1915 கலவரத்தின் விளைவாக ஆங்கில அரசு மேற்கொண்ட மிலேச்சத்தனத்தையும், அராஜகத்தையும், அதிகார துஷ்பிரயோகங்களையும் நாம் இத்தொடரில் நிறைய கண்டோம். தமது அதிகாரத்தைப் பயன்படுத்திச் செய்த பாலியல் வல்லுறவு சம்பவங்களும், கொள்ளைச் சம்பவங்களும் கூட பதிவாகியுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. அந்தச் சம்பவங்களுக்கு எதிராக வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன. சிலவற்றுக்கு நியாயமான தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. சில வழக்குகள் இராணுவச் சட்டம் (martial law) இன் பேரால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதற்கு மறுக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
இராணுவச் சட்டத்தின் கீழ் சுயாதீன தொண்டர்களாக சேவையில் ஈடுபட்ட சுதேசிகள் மூவரும் ஆங்கிலேயர் ஒருவருக்கும் எதிரான வழக்கு ஓகஸ்ட் 9 அன்று கொழும்பு இராணுவ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் மூவரும் இராணுவச் சீருடையில் இருந்தபோது அவர்கள் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கினார்கள் என்கிற வழக்கில் முதல் இருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மூன்றாமவர் குரூரமாக தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் ஆங்கிலேய தோட்டத்துரைக்கு எதிரான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தபோதும் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு கூட எடுக்கப்படவில்லை. அவர் பொழுதுபோக்காக “சேவையில் ஈடுபட்டிருக்கக் கூடும்” என்றே எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனென்றால் இராணுவச் சட்டத்தின் கீழ் ஆங்கிலேயர்கள் கடமையில் இருக்கும் வேளையில் பெண்களோ, ஆண்களோ அவர்கள் கூறுவதை செய்யாவிட்டால், மறுத்தால் அவர்களை சுட்டுக் கொல்லும் அதிகாரத்தைக் கொண்டிருந்தார்கள். இந்த அதிகாரம் ஆங்கிலேய தோட்ட துரைமார், உரிமையாளர்களுக்கும் இருந்தது.
களவு, கொள்ளை, பலாத்காரமாக சொத்துக்களை கொள்ளையடித்தல் போன்ற பல சம்பவங்களை ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் விளக்குகிறார்.
அல்கொட கத்திரிக்காவத்தயைச் சேர்ந்த எல்.சொபியாஹாமி எனும் பெண் கொடுத்த சத்தியக்கடதாசியில்: தெஹியோவிட்ட நகர ஆராச்சி சில பஞ்சாப் படையினரையும், ஆங்கிலேயர் சிலருடனும் அவரது வீட்டுக்குள் புகுந்தார்கள். அவரின் கணவரை கைது செய்தார்கள். அவரை பின்னர் சுட்டுக் கொன்றார்கள். ஒரு படையினர் அவரது வீட்டுக்குள் இருந்த பெட்டியொன்றை உடைத்து 300 ரூபா (20 பவுண்ட் பெறுமதி) பெறுமதியான தங்க ஆபரணங்களையும் 100 ரூபா பணத்தையும் எடுத்துக் கொண்டு சென்றார்கள். இது குறித்து ஆராச்சியிடம் முறைப்பாடு செய்த போதும். அது குறித்து எதுவும் பேசவேண்டாம் என்றும் அல்லது நீயும் கொல்லப்படுவாய் என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. ஆளுனருக்கு செய்யப்பட்ட முறைப்பாடு குறித்தும் உதவி அரசாங்க அதிபர் ஒருவர் கிராமிய பொலிஸ் அதிகாரிக்கும் இதே எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளன.
