Headlines News :
முகப்பு » , » மலையக மக்களின் விடிவெள்ளி இர.சிவலிங்கம்

மலையக மக்களின் விடிவெள்ளி இர.சிவலிங்கம்


அமரர் இர.சிவலிங்கத்தின் 17ஆவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை பதுளையில் இடம்பெறவிருப்பதையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது
மா.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர் மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் முன்னாள் இயக்குநர்)

ஹட்டன் பகுதியிலுள்ள அப்கொட் ஸ்டொக்கம் தோட்டத்தில் இரத்தினசாமி முதலியாருக்கு 1932ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் நாள் பிறந்தவர் தான் இந்த மாமனிதர் சிவலிங்கம். அக்காலத்தில் அவரது தந்தை நோட்டன் பிரிட்ஜ் மல்லி-கைப்பூ தோட்டத்திலும் பின்னர் மேஃபீல்ட் தோட்டத்திலும் கணக்கப்பிள்ளையாக வேலை செய்து கொண்டிருந்தார்.

அப்பொழுது சிவலிங்கம் ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் (அப்போது அது ஹட்டன் மெதடிஸ்ட் கல்லூரி என அழைக்கப்பட்டது) படித்துக் கொண்டி-ருந்தார். பள்ளிப் படிப்பை முடித்த அவர் பின்பு சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் இந்திய அரசின் புலமைப் பரிசு பெற்று படித்து எம்.ஏ.பட்டம் பெற்றதுடன் கல்வித்-துறை டிப்ளோமா பட்டமும் பெற்றார்.

அதோடு அவரது கல்வித் தாகம் நின்று விடவில்லை. தொடர்ந்து லண்டனில் புள்ளிவிபரவியல் டிப்ளோமோ பட்டம் பெற்றதுடன் பின்னர் கொழும்பு பல்கலைக்க-ழகத்தில் படித்து சட்டத்தரணியாகவும் வலம் வந்தார்.

தான் படித்த அதே பள்ளியின் ஆசிரியராகவும் பின்னர் அதிபராக பணியாற்றி மலையகத்தில் பல மாணவர்களை உயர்த்திய பெருமகன் இவர்.

அரசியல், வரலாறு, ஆங்கிலம், இலக்கியம் என பல்வேறு துறைகளில் அவர் மாணவர்களுக்கு கல்வி போதித்தார். இலங்கை மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் பல பள்ளிகள் இருந்தாலும் இவரது காலத்தில் தான் ஹைலண்ட்ஸ் கல்லூரியின் பெயர் மலையகம் முழுமையாக மட்டுமல்ல, முழு நாட்டிலும் கொடி கட்டிப் பறந்-தது என் பதை மறுத்துவிட முடியாது.

மலையக கல்வியின் மையமாக மாத்திரமின்றி மலையக சமூகத்தின் எழுச்-சியின் மையமாகவும் இக்கல்லூரியை மாற்றி அமைத்த பெருமை சிவாவையே சாரும் இவரது காலத்தில் மலையகத்தில் ஒரு கல்விப் புரட்சி உருவாகியது. அதன் மூலம் புதிய எண்ணக் கருத்துக்கள் கொண்ட ஒரு முற்போக்கு சமுதாயம் உருவாக்-கப்பட்டது சகல துறைகளிலும் பின் தள்ளப்பட்டு உழைத்துக் கொடுக்கும் ஓர் இன-மாக மட்டுமே இருந்த மலையகத் தமிழர்களின் விழிப்புணர்வுக்கு வித்திட்டவர் சிவ-லிங்கம் என்றால் அது மிகையாகாது.

1960-ஆம் ஆண்டளவில் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் உருவானது. அதை தொடர்ந்து 1963ஆம் ஆண்டளவில் மலையக எழுத்தாளர் மன்றம், தொடர்ந்து 1970ஆம் ஆண்டளவில் மலையக இளைஞர் முன்னணி என்ற இளைஞர் இயக்-கங்கள் மலையக முழுமையும் தோன்றின. இந்த அமைப்புகளின் பின்னால் இவர் இணைந்து செயலாற்றி மலையகத்தில் ஒரு பெரும் சக்தியை உருவாக்கினார்.

