ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் இந்தக் காலப்பகுதியில் ‘ஆட்சிக்கவிழ்ப்பு சதி” என்கிற பீதியில் சிக்கினர். அராஜகத்தை கையிலெடுத்து அதே பீதியியை மக்களுக்கு ஏற்படுத்தினர். அதுவும் பிரதானமாக அந்த பீதியை சிங்களவர்களுக்கே கொடுத்தனர். கண்ட இடத்தில் கொள்வது, சிறை செய்வது, விசாரணயின்றி தண்டனை வழங்குவது, இழப்பீடு, தண்டப்பணம் என்று அப்பாவிகளின் மீது சுமத்தியது மட்டுமன்றி பகிரங்கமாக சித்திரவதைகளையும் செய்தனர்.
அப்படிப்பட்ட பீதியை எப்படியெல்லாம் வழங்கினார்கள் என்பது குறித்து இந்த வழக்குகள் பற்றிய செய்திகள், கோப்புகள், நூல்கள் என்பவற்றின் மூலமாக நிறைய அறியலாம். அவற்றில் சில உதாரணங்களை மாத்திரம் பதிவுக்காக இந்த இதழில் பார்க்கலாம்.
கசையடி, பொல்லுகளால் தாக்குதல் போன்றன அதிகாரிகள், பஞ்சாப் படையினர் போன்றோரால் மட்டுமன்றி வெள்ளைக்கார தோட்டத் துறைமாராலும் பகிரங்கமாக நிறைவேற்றப்பட்டன. . அப்பாவிகள் தாம் நிரபராதி என்பதை நிரூபிக்க எந்த வாய்ப்பும், அவகாசமும் வழங்கப்படவில்லை. இப்படி தண்டனை வழங்கப்பட்ட சிலருக்கு தாம் எதற்காக தண்டிக்கப்படுகிறோம் என்பதைக் கூட அறியாது இருந்தது தான் வேடிக்கை. எந்த நீதிமன்றத்துக்கும் கொண்டு செல்லப்படாமல் “நீதி” என்கிற பேரில் அநீதி இழைத்த இவர்கள் எங்கெங்கும் பீதியை பரப்பிப் பேணினர்.
பகிரங்க கசையடி
கேகாலை மாவட்டத்தில் ௩வது கோறளையை சேர்ந்த டபிள்யு.ஏ.பொடி அப்பு கொடுத்த சத்திக்கடுதாசியில் தனக்கு நேர்ந்தத்தை கூறியதிலிருந்து.
கொல்லன் பட்டறையை நடத்தி வந்த பொடி அப்பு தான் எந்தவிதத்திலும் எவற்றுடன் சம்பந்தப்படவில்லை என்று சத்தியம் செய்கிறார். கலவரம் நிகழ்ந்து சில நாட்களின் பின்னர், ஜூன் 9 அன்று தெஹியோவிட்ட சிறு நகரத்திற்கு வந்து தன்னிடம் வேலைபார்க்கும் கூலித் தொழிலாளர்களுக்கு வேதனம் வழங்கி விட்டு திரும்பும் வழியில் இராணுவ சீருடையில் இருந்த வெள்ளையர் அப்புவை பிடித்துக்கொண்டு ஒரு கடையொன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு ஏற்கெனவே தெஹியோவிட்ட நகர ஆராச்சியும், முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர்களும், இன்னும் சிலரும் தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடிக்கொண்டிருந்தனர். ஆனால் பொடி அப்புவுக்கு அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அன்று இரவும் தடுத்து வைத்திருந்து விட்டு அடுத்த நாள் நகரத் தெருவுக்கு இழுத்துக்கொண்டு வந்த பஞ்சாப் படையினர் அங்கு ஏற்கெனவே வரிசையாக வீதியில் இருத்தப்பட்டிருந்த 25 பேருடன் அப்புவையும் இருத்தினர். அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளைக்காரத் தோட்டத்துரை (தொண்டர் படையில் தன்னிச்சையாக இந்தக் காலப்பகுதியில் இணைந்த வெள்ளைக்காரர்களில் ஒருவர்) ஆங்கிலத்தில் ஏதோ ஆணையைப் பிறப்பித்து விட்டு அகன்றார்.
அதனைத் தொடர்ந்து பொடி அப்புவை வீதியின் நடுவுக்கு இழுத்துச் சென்று குனியக் கிடத்தினர் பஞ்சாப் படையினர். இருவர் அப்புவின் கைகளை இரண்டு பக்கங்களிலும் இழுத்துப் பிடித்தபடி இருக்க மூன்றாமவர் தலைமுடியை இறுக்கி பிடித்திருக்க, நான்காவது நபர் ஒரு பொல்லால் கடுமையாக ஏழு தடவை தாக்கியிருக்கிறார். இந்த தாக்குதலால் அப்பு இரண்டு மாதம் படுக்கையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்.