கங்கொடவில போலிஸ் முலாந்தெனி (கிராமிய போலிஸ் அதிகாரி) டீ.ஜேம்ஸ் மக்ஞநாயக்க ஆளுனருக்கு ஒரு முறைப்பாட்டைச் செய்தார். பஞ்சாப் படையினர் சிலரைக் கொண்டிருந்த ஆங்கிலேயர் ஒருவர் (அவரின் பெயரையும் குறிப்பிட்டு) 22ஆம் திகதி தன்னிடம் வரும்படி பணித்திருக்கிறார். படையினரின் உணவுக்காக , பால், கோழிக்கறி போன்றவற்றை ஏன் பரிமாறவில்லை என்று அவரிடம் கேட்டுள்ளார். மேலதிகாரிகளால் அப்படி ஒரு ஆணை தனக்கு பிறப்பிக்கப்படவில்லை என்று ஜேம்ஸ் கூறியுள்ளார். அந்த ஆங்கிலேயர் ஜேம்ஸின் கைகளைக் கட்டி, பலரின் முன்னிலையில் சாட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை அறிந்த மாவட்ட முதலியாரம், உதவி அரசாங்க அதிபரும் இது இராணுவ சட்டத்தின் இயல்பு எனவே இதெற்கெல்லாம் எதிராக ஒன்றும் செய்ய முடியாது என்று கூறியிருக்கின்றனர். தமது இச்சைகளுக்கு இணங்காவிட்டாலோ, தாம் கேட்கும் எதையும் தராவிட்டாலோ கடுமையாக தண்டிப்பதற்கு இராணுவச் சட்டம் இடமளித்திருப்பதை இப்படி பல சம்பவங்களின் மூலம் அறிய முடிகிறது. அரச அதிகாரிகளுக்கும், முலாந்தெனி போன்ற கிராமிய அதிகாரிகளுக்கும் இந்த கதியென்றால் சாதாரண பிரஜைகளின் நிலைமை இராணுவச் சட்டத்தின் கீழ் எப்படி இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்து பார்க்கலாம்.
ப்ரேடி டயஸ் பண்டாரநாயக்க என்பவர் இது போன்ற ஒரு முறைப்பாட்டை செய்திருக்கிறார். ஜூன் மாதம் 13 அன்று அவரை பஞ்சாப் படையினர் கைது செய்த வேளையில் அவரிடம் இருந்த 500 ரூபா பெறுமதியான தங்க மாலையையும், கைக்கடிகாரத்தையும் களவாடினார். அங்கிருந்த உயரதிகாரியிடம் முறைப்பாடு செய்ததன் விளைவாக அந்த பொருட்கள் பஞ்சாப் படையினனின் தலைப்பாகைக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது. “தேசத்துரோகச் செயலை அடக்குவதற்காக” என்கிற பேரில் மக்கள் விரோத செயல்கள் அரங்கேறியது இப்படித்தான்.
அல்கோட பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.டீ.புஞ்சிபண்டா அந்த ஊரில் கொடுத்த முறைப்பாட்டில் ஜூன் 10 அன்று ஆராச்சியும் மேலும் சில பஞ்சாப் படையினரும் தனது மைத்துனர் தெளினஸ் மற்றும் மேலும் சிலரையும் கைது செய்து வெளியில் கொண்டு சென்று அதில் இருவரை அங்கேயே சுட்டுக்கொன்றனர். ஐந்து நாட்களின் பின்னர் அதாவது 15ஆம் திகதியன்று ஆராச்சியும் சில முஸ்லிம் வியாபாரிகளுடன் வந்து மேலும் தன்னுடன் மேலும் நால்வரைக் கைது செய்தனர். ஆராச்சிக்கும் முஸ்லிம் நபருக்கும் பணத்தைக் கொடுத்ததால் இருவர் விடுவிக்கப்பட்டார்கள். புஞ்சி பண்டாவின் முறை வந்தபோது 50 ரூபா பணத்தைத் தந்தாள் விடுவிக்கலாம் என்று கூறியுள்ளனர். அப்படி தராவிட்டால் சுட்டுக்கொல்ல வேண்டிவரும் என்று மிரட்டியுள்ளனர். எந்த விசாரணையுமின்றி அப்படி சுட்டுக்கொல்ல வாய்ப்புண்டு என்பதை அறிந்த புஞ்சிபண்டா பீதியிற்றார். சுற்றிலும் பார்த்துவிட்டு அங்கு தனக்கு அறிந்த ஒருவரை அழைத்து தன் வெள்ளி அருணாக் கயிறைக் கழற்றி 50 ரூபாவுக்கு அதனை அடகு வைத்துத் தரும்படி கேட்டுள்ளார். அங்கிருந்தவர் உடனேயே சென்று அடகு வைத்து கொண்டுவந்து தந்த 50 ரூபாவைக் கொடுத்து தன்னை விடுவித்துக்கொண்டார் புஞ்சிபண்டா.
பஞ்சாப் படையினர் அப்பாவி கிராமவாசிகளின் பசுக்களையும், தமது விவசாய உற்பத்திப் பொருட்களையும் பலாத்காரமாக கொள்ளயடித்துச்சென்ற சம்பவங்களையும் ஆர்மண்ட் டீ சூசா விளக்கியுள்ளார்.
சேர் பொன் இராமநாதன் தனது இராணுவச்சட்ட “1915 : இலங்கையில் கலவரமும் இராணுவச் சட்டமும்” என்கிற நூலில் ஒரு வேடிக்கையான ஆணை குறித்து இப்படி வெளிப்படுத்துகிறார். இந்த சம்பவத்தை அவர் ஒக்டோபர் 14 அன்று மக்களவையில் ஆற்றிய உரையின்போதும் குறிப்பிட்டுள்ளார்.
ஆணையாளரால் கூறப்பட்ட இழப்பீட்டுத் தொகையை வழங்கும்படி கோறளை (மாவட்ட) முதலியார் ஒரு ஆணையை அனுப்புகிறார். அதில்
“ஆணையாளரால் 7900 ரூபா இழப்பீட்டுப்பணம் வழங்கும்படி அறிவிக்கப்பட்டது. அதன்படி குறிக்கப்பட்ட விதிப்பணத்தை விட இரு மடங்கு பெறுமதிமிக்க உரித்துப்பத்திரத்தை பிணையாக எடுத்துக்கொண்டு..... திகதி.... நேரத்துக்கு இங்கு சமூகமளிக்க வேண்டும். அதன்போது வேறெவரையும் கூட்டிக்கொண்டுவருவதற்கு அவசியமில்லை. ஆனால் நிலப்பெறுமதி குறித்த தஸ்தாவேஜ்ஜுக்களை ஒப்படைக்கவேண்டும்.
வரும்போது பஞ்சாப் படையினரின் தேவைக்காக ஒரு மாட்டைக் கொண்டுவரும்படியும், அப்படி கொண்டு வராவிட்டால் கொடுக்கப்படவேண்டிய தொகையுடன் மேலும் 2000 ரூபா அதிகரிக்கப்படும் என்பதையும் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருப்பதை இதன் மூலம் தெரியப்படுத்துகிறேன்”
இந்த விபரங்களைக் கூறிய சேர் பொன் இராமநாதன் “2000 ரூபாவுக்குப் பதிலாக மாடு! இந்த செயலை ஒரு குரூர செயலாகவே கவனமாக நோக்க வேண்டியிருக்கிறது.” என்றார். அரசாங்கம் இவை குறித்து விசாரிக்க மறுத்தது. காலனித்துவ நாடுகளுக்கான செயலாளரும் பிற்காலத்தில் பிரித்தானிய பிரதமராக ஆன போனார் லோவும் (Bonar Law) இதனை விசாரிப்பதை நிராகரித்தார். அதன் மூலம் இதுபோன்ற அத்தனை அராஜகங்களுக்கும் மறைமுகமாக ஆசீர்வாதம் வழங்கினார் என்றே கொள்ள முடிகிறது.
ஒரு கடையொன்றில் பணிபுரிந்துவந்த இந்தியாவம்சாவழித் கத்தோலிக்கத் தமிழரான எஸ்.பீ.பெர்னாண்டோ இப்படி குறிப்பிடுகிறார்.
பஞ்சாப் படையினருக்கு பால் விநியோகிக்கும்படி தனக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதுவும் தாங்களே பால் கறக்கக்கூடிய வகையில் பசுக்களை அனுப்பிவைக்கும்படி கட்டளையிடப்பட்டிருந்தது. ஒரு நாள் பஞ்சாப் படையினர் எவரையும் காணக் கிடைக்கவில்லை. அதற்கடுத்த நாள் பொலிசாரால் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு காலை 10 மணியிலிருந்து அடுத்த நாள் மதியம் 1 மணிவரை சிறை வைத்தனர். அவருக்கும் இந்த கலவரத்துக்கும் சம்பந்தமே இல்லை. எந்த தவறையும் கூட இழைக்கவில்லை. கைது செய்து தண்டனையளித்து அவரை அவமானப்படுத்தினர். அதுவரை அவர் வழங்கிவந்த பொருழுக்கும் எந்த கொடுப்பனவையும் வழங்கவுமில்லை.