அக்காலத்தில் இவர் நடத்திய பல ஆய்வு வட்டங்கள், கருத்தரங்குகள், மேடைப் பேச்சுகள் கலை நிகழச்சிகள் மூலமாக மலையகத்து மக்களை தட்டி எழுப்-பிய இந்த மலையக மண்ணின் மைந்தன் சிவாவை மலையக சமுதாயம் என்றும் நன்றியுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளது. இவர் உருவாக்கிய மலைநாட்டு நல்-வாழ்வு வாலிபர் சங்கம் தொடர்ந்து மலையக இளைஞர் முன்னணி இந்த இளைஞர் முன்னணியின "முன்னணி" என்ற பத்திரிகை மலையகத்தின் மூலை முடுக்-கெல்லாம் ஒளி வீசி மலையக சமுதாயத்தை வீறு கொண்டு எழ வைத்தது எனலாம். சிவலிங் கம் எடுத்த முயற்சியின் பயனாக இல ங்கை வானொலியில் மலையகத்துக்கென "குன்றின் குரல்" என்றொரு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.

மலேஷியாவில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில், இலங்கை மலையகத்தின் பிரதிநிதியாக கலந்து கொண்டு, மலையக இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலைகளை பற்றி பேசி, மாநாட்டில் கலந்து கொண்ட உலகத் தமிழ் அறிஞர்கள் மலையக இந்திய வம்சாவளி மக்களைப் பற்றி சிந்திக்க தூண்டிய பெருமகன் இவராகும்.

1962ஆம் ஆண்டு, நான் தர்மதூதக் கல்லூரியில் இறுதி ஆண்டில் படித்துக் கொண்டிருந்த காலம் அது. என்னுடைய நண்பர் மு.நித்தியானந்தன் போன்றோ-ரெல்லாம், ஒரே வகுப்பில், ஒன்றாகப் படித்துக் கொண்டிருந்த காலம். அந்த ஆண்டின் இறுதியில் எங்கள் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்ற போது இரா.சிவலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய, பேச்சு, இன்னமும் என் காதுகளில் ரீங்காகரமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அக்காலத்தில், இலங்கையின் மலையக தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில், அவர்களின் உரிமைகளுக்காக, உயர்வுக்காக இலங்கை சமசமாஜக கட்சி பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருந்தது. அப்படியான தருணத்தில் அதன் கீழ் செயற்பட்டு வந்த லங்கா தோட்டத் தொழிலாளர் சங்கத்தில் சேர்ந்து பணியாற்ற வாய்ப்பு எனக்கு கிட்டியது.

தீவிர இடதுசாரி சிந்தனையாளரான சிவாவுக்கு, இலங்கை சமசமாஜக் கட்சி யின் தலைமைகளோடு மிக நெருக்கமான நட்பு இருந்து வந்தது. மேலும், அன்றைய இலங்கை பிரதமரும், உலகின் முதலாவது பெண் பிரதமருமான திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கவுடனும் நெருக்கமான நட்பு இருந்தபடியால், மலையகத்தின் தோட்டப் பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்று நடத்துவதற்காக இவருக்கு தோட்டப் பள்ளிகளின் இயக்குநர் என்ற பொறுப்பை வழங்கினார்கள்.

அப்படியான சந்தர்ப்பத்தில், நான் அவரை அவரது கல்வி அமைச்சில் அடிக்கடி சந்தித்து பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் நானும் அவரும் பதுளை மாவட்டத்திலுள்ள நமுனுகுல இந்துகொல்லை கந்தசேன, தன்னகொம்புர, உடுவர, டிக்-வெல்ல போன்ற தோட்டங்களுக்குச் சென்று, அங்கிருந்த பாடசாலைகளை ஆய்வு செய்து வந்த அந்த நாட்கள் இன்னமும் பசுமையான இருக்கின்றன.

ஒடுக்கப்பட்ட மலையக தமிழர்களின் வாழ்வு மேம்பட வேண்டும். அவர்களின் பிள்ளைகள் நல்ல கல்வி கற்க வேண்டும் என்பதற்கான பணிகளில் ஈடுபட ஆரம்-பித்த போது இனவெறி அரசியல்வாதியால் கல்வி அமைச்சு அலுவலகத்திலே அவர் தாக்கப்பட்டார். இது சிவலிங்கத்தை வெகுவாகப் பாதிக்க செய்துவிட்டது.

பின்னர் அரசியல் காரணங்களுக்காக இவரது பதவி பறிக்கப்பட்டது. பதவி பறிபோன பின்னர், அவர் நிலைகுலைந்து விடாது தான் ஏற்றுக்கொண்ட கொள்கை-யிலிருந்து கொஞ்சமும் பின்வாங்காது நின்றார். இலங்கை தோட்ட அலுவலர்கள் சங்கத்தின் செயலாளராக பணியாற்ற அவருக்கு வாய்ப்பு தேடி வந்தது.

இக்கால கட்டத்தில் சட்டத்துறையில் பயின்று, சட்டத்தரணியாகவும் கண்-டியிலி ருந்து சேவையாற்றிக கொண்டிருந்த கால த்தில் மலையகம் முழுமையும் பயணித்து வந்தார். நான் அவ்வப்போது அவரை சந்தி த்து பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்து.

இப்படியெல்லாம் இலங்கையில் வாழ்ந்த காலத்தில் தான், 1983ஆம் ஆண்டு ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழர்களுக்கு எதிராக இனத்துவேசம் கட்டவிழ்த்து விடப்பட்டது. அப்படியானதொரு நிலையில் 1983ஆம் ஆண்டளவில் தமிழகம் வந்து இங்கு குடியேற வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கும் ஏற்பட்டது.

"மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம்" என்ற அந்த அமைப்பு பிறந்து சில நாட்களேயான பச்சிளம் குழந்தையாக இருந்த அந்தக் கால கட்டத்தில் நானும் மன்ற நிறுவநர்களில் ஒருவரான மறைந்த சு.திருசெந்தூரனுடன் இணைந்து பணி-களை செய்ய ஆரம்பித்தோம்.

அந்த மன்றத்தின் உதயம், நீலகிரி வாழ் ஏழை மக்களின் வாழ்வில் ஒரு பொன்னுதயம் என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு வரலாற்றுத் திருப்பு-முனை. பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக நீலகிரியில் குடியேறி யாராலும் ஏறெடுத்துப் பார்க்காத நிலையில் நம்பிக்கை இழந்து வறுமையால் கூனிக் குறுகி உரிமை உணர்வற்று ஒடுங்கிப் போய் நின்ற ஒரு மனித சமுதாயத்தை மாற்றி அமைக்க கங்கணம் கட்டிக் கொண்டு உருவானது தான் மலையக மக்கள் மறு-வாழ்வு மன்றமும் - அதனை உருவாக்கிய சிவலிங்கமும்.

"நாங்கள் இந்தியர்கள்" என கோஷம் போட்டபோது, "இல்லையில்லை நீங்கள் இலங்கையர்கள், அந்நியர்கள்" என்றெல் லாம் எங்களுக்கு எதிராக ஒரு பிரிவினர் கோஷம் போட ஆரம்பித்தனர். தேர்தல் சமயத்தில் எமது மக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினார் கள். "சீ,சீ, ஓட்டு உங்களுக்கு ஒரு கேடா" என எள்ளி நகையாடினார்கள். எங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் தக்க வைத்துக்கொள்ளப் பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று.

1991இல் ராஜிவ்காந்தி கொலை செய்ய ப்பட்ட பின்னர் இந்தக் கொலைக்கு பின்ன ணியில் இலங்கைத் தமிழர்கள் தான் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் வலுவ-டைந்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து இலங்கைத் தமிழர்களும் காவல் நிலையங்களில் பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்-பட்டது.

அரசு வெளியிட்ட ஆணையில் “இலங் கைத் தமிழர்கள் காவல் நிலையத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்” என்று தான் மிகத் தெளிவாக குறிப்பிடப்பட்டி -ருந்தது. ஆனால், அதி மேதாவிகளான காவல்துறைக்கு இலங்கைத் தமிழர்கள் யார்- இந்தியத் தழிர்கள் யார்-? அகதிகள் யார், தாயகம் திரும்பிய தமிழர்கள் யார் என்ற வித்தியாசம் தெரியாது போனது விந்தையே?

உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி என பல இடங்களிலும் சுமார் 250பேருக்கு மேல் கைது செய்யப்பட்டனர். மலையக மக்கள் மறுவாழ்வு மன்றத்தின் உயர்மட்டக் குழுவின் ஐந்து நபர்கள் இரா.சிவலிங்கம் தலைமையில், நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கைது செய்யப்பட்ட எங்கள் மக்களை விடு-விக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.

ஆனால் மாவட்ட ஆட்சித்தலைவர் “உங்களுடன் நான் பேசத் தயாரில்லை, நாளையே உங்கள் எல்லோரையும் சிலோனுக்கு அனுப்பப்போகிறேன், என் அலுவல-கத்தை விட்டு உடனேயே வெளியேறி விட வேண்டும் என ஆணவமாக ஆத்திரமாக அதட்டும் தொனியில் கூறினார்.

உடனேயே நாங்கள் “நீங்கள் மட்டுமல்ல இந்திய நாட்டின் ஜனாதிபதியோ பிர-தமரோ வேறு யாருமே நினைத்தாலும் எங்களை இந்த நாட்டை விட்டு வெளி-யேற்ற முடியாது” என கூறியதும் ஆட்சித் தலைவர் உரத்த குரலில் “இங்கிருந்து தொலைந்து போய் விடுங்கள் நான் உங்களுக்கு ஒரு நல்ல பாடம் படிப்பிக்கிறேன்” என கோபமாக கூறி விட்டு எழுந்து போய் விட்டார்.

பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவ-லகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் செய்வது என முடிவெடுத்து, சிவ-லிங்கம் தலைமையில் சுமார் 1000பேருக்கு மேல் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினோம்.

“ஒப்பந்தம் போட்டது யாரடா, இந்தியப் பிரதமர் தானடா” என்று மிகக் கோஷம் போட்டு எதிர்ப்பை, ஆதங்கத்தை மக்கள் காட்டினார்கள். அதன் விளைவாக மன்றத் தின் முன்னோடிகளான இரா.சிவலிங்கம், மா.சந்திரசேகரன், கே.சாந்தாகி-ருஷ்ணன், பி.செபஸ்தியன், ஏ.ச.டீன் வீராபாலசந்திரன், எஸ்.கோவிந்தசாமி, பி.இராமச்-சந்திரன், பி.அரசன் சி.சுந்தர் பி.பரமநாதன் பி.சுந்தரலிங்கம் எம்.மயில்வாகனம் உட்பட 13-பேர் மீது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, அரசு வேலைகளுக்கு குந்தகம் விளைவித்தது. மாவட்ட ஆட்சியரை பயங்கர ஆயுதங்க-ளுடன் பயமுறுத்தியது சட்டம், ஒழுங்குக்கு பாதிப்பை ஏற்படுத்தியது போன்ற பல பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டோம்.

1991 ஜூலை மாதம் 24ஆம் தேதி நள்ளிரவில் கைது செய்யப்பட்ட எங்களை பின்னர் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஜாமீனில் விடுவித்தனர்.

சிவலிங்கம் மாவட்ட ஆட்சியருடன் வாக்குவாதம் செய்தமைக்கு பழி தீர்த்துக் கொள்வதற்காக ஒரு பாவமும் அறியாத தாயகம் மக்களுக்கு நியாயம் கோரியதற்-காக தமிழக பொலிஸாரால் 1993 ஆகஸ்ட் 5ஆம் திகதி கைது செய்து, செங்கல்பட்டு சிறப்பு முகாமில் கொண்டு நான்கு மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டு கொடுமை நடந்தேறியது.

இந்த நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு முகாமி-லிருந்து துப்பாக்கி ஏந்திய காவலர்கள் புடைசூழ், கைகளை பெரிய இரும்புச் சங்கி-லியால் பிணைத்து தெருவில் நடக்க விட்டு, சென்னை அரசு பொது மருத்துவம-னைக்கு கூட்டிச் சென்று அனுமதித்தனர்;.

இறுதியில் பல்வேறு போரட்டங்களின் பின்னர் 01.12.1993-இல் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி விடுதலை செய்தனர். எப்படி அர்த்தமில்லாமல் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்தார்களோ அதே போல் எந்தவிதமான அர்த்தமும் இல்லாமல் சிறையிலிருந்து விடுவித்தனர்.

ஒடுக்கப்பட்ட மக்களை தன்மானம் உள்ளவர்களாக தலைநிமிர்ந்து நடைபோட வைத்த மலையகத்தின் மாமேதை சிவலிங் கத்தை தாயகம் திரும்பிய ஒடுக்கப்பட்ட மக்கள் இருக்கும் வரை என்றும் நன்றியுடன் நினைவு கூறிக் கொண்டே இருப்பார்கள் என்பது மட்டுமல்ல. இந்த மலை முகடுகளில் அவர்களின் நாமம், அவர் இந்த மக்களுக்கு செய்துள்ள சேவைகள் வரலாற்றில் என்றும் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்பது திண்ணம்.


நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates