Headlines News :
முகப்பு » » அன்று வாக்குரிமை இல்லை பிரதிநிதித்துவழும் இல்லை... இன்றோ இருந்தும் - முனுசாமி நேசமணி

அன்று வாக்குரிமை இல்லை பிரதிநிதித்துவழும் இல்லை... இன்றோ இருந்தும் - முனுசாமி நேசமணி


சுதந்திரம் கிடைத்த பின்னர் இலங்கையில் மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளானது எமது இந்திய வம்சாவளி தமிழினம் தான் என்பது வேதனையான உண்மையாகும். பிரஜாவுரிமை சட்ட சீர்திருத்தம் காரணமாக வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாக ஆக்கப்பட்டோம். 68 ஆண்டுகளின் பின்னர் வாக்குரிமை பெற்றவர்களாக இருந்தாலும் புதிய உத்தேச அரசியல் யாப்பு திருத்தத்திலே மலையக மக்களுக்கு எதுவித அதிகார பரவலாக்கலும் வழங்கப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை. இவற்றிற்கு சிகரம் வைத்தாற்போல் தற்போது அரசாங்கத்தால் முன்வைக்கப்படும் தேர்தல் திருத்தத்தில் மலையக பிரதிநிதித்துவம் முற்றாக இல்லாமல் செய்யப்படும் அபாயம் காணப்படுகிறது.

1948 இல் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது எமது தலைமைகளோ வடகிழக்கு அரசியல்வாதிகளோ பாரிய எதிர்ப்பு போராட்டம் எதனையும் நடத்தவில்லை என்ற குற்றச்சாட்டு பலராலும் சுமத்தப்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் முறையிடப்பட்டு அதன் தீர்ப்பை ஏற்றுக்கொண்டதோடு எமது நடவடிக்கை அமைந்திருந்தது. அன்றைய இலங்கையின் பொருளாதாரம் தேயிலையிலேயே முற்றுமுழுதாக தங்கி இருந்தது. ஒருநாள் கூடையை இறக்கி வைத்தாலே பாரிய இழப்பு என்ற நிலை இருந்தது. அன்றைய எதிர்ப்பு நடவடிக்கை கொழும்போடு முற்றுப்பெற்று விட்டது. மலையகத்துக்கு எடுத்துச் செல்லப்படவில்லை. முழு மலையகத்திலும் பாரிய பணி நிறுத்தம் மேற்கொண்டிருந்தால் அந்த சட்டத்தை வாபஸ் பெறும் நிலைமைக்கு அரசாங்கத்தைத் தள்ளி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இன்று இருப்பது போல் பிளவுபட்ட தலைமைகள் அப்போது இல்லை. வாய்ப்பைத் தவற விட்டுவிட்டோம்.

இன்று எமது சமூகம் அரசியல், கல்வி, பொருளாதார துறைகளில் வளர்ச்சி பெற்றிருப்பதாகக் கூறிக்கொள்கிறோம். ஆனால், வரப்போகும் ஆபத்தைப் பற்றி எந்த அளவு விழிப்புணர்வுடன் நாம் இருக்கிறோம் என்று பார்த்தால் திருப்தி கொள்ளும் வகையில் இல்லை. ஓரிரு தொண்டு நிறுவனங்களும் சில கட்சிகளும் அரசியல்வாதிகள் மட்டுமே அக்கறையுடன் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இது போதுமானதல்ல. ஒட்டுமொத்த மலையகத்தையும் நேரப்போகும் பாரிய நெருக்கடியை நோக்கி கவனம் செலுத்த எம்மாலான அனைத்தையும் செய்திட வேண்டும்.

எமது நாட்டில் இதுவரை இருந்து வந்த அரசியல் யாப்புகள் அனைத்தும் பெரும்பான்மை இனத்தையும் மதத்தையும் பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்டவைகளே. கொஞ்ச நஞ்சம் உள்ள சிறுபான்மையினருக்கான சலுகைகளையும் உரிமைகளையும் இல்லாமல் செய்வதற்கே இந்த யாப்புகள் உதவின. யாப்பிலே ஏதாவது சேர்க்கப்பட்டாலும் நடைமுறையில் அவை செயற்படுவதில்லை. தமிழ்மொழி அமுலாக்கலை உதாரணமாகக் கொள்ளலாம். நுவரெலியாவிலும் அம்பகமுவவிலும் தமிழ்மொழியும் அரசகரும மொழி என்று யாப்பில் கூறப்பட்டிருக்கிறது. நுவரெலியா வைத்தியசாலையில் சென்று அவதானித்தால் தமிழ் அமுலாகும் இலட்சணத்தைப் பார்க்கலாம். தினமும் ஆயிரக்கணக்கில் அங்கு வருகை தரும் எமது பெருந்தோட்ட நோயாளிகளுக்கும் கட்டாயம் சிங்களம் தெரிந்திருக்க வேண்டும். தமிழ் வைத்தியர்களும் கூட சிங்களத்திலேயே உரையாடுகின்றார்கள். தங்கள் நோய்களை எடுத்துக்கூற எம்மவர்கள் படும்பாடு வேதனை தரக்கூடியது. இத்தனைக்கும் எமது அரசியல் தலைமைகள் எல்லாமே நுவரெலியா மக்களின் வாக்குகளில் வந்தவர்கள் என்பதை இங்கு கூறத்தேவையில்லை.