எந்தவித விசாரணையுமின்றி, குற்றம் எதுவென்றும் சொல்லப்படாமல் அப்புவுக்கு அவர்கள் பகிரங்கமாக தண்டனை நிறைவேற்றியது அங்கிருந்த மக்களை பீதி கொள்ளச் செய்வதற்கே. மேலும் நகர ஆராச்சிமார் தமது சொந்தப் பழிவாங்களுக்காகவும் சிலரை இப்படிச் சிக்கவைத்து தமது எதிரிகளை பயமுறுத்த இதனை சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டனர் என்று ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் குறிப்பிடுகிறார்.
தெஹியோவிட்ட தையல்காரரான எல்.ஏ.டீ.கரோலிஸ் பெரேரா என்பவர் கொடுத்த சத்தியக்கடதாசியில் குரிபிடப்பட்டவை இவை.
ஜூன் 10 அன்று காக்கிச் சீருடையில் வந்த வெள்ளைக்கார தோட்டத் துரை ஒருவர், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேருடன் வந்த தெஹியோவிட்ட நகர ஆராச்சி கரோலிசின் வீட்டுக்கு வந்து கைது செய்து நகரத்துக்கு சென்றனர். அங்கு ஏற்கெனவே 33 பேர் அப்படி கொண்டுவரப்பட்டிருந்தார்கள். அவர்கள் முஸ்லிம் பள்ளி வாசலுக்கு டைனமைட் எறிந்ததாக அங்கிருந்த முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அந்த வெள்ளைக்காரரிடம் கூறினார். அந்த வெள்ளைக்காரத் தோட்டத் துரை கரோலிஸ் உட்பட 7 பேரை குற்றவாளிகள் என்று அறிவித்துவிட்டு அவர்களை சுட்டுக்கொல்லுமாறு ஆணையிட்டார். இதனை எதிர்த்து இதனை பூரணமாக விசாரிக்கும்படி கரோலிஸ் வேண்டினார். சுயாதீனமாக பணியாற்றிவந்த மேஜர் அதிகாரி ஒருவர் இதில் தலையிட்டு அந்த தந்தைக்குப் பதிலாக கசையடி கொடுக்கும்படி தீர்ப்பு வழங்கினார்.
ஒவ்வொருவராக வீதியின் நடுவில் இழுத்து வரப்பட்டார்கள். பஞ்சாப் படையினர் இருவர் இரு கைகளையும் இழுத்துப் பிடித்திருக்க, மூன்றாவது பஜாப் படையினன் நெஞ்சில் காலை வைத்து மிதித்தபடி தலைமுடியை இழுத்துப் பிடித்திருக்க நான்காவது படையினன் மூன்று அங்குல வட்டமுள்ள சாட்டையால் பல தடவைகள் அடித்தார். இதுவும் எந்த விசாரணையுமின்றி நிகழ்த்தப்பட்ட சம்பவம். இந்த அதிகாரிகள் இராணுவ நீதிமன்றத்துடன் கூட சம்பந்தப்பட்டவர்கள் இல்லை. கேட்பாருமில்லை. இவர்களுக்கு தீர்ப்பு வழங்கும் உரிமையோ, தண்டனை அளிக்கும் அதிகாரமோ கூட இல்லை. ஆனால் இப்படி எதேச்சாதிகாரமாக பல நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
மேலும் 7 பேர் தமக்கு நிகழ்ந்ததை சேர்ந்து முறையிட்டனர்.
கலவரம் முடிந்து அமைதி திரும்பியதன் பின்னர் அதாவது 11ஆம் திகதி இராணுவ சீருடையில் வந்த சிலர் இவர்களை இழுத்துவந்து தாக்கியுள்ளனர். பெரிய பொல்லுகளால், தலையிலும், முதுகிலும், கால்களிலும் 40க்கும் மேற்பட்ட தடவைகள் அவர்கள் அடித்ததாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். அவர்களில் ஒருவரை மின்கம்பத்தில் சாய்த்துவைத்து வெள்ளைக்காரர்கள் இருவர் கைகளை பிடித்திருக்க மூன்றாமவர் கொடூரமாக தாக்கியுள்ளார். தாம் எந்தவித கலவரத்துடன் தொடர்புடையாதவர்கள் என்று சத்தியம் செய்தனர். அவர்கள் குற்றமற்றவர்கள் என்று நிரூபிக்க எந்த வாய்ப்பும் வழங்கப்படவில்லை.
