Headlines News :
முகப்பு » , , , , » சாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்

சாதிய வசைபாடல் : அருந்ததியர் சமூகத்தை முன்வைத்து - என்.சரவணன்

இக்கட்டுரை 2013 ஏப்ரலில் 06,07 ஆகிய திகதிகளில் லண்டனில் நிகழ்ந்த இலக்கிய சந்திப்பில் ஆற்றிய உரை. சில மேலதிக திருத்தங்களுடன் அக்கட்டுரை தலித்தின் குறிப்புகள் நூலிலும் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிவரும் "காக்கைச் சிறகினிலே" சஞ்சிகையில் மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்கள் மாதங்கள் வெளியாகி இப்போது உங்கள் முன்...
அறிமுகம்
நாம் விரும்பியோ விரும்பாமலோ அடையாளங்களாக பிளவுண்ட சமூக அமைப்பிலேயே ஒரு அங்கமாக ஆக்கப்படிருக்கிறோம். ஒன்றில் ஆதிக்கம் செலுத்துகின்ற அங்கமாகவோ அல்லது ஆதிக்கத்துக்கு பலியாகும் அங்கமாகவோ இருக்கத்தான் செய்கிறோம். இதில் எவரும் விதிவிலக்கில்லை. ஆதிக்க சமூக கட்டமைப்புக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சாதியத்தின் இருப்பு தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

இலங்கை தேசத்தில் மதவாதம் நிருவனமயப்பட்டிருப்பதைப்போல, இனவாதம் நிருவனமயப்பட்டிருப்பதைப்போல, ஆணாதிக்கம் நிருவனமயப்பட்டிருப்பதைப்போல, வர்க்க சமுதாயம் நிருவனமயப்பட்டிருப்பதைபோல, சாதியமும் பலமாக நிறுவனமயப்பட்டிருக்கிறது. காலத்துக்கு காலம் இவற்றில் ஏதேனும் ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்டதோ கோலோச்சும் ஏனையவை அவற்றுக்கு அடுத்தாற்போல படிநிலைவரிசையுறும்.

இலங்கையின் சாதிய சமூகமானது மூன்று பிரதான போக்குகளாக மூன்று சமூகங்கள் மத்தியில் இயங்கிக்கொண்டிருக்கிறது எனலாம். வடக்கு கிழக்கு தமிழர் மத்தியில் நிலவும் சாதியமைப்பு, சிங்கள சமூகத்தில் நிலவும் சாதியமைப்பு மற்றும் இந்திய வம்சாவளியினர் மத்தியில் நிலவும் சாதியமைப்பு. இவற்றுக்குள்ளும் உட்சாதிக்கட்டமைப்பு நிலவவே செய்கின்றன. உதாரணத்திற்கு மட்டக்களப்பில் நடைமுறையிலுள்ள  சாதிமுறை.

“சாதிமுறை” எனும்போதே அங்கு “சாதியானது முறை”ப்படுத்தப்பட்டது என்பதை சுட்டுகிறது. இலங்கையில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உள்ள சாதிகள் இந்திய சாதியமைப்பை ஒத்திருந்தாலும்  ஏறத்தாழ இரு நூற்றாண்டு கால இடைவெளிக்குள் சில மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்திய வம்சாவழி மக்களின் எண்ணிக்கையில் பெரும்பாலானவர்கள் தலித் மக்களாவர். ஆங்கில காலனியாதிக்கத்தின் போது தோட்டத்தொழிலுக்காகப் பெருமளவில் கொணரப்பட்டவர்கள் இவர்கள். பின்னர் மலையக தொட்டப்புறங்களுக்கு வெளியில் இறப்பர் தோட்டங்களுக்காகவும், நகரசுத்தித்தொழில், ஆலைத்தொழில், துறைமுகம் சார் தொழில் என கொணரப்பட்டவர்கள் இவர்கள்.

இலங்கையில் போதிய உழைப்பாளர் வளம் இல்லாத நிலையிலும், இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்கள் அத்தொழிலை மேற்கொள்ள மறுத்ததாலும், தமிழகத்தில் பஞ்சத்தை செயற்கையாக ஏற்படுத்தி, அதில் பாதிக்கப்பட்ட விளிம்புநிலையை சார்ந்தவர்களை கொத்தடிமைகளாக கொண்டுவந்து சேர்க்கப்பட்டவர்கள் இவர்கள். எனவேதான் இந்த விளிம்புநிலையினர் குறித்து எழுதுகின்ற ஆய்வாளர்கள், தமிழகத்திலிருந்து மக்கள் மாத்திரம் இறக்குமதி செய்யப்படவில்லை அவர்களோடு சாதிக்கட்டமைப்பையும் அப்படியே அவர்களோடு பெயர்த்து கொணர்ந்தனர் என்பர். அது ஆங்கில நிர்வாக முறைமையின் முகாமைத்துவ படிநிலைக்கு மிகவும் கைகொடுத்தது.

ஆக அதிகாரத்துக்கு அடிபணியும் இயல்பை இயல்பாகவே கொண்ட சாதிய கட்டமைப்பை பிரதியீடு செய்வதன் மூலம் தமது அதிகாரத்துவத்தை எளிமையாக நிறுவிவிடலாம் என்ற ஆங்கிலேயர்களின் கணிப்பு தவறாகிவிடவில்லை. அதில் வெற்றி பெற்றார்கள். இந்தியர்களை தமது காலனித்துவத்திற்குள் இருந்த எந்தெந்த நாடுகளுக்கெல்லாம் ஏற்றுமதி செய்தார்களோ அங்கெல்லாம் இந்த சாதிய உத்தி கைகூடியது.

குறிப்பாக தமிழகத்திலிருந்து எற்றுமதிசெய்யப்பட்ட “கொத்தடிமைகளில்” பெரும்பாலானோர் தலித்துகளாகவே இருந்தனர். எனவே தான் இலங்கை இந்திய வம்சாவளியினரை ஒரு தலித் சமூகமாகவே இலகுவாக அடையாளம் காணலாம்.

1815இல் கண்டியை கைப்பற்றியதோடு முழு இலங்கையையும் தமது கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவந்ததன பின்னர் தான், தமது வர்த்தகத்தையும் காலனித்துவத்தையும் உறுதியாக நிலைநிறுத்த தமக்கான ஏற்றுமதி உற்பத்திகளை மேற்கொள்ளத் தொடங்கியதுடன், நிர்வாகப் பிரதேசங்களையும் மீள்வரைவு செய்து அங்காங்கு நகராக்க திட்டங்களையும் மேற்கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து இலங்கையில் நகரசபைகள் 1865யில் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து நகரசுத்தித் தொழிலுக்காகவும் தமிழகத்திலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் இறக்குமதி செய்யப்பட்டார்கள். சுத்திகரிப்பு தொழிலுக்கென்றே விசேடமாக அவர்கள் அருந்ததியர்களைத் தெரிவு செய்தார்கள். (5)  காலப்போக்கில் அரச காரியாலயங்களுக்குமாக சுத்திகரிப்பு தொழிலுக்காக அருந்ததியர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். இலங்கையில் எங்கெல்லாம் நகரசபை, பிரதேச சபைகள் நிறுவப்பட்டனவோ எங்கெல்லாம் அரச கட்டடங்கள் நிறுவப்பட்டனவோ அங்கெல்லாம் அவர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள். (6)

சுத்திகரிப்பு என்பது இன்றைய காலங்களைப்போல எளிதானதாக இருக்கவில்லை. கையால் மலம் அள்ளுவதும், குழி கக்கூஸ் என்று சொல்லப்படுகின்ற கழிவறை குழிகளிலிருந்து வாளிகள் மூலம் அள்ளிக்கொண்டுசென்று எறிவதும் அவர்களின் பணியாக இருந்தது. சுமக்க கடினமான மலம் நிறைந்த வாளிகளை தலையில் வைத்தே சுமக்க நேரிட்டது. இந்த நிலைமை இலங்கையின் சுதந்திரத்தின் பின் ஏறத்தாழ 70கள் வரை இருந்தது.
1837 இல் வெளியான Seventy-two Specimens of Castes in India என்கிற நூலிலிருந்து
இன்றைய இலங்கையின் சாதிய கட்டமைப்பில் இன்றிமையாத கவனிப்புகுரிய சமூகமாக அருந்ததியர்கள் காணப்படுகிறார்கள். சமூக மாற்றத்துக்கான செயற்பாட்டாளர்களோ, அரசியல் சக்திகளோ, ஆய்வாளர்களோ ஊடகங்களோ கண்டுகொள்ளாத ஆனால் கண்டுகொள்ளப்படவேண்டிய சமூகமாகவும் அருந்ததியர் சமூகம் ஆளாகியிருக்கிறது. ஒரு வளமற்ற, பலமற்ற, ஆதரவற்ற சமூகம் என்றளவில் தமக்காக தாமே போராடும் சமூகத்தவர்கள் அவர்கள். அதற்கான திறனற்ற ஒரு சமூகமாகவும் இருக்கிறார்கள் என்றால் அது மிகையில்லை. தமது வரலாற்றுப் பின்னணி குறித்து எந்த போதிய பதிவுமில்லாத சமூகமும் கூட. வாய்மொழி மூலம் கடத்தப்பட்ட சில தகவல்கள், மற்றும் சில அமைப்புகளின் எஞ்சிய ஆவணங்களும் மாத்திரமே அருந்ததியர் சமூகம் குறித்த ஓரளவு உண்மைகளை வெளித்தெரிய வைத்திருக்கிறது. இலங்கையில் அருந்ததியர்கள் ஏன் பேசாப்பொருளாகப் போனார்கள், ஏன் பேசுபொருளாக்க வேண்டியிருக்கிறது என்பதை அலசும் இக்கட்டுரை, குறிப்பாக “சாதியச் சாடலுக்கு” அதிகம் பலியாகிய இலங்கை சமூகம் என்கிற போக்கில் கவனத்தை குவிக்கிறது.

சாதியம் நிறுவனமயப்பட்டது, வடிவ ரீதியில் அது தகவமைத்து, வெவ்வேறு வடிவம் கொண்டு மாறக்கூடியது.

சாதியச் சாடல்
ஒருவரையோ அல்லது ஒரு சமூகக் குழுவையோ சொல்லால் கூடியபட்சம் புண்படுத்த வேண்டுமென்றால் உச்ச  ஆயுதமாக சாதிய வசவு இருக்கிறது. இன்று அது மேலும் மேலோங்கி வளர்ந்துமிருக்கிறது.

தமது வெறுப்பையும், சகிப்பின்மையையும், ஆத்திரத்தையும், எதிர்ப்பையும் வெளிக்காட்ட இந்த சாதியச் சாடல் ஊன்றி நிலைபெற்றிருக்கிறது. ஒருவரை, அல்லது ஒரு குழுவை/குழுமத்தை உணர்வு ரீதியில் கீழிறக்கி அகமகிழ வேண்டுமென்றால் இன்று இதோ சாதி இருக்கிறது.

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த சாதிய சாடலுக்கு ஆளாபவர் சம்பந்தப்பட்ட சாதியாகவோ ஏன், ஒடுக்கப்பட்ட சாதியாகவோ கூட இருக்கவேண்டியதில்லை. யாராகவும் இருக்கலாம். ஆக எந்த ஒருவரையும் இலகுவாக உச்சபட்சமாக உணர்வுரீதியில் தாக்குதலை நிகழ்த்த வேண்டுமென்றால் அது சாதிய வசவால் தான் முடியும் என்று உயர்சாதி மனம் சொல்கிறது. இதிலும் உள்ள வேடிக்கை என்னவென்றால் ஏற்கனவே சாதிய அவமானங்களுக்கும், சாதிய சாடலுக்கும் ஆளாகிய சாதியினர் கூட  இன்னொரு ஒடுக்கப்பட்ட சாதியின் மீது அதே அளவான வசவை நிகழ்த்துவது தான்.

மேல்சாதி ஆண்மனம் என்பது மேலதிகமாக பெண்பாலுறுப்பை, அல்லது பெண் பாலுறவை சாடுகின்ற தூஷணத்தையும் இந்த சாதிய சாடலுடன் கோர்த்து சொல்லும் போது அதற்கு மேலதிக பலம் கிடைப்பதாக நம்புகிறது. அதையே நிறைவேற்றியும்விடுகிறது.

கீழ்சாதி வெறுப்பு கட்டமைக்கப்பட்டதென்பது வெறும் தற்செயல் நிகழ்வல்ல. சாதி இருப்புக்கு அது தேவைப்படுகிறது. உயர்சாதி கட்டுக்கோப்புக்கும், அது புனைந்துள்ள அகமண உறுதிக்கும் அது அத்தியாவசியமானது. அடுத்த தலைமுறையின் சாதிமீறளுக்கு எல்லைபோட இந்த புனைவு மிக அவசியமானது. கூடவே... ஒன்று கீழானது என்று சொல்வதற்கூடாக இன்னொன்று (நம்மது) மேலானது என்று நம்பிக்கையூட்டவேண்டும்.  “அவங்கள் நல்ல ஆக்கள் இல்ல...” என்கிற உரையாடலை நானே கூட எத்தனையோ சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கிறேன். இந்த போக்கை பலமூட்டவேண்டும் என்றால் அதனை திரும்ப திரும்ப செய்தும் திரும்பத் திரும்ப செய்தும், புனைந்தும் நிலைநாட்ட வேண்டும். கீழ்சாதி, இழிசாதி, எளியசாதி, குறைந்தசாதி, இழிசனர் என்று தான் சமூகத்தில் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழ்சமூகத்தில் மனைவி கூட “பெண்சாதி” தான். யாழ்ப்பாண பேச்சு வழக்கில் சாதாரண பொருட்களின் தர நிர்ணயம் கூட சாதியாகத் தான் பார்க்கப்படுகிறது. “உது என்ன சாதி” என்பதை புழக்கத்தில் இருப்பதை நாம் கண்டிருக்கிறோம்.

உயர்சாதிகளையும், அது கட்டமைத்துள்ள கருத்தாக்கங்களையும்,  அது சமூகத்தில் திணித்திருக்கிற புனைவுகளையும், ஐதீகங்களையும், மீண்டும் மீண்டும் திரும்பக்கூரலுக்கூடாக எற்படுத்திவிடிருக்கிற கற்பிதங்களையும் இனங்கண்டுகொள்வது அவசியமாகிறது. இந்த புனிதங்களை உடைத்தல் (De-canonization)  என்கிற அரசியல் செயற்பாட்டில் ஒரு அங்கமாக ஒடுக்கப்படும் சாதியினர் மீதான வசவுகளையும், இழிவு செய்யும் போக்கையும் களையும் ஒரு பணியும் நம்முன் உள்ளது.

சாதிமறுப்பு, சாதியெதிர்ப்பு, சாதியுடைப்பு ஆகிய செயற்பாட்டின் முன்நிபந்தனையாக இரண்டு காரியங்கள் நம்முன் உள்ளன. ஒன்று ஒன்று இந்த கட்டமைப்பை கட்டவிழ்ப்பது மற்றது கட்டுவது. அதாவது நமக்கான விடுதலை கருத்தமைவை கட்டுவது. இந்த கருத்துடைப்பதும், கருத்தமைப்பதும் வெவ்வேறாகவோ, ஒன்றன்பின் ஒன்றாகவோ பயணிக்கவேண்டியவை அல்ல. இணைந்தே மேற்கொள்வது தான் தலித் விடுதலைக்கு வழிவகுக்கும்.

எனவே சாதியாக அனைத்தையும் நிர்ணயிக்கும் போக்குக்கு சமூகம் பழக்கப்படுத்தப்பட்டிருப்பதும் வெறும் தற்செயல் அல்ல. நிறுவனமயப்பட்ட சாதியமைப்பின் உறுதிக்கு எப்போதும் இது அவசியப்பட்டுகொண்டேயிருக்கும். சாதியத்தின் நவீன வடிவம் நேரடி தீண்டாமையில் தங்கியிருக்கவில்லை. நவீன சாதியம் இந்த சாதி வசவுகள், சாதியச் சாடல்கள், அகமணமுறை, சாதியப் பெருமிதம் போன்ற வடிவங்களில் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது தோழர்களே.

இதில் உள்ள மிக அவலகரமான நிலை என்னவென்றால் சமூக மாற்றத்துக்காக பணிபுரியும், முற்போக்கு பேசும் பலரும் கூட இந்த சாதிய வசவுகளை தெரிந்தோ தெரியாமலோ கையாண்டு வருகிறார்கள். ஆழப்புரையோடிபோயுள்ள இந்த “சாதிய வசவு கற்பிதம்” அவ்வளவு ஆழமாக நம்மை சூழ இருக்கும் செயற்பாட்டாளர்கள் வரைக்கும் தலையில் ஏற்றப்பட்டுள்ளது என்பது மறுப்பதற்கில்லை. சாதியத்தின் இந்த நுண்ணரசியலை மிகத் தெளிவாக புரிந்தவர்களால் மாத்திரமே பிரக்ஞைபூர்வமாக இதிலிருந்து விடுபட முடிகிறது. 

அந்த வகையில் இந்த சாதியச் சாடலுக்கு அருந்ததியர் அளவுக்கு வேறெந்த சமூகமும் மோசமாக கீழிறக்கி அசிங்கப்படுத்தப்பட்டதில்லை. 

தகவல் தொழில்நுட்பத்தில் வகிபாகம்
சமீபகாலமாக இணையத்தளங்களில் “சக்கிலி” என்கிற பதம் அதிகமாக பயன்படுத்தப்படுவதை அவதானித்து வருகிறோம். கட்டுரைகளிலும், பின்னூட்டங்களிலும், பேச்சுகளிலும் இதனை காணக்கொடியதாக இருக்கிறது. சென்ற வருடம் 2013 லண்டனில் நடந்த இலக்கிய சந்திப்பின் போது எனது உரையில், இணையத்தளங்களில் தேடிப்பார்த்ததில் 9420 இணையப்பக்கங்களில் “සක්කිලි” (சக்கிலி என சிங்களத்தில்) என பாவிக்கப்பட்டிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. ஒரு வருடத்துக்குப்குப் பின்னர் 2014 மே 12 அன்று  அவ்வெண்ணிக்கை 14,800  ஆக உயர்ந்திருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அதுவே 15 திகதி அவ்வெண்ணிக்கை 15,400 ஆக உயர்ந்துவிட்டது. (1) அதாவது சரியாக மூன்று நாட்களில் 600 உயர்ந்திருக்கிறது. இன்றைய திகதியில் அதுவே 74,000 க்கும் மேல் உயர்ந்திருப்பதை பார்க்கலாம். சராசரி நாளைக்கு  200 பக்கங்கள் என்கிற வீதத்தில் உயர்ந்திருக்கிறது. இது வெறும் பக்கங்களின் எண்ணிக்கை தான் ஒவ்வொரு பக்கங்களுக்குள்ளும் பாவிக்கப்பட்ட தடவைகளின் எண்ணிக்கை இதைவிட இரட்டிப்பாக இருக்க வாய்ப்புண்டு. தமிழில் கூட இன்றைய தினம் “சக்கிலி” என்கிற சொல்லைக்கொண்ட 4,340 பக்கங்களைத் மட்டும் தான் காண முடிகிறது. அதிலும் பல ஆய்வுகளாக இருக்கின்றனவே அன்றி வசவுகளாக இருப்பவை குறைவே. இம்மக்களை சுட்டும் “அருந்ததிய” என்கிற பதமோ 5680 இணையப்பக்கங்களில் காணப்படுகிறது.

தேடுபொறி (Search engine) என்பது சகலரது வாழ்க்கையிலும் இரண்டறக் கலந்துகொண்டே வருகிறது. மக்களின் சிந்தனையை வழிநடத்தும் ஒன்றாக ஆகியிருக்கிறது. ஆய்வாளர்கள், மாணவர்கள் தொடக்கம் சாதாரண மக்கள் வரை தேடுபொறியில் தங்கியிருக்கும் நிலைக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றனர்.  இப்போதெல்லாம் தகவல்கள், கருத்துக்கள் என்பை பதிவுபெரும் பெரும் வங்கியாக இணைய தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. அது தகவல், தரவு, கருத்து என்பதோடு மட்டும் நின்றுவிடவில்லை. மெகா சொல் வங்கியையும் வளர்த்துவிட்டிருக்கிறது. சக்கிலி என்கிற பதத்தை அங்கே தவறான வகையில் பதிவு பெற்று பரவி வருகிறது. நாளைய சந்ததிக்கும் சேர்த்து மோசமான ஒரு கருத்துருவத்தை விதைத்து பரப்பிவிட அது பயன்பட்டிருக்கிறது.

சிங்கள பேச்சு வழக்கிலேயே அதிகம்
சிங்கள சமூக பேச்சு வழக்கில் “சக்கிலி” என்கிற வசவை சிங்களவர்களுக்கு எதிராகவும், முஸ்லிம் மக்களுக்கு எதிராகவுமே அதிகம் பாவிக்கப்பட்டிருக்கிறது. அதற்க்கடுத்ததாகவே தமிழர்கள் எனலாம். எப்படியிருந்தபோதும் அருந்ததியர்களுக்கே இதன் இழிவு முழுவதும் பொய் சேர்கின்றன என்பதை சொல்லத்தேவயில்லை. தமது எதிரிகளை, மோசடிக்காரர்களாகவும், அசிங்கமானவர்களாகவும், மூடர்களாகவும், இழிவானவர்களாகவும் சித்திரிக்க இலகுவாக “சக்கிலிய” என்கிற பதத்தை பாவித்து விடுகிறார்கள். மேலதிகமாக அவர்கள் மலம் அள்ளுபவர்கள், சுத்திகரிப்போடு சம்பந்தப்பட்டவர்கள், செருப்பு தைப்பவர்கள், சேரிகளில் வாழ்பவர்கள், குடித்துவிட்டு சண்டையிடுபவர்கள் என்கிற இழிவு, அசிங்கம் சார்ந்த கருத்தேற்றத்தையும் இந்த சாடல் உள்ளடக்கியது.

“சக்கிலி” என்கிற இந்த பதத்தை உபயோகிப்பதன் மூலம்; இதனால் வசவுக்கு ஆளாபவர் இதன் மூலம் கூடிய பட்ச எரிச்சலுக்கும், ஆத்திரத்துக்கும், வேதனை உணர்வுக்கும் ஆளாக முடியும் என்பது இதனை பாவிப்பவர் அனைவருக்கும் தெரியும். அப்படியாயின் “சக்கிலி” என்கிற இந்த பதம் எப்பேர்பட்ட கற்பிதம் செய்யப்பட்ட கனதியுடயது என்பதை நீங்களே ஊகியுங்கள். 

சிங்களயே மகா சம்மதத பூமி புத்திர பக்சய என்கிற இனவாதக் கட்சியை அறிதிருப்பீர்கள். அந்தக் கட்சியின் ஆரம்பகர்த்தாவும் தலைவருமான ஹரிச்சந்திர விஜேதுங்க பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் ஒரு சிங்கள மொழிப் புலமையாளரும் கூட. அவர் உருவாக்கிய சிங்கள – சிங்கள லெக்சிகனை சில வருடங்களுக்கு முன்னர் பிரபல பதிப்பகமான எம்.டீ.குணசேனா வெளியிட்டது. அதில் பக்கிலி என்பதற்கு அவர் அர்த்தம் தருகிறார்.

“பக்கிலி – கீழ்த்தரம், தரம் தாழ்ந்தது, ஏவல் செய்பவர், சக்கிலியர்”

ஒரு சிங்கள அகராதியில் “தாழ்ந்ததெல்லாம் சக்கிலி” என்று அழைக்கலாம் என்பதை பதிவு செய்து மக்கழ்மயப்படுத்தி நிறுவனமயப்படுத்துமளவுக்கு சிங்கள புலமைத்துவமும் அறிவார்ந்து பார்க்கவும் இல்லை. ஈவிரக்கமும்கொள்ளவில்லை.

சிங்களத்தில் சக்கிலி என்கிற பதத்தை எப்படியெல்லாம் பாவிக்கப்பட்டிருகிறது என்பதற்கு சில முக்கிய உதாரணங்களை இங்கு பட்டியலிடுகிறேன். இவை இணையத்தலனகளில் இருந்து எடுக்கட்டவை.
  • සක්කිලි සංදේශය - (சக்கிலி சந்தேசய) சிங்கள பி.பி.சி  சேவை - தமிழர்களுக்கு சார்பாக நடந்துகொள்கிறது என்று குற்றம்சாட்டும் சொல்லாடல்
  • සක්කිලි වෙසිගෙ - (சக்கிலி வேசிகே) சக்கிலி வேசியின்... (கூடவே எதனையும் சேர்த்துக்கொள்ளலாம்)
  • සක්කිලි ගී - (சக்கிலி கீ) – சக்கிலி பாட்டு
  • 'සක්කිලි මහරාජා'  - (சக்கிலி மகாராஜா) இலங்கையில் அதிக செல்வாக்கு பெற்ற ஊடக நிறுவன உரிமையாளர் – தமக்கெதிரான செய்தியிட்டதற்காக
  • සක්කිලි මාලිංගයා - சக்கிலி மாலிங்க (கிரிக்கெட் வீரர் மாலிங்க சரியாக ஆட்டத்தை ஆடவில்லை என்பதற்காக)
  • සක්කිලි ගතිය - (சக்கிலி கத்திய)  சக்கிலி குணம்
  • සක්කිලි හොරෙක්! – (சக்கிலி ஹொரெக்) சக்கிலி கள்ளன்
  • සක්කිලි වැඩ - (சக்கிலி வெட) – சக்கிலி வேலை
  • සක්කිලි ඉන්දියන්කාරයා - (சக்கிலி இந்தியன்காரயா) – “சக்கிலி இந்தியன்” தமிழர்களுக்கு சாதகமாக இருந்துவிட்டார்களாம்
  • සක්කිලි බල්ලෝ - (சக்கிலி பல்லோ) – சக்கிலி நாய்
  • සක්කිලි මාධ්‍ය - (சக்கிலி மாத்ய) / சக்கிலி ஊடகங்கள்
  • සක්කිලි අදහස් - (சக்கிலி அதஹாஸ்) – சக்கிலி கருத்து
  • සක්කිලි හිනාවත් - (சக்கிலி ஹினாவக்) – சக்கிலி சிரிப்பு
  • සක්කිලි අරමුන - (சக்கிலி அரமுன) – சக்கிலி நோக்கம்
  • සක්කිලි කොටි - (சக்கிலி கொட்டி) – சக்கிலி புலிகள்
  • සක්කිලි රාජපක්ශ ආන්ඩුව - (சக்கிலி ராஜபக்ஷ ஆண்டுவ) சக்கிலி ராஜபக்ஷ அரசாங்கம்
  • සක්කිලි පඩි ගත්තා වගේ කෑ ගහනවා - (சக்கிலி படிக்கத்தா வகே கேஹேகஹானவா) “சக்கிலியர் சம்பளம் எடுத்ததைப் போல் கத்துகிறார்)
  • සිoහල සක්කිලියෙක්ට ගෑනියෙක් දුන්න සක්කිලි පවුල - (சிங்கள சக்கிலியண்ட கேஹெநியக் துன்ன சக்கிலி பவுல) சிங்கள சக்கிலியனுக்கு பொம்பிளையை கொடுத்த சக்கிலி குடும்பம் என்கிற திட்டல் அமைச்சர் எஸ்.பி திசாநாயக்கவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.
  • ලංකා සක්කිලි පල්ලියේ එමානුවෙල් - (லங்கா சக்கிலி பள்ளியே எமானுவல்) – இலங்கை சக்கிலி தேவாலய எம்மானுவல்
  • සක්කිලි කතෝලික - சக்கிலி கத்தோலிக்க
  • සක්කිලි කියන්නේ ද්‍රවිඩ ජාතියට - (சக்கிலி கியன்னே த்ரவிட ஜாதியட்ட) தமிழர்களையே சக்கிலியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் என்று ஒரு விளக்கம் கொடுக்கும் ஒரு கட்டுரை
  • ලංකාවේ සක්කිලි ගැහැණුන්ගේ දේශපාලනය මුන්ව හොද දේශපාලනයට නෙවෙයි, මුන්ව හොදටම ගැලපෙන්නේ පිටකොටුවේ මැනිං මාර්කට් - இலங்கையில் சமீபத்தில் நடந்த மாகாணசபை தேர்தலின் பொது போட்டியிட்ட பிரபல பெண்களை திட்ட “சக்கிலி பெண்கள்” என்று தொடரும் ஒரு பின்னூட்டம் http://www.frequency.com/video/x/153798004
  • සක්කිලි මුඩුක්කුවකින් ආපු එකෙක්- (சக்கிலி முடக்குவேன் ஆப்பு எகெக்) – சக்கிலி சந்திலிருந்து வந்த ஒருவன்
  • “சக்கிலியனே எனது கூட்டத்துக்கு வந்த ஆதரவாளர்களுக்கு நீ எப்படி வீதி “ஒழுங்கு மீறல் தண்டப்பணம்” விதிப்பாய்.”  நாகொட பொலிஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்து சட்டம் ஒழுங்கு அமைச்சர் பியசேன கமகே (02.01.2018)
  • இலங்கையின் முன்னணி சிங்கள பத்திரிகையான “திவயின” ஆசிரியர் தலையங்கங்களைப் பாருங்கள் - “சலுகைகளையும், அதிகாரத்தையும் இந்த சக்கிலி வியாபாரத்துக்காக பயன்படுத்துகிறார்கள்....” (30.06.2015) “சில அரசியல்வாதிகளின் சக்கிலி வேலைகளை மக்கள் எந்தளவு மதிக்கிறார்கள் என்பதை தேர்தல்களின் போது காண முடிகிறது.”  (2)

