்று வழி பற்றி கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் சிந்திக்காமல் தொடர்ந்து மௌனத்தைக் கடைப்பிடிப்பதோ அல்லது காலம் கனிந்துவரும் என்று காத்திருப்பதாலோ தீர்வுகள் கிடைத்துவிடாது. தீர்வுகளை நாம் தான் தேடிப் போக வேண்டும்.
இதேவேளை, இந்தப் பிரச்சினைக்கு பொதுவானதொரு தீர்வைக் காண்பதற்கு சகல தொழிற்சங்கங்களும் முன்வர வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல மலையக தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும்.
தமது சுய விருப்பு, வெறுப்புக்கள், போட்டிகள் என்பவனற்றுக்கு அப்பால் தொழிலாளரின் நலனுக்காக சமூக ரீதியில் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும். அரசாங்கம் வரவு செலவு திட்டத்தித் தனியார்த் துறையினருக்கு அறிவித்த 2500 ரூபா கொடுப்பனவை தோட்டத் தொழிலாளருக்கும் பெற்றுக் கொடுக்க தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் மேற்கொண்ட அயராத முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் மறக்க முடியாது. அதுபோன்றே இந்த சம்பள விடயத்திலும் அக்கறை காட்ட வேண்டும்.
2500 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொடுத்ததுடன் கடமை முடிந்துவிட்டது. 1000 ரூபா சம்பள உயர்வு கேட்டவர்களே அதனைப் பெற்றுக் கொடுக்கட்டும் என்று ஒதுங்கிக் கொள்ளக்கூடாது. தொழிலாளர் சமூகத்திற்காக இவ்விடயத்தில் நடவடிக்கை எடுப்பது அவசியம்.
கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் எட்டு முறை முயற்சிகளை மேற்கொண்டும் தீர்வை எட்ட முடியாத நிலையில் உள்ளன. எனவே சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதனூடாக முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாகவும் உலகச் சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் பெருந்தோட்டக் கம்பனிகள் தொடர்ந்து கடந்த 1 ½ வருடமாக கூறிக் கொண்டு வருகின்றன. உலகச் சந்தையில் தேயிலை விலை ஏறும், இறங்கும். இதுதான் இயல்பு. வருடக்கணக்கில் வீழ்ச்சியை மட்டும் சுட்டிக்காட்டாது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். தவிர இது தொடர்பில் உள்ள உண்மைத் தன்மையும் ஆராயப்பட வேண்டும்.
தோட்டத் தொழிலாளரின் சம்பள விடயத்தில் இலங்கை தேயிலை வரலாற்றில் இதுவரை காணாத வகையில் இம்முறை மட்டும் பெருந்தோட்டக் கம்பனிகள் பிடிவாதம் பிடிப்பதற்கு தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பெரும் பிளவும் ஒரு காரணமாகும். தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பிளவை கம்பனிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இதைத்தான் ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்” என்று சொல்வார்கள். தொழிற்சங்கங்களிடையே காணப்படும் பிளவுகளை கம்பனிகள் பயன்படுத்திக் கொள்கின்றன.
தொழிற்சங்கங்கள் பிளவுபட்டு ஒன்றுக்கொன்று எதிராக செயற்படுவதால் தோட்டக் கம்பனிகளே இலாபமடைகின்றன. ஆனால் தொழிலாளர்களின் பாடு திண்டாட்டம்தான். எனவே சகல தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு தொழிலாளரின் சம்பளப் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகாண முன்வர வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...