புஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் திடீர் மரணமானது அப்பகுதியெங்கும் பெரும் பதற்றத்தையும் பல்வேறு சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.
புஸல்லாவை ரொத்சைல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நடராஜா ரவிச்சந்திரன் என்ற இளைஞனே இவ்வாறு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இவர் பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 17 ஆம் திகதி மாலை 4.30 மணியளவில் கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் புஸல்லாவை பொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்துவைக்கப்பட்ட அன்று இரவு 7 மணியளவிலேயே இம்மரணச் சம்பவம் இடம்பெற்றமையால் அப்பகுதி மக்கள் மத்தியிலும் குறித்த இளைஞனது குடும்பத்தவர்கள் மத்தியிலும் இம்மரணம் தொடர்பில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
பொலிஸ் சிறைக்கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த இளைஞன் சுருக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்த போதிலும் அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள், பொலிஸாரின் தாக்குதல் காரணமாகவே அவ்விளைஞன் உயிரிழந்திருக்க கூடுமெனக் கூறி தமக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென கடந்த ஞாயிறு புஸல்லாவ பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியெங்கும் பெரும் பதற்றம் நிலவியது. பெரும் போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டது. இவ்வாறான நிலையில் அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து நிலைமையை அவதானித்து பொதுமக்களுடன் நிலைமை குறித்து உரையாடியதுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இடமாற்றுவதற்கும் உறுதியளித்தனர்.
அதற்கமைய புஸல்லாவை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தற்போது இடமாற்றப்பட்டுள்ள அதேவேளை, சம்பவ தினம் இரவு கடமைக்குப் பொறுப்பாக இருந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் பொலிஸ் கான்ஸ்டபில் ஒருவரும் பணி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்கள். சம்பவம் குறித்த சுயாதீன விசாரணைகளுக்காகவே குறித்த பொலிஸார் மீது இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
ரவிச்சந்திரன் என்ற இளைஞன் சில மாதங்களுக்கு முன்னர் குற்றச்செயலொன்றில் ஈடுபட்டமை இனங்காணப்பட்டு அவருக்கு நீதிமன்றத்தினால் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இச்சந்தேக நபர் தண்டப்பணம் செலுத்த முடியாத நிலையில் சமூக சேவை செய்ய இணக்கம் தெரிவித்துள்ளார். இருந்த போதிலும் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சமூக சேவை செய்வதாக ஏற்றுக் கொண்ட இவர் அதனை செய்யாமையினால் நீதிமன்றத்தின் உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையிலேயே 17 ஆம் திகதி மாலை புஸல்லாவைப் பொலிஸார் மேற்படி இளைஞனை கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட போது குறித்த இளைஞன் மதுபோதையில் இருந்ததாக பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன. எனவே, கைது செய்யப்பட்ட அவ்விளைஞனிடம் வாக்கு மூலங்களைப் பதிவு செய்து கொண்டு அதன் பின்னரே பொலிஸார் அவரை சிறைக்கூண்டில் தடுத்து வைத்துள்ளனர்.
இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்த அவ்விளைஞன் தான் அணிந்திருந்த ரீ ஷேர்ட்டினால் சிறைக்கூண்டிற்குள் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் அதன் பின்னர் அவரை உடனடியாக புஸல்லாவை மாவட்ட வைத்திய சாலைக்குக் கொண்டு சென்றதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட இளைஞன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட தினத்தன்று இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையிலேயே குறித்த இளைஞன் உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகிறது. இவ்விளைஞன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்த போதிலும் அவ்விளைஞன் தற்கொலை செய்து கொள்ளும் மனநிலையில் இருக்கவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நிலையில் இந்த சம்பவம் குறித்து நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பொதுமக்களும் அரசியல் பிரமுகர்களும் வலியுறுத்தியுள்ளனர். கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்த நடராஜா ரவிச்சந்திரனின் இறுதிக் கிரியைகள் 19ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. அன்றைய தினம் ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களை நடத்த வேண்டாமென நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில் அமைதியாக எவ்வித குழப்பமும் இன்றி இறுதிக் கிரியைகள் இடம்பெற்றன.
சடலத்தை தகனம் செய்ய வேண்டாமெனவும் நல்லடக்கம் செய்யுமாறும் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
அதற்கமைய உயிரிழந்த ரவிச்சந்திரனின் சடலம் புஸல்லாவ தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த குறித்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்தாரா? என்ற சந்தேகம் தொடர்ந்தும் காணப்படுகின்றது. இவ்விளைஞனின் முக்கிய உடற் பாகங்கள் அரச இரசாயன பகுப்பாய்வுக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அந்த இரசாயன பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னரே இந்த மரணம் குறித்த மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள முடியும்.
எது எவ்வாறு இருப்பினும் இந்த இளைஞனது மரணம் குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டுமென்பதே சகல தரப்பினரதும் வேண்டு கோளாக உள்ளது.
இதேவேளை, பொலிஸார் கடமையை மீறியிருப்பின் அவர்களுக்கு எதிராக உரிய ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படுமென சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேபோன்று நாடு முழுவதிலும் உள்ள சிறைக்கூடங்களில் சீ.சீ.ரி.வி. கமராக்களை பொருத்துவது குறித்தும் கவனம் செலுத்தவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக சிறைச்சாலைகளில் இடப்படும் கைதிகளை அரை மணித்தியாலயத்திற்கு ஒரு தடவை பொலிஸார் சோதனைக்குட்படுத்த வேண்டும். அவ்வாறு புஸல்லாவை பொலிஸ் நிலைய சிறைச்சாலை சோதனைக்குட்படுத்தப்பட்டடிருக்கவில்லை என்பதற்கு இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதாவது குறித்த சந்தேக நபரான இளைஞனை மாலை 4.40 மணியளவில் புஸல்லாவையில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் பொலிஸ் நிலையத்தில் வைத்து அவரிடம் வாக்கு மூலங்களைப் பெற்றுக் கொண்ட பொலிஸார் அவரை மாலை 5.15 மணியளவில் சிறைக்கூட்டில் அடைத்துள்ளனர். அதனடிப்படையில் மாலை 6.45 மணிக்குப் பின்னர் இந்த சிறைக்கூடம் சோதனைக்குட்படுத்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதாவது இரவு 7.40 மணியளவில் சிறைக்குள் சத்தம் கேட்டதாகவும் அதன் பின்னர் சென்று பார்த்த போது சிறைக் கூடத்தில் ரி.ஷேர்ட்டால் சுருக்கிட்டு குறித்த இளைஞர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் அதனையடுத்தே தாம் அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே மாலை 6.45 மணிக்கு சிறைக்கூடம் சோதனைக்குட்படுத்தப்பட்டிருந்தால் இரவு 7.15 மணியளவில் மீண்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அது நடந்திருக்கவில்லையென்று தெரியவருவதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எப்படியிருந்தாலும் இந்த மரணத்தின் உண்மையான பின்னணி என்னவென்பது கண்டறியப்பட வேண்டும். அதனடிப்படையிலே அடுத்த கட்ட செயற்பாடுகள் குறித்து அவதானம் செலுத்தலாம்.
இந்த கட்டுரை பிரசுரமாகும் வரை பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட குறித்த இஞைனது உடல் பாகங்களின் அறிக்கை கிடைக்கப் பெற்றிருக்க வில்லை.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...