புலித பிரதீப் குமார எழுதிய “கொழும்பில் கள் பயன்பாடு” என்கிற தலைப்பில் ஒரு பெரிய கட்டுரை திவயின பத்திரிகையில் வெளியானது. அதில்...
“இந்தியாவிலிருந்து மலசலம் அகற்றுவதற்கும், பார வேலைகளை செய்விப்பதற்கும் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட சக்கிலியர்கள் சாராயம் குடிப்பதை ஆங்கிலேயர்கள் விரும்பவில்லை. அதற்குப் பதிலாக சக்கிலியர்கள் குடிப்பதற்காகவே கேரளாவிலிருந்து தென்னங்கள்ளை இறக்கினார்கள்.
வெள்ளையர்களால் 1800களில் சக்கிலியர்கள் அதிகமாக குடியேற்றப்பட்ட வாடா கொழும்பு, முகத்துவாரம், மட்டக்குளி போன்ற இடங்களில் கள் தவறனைகளை ஆரம்பித்தார்கள். இலங்கையில் தென்னங்கள் தவறனைகளின் வரலாறு அதுதான். தமக்கு கிடைக்கும் குறைந்த கூலியையும் தமது போதைக்காக கொடுத்தார்கள்....” (3)
என்று தொடர்கிறது அந்தக் கட்டுரை. இலங்கையில் கள் உற்பத்தியில் வரலாறையும் திரிப்பது ஒரு புறம் இருக்கட்டும். அருந்ததியர் பற்றிய புரிதலும், மதிப்பீடும் இது தான். இது தான் சாமான்யர்களின் பொதுப்புத்தியில் நிலைத்து நிற்பது.

“ராஜபக்சவின் கக்கூஸைக் கழுவுகின்ற சக்கிலி வேலை” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திவயின, ரிவிர, இருதின ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை விமர்சித்ததாக அதை எதிர்த்து மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஒரு அறிக்கையை பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார். (4)

ஒரு ஊடகத்தை விமர்சிப்பதற்காக ஒன்று நாட்டின் பிரதமரே தனது எதிரிகளைக் காயப்படுத்த பயன்படுத்தியிருக்கிறார். எதிரிகளை காயப்படுத்த அது ஒரு உச்சபட்ச சொல்லென்று அவர் கூட நம்புகிறார். அடுத்தது அவரின் அரசியல் எதிரிகளும் கூட “ஊடகவியலாளர்களை சக்கிலியர்” என்று விழித்துவிட்டார் என்பது ஒரு பெருங்குற்றமாக ஆக்கி அறிக்கை விடுமளவுக்கு “சக்கிலி” என்கிற சொல்லின் தாக்கத்தை விளங்கி வைத்திருகிறார்கள் என்பதை இங்கு குறித்துக்கொள்ள வேண்டும்.

சரி இது இப்படியிருக்க கடந்த ஒன்றரை வருடங்களுக்குள் அதிகரித்திருக்கும் முஸ்லிம் விரோத போக்கு அனைவரும் அறிந்ததே. முஸ்லிம்களுக்கு எதிராக பொதுபல சேனா, சிஹல ராவய அமைப்புகளை சேர்ந்தவர்களும் இனவாத சக்திகளும் முஸ்லிம்களுக்கு எதிராக பாவிக்கப்பட்ட வசவுகளில் எப்படியெல்லாம் “சக்கிலி” என்பது பாவிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு சில உதாரணங்கள். මුස්ලිම් සක්කිලි என கூகிள் தேடுபொறியில் தேடியதில் (4,980) விடைகளை அது காட்டியது.
  • සක්කිලි මුස්ලිම් - சக்கிலி முஸ்லிம்
  • සක්කිලි ආගමක් - (சக்கிலி ஆகமக்) – சக்கிலி மதம்
  • සක්කිලි අල්ලා - சக்கிலி அல்லா
  • සක්කිලි අන්තවාදින් - (சக்கிலி அந்தவாதீன்) சக்கிலி அடிப்படைவாதிகள்
  • සක්කිලි බෞද්ධයන් - (சக்கிலி பௌத்தயன்) முஸ்லிம்களுக்கு ஆதரவான பௌத்தர்களை சக்கிலி பௌத்தர்கள் என்கிற வசவு
  • වාචාල අරාබි සක්කිලි - வாச்சால அரபி சக்கிலி
  • සක්කිලි තම්බි - “சக்கிலி தம்பி”
  • සක්කිලි හම්බයන් පරාජය කරමු - (சக்கிலி ஹம்பயன் பராஜய கரமு) சக்கிலி ஹம்பயாக்களை தோற்கடிப்போம்
  • සක්කිලි කුරාණ් - (சக்கிலி குரான) சக்கிலி குரான்
  • මුස්ලිම් කියන්නේ සක්කිලි ජාතියක් - (முஸ்லிம் கியன்னே சக்கிலி சாதியக்) முஸ்லிம்கள் என்போர் சக்கிலி இனத்தவர்

சமீபத்தில் ரிசாத் பதியுதீன் இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை சக்கிலி என்று அழைத்து புண்படுத்திவிட்டதாக தொலைக்காட்சிக்கு அறிவித்தார். 

சமீப காலமாக முஸ்லிம்களை சாடுவதற்கு “சக்கிலி” என்கிற பதம் அதிகமாக பாவிக்கப்படுவதை அவதானித்த முஸ்லிம் சமூக செயற்பாட்டாளரான அன்வர் மனதுங்க என்பவர் “உண்மையில் சக்கிலியர் என்பவர் யார்” என்று ஒரு கட்டுரையை தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். முதல் தடவையாக இந்த சக்கிலி என்கிற வசவுக்கு எதிரான சிங்கள மொழியில் ஒரு குரல் அது.

வசவுக்காக இலங்கையில் அதிகம் பாவிக்கப்படும் சொல் இந்த சக்கிலி என்பதாகும். சக்கிலியர் என்போரின் சமூகப்பின்னணி குறித்தும், ஒருவரை இழிவுக்குள்ளாக்க இப்படி சக்கிலி என்று திட்டி அந்த சமூகத்தை நிந்தனைக்கு உள்ளாக்கக்கூடாது என்றும் அந்த கட்டுரை செல்கிறது. ஆனால் அவர் கூட மீண்டும் மீண்டும் அக்கட்டுரையில் சக்கிலி என்கிற பதத்தத்தையே பாவிக்கிறார். அவரது விளக்கத்தில் எங்கும் அருந்ததியர் என்று காணப்படவில்லை. அது போக அதே மனதுங்க தனது வலைப்பதிவில் இன்னொரு கட்டுரையொன்றில் “சக்கிலி சிங்கள ஊடகங்கள்” என்று ஊடகங்களைத் திட்ட பயன்படுத்துகிறார்.  அந்தளவுக்கு சமூகத்தில் அருந்ததியர் என்கிற சமூகப் பெயரே இல்லாமலாக்கப்பட்டு சக்கிலியர் என்கிற பதத்தை நிலைநிறுத்திவிட்டிருக்கிறார்கள்.
"ஞானசார என்கிற வெறிபிடித்த "சக்கிலிய" நாயால் 18 சகோதர பிக்குமார் தாக்கப்பட்டு பன்சலையிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர்." (முகநூலில் இருந்து...)
இதில் உள்ள அவலத்துக்குரிய இன்னொரு விடயம் என்னெவெனில் இனவாதத்துக்கு பதில் சொல்வதாக எழுதப்படும் எழுத்துக்களும் எழுதும் முற்போக்கு, ஜனநாயக எழுத்தாளர்களும் கூட பேரினவாதத்தையோ அல்லது ஆதிக்க சக்திகளையோ தாக்குவதற்கு “சக்கிலி” என்றே விளிக்கின்றனர். பொதுபல சேனாவின் தலைவர் ஞானசாரவை திட்டுவதற்கு கூட அங்காங்கே சக்கிலி என்றே பாவிக்கின்றனர். உதாரணத்திற்கு “இந்த சக்கிலியனைப் பற்றி கதைக்கும் போது இரத்தம் கொதிக்கிறது.” என்கிறார் சத்துரங்க என்பவர். (7)

“சக்கிலியர்” என்று எங்கும் விரவிக்கிடகின்ற இந்த நிலையில் சிலர் சக்கிலியர் பற்றி அறியவும், சிலர் தமக்கு தெரிந்த சக்கிலியர் பற்றிய தாம் நம்பும் விளக்கமளிக்கவும் இணையங்களில் அங்காங்கு தலைப்படுகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் சிங்களத்தில் இப்படி கூறுகிறார்.