இப்படியான கசையடி சம்பவங்கள் அதிகமாக பதிவானது தெஹியோவிட்ட என்கிற பிரதேசத்திலேயே. அந்த பிரதேசவாசிகள் மேலும் இருவர் தெரிவித்தது இது.
ஜூன் 5 அன்று முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த ஒருவர் மூன்று வெள்ளைக்காரர்களுடன் வந்துள்ளார். அவரின் வீட்டை உடைத்து கொள்ளையடித்ததாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. வெள்ளைக்காரர்கள் அந்த இருவரின் வீட்டையும் சோதனையிட்டதில் எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. அதுபோல முஸ்லிம் நபரின் வீட்டில் சோதனையிட்டபோது அங்கும் எதுவித சேதமும் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனாலும் இந்த இருவரும் சுயாதீன தொண்டர் படையினரிடம் முன்னிறுத்தப்பட்டனர். அங்கு அவர்களில் ஒருவருக்கு 10 அடிகளும் மற்றவருக்கு 20 அடிகளும் வழங்கப்பட்டன. அவர்கள் இருவரும் ஒரு மாதம் படுக்கையில் கிடந்தனர்.
அதே தெஹியோவிட்ட பகுதியில் ‘பபா சிங்ஞோ’ என்பவரை முஸ்லிம் ஒருவருடன் வந்த நகர ஆராச்சி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கெனவே 33 பேர் கொண்டுவரப்பட்டிருந்தனர். மேலும் 15 வெள்ளைக்காரர்களும் பஞ்சாப் படையைச் சேர்ந்த 20 பெரும் இருந்தனர். டைனமைட் எறிந்ததற்காக ‘பபா சிங்ஞோ’ உள்ளிட்ட மேலும் 4 பேருக்கு அங்கு சுட்டுக்கொல்லும்படி மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. இதன் போதும் சுயாதீன தொண்டரான மேஜர் ஒருவரின் தலையீட்டில் தடுக்கப்பட்டாலும் அவர்களுக்கு ஏற்கெனவே கூறப்பட்ட சம்பவங்களைப் போல அவர்களைத் தாக்கி தண்டனையளித்தனர். அவர்களில் ஒருவர் கடுமையான தாக்குதலின் போது மயக்கம்போட்டு விழுந்தபின்னரும் தொடர்ச்சியாக தாக்கப்பட்டுள்ளார்.
பல சந்தர்ப்பங்களில் சமூக அநீதி இழைக்கப்படும் சந்தர்ப்பங்களில் கத்தோலிக்க மிஷனரிமார் தலையிட்டு முறைப்பாடு செய்வதும், நீதி கோருவதும் சாதாரணமாக இருந்தது அந்த நாட்களில். அவர்கள் வந்தால் ஏதாவது முறைப்பாடுகளுடன் தான் வருவார்கள் என்கிற எரிச்சலில் அதிகாரவர்க்கம் இருக்கும். எனவே மிஷனரிமாரும் இவர்களை சந்திப்பதில் அவ்வளவு அரவம் காட்டுவதில்லை. இந்த காலப்பகுதியில் நிகழ்ந்த கொடுமைகளால் மிஷனரிமாரும் தமது பாத்திரத்தை ஆற்ற முன்வந்தனர். அவர்கள் ஆளுனரை சந்தித்து எழுத்துமூலம் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். “அரசுக்கு ஆதரவானவர்களைக் கூட இந்த நிலைமை அதிருப்திகொள்ளச் செய்துள்ளது” என்றனர் ஆளுநரிடம். குறிப்பாக எந்தவித்த சட்டப் புலமையற்றவர்களால் நடத்தப்படும் இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கள் அநீதியானவை என்றும், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தம்மை நிரபராதி என்று நிரூபிக்க குறைந்தபட்ச கால அவகாசம் கூட வழங்கப்படாததும், வழக்கு பற்றிய விபரங்கள் பகிரங்கபடுத்தப்படாதது குறித்தும் விசனம் தெரிவிக்கப்பட்டது.
மிஷனரி குருவினரை சந்திக்க மறுத்த ஆளுநர் அந்த முறைப்பாட்டை மாத்திரம் வேண்டி வைத்துக்கொண்டார். அந்த குழுவினருக்கு தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்குவதாக தெரிவித்தார். மிஷனரி குழுவினர் இந்த பதில்களால் திருப்தியடையவில்லை. எனவே தாம் வழங்கிய அறிக்கையோடு சம்பந்தப்பட்ட மேலதிக ஆவணங்களையும் சமர்ப்பித்து அழுத்தம் கொடுத்தனர்.
