நுவரெலியா மாவட்டத்தின் சில உயர்தர பாடசாலைகளிலிருந்து வெளிமாவட்ட உயர்தர மாணவர்கள் மீண்டும் அவர்களது பிரதேசத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அதிலும் சப்ரகமுவ மாகாண மாணவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது ஏனெனில் உயர்தரத்தில் கணித ,விஞ்ஞான கற்கை நெறிகள் கொண்ட தமிழ் பாடசாலைகள் அங்கில்லை. சுமார் 30 வருட கால பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தையும் அமைச்சுப்பதவிகளையும் கொண்டிருந்த மலையகத்தின் கல்வி நிலை குறித்து இப்போது பல தெளிவுகள் பலருக்கு கிடைத்திருக்கும். இந்திய வம்சாவளி தமிழர்கள் அதிகம் செறிந்து வாழ்ந்து வரும் ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் தமிழ் பாடசாலைகளை தரமுயர்த்தாமலிருந்ததற்கு யார் பதில் கூற போகின்றார்கள்?
ஊவா மாகாணம்
ஊவா மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்திய பாராளுமன்ற உறுப்பினரான மு.சச்சிதானந்தனுக்கு பிரதி கல்வி அமைச்சு கிடைத்தது. சிறுபான்மை பிரதிநிதி ஒருவருக்கு மிகவும் அரிதாக கிடைத்த இந்த பதவியின் மூலம் அவரது காலகட்டத்தில் ஊவா மாகாணத்தில் எத்தனை பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டன? பதுளை ,பண்டாரவளை ,அப்புத்தளை நகரங்களில் அமைந்துள்ள பாடசாலைகளின் உயர்தர பிரிவை தரமுயர்த்தியிருந்தால் இன்று அங்கிருந்து மாணவர்கள் நுவரெலியா மாவட்டத்திற்கு ஏன் படையெடுக்க வேண்டும்? கல்வித்துறை கைகளில் இருந்தும் அதை உரியவாறு செய்யாததால் தானே கடந்த காலங்களில் பெற்றோர்கள் அங்கிருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு வருகை தந்தனர்?
மத்திய மாகாணம்
மத்திய மாகாணத்தில் உள்ள நுவரெலியா மாவட்டத்தில் ஆரம்ப காலத்திலிருந்து அமைச்சுப்பதவிகளை அலங்கரித்தவர் மற்றும் மாகாண தமிழ் கல்வி அமைச்சை வைத்திருந்தவர்கள் எத்தனை தேசிய பாடசாலைகளை உருவாக்கினர்? இன்றும் கூட நுவரெலியா மாவட்டத்தில் ஐந்து தமிழ் தேசிய பாடசாலைகளை உருவாக்குவதற்கு கல்வி அமைச்சு தயாராக இருக்கின்றது ஆனால்,மத்திய மாகாண முதலமைச்சர் உட்பட ஏனைய மாகாண அமைச்சர்கள் இதற்கு அனுமதி வழங்காது ( மாகாணசபையில் ஒரு பிரேரணை கொண்டு வந்து நிறைவேற்றினாலே போதுமானது) இருக்கின்றனர். இன்று தேசிய பாடசாலை ஒன்றுக்கு அரசாங்கம் வருடாந்தாம் 20 இலட்சம் ரூபா வரை ஒதுக்குகின்றது. அதுவும் சிறிய திருத்த வேளைகள் மற்றும் ஏனைய விடயங்களுக்கு அத்தொகை. மாகாண பாடசாலைகளுக்கு மாகாண சபையானது விரும்பினால் மட்டுமே நிதி ஒதுக்குகின்றது. ஆரம்ப காலத்திலேயே தேசிய பாடசாலைகளை உருவாக்கியிருந்தால் இன்று உயர்தர பாடசாலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும்.
பல தமிழ் மக்கள் இன்று சப்ரகமுவ மாகாணத்தில் தமது பிள்ளைகளை பெரும்பான்மை மொழியில் படிக்க வைக்கின்றனர். ஏனெனில் பெரும்பான்மை மொழி பாடசாலைகளில் உயர்தர வகுப்புகளுடன் நல்ல வளங்கள் இருக்கின்றன. ஆரம்பத்தில் இரத்தினபுரி மாவட்டத்தில் ஒரு தமிழ் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இருந்தது. அதை தொடர்ச்சியாக தக்க வைத்துக்கொள்ளாதது யாருடைய தவறு? மலையக கல்வி தொடர்பில் வாய் கிழிய கத்துவோர் ஆரம்பத்தில் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்வதில்லை. நுவரெலியா மாவட்டத்தில் நல்ல பாடசாலைகள் எமது காலத்தில் உருவாகின ஆதலால் தான் எல்லோரும் இங்கு படையெடுக்கின்றனர் என தமக்குத்தாமே சமாதானம் சொல்லிக்கொள்ளும் பிரதிநிதிகள் ஒரு விடயத்திற்கு பதில் கூற வேண்டும், எல்லா வளங்களையும் ஒரே பாடசாலைக்குள் வந்து குவிக்காதீர்கள் என அதை பகிர்ந்து பல பாடசாலைகளை உருவாக்குங்கள் என பல பெற்றோர்களின் மாணவர்களின் கல்வி அதிகாரிகளின் குரல்களை புறக்கணித்தீர்களே இப்போது விதைத்ததை அறுவடை செய்கின்றீர்களா? உங்கள் காலத்தில் அதிகாரத்தை கைகளில் வைத்துக்கொண்டு மாகாண பாடசாலைகளில் இஷ்டம் போல தேர்தல் பணிகளை செய்து, பலரை செய்ய வைத்து மத்திய அரசாங்கத்திடம் இப்பாடசாலைகள் போய் சேராது பத்திரமாக பாதுகாத்தீர்களே இன்று தெரிகிறதா இதன் விளைவு? இனி காலம் கடந்த ஞானம் உதவாது. ஊவா மாகாணத்திலும், சப்ரகமுவ மாகாணத்திலும் தமிழ் உயர்தர பாடசாலைகளை உருவாக்காது தற்போது புலம்புவதில் என்ன பயன் உள்ளது?
எல்லா அநீதிகளையும் கண்டும் காணாதது போல் இருந்து நாட்காலிகளை அலங்கரிப்பதிலேயே கவனம் செலுத்தியதால் கடந்த காலங்களில் உங்களையும் ஏமாற்றி விட்டு வெளிமாவட்ட மாணவர்களையும் நல்ல விலை கொடுத்து வாங்கி பரீட்சை எழுத விட்டு சில அதிபர்களும் கல்வி அதிகாரிகளும் உங்களுக்கே ஆப்பு வைத்திருக்கின்றனர். மலையக சமூகத்திற்கு செய்யப்பட்ட துரோகத்திற்கான விலையை நிச்சயம் செலுத்த வேண்டி வரும்.
சூரியகாந்தி 14/09/16
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...