நுவரெலியா மாவட்டத்தில் உள்ள உயர்தர வகுப்புக்களை கொண்ட பாடசாலைகளில் கணித, விஞ்ஞான, பிரிவுகளில் கல்வி பயில ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தோட்டப்புற மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதானது கணித, விஞ்ஞான பிரிவுகளில் உயர்தரம் கற்ற பல்கலைக்கழகம் செல்ல எத்தனித்துள்ள வெளிமாவட்ட மாணவர்களுக்கு பாரிய பின்னடைவாகும்.
நடந்து முடிந்த க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் போது நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் குறிப்பாக உயர்தர வகுப்புக்களைக் கொண்ட பாடசாலைகளில் அதிகளவான வெளி மாவட்ட மணவர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதை காண முடிகின்றது.
கல்வி இராஜாங்க அமைச்சர் வீ. இராதாகிருஷ்ணன் இவ்விடயத்தில் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டதை தொடர்ந்து குறித்த இப்பிரச்சினை தேசிய ரீதியாக பேசப்பட்டது. பரீட்சைக்காக மாத்திரம் அனுமதி வழங்கியதாக அடையாளங் காணப்பட்ட சில பாடசாலைகளின் அதிபர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். இச் செயற்பாட்டின் மூலம் கல்வி இராஜாங்க அமைச்சர் மத்திய மாகாணத்தில் பரபரப்பான முடிவுகளை மேற்கொள்ளும் அரசியல் பிரபலமாக மாறிப் போயிருந்தார்.
உண்மையில் வெளிமாவட்ட மாணவர்கள் மத்திய மாகாணப் பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதானது அம் மாகாணத்திலே கல்வி பயிலும் மாணவர்களுக்கு அநீதியை பல்கலைக்கழக அனுமதியின் போது ஏற்படுத்தும் என்பது பெரும்பாலும் உண்மையாகும். எனினும் ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலுள்ள தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களிலும் உள்ள மாணவர்கள் பரீட்சைக்காக மாத்திரம் பாடசாலைகளில் அனுமதி பெற்றுள்ளனர் என்பதை அனைவரும் அறிந்து கொண்டுள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னரே நுவரெலியா மாவட்டம், மொனரகலை மாவட்டம் போன்றவை கஷ்டப் பிரதேசங்களாக அடையாளங் காணப்பட்டு இப்பகுதியிலுள்ள மாணவர்களின் பல்கலைக்கழகத் தெரிவு நன்மை கருதி வெட்டுப் புள்ளிகளும் குறைக்கப்பட்டிருந்தன. இச்சலுகை மத்திய மாகாணத்திலுள்ள குறித்த மாவட்டத்திலுள்ள பிள்ளைகளின் நன்மை கருதி அரசாங்கத்தால் எடுக்கப்பட்டிருந்தது. எனினும் காலப்போக்கில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளுக்குத் தகுதியான ஆசிரியர்கள், மேலதிக வகுப்புகள் என்பவை நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் சிறப்பாக காணப்பட்டதால் வெளிமாவட்ட மாணவர்கள் இங்கு வந்து உயர்தரம் கற்க அதிக ஆர்வம் காட்டியிருந்தனர்.
குறிப்பாக பதுளை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களிலுள்ள மலையக மாணவர்களே, உயர்தர கற்றல் செயற்பாடுகளுக்காக இங்கு வருகை தந்திருந்தனர். இவர்களில் அதிகமானோர் பரீட்சையில் சித்தி பெற்று மருத்துவ, பொறியியல் துறைகளுக்கு பல்கலைக்கழக அனுமதியை பெற்றிருந்தனர். இவர்களில் பல்கலைக்கழகத் தெரிவு எந்தளவுக்கு மத்திய மாகாணத்திலுள்ள மாணவர்களுக்கான பல்கலைக்கழக வாய்ப்பைப் பாதித்துள்ளது என்பது குறித்து முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
கடந்த 5 வருட காலப் பகுதியில் நுவரெலியா மாவட்டத்திலுள்ள உயர்தரப் பாடசாலைகளில் இருந்து கணித, விஞ்ஞான பிரிவுகளில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்களில் எத்தனை தமிழ் மாணவர்கள் உள்ளடங்கியுள்ளனர். அதில் நுவரெலியா மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் எத்தனை பேர், ஊவா, சப்ரகமுவ மகாணங்களின் தோட்டப்புற மாணவர்கள் எத்தனை பேர் ஏனைய வெளிமாவட்ட மாணவர்கள் எத்தனை பேர் என்ற தரவுகளை முறையாக பெறும்போது நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரசியல் தலைவர்களுக்கும் கல்வி உயரதிகாரிகளுக்கும் சில நடு நிலையான தீர்மானங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள வாய்ப்புகள் ஏற்படும்.
பதுளை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளில் உயர்தர கணித, விஞ்ஞான வகுப்புகளுக்கு முறையான ஆசிரிய வளப் பகிர்வு இல்லாமை பாரிய குறைபாடாக உள்ளது. குறிப்பாக பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரியில் கணித, விஞ்ஞான உயர்தர வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களுக்கு மேலாகின்றன. எனினும் இதுவரை காலமும் குறித்த வகுப்புகளுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது.
1 ஏபி தரத்திலான பாடசாலை அமைந்துள்ள பகுதிக்கு 3 கிலோ மீற்றருக்குள் உயர்தர வகுப்புக்களை கொண்ட தமிழ் மொழி மூல பாடசாலைகள் காலத்தின் தேவை கருதி அமைக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக ஆசிரிய வளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிப் போயுள்ளன.
பதுளை மாவட்டத்தின் ஏனைய உயர்தர வகுப்புகளை கொண்ட பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக அவை வெற்றிகரமான செயற்பாட்டை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளன. ஊவா மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைகளுக்கும் மாகாண பாடசாலைகளுக்கும் ஆசிரிய வளங்களை பகிர்வதில் இன்னும் சிக்கல் நிலைமையே உள்ளது.
உயர்தர கணித, விஞ்ஞான வகுப்புகளில் கற்பிக்கக் கூடிய பட்டதாரி ஆசிரியர்கள் தரம் 5 வரையான வகுப்புக்களை கொண்ட ஆரம்பப் பிரிவு பாடசாலைகளுக்குள் முடக்கப்பட்டுள்ளனர். கணித, விஞ்ஞான பாடங்களுக்காக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள் இவ்வாறு ஆரம்பப் பிரிவு பாடசாலைகளில் கடமையாற்றி வருகின்றனர்.
உண்மையில் பதுளை, மொனராகலை மாவட்டங்களிலுள்ள தமிழ் மொழி மூல மாணவர்களின் நன்மை கருதி உயர்தர கணித, விஞ்ஞான, பிரிவுகள் பதுளை, பண்டாரவளை பகுதிகளை மையப்படுத்தி அங்க சம்பூரணமாக நடத்தப்பட வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறான நிலை காணப்படாமையினாலேயே குறித்த பிரிவுகளில் கல்வி கற்க இங்குள்ள தோட்டப்புற மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பாடசாலைகளை நோக்கி படையெடுக்கின்றனர் என்பதை கல்வி இராஜாங்க அமைச்சர் கவனத்திலெடுக்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதை தொடர்ந்து அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கத்திலும் கல்வி இராஜாங்க அமைச்சராக வீ. இராதாகிருஷ்ணனே செயற்பட்டார். அவ்வரசாங்கத்தின் 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊவா மாகாணத்திலுள்ள 8 தமிழ் மொழி பாடசாலைகள் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளை அங்க சம்பூர்ணமாக கொண்ட பாடசாலைகளாக தரமுயர்த்தப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதற்கான கூட்டம் தற்போதைய பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தலைமையில் ஊவா மாகாண சபை கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது. அதிபர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டு இவ்விடயம் தொடர்பாக செயற்பாடுகளை முன்னெடுக்க குழுக்களும் அமைக்கப்பட்டன. எனினும் என்ன காரணமோ தெரியவில்லை. பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பின்னர் இவ்விடயம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பாகவும் கரிசனை காட்டப்படுமாயின் தற்போதைய பிரச்சினைக்கு சுமுக தீர்வை எட்ட முடியும்.
பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரஸ்தாபித்து கல்வி அமைச்சின் தீர்மானங்களுக்கமைவாக மாகாணத்தில் உயர்தர கணித, விஞ்ஞான பிரிவுகளில் நிலவும் ஆசிரிய, பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்திக்க முன்வர வேண்டும்.
தற்போதைய நிலையில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 9 ஏ சித்திகளை பெறும் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளை நுவரெலியா மாவட்ட பாடசாலைகளில் அனுமதித்து அவர்களுக்கான கற்றல், சந்தர்ப்பத்தை வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு கல்வி கற்கும் மாணவர்கள் பரீட்சைக்கு தமது மாவட்ட பாடசாலைகளில் தோற்ற வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.
இது மலையக தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு பல்கலைக்கழக அனுமதிக்காக செய்யப்படும் வித்தியாதானமாக பார்க்கப்பட வேண்டும். பணம் படைத்த தனவந்தர்களின் சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தெரிவித்து நுவரெலியா மாவட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அப்பாவித் தொழிலாளர்களின் பிள்ளைகளின் பல்கலைக்கழக கனவை சிதைத்து விடக்கூடாது. அது மலையக சமூகத்திற்கே பாதிப்பை ஏற்படுத்தும்.
கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்ததை போன்று பதுளை சரஸ்வதி தேசிய கல்லூரி, பசறை தமிழ்த்தேசிய பாடசாலை என்பவற்றில் அங்க சம்பூர்ணமான கணித, விஞ்ஞான பிரிவுகளை ஆரம்பிப்பதோடு இப்பிரிவுகளுக்கு விடயம் சார்ந்த பட்டதாரி ஆசிரியர்களை உடன் நியமிக்க வேண்டும். இது காலத்தின் அவசரத் தேவையாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...