புதிய அரசியலமைப்பு ஏன் எமக்கு அவசியம், அரசியல் அமைப்பு என்றால் என்ன, அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள், அரசியலமைப்பின் உருவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் எவ்வாறு கருத்து தெரிவிக்க வேண்டும், இலங்கைக்கு புதிய அரசியல் அமைப்பு ஏன் அவசியப்படுகிறது போன்ற பல்வேறு அம்சங்களைப் பற்றி ஊடகங்களிலும் வேறு வழிகளிலும் எடுத்துக்கூறப்பட்டு வருகின்றன. எனவே, இங்கு அது பற்றி நாம் விளக்கத் தேவையில்லை.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் அரசியல் யாப்பு எல்லாப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்று கூறுவார்கள். தேர்தல் சீர்திருத்தம் அவராலேயே கொண்டு வரப்பட்டது. தொகுதிவாரியான பிரதிநிதித்துவம் இல்லாமல் செய்யப்பட்டு விகிதாசார பிரதிநிதித்துவம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொகுதிவாரி பிரதிநிதித்துவத்தின் மூலம் யு.என்.பியும் ஸ்ரீல.சு.க வுமே மாறிமாறி ஆட்சிக்கு வந்து கொண்டிருந்தன. சில தேர்தல்களில் ஒற்றை இலக்கத்தில் இவை தொகுதிகளைப் பெற்று தோல்வியைத் தழுவி இருந்தன. எதிர்பாராத விதமாக தமிழரசுக்கட்சி அதிக ஆசனங்களைப் பெற்று ஸ்ரீல.சு.க. வை பின்தள்ளி எதிர்க்கட்சியாகி அமிர்தலிங்கம் தலைவரானார். விகிதாசார முறை அப்போது கடைப்பிடிக்கப்பட்டிருக்குமானால் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த எவரும் அப்பதவியைப் பிடித்திருக்க முடியாது. எனவே, பெரும்பான்மை அரசியல்கட்சிகளே ஆட்சியிலும் எதிர்க்கட்சியிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே அன்று தேர்தல் முறை பாற்பட்டது.

அவர்களது எதிர்ப்புகளுக்கு மாறாக அதே தமிழரசுக்கட்சி சம்பந்தன் இப்போது எதிர்க்கட்சித் தலைவராகி விட்டார். ஆனால், இந்த நியமனத்திற்குப் பின்னால் அரசியல் இருப்பதை எல்லோரும் உணர்வார்கள். இதுபோலவே சிறுபான்மைத் தமிழர்களும் முஸ்லிம்களும் குறிப்பிடத்தக்க அளவு பிரதிநிதித்துவத்தைப் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எமது பிரதிநிதிகள் இன்று பெருமளவு சபைகளில் இருப்பதற்குக் காரணம் விகிதாசார தேர்தல் முறையே.

புதிய தேர்தல் சீர்திருத்தம் மீண்டும் தொகுதிவாரியை முன்னிலைப்படுத்தப் போகிறது. இது அமுலானால் நுவரெலியாவில் கூட எம்மவர் ஒருவர் தானும் வர முடியுமா என்பது சந்தேகமே! யு.என்.பி.யுடன் இணைந்து நின்றாலே ஓரளவு வெற்றி வாய்ப்பு உளளதாகத் தெரிகிறது. 1977 தேர்தலில் நுவரெலியாவில் போட்டியிட்ட அமரர் தொண்டமான் மூன்றாவது அங்கத்தவராக நூலிழையில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது மக்கள் அமரர் காமினி திசாநாயக்கவுக்கு வாக்களித்து அவரை முதலாவது அங்கத்தவராக்கினர். நுவரெலியா மாவட்டத்தின் வடகிழக்கு வாக்குகளே தொண்டமானை வெற்றி பெறச் செய்ததாக அப்போது பேசிக் கொண்டார்கள். மீண்டும் அதே நிலைமை வரக்கூடிய சாத்தியப்பாடுகளே புதிய அரசியலமைப்பின் நடைமுறையின் பின்னர் எழக்கூடும். பெரும்பான்மையின கட்சிகளின் தயவில்லாமல் பாராளுமன்றம் செல்வது இயலாத ஒன்றாகி விடும்.