குடைகளால் வந்த வினை!
மக்கள் பீதியுடனும், தம்மைக் கண்டால் தயவுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்த்தது அதிகார வர்க்கம்.
ரத்தினபுரியைச் சேர்ந்த புஞ்சி அப்புஹாமி போனார் லோ (Andrew Bonar Law) வுக்கு முறைப்பாடொன்றை செய்தார். போனார் லோ 1915 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். 1915-1916 காலப்பகுதியில் காலனித்துவ செயலாளராகவும், 1921-1923 காலப்பகுதியில் பிரித்தானியாவின் பிரதமாராகவும் இருந்தவர்.
ஜூன் மாதம் ஒருநாள் இரத்தினபுரியில் புஞ்சி அப்புஹாமி தெருவில் மூன்று ஆங்கிலேயர்களை கடந்து சென்றார். அவரிடம் ஒரு குடை இருந்தது. அந்த ஆங்கிலேயர்கள் அவரை அருகில் வரக் கூறினார். அந்தக் குடையைப் பறித்து அங்கேயே சுக்குநூறாக உடைத்து புஞ்சி அப்புகாமியை மோசமான வார்த்தைகளால் திட்டி இப்படி முடித்தனர். “சிங்களவனே! இராணுவச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. உனக்கு குடை கொண்டு செல்ல எந்த அனுமதியும் கிடையாது..” என்று அதட்டி ஓடும்படி விரட்டினர்.
ரத்தினபிரியைச் சேர்ந்த கட்டிட கொந்தராத்துக் காரரான டபிள்யு.ஏலியஸ் சில்வா ஜூன் மாதம் 4 அன்று ரத்னபுரி நகரத்து வீதியில்ஆங்கில்யியர் இருவரை எதிர்கொண்ட வேளையிலும் இதே போன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவரை அழைத்து அவரின் செருப்பைக் கழற்றி கையில் எடுத்துச் செல்லும்படி பணித்தனர். சிங்களவருக்கு செருப்பை அணிந்துசெல்ல அனுமளிக்க முடியாது என்றுள்ளனர் அந்த ஆங்கிலேயர்கள். அதே பகுதியைச் சேர்ந்த எஸ்.சார்ல்ஸ் டீ சில்வாவுக்கும் அது போன்று நிகழ்ந்துள்ளது. அவர் எதிரில் வந்த ஆங்கிலேயர் இருவருக்கு ஒதுங்கி இடம் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த வெள்ளையர்கள் அவரை தடியால் அடித்து “சிங்களவருக்கு செருப்பை அணிந்து செல்ல இடமளிக்க முடியாது, செருப்பை கையிலெடுத்துக் கொண்டு திரும்பிச் சென்றுவிடு” என்று கூறியுள்ளார்கள். இவரின் முறைப்பாட்டில் தமை தாக்கியவரின் பெயரையும் குறிப்பிட்டிருந்தார்.
கட்டிட கொந்துராத்துக்காரரான எஸ்.எஸ்.கந்தசாமி மாத்தளையில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறார்.
ஜூன் மாதம் அவர் ஒரு ஆங்கிலேயரைக் கண்டார். அந்த ஆங்கிலேயரின் கையில் உடைத்து நொறுக்கப்பட்ட குடையின் பகுதிகள் இருந்தன. சிங்கள கிராமவாசியொருவர் அந்த ஆங்கிலேயரைப் பார்த்தபடி இருந்தார். அந்த ஆங்கிலேயர் தாம் கூறுவதை சிங்களத்தில் கூறும்படி கந்தசாமியை பணித்துள்ளார். இராணுவ சீருடையில் உள்ள ஒருவரின் முன் குடையை பிடித்தபடி செல்வது அவமானப்படுத்தும் செயல் என்பதால் அதை உடைத்தேன் என்று சொல் என்று கூறியிருக்கிறார்.
ஜூன் 23 அன்று ஈ.ஈ.டி.சில்வா மாத்தளை நகர வீதியில் குடையை பிடித்தபடி சென்றுகொண்டிருந்தபோது ஆங்கிலேய தோட்டத் துரை ஒருவர் தடியால் அடித்துள்ளார். சில்வா இது குறித்து வழக்கு தொடர்ந்தார். வழக்கு தொடங்குவதற்கு முன்னரே ஒரு குடையை வாங்கி அவரிடம் மீள ஒப்படைத்தார் அந்த ஆங்கிலேயர்.
தொடரும்..
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...