இதற்கு இணையான ஒரு சம்பவத்தை இந்தக் கடிதத்தில் காணலாம்.
“மாத்தளை உதவி அரசாங்க அதிபரிடமிருந்து மாத்தளை திருகோணமலை வீதியைச் சேர்ந்த பீ.சி.எச்.டயஸ் அவர்களுக்கு.
1915 செப்டம்பர் 27 திகதியிடப்பட்ட பண ரசீது குறித்து. அதில் குறிப்பிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் இராணுவத தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது என்பதால் அதற்கான ரசீதை மீண்டும் அனுப்ப வேண்டாம் என்று இத்தால் எச்சரிக்கிறேன்”
எ.டபிள்யு சேமுவர்
உதவி அரசாங்க அதிபர்
இராணுவ நடவடிக்கைகளுக்காக சிவிலியன்களின் எந்த உடமையும், சேவையும் பலாத்காரமாகவும், எந்த கொடுப்பனவு இன்றியும் இரானுவச்சட்டதின் பேரில் பறிக்கப்படும் என்பதை இந்த நிகழ்வுகள் நிரூபித்தன.
இறைச்சிக்காக தமக்கு மாட்டைத் தரும்படி ஒரு ஆணை டபிள்யு ஜேம்ஸ் அப்புஹாமிக்கு பிரபிக்கப்பட்டது. பௌத்தரான அவர் கொள்வதற்காக மாட்டை விநியோகிப்பது சாபத்துக்குரிய பாவம் என்று எண்ணினார். அவர் அந்த மாட்டுக்கு உரிய பெறுமதியை அனுப்பி வைத்து தனது மாட்டை இறைச்சிக்கு அனுப்புவதை தவிர்ஹ்தார். இப்படிப்பட்ட சம்பவங்கள் அதிகமாக பதிவாகிய மாத்தளை பிரதேசத்திலேயே.
மாத்தளை திருகோணமலை வீதியில் 191 இலக்கத்தைச் சேர்ந்த எம்.டபிள்யு.பாபாசிங்கோ 99.79 ரூபாவுக்கான ரசீதை அனுப்பிவைத்தார். அதற்கு பதிலளித்த சேமுவர் “அந்தத் தொகையை வழங்க தீர்மானிக்கப்படவில்லை என்பதை இத்தால் அறிவிக்கிறேன்” என்று பதிலளித்தார்.
இந்தியவம்சாவளியைச் சேர்ந்த இந்து மதத்தவரான என்.என்.கருப்பன்செட்டியிடம் ஒரு பெரிய பட்டியலை அனுப்பி அவற்றை தமக்கு அனுப்பும் படி பணித்துள்ளனர். அதில் இறைச்சி எண்ணெய் மற்றும் சில மாமிச வகைகளும் உள்ளடங்கும் அவற்றை அவர் வேறு கடையில் கொள்வனவு செய்து அனுப்பியிருக்கிறார். இவர்களுக்கு எந்த கொடுப்பனவையும் அதிகாரிகள் வழங்கவில்லை. ஆனால் கருப்பன்செட்டி பின்னர் செய்த முறைப்பாட்டில் ஒரு சைவ இந்து பக்தனான தன்னிடம் இத்தகைய பொருட்களை தரும்படி ஆணையிட்டதனூடாக தான் அவமதிக்கப்பட்டதாக குறிப்பிட்டிருக்கிறார். டி.ஆர்.எம்.வடுகுப்பிள்ளை எனும் இன்னொரு இந்து பக்தனிடம் மாட்டிறைச்சி உள்ளிட்ட இன்னும் பல பொருட்களை தரும்படி பணித்ததாகவும் உயிருக்கு அஞ்சி அவற்றை அனுப்பியதாகவும், அவற்றுக்கு எந்த கொடுப்பனவையும் வழங்கவில்லை என்றும் முறையிடப்பட்டது.
இத்தகைய சம்பவங்கள் அனைத்துக்கும் பதில் கூறும் பொறுப்பு எவரிடமும் இருக்கவில்லை. இராணுவச் சட்டத்தின் பேரால் இந்த அநியாயங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டிருந்தன.
தொடரும்..
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...