“எனக்கு டோங்கா எனும் சக்கிலியனைப் பற்றி தெரிந்த கதையைக் கூறுகிறேன். சக்கிலி என்றால் யார் என்று நீங்கள் கேட்பீர்கள். பொறுங்கள் நான் கூறுகிறேன். வெள்ளையர் காலத்தில் அவர்களுக்கு அடிமைத்தொழில் செய்ய சிங்களவர்கள் மறுத்தபோது இந்தியாவிலிருந்து தமிழர்களைக் கொண்டுவந்தார்கள். இவர்களில் மலம், மூத்திரம் அல்ல தூத்துக்குடியிலிருந்து கொணரப்பட்டவர்களையே சக்கிலியர் என்கிறோம்...” (8) என்று தொடர்கிறார். அவ்வளவு தான் அவர் நம்பும் விளக்கம்.

http://www.w3lanka.com எனும் பிரபல சிங்கள இணையத்தளத்தில் ஜே.வி.பி. மற்றும் முன்னிலை சோஷலிச கட்சிகளை மாக்சிய நோக்கில் விமர்சிப்பதாகக் கூறும் கட்டுரையில் அக்கட்சிகளின் அரசியலை “சக்கிலி சித்தாந்தம்” என்றே திட்டுகிறார். (9)

Youtube இல் ஆங்கிலத்தில் sakkili என்று தேடிப்பாருங்கள், பல பிரமுகர்களை சக்கிலி என்று தலைப்பிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வீடியோ பதிவுகள் கிடைக்கின்றன. சக்கிலி பிரபாகரன், சக்கிலி பொன்சேகா, சக்கிலி குமரன் பத்மநாதன், சக்கிலி கருணா, சக்கிலி சோமவன்ச, சக்கிலி மங்கள சமரவீர, சக்கிலி ரணில், சக்கிலி ஜேவிபி, சக்கிலி யு.என்.பி., சக்கிலி எல்.டி.டி.ஈ என அந்த தலைப்புகள் காணக்கிடைக்கும்.

விமல் வீரவன்சவின் http://lankacnews.com இணையத்தளத்தில் நடந்த விவாதமொன்றில் “தமிழர்களை சக்கிலியர் என்று திட்டவேண்டாம்... எல்லா இனங்களுக்குள்ளும் சக்கிலியர் இருக்கின்றார்கள்...” (10) என்று தொடர்கிறது. அதாவது தமிழர்கள் மாத்திரம் சக்கிலியர் இல்லை “சக்கிலியர்கள்” எல்லா சமூகத்திலும் இருக்கிறார்கள் என்பதன் அர்த்தம் இந்தளவு இழிவானவர்கள் எல்லா சமூகங்களிலும் இருக்கிறார்கள் என்பது தான் அதன் அர்த்தம். ஆக தம்மை அநீதிக்கு எதிரானவர்களாக காட்டிக்கொள்பவர்கள் கூட “சக்கிலியர்” குறித்து மிகவும் பிற்போக்கான அநீதியான பார்வையையே கொண்டிருக்கின்றார்கள். இது எங்கெங்கிலும் காணலாம்.

சமீபத்தில் தமிழக நடிகர் கருணாஸ் சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ செய்தியை பார்க்க நேர்ந்தது. தான் ஒரு முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்திருந்தும் தன்னை திட்டமிட்டு நான் சக்கிலியன் என்று அபாண்டமாக எந்த ஆதாரமும் இல்லாமல் தேவர் பேரவை கூறியிருக்கிறது என்று அதனை மறுத்தார். தான் சக்கிலியன் அல்ல என்பதை நிரூபிக்க ஊடக சந்திபோன்றை ஏற்பாடு செய்து தனது பிறப்பு சான்றிதழை கொண்டு வந்து ஊடகங்களுக்கு காட்டியதுடன் போலிசிலும் அது குறித்து முறையிட்டிருந்தார். “சக்கிலியர்” என்கிற சொல்லுக்கு பின்னால் உள்ள மானப்பிரச்சினையைப் பாருங்கள்.

இலங்கையில் சமீப கால இதற்கு சிறந்த சில உதாரணத்தை முன்வைக்கிறேன்.
  • “சக்கிலி நாயே மேடையை விட்டு வெளியே வா...” தந்தை செல்வா நினைவு தினத்தில் ராஜதுரையை எதிர்த்து சிவாஜிலிங்கம் - 26.04.2012 (மேற்படி வீடியோ youtubeஇலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது. அப்படி எதிர்காலத்தில் நடக்கும் என்பதை அறிந்திருந்ததால் அதனை தரவிறக்கி பாதுகாத்து வைத்திருந்தேன்.)
  • வெளியே போங்கடா சக்கிலி நாய்களே...” ஓய்வு பெற்றுப்போகும் ஒரு தொழிலாருக்கு பிரியாவிடை நடத்த மண்டபத்தில் சிறு இடம் ஒதுக்கித்தர கோரி சென்ற வவுனியா நகர சுத்தித் தொழிலாளர்களைப் பார்த்து நகரசபை தலைவரும், அதிகாரிகளும். (2010 யூலை)
  • “சக்கிலி இந்தியா” கடந்த முப்பது ஆண்டுகாலமாக தனது அரசியல் நலன்களுக்காக ஈழத்தமிழர்களைப் பாவித்திருக்கிறது. – முகநூலில் முன்னாள் ஈரோஸ் தலைவர் அருளர் (அருட்பிரகாசம்)


  • இலங்கை அரசின் பாடத்திட்டத்தில் அதாவது 10,11ஆம் தரத்துக்கான தமிழ் இலக்கிய பாடநூலில்  “செருப்பு தைக்கும் சக்கிலி” என்று இருக்கிறது. அப்படித்தான் கற்பிக்கப்படுகிறது.

ஆக வெகுஜன சூழலில் இலங்கையில் அனைத்து சமூகங்களின் மத்தியிலும் ஜனரஞ்சகப்படுத்தப்பட்ட தூஷண சொல் சக்கிலி என்கிற சொல். எவரையும் பயமுறுத்தக்கூடிய சொல் அது. எவரையும் புண்படுத்த பயன்படுத்தக்கூடிய ஒன்றாக வலுப்பெற்றிருக்கிறது. இழிவுணர்வை ஏற்படுத்தக்கூடியதும், யாரையும் ஆத்திரப்படுத்தக்கூடிய சொல்லும் கூட. ஜாதி, இன, மத, வர்க்க, வேறுபாடுகளையும் கடந்து அனைவரதும் ஆயுதம் சக்கிலி என்கிற ஆயுதம்.