இதனை கருத்திற்கொண்டு எமது அரசியல் தலைமைகள் தமக்குள் மோதிக்கொள்வதை விடுத்து வரப்போகும் துயரத்தைத் தடுக்கப் பார்க்க வேண்டும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும். 1948 இல் இருந்த நிலையில் எமது சமூகம் இன்று இல்லை என்பதை பார்த்தோம். எதையும் புரிந்து அறிந்து செயற்படக்கூடியவர்களாக நாம் மாறி இருக்கின்றோம். செயல்வடிவங்களே இன்றைய தேவையாகும்.

வீடு, காணியுரிமை பற்றி காலங்காலமாக பேசிக்கொண்டு இருக்கின்றோம். வீடுகள் குறிப்பிடத்தக்க அளவு உருவாகிக் கொண்டிருக்கின்றன. அவற்றிற்கு உறுதிகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் உடனடி கவனம் செலுத்திட வேண்டும். காணிகள் பகிர்ந்தளிப்பிலும் எமது அவதானம் தீவிரமாக இருக்க வேண்டும். தேயிலைக்கு காலம் இன்னும் ஐந்து வருடங்களே என்று தலைமைகளே கூறிவருகின்றன. தேயிலை இல்லாமல் போனால் எமது குடியிருப்புகளே கேள்விக் குறியதாகி விடும். தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதால் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்குத் தேயிலைச் செடிகளை பகிர்ந்தளித்து உபரித் தொழிலாளர்களாக மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. பறிக்கும் கொழுந்துக்கேற்ப கொடுப்பனவு தீர்மானிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. ஊழியர் சேமலாப நிதி போன்ற எல்லா வித சலுகைகளும் நிறுத்தப்படுமாம். இதனால் மலையக மக்களின் இருப்பே கேள்விக்குறியாகி உள்ளது. இன்றைய அடிப்படைப் பிரச்சினை அவர்களது இருப்பை பாதுகாப்பதாகும். மிகவும் தந்திரமான முறையில் மலையக மக்களை நிர்மூலப்படுத்துவதற்காக கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களையும் தடுத்து நிறுத்திவிட வேண்டும்.

வடகிழக்கு தமிழ்மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். அமைதி திரும்பும் போது அவர்கள் மீள வந்து குடியமர சொந்தமாகக் காணி இருக்கிறது. ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் புலம்பெயர்ந்த இலட்சக்கணக்கான தமிழர்கள் மீள வரமுடியாது. அது போலவே தோட்டங்கள் இழுத்து மூடப்பட்டால் வெளியே உள்ள இலட்சக்கணக்கான மலையகத் தமிழர்கள் மீண்டும் வந்து குடியேற இங்கு எதுவித உரிமையும் இல்லை. தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டபோது வெளியேற்றப்பட்ட எம்மக்கள் இன்றும் அநாதைகளாகப் போக்கிடமற்று இருக்கின்றார்கள்.

எழுபதுகளில் வடகிழக்கு தலைவர்களின் அழைப்பை ஏற்று ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கிளிநொச்சி, வவுனியா, செங்கலடி போன்ற பிரதேசங்களில் குடியேறினர். காந்தீயம் போன்ற அமைப்புக்கள் இதற்கு உதவிகளைச் செய்தன. இப்போது இவர்களின் இலட்சக்கணக்கான வாக்குகளைக் கொண்டு அங்குள்ளவர்கள் அரசியல் செய்கிறார்கள். அந்தப் பகுதிகளில் உள்ள எம்மவர்களின் காணி மற்றும் பொருளாதார பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லை.

இறுதிக்கட்ட போரில் அகதிகளாக புனர்வாழ்வு முகாம்களில் நூற்றுக்கணக்கில் தஞ்சமடைந்தவர்களும் இங்கிருந்து சென்றவர்கள் என தெரிகிறது. தோட்டங்கள், கிராமங்கள் ஆக்கப்பட்டு கிராம மக்களுக்கு வழங்கப்படும் சகல உரிமைகளும் சலுகைகளும் இவர்களுக்கும் கிடைக்கச் செய்வதே உடனடித் தேவையாகும். தலைமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய இறுதித் தருணம் இதுவாகும்.

1948 பிரஜாவுரிமை சட்டம், 1964 ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தம், 1972 நிலச் சீர்திருத்தம், 1977 1983 தொடர் இனமோதல் என தொடர் மோதல்களுக்கு நாம் முகங்கொடுத்து வந்திருக்கிறோம். 2016 இலும் எமது இருப்பை இல்லாமல் ஆக்க எடுக்கப்படும் சதி முறியடிக்கப்பட வேண்டும் என்பதே எமது மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates