தோட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மற்றும் வெளிக்களத்தில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு ஆட்களைச் சேர்த்துக் கொள்ளும்போது தோட்டங்களில் படித்த இளைஞர், யுவதிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என ஆரம்பகால முதல் தொழிற்சங்கங்களினால் கூறப்பட்டு வந்துள்ள போதிலும் செயலில் அது நடைபெறாது தோட்ட இளைஞர், யுவதிகள் புறக்கணிக்கப்பட்டு வரும் நடவடிக்கையே நீண்டகாலமாக இடம்பெற்ற வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.
படித்த தோட்ட இளைஞர், யுவதிகள் இனரீதியாகப் புறக்கணிக்கப்பட்டு வெளியாருக்கே வாய்ப்பளிக்கப்பட்டு வருகின்றது. காவல் வேலை, கங்காணி வேலை, சாரதி வேலை மற்றும் தேயிலை, இறப்பர் தொழிற்சாலைகள் தோட்ட அலுவலகங்களில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு வெளியார்களே நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
கூட்டு ஒப்பந்தத்தில் தோட்டத்தில் படித்த இளைஞர், யுவதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ள போதிலும் இன்று வரையில் அது பின்பற்றப்பட்டதாக இல்லை. தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் பயிற்சியைத் தானும் பெற்றுக் கொள்ள இடம் வழங்கப்படாது புறக்கணிக்கப்பட்டு அநீதியே இடம்பெற்று வருகின்றது.
தோட்டங்களை ஆங்கிலேயர் நிர்வகித்து வந்த காலத்தில் தமிழ் உத்தியோகத்தர்களே இந்தப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்துள்ளனர். கங்காணிமார் கணக்குப்பிள்ளைமாரிடமிருந்தே ஆங்கிலேய துரைமார் தேயிலை மற்றும் இறப்பர் பயிர்ச்செய்கை தொடர்பான நுணுக்கங்களை அறிந்து கொண்டனர். ஆனால் தற்பொழுது இந்த நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. தோட்ட இளைஞர், யுவதிகள் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தோட்டங்களில் ஏற்படும் வெற்றிடம் தொடர்பாக விளம்பரப்படுத்தாது அதிகாரிகள் தமது இஷ்டப்படி தமக்கு வேண்டியவர்களின் பிள்ளைகளுக்கு தந்திரமான முறையில் நியமனம் வழங்கி வருகின்றனர்.
தோட்டங்களில் பாடுபட்டு உழைத்து இலாபத்தை ஈட்டித்தரும் தொழிலாளரின் பிள்ளைகள் இன்று படித்து தகைமை உள்ளவர்களாக இருக்கின்ற போதிலும் தொழிலாளரின் பிள்ளைகளுக்கு உயர்ந்த இடத்தை கொடுப்பதா? என்ற எண்ணப்பாட்டுடனேயே திட்டமிட்ட இந்த புறக்கணிப்பு இடம்பெற்று வருகின்றது.
களுத்துறை மாவட்டத் தோட்டங்களில் இன்று இத்தகைய புறக்கணிப்பு இடம்பெற்று வருவதால் பெற்றோரும் அவர்களது பிள்ளைகளும் மிகுந்த அதிருப்தியடைந்துள்ளனர்.
ஆனால் படித்த தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என கூறிவரும் தொழிற்சங்கங்கள் இது குறித்து தட்டிக்கேட்க முன் வந்ததில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் இந்த மாவட்டத்தின் இங்கிரிய றைகம தோட்டம் மேற்பிரிவில் வெளியில் இருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை வேலை மேற்பார்வையாளராக சேர்த்துக் கொள்ள முற்பட்ட தோட்ட அதிகாரியின் போக்கை கண்டித்து தோட்ட மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
எனினும் அந்த வெற்றிடத்துக்கு இது வரையில் எவரையும் நியமிக்க தோட்ட நிர்வாகம் முன்வரவில்லை. தொழிற்சங்கங்களும் இது குறித்து அக்கறை செலுத்தி தோட்டத்தில் உள்ள இளைஞர் ஒருவருக்கு அந்த வாய்ப்பைப் பெற்றுக் கொடுக்க முன்வரவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
தோட்டங்களில் வசித்து வருவோர் பெரும்பாலும் தமிழர்களாக இருந்துவருகின்ற போதிலும் தோட்டங்களில் நியமிக்கப்படும் நலன்புரி மேற்பார்வையாளர் பதவிக்கும் வெளியாளர்களே நியமிக்கப்படுகின்றனர்.
ட்ரஸ்ட் நிறுவனத்தினால் வெற்றிடம் தொடர்பாக விளம்பரம் செய்து விண்ணப்பம் கோருவதைவிடுத்து தந்திரமான முறையில் வெளியார்களே நியமிக்கப்படுகின்றனர். ஹொரணை எல்லகந்த தோட்டத்தில் சில வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். கூட்டு ஒப்பந்த உடன்படிக்கைக்கு முரணான நடவடிக்கையே இடம்பெற்று வருகின்றது.
தோட்டப்புறங்களில் படித்த இளைஞர் யுவதிகளுக்கு அவர்கள் வசித்து வரும் தோட்டங்களிலேயே பதவியும், பயிற்சியும் வழங்க வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகைச் செய்தியொன்றில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் தோட்ட நிர்வாகங்கள் இதனைக் கவனத்திற் கொள்ளாது தன்னிச்சையாகவே நடந்து கொள்கின்றன.
களுத்துறை மாவட்டத்தின் பெரும்பாலான தோட்டங்களில் தேயிலை, இறப்பர் தொழிற்சாலைகள் தோட்ட அலுவலகங்கள் மற்றும் பிரிவுகளில் பெரும்பான்மை இனத்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஓரிரு தமிழ் உத்தியோகத்தர்கள் பதவி வகித்து வருகின்ற போதிலும் அவர்கள் பல்வேறு சவால்களுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்த வண்ணமே கடமையை மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள், பெண்களின் உரிமைகள், சமத்துவம் என மேடைகளில் முழங்கி அறிக்கைகள் விடுத்துவரும் தொழிற்சங்கவாதிகள் தோட்டத் தொழிலாளருக்கு தோட்டத்தில் கிடைக்க வேண்டிய உரிமைகளைத் தானும் உறுதிப்படுத்த முடியாதவர்களாக உள்ளனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...