பாடப்புத்தகத்திலிருந்து நீக்கம்

இலங்கை அரசாங்கத்தின் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட “தமிழ் இலக்கியத் தொகுப்பு தரம் 10-11” என்கிற பாடசாலைகளுக்கான பாடநூலில் கண்டதை ஒரு பெரியவர் எனது வீட்டுக்கு வந்து தனது வேதனையைத் தெரிவித்தார். அந்த நூலின் போட்டோ பிரதியொன்றைக் கொண்டு வந்து காட்டினார். அதில் உள்ளதைக் காட்டி பாடசாலை மாணவர்களிடமும் இப்படியான சாத்திய வசவுச் சொல்களை அறிமுகப்படுத்துகிரார்களே என்று நொந்துகொண்டார். நான் அந்த மூல நூலைக் கண்டெடுத்தேன். இது நடந்தது 2012இல்

கல்வி வெளியீட்டுத் திணைக்கள பிரதி ஆணையாளராக எனது நெருங்கிய தோழர் லெனின் மதிவானம் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவரிடம் நான் “என்ன தோழர் நீங்கள் எல்லாம் இருந்தும்கூட இப்படி நடந்திருக்கிறதே. எப்படி உங்கள் பார்வையை மீறி இது நிகழ்ந்திருக்க முடியும்” என்று அவரிடம் தொலைபேசிமூலம் ஆதங்கமாக கூறினேன்.

அவர் அந்த நூலை என்னுடன் உரையாடிக்கொண்டே பார்வையிட்டார். உண்மை தான் தோழர். வீராசாமி செட்டியார் எழுதிய “ஒரு பதிவிரதையின் சரித்திரம்” என்கிற கதை தானே. அதில் ‘செருப்பு தைக்கும் சக்கிலியன்’ என்கிற ஒரு வசனம் வருகிறது ” என்றார். ஆம் என்றேன். நூலுருவாக்கத்தின் போது தொகுப்பாளர் குழுவுடன் எதிர்கொள்ளும் ஆதிக்க சித்தாந்த சிக்கல்களைப் பற்றி நீண்ட நேரம் உரையாடினார்.

“இதை உடனடியாக மாற்ற வேண்டும் தோழர். எனக்கு ஒரு உதவி செய்வீர்களா? இதை உடனடியாக செய்வதற்கு ஒரு முறைப்பாடு தேவைப்படுகிறது. உடனடியாக அப்படியொன்றை எழுதி எனக்கு இன்றே அனுப்புவீர்களா” என்றார்.

நான் ஒரு தூரப்பயணத்தில் இருந்தேன். உடனடியாக செய்வதில் சிரமங்கள் இருந்தன. நிலைமையை விளக்கி பின்னேரத்துக்குள் அனுப்பி வைக்கிறேன் என்று விடைபெற்றேன்.

பின்னேரம் அவரிடமிருந்தே தொலைபேசி அழைப்பு வந்தது.

“தோழர்! வேறொருவரைக் கொண்டு அந்த முறைப்பாட்டை எடுத்துக்கொண்டேன். நூல் விநியோகத்தை நிறுத்திவிட்டேன். புதிய பதிப்பில் மாற்றங்களை செய்ய வலிசெய்திருக்கிறேன் தோழர்.” என்றார்.

தோழர் லெனின் மதிவானம் இவ்வளவு வேகமாக இயங்கியதை அதற்கு முன் நான் கண்டதில்லை. அவரின் சமூக பிரக்ஞை தான் எங்களை இணைத்தும் வைத்திருந்தது.

அதே வருடம் ஒரு சில மாதங்களில் புதிய பதிப்பை வெளியிட்டு எனக்கும் அதன் பிரதியைக் கிடைக்கச் செய்தார். அதில் “செருப்பு தைக்கும் தொழிலாளி” என்று மாற்றப்பட்டிருந்தது.

தோழர் சிசிர மாறியவிதம்

சிசிரவும் நானும் 90களின் ஆரம்பத்தில் ஜேவிபியின் செயற்பாடுகளில் ஒன்றாக பணிபுரிந்திருந்தோம். அதன் பின்னர் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் பல்வேறு இடதுசாரிப் பணிகளில் ஓகிரங்கமாகவும் இரகசியமாகவும் ஈடுபட்ட அனுபவம் உண்டு. சிசிர பிறப்பால் சிங்கள பௌத்த பின்னணியைக் கொண்டவன். ஆனால் வர்க்கப் போராட்டத்தை போலவே சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு எதிராகவும் துணிச்சலாக குரல்கொடுப்பவன். ஆனால் தமிழ் புரியாது.

நோர்வேயிலிருந்து 10 வருடங்களுக்குப் பின்னர் 2012இல் நான் இலங்கை சென்றிருந்தபோது ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி சிசிர எங்கள் வீட்டுக்கு இரவு வந்து சேர்ந்தான்.


அன்று இரவு எங்கள் வீட்டு மொட்டைமாடியில் எனது உறவினர்கள் என்னை மீண்டும் வழியனுப்புவதற்காக வந்து நிரம்பி இருந்தார்கள். சிறுவர்கள் பெரியவர்கள் என உணர்ச்சிபொங்க என்னைத் தழுவி அன்பை வெளிப்படுத்தினார்கள். நான் அவர்கள் முன் உரையாற்றினேன். குறிப்பாக நம் மீதான சாதி ஒடுக்குமுறையிலிருந்து விடுபட நடைமுறை சாத்தியமான இன்றைய பணிகள் குறித்து அவர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் விளங்கப்படுத்திக்கொண்டிருந்தேன்.

சிசிர ஓரமாக இருந்து கவனித்துக்கொண்டிருந்தான். முடிந்ததும் என்ன நடக்கிறது என்று கேட்டான். அந்த சூழலை விளங்கிக்கொள்ளக் கூடியவன் என்பதால் அவனுக்கு சிங்களத்தில் விளங்கப்படுத்தினேன்.

அவன் கூறினான்.
“சரா உனக்கு நினைவிருக்கிறதா ஒரு முறை நாம் நமது தோழர்கள் மத்தியில் உரையாடிக்கொண்டிருந்த போது நான் “சக்கிலியா” என்று அவனை அன்று திட்டிவிட்டேன். நீ கண் கலங்கி நின்றாய். பின்னர் என்னிடம் விளக்கினாய். எந்தவொரு அயோக்கியர்களையும், எதிரிகளையும் திட்டுவதற்கு பயன்படுத்தப்படும் அந்த சொல் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்துக்கு எதிராக கூறப்படும் சொல். அப்படி தொடர்ச்சியாக கூறப்படுவதால் சமூகத்தில் இப்படி மோசமான செயலை செய்பவர்கள் எல்லோருமே “சக்கிலியர்கள்” என்கிற கருத்து விதைக்கப்படுகிறது. சாதிகளை இழுத்து இப்படி கதைப்பதை நிறுத்து. நானும் அப்படிப்பட்ட சாதியில் இருந்து தான் வந்திருக்கிறேன். என்றாய்...”
“...உனக்குத் தெரியுமா அன்று நான் மிகவும் கவலைப்பட்டேன். வெட்கப்பட்டேன். அதன் பின்னர் நான் அப்படியான சொற்களைப் பயன்படுத்தியது கிடையாது. அதுபோல என் அருகில் எவராவது அப்படிப் பேசினால் தலையிட்டு கண்டித்து வந்திருக்கிறேன்....” என்றான்.
ஒரு சமூக அக்கறையாளனிடம் நாம் எதிர்பார்ப்பது இதைத் தான். இந்த பிரக்ஞையைத் தான். இந்த ஆதிக்க சொல்லாடல்களை சுயதற்கொலைக்கு உள்ளாக்குவதைத் தான். சமூக விளிம்பு மாந்தர்கள் குறித்து நிலவும் பல்வேறு வசை சொற்களை சுய தணிக்கைக்கு உள்ளாக்கும் படி கோருவது தவறா. அந்த அக்கிரமத்தைப் புரிவோரை ஆதரிக்கும் சக்திகளை கண்டிப்பது தான் நாங்கள் செய்யும் தவறா. இனிமேல் இப்படி எவரும் புரியக்கூடாது என்பதை உத்தரவாதப்படுத்தக் கோருவது குற்றமா. என் சிங்களத் தோழன் கண் முன் பெரிய மரியாதையுடன் நிமிர்ந்து நிற்கிறான் இந்த இடத்தில்.

