நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில் பெருந்தோட்டக் கம்பனிகள் சுமார் 30 வீதத்தை மட்டுமே பங்களிப்புச் செய்கின்றன. கம்பனிகளிடம் உள்ள சுமார் 120,000 ஹெக்டேயர் காணிகளில் அண்ணவாக 75,000 ஹெக்டேயர்களில் மட்டுமே கம்பனிகள் உற்பத்தி செய்கின்றன. ஆனால் 1980 களின் பின்னர் இலங்கையின் தென்மாவட்டங்களில் வளர்ச்சிபெற்ற சிறுதோட்டங்களோ பெருந்தோட்டங்களை பார்க்கிலும் பலவகையில் தேயிலை உற்பத்தியில் முன்னிற்கின்றன.
சிறுதோட்டங்கள் மொத்த தேயிலை உற்பத்தியில் 70 வீதமானவற்றை உற்பத்தி செய்வதுடன் இத்துறையில் சுமார் 400,000 பேர் சிறுதோட்டங்களைக் கொண்டு நடத்துபவர்களாக உள்ளனர்.
இந்த சிறுதோட்ட முறையை எவ்வாறு பெருந்தோட்ட மக்களும் அனுபவிக்கலாம் என்பது பற்றிய சில விடயங்களைக் குறிப்பிட்டுக் காட்டுவது இக்கட்டுரையின் உள்ளடக்கமாக அமைகின்றது. முதலில் பெருந்தோட்டங்களுக்கு என்ன நடந்தது என்பதை சுருக்கமாக அவதானிப்பது அவசியமாகும். 1992 வரையில் அரசாங்கத்தின் பொறுப்பில் இருந்த (JEDB / SLSPC) தோட்டங்களை இலங்கையின் முன்னணிக் கம்பனிகள் தாம் கொண்டு நடத்துவதாக பொறுப்பேற்றதுடன் அதனை 55 வருட குத்தகைக்கு பெற்றுக்கொண்டன. கம்பனிகள் பொறுப்பேற்ற காலம் முதல் தோட்டங்களில் உயர்விளைவு தரும் தேயிலை, இறப்பர் நடப்படும் தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றெல்லாம் உத்தரவாதம் வழங்கப்பட்ட போதும் கம்பனிகள் தோட்டங்களில் உயர் விளைவு தரும் தேயிலை, இறப்பர் பயிர்களை எதிர்பார்த்தளவு விஸ்தரிக்கவில்லை. அதுமட்டுமின்றி தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்கு பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியம் (PHDT) என்ற ஒரு கம்பனியையும் அமைத்தனர். இவையெல்லாம் போக அது காலம்வரையில் இருந்த முக்கூட்டு ஒப்பந்தத்தின்படியே தொழிலாளர்களின் ‘சம்பளம்’ நிர்ணயிக்கப்பட வேண்டும் என்ற வரையறையை மாற்றி கம்பனிகளும் பிரதான தொழிற்சங்கங்களும் சேர்ந்து அமைத்துக் கொண்ட கூட்டு ஒப்பந்த (Collective Agreement) முறையும் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிப்பதும் அரசாங்கத்தின் தலையீடு என்பதும் நீக்கப்பட்டுவிட்டது.
கம்பனிகள் உயர்விளைவு தரும் பயிர்களுக்கு முதலீடு செய்வதில் இருந்து மட்டுமல்ல தோட்டங்களில் மண்வளத்தை பராமரிக்கவும் அதன் எல்லைகளை பராமரிக்கவும் போதுமான கவனம் செலுத்தவில்லை. இதனால் (land yield) மண்ணில் இருந்து பெற்றுக் கொள்ளும் விளைவில் வீழ்ச்சி ஏற்பட்டது. கம்பனிகள் போதுமான அளவு பசளை விநியோகத்திலும் ஈடுபாட்டினைக் காட்டவில்லை. மாறாக நல்ல நிலையில் இருந்த தேயிலைச் செடிகளில் இருந்துமட்டுமே ‘அறுவடை பெற்றுக் கொள்ளல்’ என்ற ‘இலாபம் மட்டுமே இலக்கு’ என்றவாறு தோட்டங்களை முகாமைப்படுத்தினர்.
இந்நிலையில் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கு போதுமான வருமானமும் தோட்டங்களில் கூட்டு ஒப்பந்தங்கள் மூலம் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் வறுமையானவர்களாய் வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். இவர்கள் வாழ்கின்ற லயன் காம்பிராக்கள் மற்றும் சுகாதார நலன்களை பராமரிக்க குறிப்பிட்டது போல (PDDT) கம்பனி அமைக்கப்பட்ட போதும். 1992 இல் இருந்து இதுவரை காலமும் சுமார் 26 வருடங்களாக சுமார் 25,000 வீடுகள் மட்டுமே புனரமைக்கப்பட்டன. மிகுதி 180,000 வீடுகளில் வசிப்பவர்களில் அனேகர் 1877 இல் கட்டி முடிக்கப்பட்ட லயன் காம்பிராக்களிலேயே வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டனர். வறுமையிலிருந்து விடுபடவும் வீட்டு வசதியை நினைக்கும் போது பல ஆண்டுகளாகவே விமோசனம் ஏதும் இல்லாத தோட்ட சூழவில் வாழ்வதா? அல்லது அதைவிட்டு வெளியேறுவதா? அல்லது தொடர்ந்து லயத்திலேயே வாழ்ந்து மடிவதா? என்ற திரிசங்கு நிலையில் இருந்து விடுபெறும் நோக்குடன் கணிசமானோர் தோட்டங்களைவிட்டு வெளியேறி விட்டனர்.
1992 ஆம் ஆண்டுகளில் சுமார் 500,000 பேராக இருந்த தோட்டங்களில் பதிவு செய்து கொண்டுள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கை இப்போது (2014) வெறுமனே 230,000 ஆக வீழ்ச்சியடைந்துவிட்டது. கம்பனிகள் தாம் நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக் கொள்வதற்கு பதிலாக பெருமளவில் தற்காலிக தொழிலாளர்களை வைத்துக் கொண்டிருப்பது இலாபம் என்று கருதிய நிலையில், பெரும்பாலான தொழிலாளர்களை தோட்டங்களில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வதற்கு மறைமுகமாகத் தூண்டி விட்டனர்.
தோட்டங்களின் வீழ்ச்சிக்கு மேற்குறிப்பிட்டவாறு கம்பனிகளின் செயற்பாடுகளே பெருமளவிலான காரணங்களாக இருக்கும்போது கம்பனிகளோ மக்களை குற்றம்சாட்டுகின்றன. தொழிலாளர்கள் தேவையான அளவு கொழுந்து பறிப்பதில்லை என்பதும் ‘ஒரு தொழிலாளியின் உழைப்பில்’ குடும்பத்தில் உள்ள யாவரையும் பராமரிக்கும் பொறுப்பு கம்பனிகளுக்கு இருப்பதாகவும் இது தொழிலாளர்களின் நலன்களுக்கான செலவே அதிகமாக இருப்பதாகவும் கூறுகின்றன.
இந்நிலையில் எவ்வாறாயினும் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதில்லை என்ற முடிவிற்கும் கம்பனிகள் வந்துவிட்டன. அதுமட்டுமின்றி ஒரு புதிய யோசனையும் கம்பனிகள் முன்வைத்துள்ளன. அதன்படி வாரத்தில் மூன்று நாள் வேலைக்கு மட்டுமே கம்பனிகளின் அடிப்படை சம்பளம் வழங்கப்படும். ஏனைய நாட்களில் பறித்தெடுக்கப்படும் கொழுந்திற்கு மட்டும் (ஒரு கிலோவிற்கு ரூபா 30) பணம் வழங்கப்படும் என்றும் ஒரு முன்மொழிவை கம்பனிகள் முன்வைத்துள்ளன.
இந்த முன்மொழிவுக்கு தொழிற்சங்கம் அல்லது அரசியல் கட்சிகள் மற்றும் சமூகம் சார்ந்த அமைப்புகள் உடன்படுவனவாக இல்லை. இது தொழிலாளர்கள் சமூகத்தை மேலும் சிக்கலான வறுமை நிலைக்கு தள்ளிவிடும். இந்நிலையிலேயே இலங்கையில் வெற்றிகரமாக தேயிலைச் செய்கையை நடத்தும் சிறு தோட்டங்களின் மாதிரியை பெருந்தோட்டங்களுக்கும் விரிவுபடுத்தலாமா? என்ற யோசனைகள் பல இடங்களில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பெருந்தோட்டங்கள் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து இதுவரையில் சுமார் மூன்று அல்லது நான்கு தலைமுறையினராக தோட்டங்களிலேயே வாழ்ந்து வரும் தொழிலாளர் சமூகத்தை பாதுகாக்கும் வேலைதிட்டம் என்பது மிகவும் பிரதானமாகும். இந்திய வம்சாவளித் தமிழர்களான பெரும்பாலான பெருந்தோட்ட மக்கள் இந்நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமல்ல பண்பாட்டு, கலாசாரத்தினும் பிரதான பங்காளிகளாக உள்ளனர். இவர்களின் இருப்பு, வாழ்வாதாரம் என்வற்றை பாதுகாப்பதற்கு அரசாங்கத்திற்கு பாரிய பொறுப்பு உண்டு. தொழிலாளர் குடும்பங்களாக உள்ள சுமார் 230,000 பேரின் பிள்ளைகளில் சுமார் 800,000 பேர் இந்த சமூகத்தில் வளப் பின்னணியில் பெருந்தோட்ட மாவட்டங்களிலேயே வாழ்கின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்திற்கு தெற்கில் வளர்ந்துள்ள சிறுதோட்ட உடைமைகளின் பங்களிப்பு எவ்வகையில் சாத்தியமாகும் என சுருக்கமாக அவதானிக்கலாம்.
இலங்கையில் தென் மாவட்டங்களில் உருவாக்கப்பட்ட சிறு தோட்டங்கள் என்பது KENYA நாட்டில் 1963 இல் உருவாக்கப்பட்ட சிறுதோட்டங்களை பராமரிக்கும் கென்ய நாட்டின் தேயிலை அபிவிருத்தி நிறுவகத்தின் பின்பற்றுதலாகும் (KTDA) KIDA இப்போது சுமார் 65 தேயிலை தொழிற்சாலைகளை நிர்வகிப்பது மட்டுமன்றி இந்நிறுவனத்தின் கீழ் சுமார் 500,000 சிறு தோட்ட உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். இந்த KTDA நிறுவனமானது தங்களிடம் பதிவு செய்துள்ள சிறு தோட்ட உரிமையாளர்களுக்கு தாங்கள் உற்பத்தி செய்யும் தேயிலைக்கு சந்தையில் நல்ல விலையை பெற்றுத்தருதல், தரமான தேயிலை உற்பத்தி செய்ய ஆலோசனை வழங்குதல், மண்பாதுகாப்பு, பண்ணைச் செயல்முறைகள் என்று இன்னோரன்ன வேலைத்திட்டங்களில் சிறு உடைமையாளர்களின் பாதுகாவலனாக இயங்கி வருகின்றன. இந்த KTDA மாதிரியைப் பின்பற்றியே 1978 இல் தேயிலை சிறு தோட்ட அபிவிருத்தி நிறுவகம் ( Tea small Holding Development authority TS HDA அமைக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்டது போல தென்மாவட்டங்களில் உள்ள இந்த சிறு தோட்ட உரிமையாளர்களில் கணிசமானோர் 1977 க்கு பின்னரே தேயிலைச் செய்கையை ஆரம்பிக்கப் பழகியவர்களாவர். இதைவிட இந்த மாவட்டங்களில் காணப்பட்ட கணிசமான தனியார் தோட்டங்கள் 1975 காணிச் சீர் திருத்தத்தின் பின்னர் 50 ஏக்கர் அல்லது இதற்கு குறைவான பரப்பில் துண்டுகளாக்கப்பட்ட நிலங்களாக பகிர்ந்தளிக்கப்பட்டவையாகும். இந்த தனியார் தோட்டங்களில் ஏற்கனவே காணப்பட்ட தொழிலாளர்கள் தொடர்ந்தும் அதே துண்டுகளாக்கப்பட்ட காணிகளிலும் தொழிலாளர்களாகவே காணப்படுகின்றனர். அவர்களின் நிலப்பரப்பினை இப்பகுதிக்கு விஜயம் செய்வோர் அவதானிக்கலாம்.
துண்டுகளாக்கப்பட்ட தனியார் காணிகள் போக 1976 – 1977 காலப்பகுதியில் ‘சுவர்ண பூமி’ அல்லது சின்னக்கரஒப்பு’ என்றவாறும் அல்லது 1977 காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஜயபூமி அல்லது ‘கொட மட’ என்ற திட்டத்தில் வழங்கப்பட்ட காணிகள் பின்னர் தேயிலைக்காக பயன்படுத்தப்பட்டன. இங்குள்ள காணிகளில் கணிசமானவை தேவாலயங்களுக்குச் சொந்தமானது என்று அடையாளப்படுத்தி 1975 க்கு பின்னரான காணிச் சீர்திருத்தத்திக் கீழ் சுவீகரிக்கப்பட்ட காணிகள் மீண்டும் தேவாலயங்களுக்கு வழங்கப்பட உள்ளன. அக்காணிகளைப் பெற்றுக் கொண்ட தேவாலயங்கள் அங்குள்ள மக்களுக்கு நீண்ட கால குத்தகைக்கு வழங்கியுள்ளன. அவ்வாறு வழங்கப்பட்ட காணிகளில் புதிய உயர் விளைவு தரும் தேயிலைகள் நடப்பட்டு TSHDA யில் பதிவு செய்து சிறு தோட்டங்களாக நடத்தப்படுகின்றன.
இந்நிலை இலங்கை சிறுதோட்டங்களின் வெற்றியை படிப்படியாக மலையகப் பகுதிகளில் கொண்டுவருதல். என்பதை சமூகப்பற்றுள்ளவர்கள் இதன் எதிர்காலச் சவால்கள் என்ன என்பதையும் நினைத்துப் பார்த்து பொருத்தமான நடவடிக்கை எடுத்தல் அவசியமாகும் இது இம்மக்களின் வாழ்க்கையில் நிச்சயமாக மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். கருத்துரைகளுக்கு கட்டுரையாளரை பின்வரும் இணையமுகவரியில் தொடர்பு கொள்ளலாம் asboseou@yahoo.com அல்லது ascha@ov.ac.lk
நன்றி - வீரகேசரி
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...