இலங்கை வரலாற்றை எடுத்துக்கொண்டால், மலையக பெருந்தோட்ட மக்கள் இனம், மொழி, தொழில்ரீதியாக மட்டும் ஒடுக்கப்படவோ, அடிமைப்படுத்தவோ இல்லை. அதையும் தாண்டி மதுபானம் என்ற கொடிய அரக்கனுக்கும் அடிமையாக்கப்பட்டிருக்கின்றனர் என்பதுதான் உண்மை.
இவ்வாறான நிலையில் மது அரக்கனிடமிருந்தும் மலையக கல்வி மக்களை விடுதலை பெற்ற ஒரு சமூகமாக மாற்ற வேண்டிய கடப்பாடு மலையக கல்வி ஆர்வலர்களுக்கும் சமூக மேம்பாட்டாளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மக்கள் சமூக மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்படும் பாரிய முயற்சிகள் அதன் நோக்கில் வெற்றிபெற முடியாமல் இருப்பதற்கு அவர்கள் மத்தியில் நிலவும் குடிப்பழக்கமும் ஒரு காரணம் என்றே சுட்டிக்காட்டப்படுகிறது.
ஏனைய நகர்ப்புற, கிராமப்புற மக்கள் மத்தியிலும் குடிப்பழக்கம் இல்லாமல் இல்லை. ஆனால், இவர்கள் எல்லோரையும் விட குடிப்பழக்கத்தால் பாரிய சீரழிவுகளுக்கும் சமூக, பொருளாதாரப் பின்னடைவுகளுக்கும் உள்ளானவர்கள் மலையக மக்கள்தான்.
மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான குடிநீர் விநியோகம், மருத்துவ வசதி, போக்குவரத்து, வாசிகசாலை போன்ற இன்னோரன்ன தேவைகள் எல்லாம் கிடைக்காத நிலையில் மதுபானக் கடைகளுக்கு மட்டும் மலையகத்தில் பஞ்சமில்லை.
ஹட்டன், டிக்கோயா, எல்லைக்குள் மாத்திரம் இன்று 18 மதுபானக் கடைகள் இயங்குகின்றன. மொத்தமாக கினிகத்தேன,வட்டவளை, ஹட்டன், டிக்கோயா, நோர்வூட், பொகவந்தலாவ, மஸ்கெலியா, சாமிமலை, கொட்டகலை, தலவாக்கலை, அக்கரகந்த,லிந்துல, ஹோல்புரூக், மன்றாசி, அக்கரபத்தன, டயகம, காசல்ரி, நோட்டன் போன்ற பகுதிகளில் மாத்திரம் மொத்தமாக 58 பார்கள், மதுபானக் கடைகள் இயங்குகின்றன. அதோடு மினி மதுபானக் கடைகள் பல இயங்குகின்றன.
மினி மதுபானக் கடைகள் இல்லாத தோட்டங்களே மலையகத்தில் இல்லை என்று துணிந்து சொல்லும் அளவிற்கு, இவற்றின் வளர்ச்சி மலையகத்தை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. தோட்டங்களில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டுள்ள அநேகர் இதை தமது பகுதிநேரத் தொழிலாகவும் வேறு சிலர் தமது முழுநேரத் தொழிலாகவும் செய்து வருகின்றனர்.
தோட்டங்களில் முதியவர் ,இளையவர், ஆண்,பெண் என்ற வித்தியாசங்களை எல்லாம் கடந்து குடிப்பழக்கம், தோட்ட மக்கள் மத்தியில் நாளாந்தம் பெருகிவருகிறது. தோட்டங்களில் சம்பளம், முற்பணம் வழங்கும் நாட்கள் மற்றும் உற்சவங்கள், கொண்டாட்டங்கள் நடைபெறும் தினங்களில் குடிப்பழக்கத்துடன் அதிரடித் தாக்கங்களும் தாராளமாகவே இடம்பெறுகின்றன.
தோட்டங்களில் விற்கப்படும் சாரயம் நிச்சயமாக கலப்படமானதாகவே இருக்கும். சில சமயங்களில் சாரயத்தோடு யூரியா உரம், ஸ்பிரிட், புகையிலைச்சாறு, சிகரட்தூள், லேகியம், எம்பெம் பெளடர் போன்றவற்றையும் கலந்து விற்பதுண்டு. போதையை அதிகரிப்பதற்காக இப்படிச் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. அக்காலத்தில் தோட்டங்கள் தோறும் இளைஞர் மன்றங்கள், இராப்பாடசாலைகள், முதியோர் கல்வி நிலையங்கள் என்பன சமூகப்பணியாற்றிவந்தன.
குடி, சூதாட்டம், திருட்டு முதலான குற்றச் செயல்களுக்கு எதிராக இந்த அமைப்புகள் தோட்ட மக்களிடையே காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன.
ஆனால் இப்போதோ தோட்ட லயன்களில் இயங்கிவரும் மினி மதுபானக் கடைகள் இந்த சமூகநல அமைப்புகளின் பணிகளைப் பின்தள்ளும் அளவிற்கு மிஞ்சிவிட்டன.
அக்காலத்தில் தோட்டங்கள் தோறும் காலை 7.30 மணிக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர் மாலை 5.30 மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள்.
அக்கால இளைஞர்கள் மத்தியில் தோட்டங்கள் தோறும் நல்ல உடல் பயிற்சிக்கான விளையாட்டுக்கள் இருந்தன. பிள்ளையார் பந்து, கிளிதட்டு, மூடியடித்தல், கண்ணாடி போலை, திருடன் பொலிஸ், கரப்பந்தாட்டம், கால்பந்தாட்டம், நொண்டி விளையாடுதல், புளியங் கொட்டை அடித்தல் போன்ற விளையாட்டுக்கள் தோட்டங்கள் தோறும் காணப்பட்டன. அப்போது , உடல் நிலையும் மன நிலையும் இவ்விளையாட்டுக்களினால் ஊக்கமளித்தன. (மது என்ற நினைப்பு பண்டிகை காலங்களில் மாத்திரம் காணக்கூடியதாக இருந்தது). ஆனால், இன்று அந்நிலை மாறி எமது எதிர்கால சமூகத்தை சீரழிக்கும் கொடிய அரக்கனாக மலையக நகரங்களில் மட்டுமன்றி தோட்ட லயன்களுக்குள்ளேயும் மினி மதுபானக் கடைகள் சட்டவிரோதமாக தங்கு தடையின்றி தாரளமாக இயங்குகின்றன.
சில தோட்டங்களில் தொழிற்சங்கங்களுக்கு அங்கத்தவர்களை சேர்க்கும் போது சாராய போத்தல்கள் சங்கமிப்பது இன்றும் நிலவி வரும் ஒரு வழக்கமாக மாறிவிட்டது.
நான் கல்வி கற்ற ஹட்டன் நகர பாடசாலை ஒன்றில் 1975 ஆம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் ஒரு மாணவனை பார்த்து,வயலில் மேயும் எருமை மாட்டை திருத்தி விடலாம். ஆனால் மலையக தமிழனை ஒரு காலமும் திருத்த முடியாது. திருந்தவும் மாட்டான். என்று கூறிய அந்த வார்த்தைகள் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும்.
தோட்ட மக்களை குடிப்பழக்கத்திலிருந்து மீட்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை விட அவர்களை மதுவுக்கு மேலும் மேலும் அடிமைகளாக்கும் முயற்சிகளே மறைமுகமாகவும் பகிரங்கமாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. மலையக மக்களின் விடுதலையில் அக்கறையுடையவர்களாகக் காட்சிதரும் அவதாரத் தலைமைகள் சிலரின் அனுசரணையுடன் தான் மலையக நகரங்கள் பலவற்றில் அண்மைக்காலத்தில் பல மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன என்ற உண்மை இப்போது இருட்டறையில் உறங்கினாலும் அது விரைவில் வெளிச்சத்துக்கு வரும். மது மூளையிலுள்ள செல்களை அழித்து விடுகிறது. மனித மூளை கோடிக்கணக்கான செல்களால் ஆனது. உடலில் உரசல் ஏற்பட்டு தோல் போய் விடுமானால் ஒரு சில நாட்களில் அந்த இடத்தைப் புதிய தோல் மூடி விடுகிறது. அவ்வாறே நகம் வெட்டுண்டு போனால் இன்னொன்று அவ்விடத்தை நிரப்பிவிடுகிறது. ஆனால் மூளை ஒரு முறை இழந்த செல்களை மீண்டும் பெற்றுக் கொள்ள முடிவதில்லை.
மலையக மக்களின் நல்வாழ்வு சம் பந்தமான முயற்சிகள் காலத்தின் தேவையை உணர்ந்த அர்த்தமுள்ள முயற்சிகளாக அமைய வேண்டும். நாளைய சமுதாயம் மதுவற்ற சமுதாயமாக மலரவேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...