அருந்ததியர் குறித்து பெரியார்
'பறையன்', 'சக்கிலி' முதலியோரை நாம் ஏன் தொடக்கூடாது, பார்க்கக்கூடாது என்கிறோம் என்பதைச் சற்று கவனித்தால் 'அவன் பார்வைக்கு அசிங்கமாயிருக்கிறான். அழுக்குடை தரிக்கிறான். அவன் மீது துர்நாற்றம் வீசுகிறது; அவன் ஆதாரத்திற்கு மாட்டுமாமிசம் சாப்பிடுகிறான், மாடு அறுக்கிறான், மற்றும் சிலர் "கள்' உற்பத்தி செய்கிறார்கள் என்கிறதான குற்றங்கள் பிரதானமாகச் சொல்லப்படுகிறது. இவற்றை நாம் உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.
இவர்கள் பார்வைக்கு அசிங்கமாகவும், அழுக்கான துணிகளுடனும், துர்வாடையுற்றும் ஏன் இருக்கிறார்கள் என்றும் இதற்கு யார் பொறுப்பாளியென்றும் யோசியுங்கள்.
அவர்களை நாம் தாகத்திற்காகக் கூட தண்ணீர் குடிப்பதற்கில்லாமல் வைத்திருக்கும்போது குளிக்கவோ வேஷ்டி துவைக்கவோ வழி எங்கே? நாம் உபயோகிக்கும் குளமோ, குட்டையோ, கிணறோ இவர்கள் தொடவோ, கிட்ட வரவோ கூடாதபடி கொடுமை செய்கிறோம். அதனால் அவர்கள் அப்படியிருக்கிறார்களே அல்லாமல் அது அவர்கள் பிறவிக்குணமாகுமா? நம்மை யாராவது குளிக்க விடாமலும், வேஷ்டி துவைக்க விடாமலும் செய்துவிட்டால் நம் மீது துர்நாற்றம் வீசாதா? நம் துணி அழுக்காகாதா?" நாம் பார்வைக்கு அசிங்கமாய் காணப்பட மாட்டோமா? அவர்களுக்குக் குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் நாம் சவுகரியம் செய்து கொடுத்துவிட்டால் பின்னும் இவ்விதக் குற்றமிருக்குமா? ஆதலால் நாம்தான் அவர்களின் இந்நிலைக்குக் காரணமாயிருக்கிறோம்.
- ('குடி அரசு', 21.06.1925)
அடையாள அரசியல்
நாம் விரும்பியோ விரும்பாமலோ பல்வேறு குழுமங்களாக பிளவுண்ட சமூகத்திலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். புரட்சிகரமான சமூக மாற்றத்துக்கான போராட்டம் அங்காங்கு முகம்கொள்ளும் திடீர் தோல்விகளுக்கு பின்னால் இந்த அடையாள அரசியலை  துல்லியமாக அடையாளம் காணாததை பல சமூகவியலாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். நவீன சமூக அமைப்பில் பெரும்பாலான  அடையாளங்கள் தானாக உருவாகுபவை அல்ல. உருவாக்கப்படுபவை. சம காலத்தில் இனங்கள், உப இனக்குழுமங்களின் தோற்றமும் அப்படித்தான். ஒன்றில் ஆதிக்க தரப்பினால் உருவாக்கப்படுபவை அல்லது அடக்கப்படும் தரப்பினால் தம்மை உருவாக்கிக்கொள்ள தள்ளப்பட்டவை.

சாதியமைப்பைப் பொறுத்தளவில் தலித்துகள் ஒட்டுமொத்த சாதி அடையாள தகர்ப்புக்காக போராடும் அதேவேளை இந்த இடைப்பட்ட போராட்ட காலத்தில் தமது அடையாளத்தை தற்காலிகமாக தக்கவைக்கவும் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவேதான் தலித் என்கிற அடையாளம் இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அந்த வகையில் மனித சமத்துவத்துக்கான போராட்டத்தில் தலித் அடையாளம் தற்காலிகமானது தான்.

இந்த சாதியச் சாடலை நிறுத்துவதற்கான மனித உரிமை மீறல் சட்டம் கொண்டுவரப்படவேண்டும். அதனால் மட்டும் இது தீர்ந்துவிடப்போவதில்லை. ஆனால் அது குறைந்தபட்சம் உரையாடல் களத்திற்கு கொண்டுவரும். எப்படி கற்பழிப்பு என்கிற பதத்தை பயன்படுத்துவதை ஒரு உரையாடலுக்கு ஊடாக கொண்டுவந்து இன்று பாலியல் வல்லுறவு என்கிற பதத்தை பிரதீயீடு செய்வதில் வெற்றி கண்டோமோ அது போல இதுவும் ஆகலாம். முதலில் மனித நேய அடிப்படையில் எந்த சாதிகளுக்கு எதிராகவும் சாதிய வசவைப் பயன்படுத்துவது நிறுத்தப்படவேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் அந்த உரையாடலுக்கு இந்த சட்டங்களும் கணிசமான பாத்திரத்தை வகிக்க முடியும்.

சாதியே அழிந்தாலும் இந்த சாத்திய வசவுகள் அழிந்துவிடுமா என்கிற கேள்வி எனக்கு மட்டும் தான் குடைந்துகொண்டிருக்கிறதா?

அடிக்குறிப்பு:
  1. 2018இல் இத்தொகை இரண்டு மடங்காக அதாவது 30,000 த்தையும் தாண்டிவிட்டது.
  2. 22.06.2015 திவயின பத்திரிகை
  3. 04.10.2015 திவயின பத்திரிகை
  4. 25.02.2005 திவயின பத்திரிகை
  5. ஏற்கனவே மலையகத் தோட்டத்தொழிலுக்காக கொணரப்பட்டவர்களில் அதிகமானோர் பள்ளர், பறையர் சமூகத்தவர்களாக இருந்தபோதும் அருந்ததியர்களின் எண்ணிக்கை அவர்களில் குறைவானதாகவே காணப்பட்டது.
  6. அருந்ததியர்கள் ஆந்திராவிலிருந்து இறக்குமதிசெய்யப்பட்ட தெலுங்கர்கள் என்கிற போக்கில் சிலர் எழுதி பேசி வந்திருப்பதை அவதானித்திருக்கிறேன் அது முற்றிலும் பிழையான தகவல்.
  7. අවුල් වන්නට පෙර මේ බල්ලා බැඳ දමනු!!!!
  8. http://keykurutu.blogspot.no/2013/02/blog-post_26.html
  9. http://www.w3lanka.com/2014/02/29.html
  10. http://lankacnews.com/sinhala/main-news/98100/
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates