Headlines News :
முகப்பு » , , , » சாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்

சாதி வெறி கோலோச்சும் பௌத்த நிக்காயக்கள் - என்.சரவணன்


பௌத்த நிக்காயக்களுக்கு இடையிலான சாதிப் பிரச்சினை மீண்டும் சூடு பிடித்துள்ளது

தேரவாத திபிடகத்தை கடந்த ஜனவரி மாதம் இலங்கையின் மரபுரிமையாக பிரகடனப்படுத்திய நிகழ்வை நாம் அறிவோம். அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 16 தொடக்கம் 23 ஆம் திகதிவரையான காலத்தை திபிடக வாரமகாவும் பிரகடப்படுத்தப்பட்டு அந்த நாட்களில் திபிடகவைக் கொண்டாடும் நிகழ்வுகள் நாடெங்கிலும் சிங்கள பௌத்தர்களால் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. மார்ச் 23 அன்று கண்டி தலதா மாளிகையில் அந்த வாரத்தை நிறைவு செய்யும் நாளில் கண்டியில் நிகழ்ந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திபிடகவை உலக மரபுரிமையாக ஆக்கும் முன்மொழிவை செய்யும் நிகழ்வும் ஏற்பாடாகியிருந்தது.

இந்த நிகழ்வுக்கு இலங்கையின் அதியுயர் பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகா நாயக்கர்களும் ஆயிரக்கணக்கான பிக்குமார்களும் கலந்துகொண்டிருந்தனர். ஆனால் அங்கு கலந்து கொண்டிருந்த நிக்காயக்களின் தலைமைப் பிக்குமார்கள் சமமாக அங்கு நடத்தப்படவில்லை என்கிற சர்ச்சை இப்போது எழுத்துள்ளது. குறிப்பாக அவர்களுக்காக ஒழுங்கு செய்யபட்டிருந்த இருக்கைகளில் மல்வத்து, அஸ்கிரி ஆகிய நிக்காயக்களின் தலைமைப் பிக்குகளுக்கு மாத்திரம் இருக்கைகளை உயரமாகவும் அவர்களுக்கு அருகிலேயே  ராமக்ஞ, அமரபுர ஆகிய நிக்காயக்களின் தலைமைப் பிக்குகளுக்கு உயரம் குறைந்த இருக்கைகளை ஒழுங்கு செய்திருந்தமை பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

ஊடகங்கள் இதனை குறிப்பாக பதிவு செய்தன. சமூக வலைத்தளங்களில் இது பற்றி பெரும் விவாதங்களே நடந்து வருகின்றன. இதற்கிடையில் இந்த நிகழ்வு முடிந்து இரு நாட்களின் பின்னர் 27ஆம் திகதி ராமக்ஞ நிக்காய ஒரு முக்கிய எதிர்ப்பு அறிக்கையை வெளியிட்டது. ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டிருந்த கண்டன அறிக்கையில் “உபசம்பத்தா” (பௌத்த தீட்சை) பெற்ற அனுபவ முதிர்ச்சியின் அடிப்படையிலேயே பிக்குமார்களுக்கான ஆசன தரவரசை அமைக்கப்பட்டிருக்கவேண்டும் என்றும், அது மட்டுமன்றி மூத்த நிலை பௌத்த மதகுருக்கள் என்பதைக் கூட கவனத்திற்கொள்ளாது அவர்களை உயரம் குறைந்த ஆசனங்களில் இருத்த வைத்தது மரபு மீறிய செயல் என்று அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக 97 வயதையுடைய மூத்த மகாநாயக்கரை மதிக்காத செயல் என்றும் மோசமான அவமதிப்பு என்றும், அற மீறல் என்றும் அதில் கூறப்பட்டிருக்கிறது.


இந்த பாரபட்சம் வேண்டுமென்றே சாதி அடிப்படையிலான தர வரிசைப்படியே இந்த ஆசனங்கள் அமைக்கப்பட்டிருப்பதையே இந்த அறிக்கையில் மறைமுக கண்டனமாக தெரிவிக்கப்பட்டிருப்பதாக ஊடக விவாதங்களில் காண முடிகிறது. நிக்காயக்களுக்கு இடையிலான சாதிச் சண்டைகள் நடைமுறையில் வலுவாக இருந்தாலும் வெளிப்படையாக சாதியைக் குறிப்பிட்டு அந்த பாரபட்சங்கள் நடப்பதில்லை.

மிகவும் சூட்சுமமாகவும், நுணுக்கமாகவும் அவை நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த ஜனாதிபதி செயலக ஊழியர்களை குறிப்பிட்ட அறிக்கையின் மூலம் கண்டித்திருந்தாலும் கூட நிருவனமமயப்பட்ட சாதியம் இப்படித் தான் மறைமுகமாக தனது பாரபட்சத்தை நிறைவேற்றிக்கொண்டே செல்வதை அவதானிக்க முடியும். ஜனாதிபதி செயலக ஊழியர்கள் மாத்திரம் விதிவிலக்கா என்ன?

அமரபுர, ராமக்ஞ நிக்காயக்கள் முறையே பிற்படுத்தப்பட்ட, தலித் நிக்காயக்களாக நடத்தப்படுபவை. இந்த வைபவத்தில் அவர்கள் வெளிப்படையாக தனித்து ஓரங்கட்டப்பட்டுள்ளதையே இனங்கான முடிகிறது. இவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாதியத்தை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும் அறிந்தவர்கள் அனைவருக்கும் தெரியும் அவர்கள் எந்த பாரபட்சத்தை இங்கு காட்ட விளைகிறார்கள் என்பது.

சாதிவாரி நிக்காயக்கள்
இலங்கையின் பௌத்த சங்க அமைப்புமுறையை நிகாய என்று அழைப்பார்கள். அது பிரதான மூன்று “நிகாய”க்களாக  இயங்கி வருகின்றது. சீயம் நிகாய, அமரபுர நிகாய, ரமாக்ஞ நிகாய என்கிற இந்த மூன்று நிகாயக்களும் சாதி ரீதியில் பிளவு பட்டு இயங்குபவை. யாழ்ப்பாண சாதிய கட்டமைப்போடு ஒப்பிட்டு கூறுவதானால் முறையே வெள்ளாளர், கரையார், தலித் சமூகங்களாக இந்த மூன்றும் பிளவுற்றிருப்பதாக கொள்ளலாம்.

இலங்கையில் பௌத்த தீட்சையளிக்கும் வழிமுறை (உபசம்பதா சடங்கு) இல்லாதொழிந்து போயிருந்த ஒரு காலத்தில் மன்னர் கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கனின் ஆதரவில் வெலிவிட்ட சரணங்கர தேரரின் தலைமையில் பௌத்த சமயம் கண்டி ராஜ்ஜியத்தில் மீண்டும் புத்துயிர் பெற்றது. 

உபாலி என்கிற பிக்குவின் தலைமையில் சீயம் சென்று அங்கிருந்து பௌத்த தீட்சையளிப்பதற்கு தகுதியான பிக்குமார்களை அழைத்து வந்தனர். 1753இல் இருந்து தான் மீண்டும் பௌத்த தீட்சையளிக்கும் மரபு ஆரம்பிக்கப்பட்டது. அப்படி ஆரம்பிக்கப்பட்டது தான் சியம் நிக்காய. ஆனால் ஒரு தசாப்தம் கூட கடக்கும் முன் “கொவிகம” சாதியினருக்கு மாத்திரமே தீட்சயளிக்கும் வழிமுறையை பின்பற்றத் தொடங்கினர். “கொவிகம” சாதி தவிர்ந்தவர்கள் பிக்குவாக ஆக அரச அனுசரனையோ ஆதரவோ கிடைக்கவில்லை. இந்த நிலையில் தான் 1779 இல் அம்பகஸ்பிட்டியே ஞானவிமல தேரர் பர்மாவுக்குச் சென்று அங்கிருந்து தீட்சை பெற்று வந்தார். 1803இல் அவர் ஆரம்பித்தது தான் அமரபுர நிக்காய. மியான்மாரின் பழைய தலைநகருக்குப் பெயர் தான் அமரபுர என்பது.

அமரபுர நிக்காயவின் தோற்றம்
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் (கண்டியை ஆண்ட மதுரை நாயக்க வம்சத்து தமிழ் மன்னன்) பௌத்த மதத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் அளப்பரியது. அதுபோல கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் கொவிகம சாதிக்கு சார்பான தீர்மானங்களை எப்போதும் எடுத்துவந்தவர் என்பதும் வரலாற்றுக் குறிப்புகள் தெளிவுறுத்துகின்றன. கண்டி மல்வத்து, அஸ்கிரிய ஆகிய இரண்டு விகாரைகளை மையப்படுத்தி இரண்டு பிரதான பௌத்த நிகாயக்களை அமைத்து நாட்டிலுள்ள அனைத்து பௌத்த விகாரைகளும் இந்த நிகாயாக்களின் பரிபாலனத்துக்கு கீழ் கொண்டு வரப்பட்டன. இவை இரண்டிற்கும் கீழ் பௌத்த துறவிகளாக நியமிக்கப்படுபவர்கள் கொவிகம சாதியை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும் என்கிற சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

சிங்கள பௌத்தர்களில் கொவிகம அல்லாதவர்கள் இதனால் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக கராவ, சலாகம, துராவ சாதியினர் ஏமாற்றமுற்றதுடன் தமது எதிர்ப்பையும் வெளியிட்டனர். துறவறம் பூண்டிருந்த சில பிக்குமார்; நிலப்பிரபுக்கள், உயர் சாதியினர் இருக்குமிடங்களில் தமது பழக்கதோசத்தால் தமது சீருடையையும் கழற்றிவிட்டு பாதம் பணிந்து வணங்கியிருக்கிறார்கள். சில பிக்குமார் நடனம், பறையடித்தல் போன்றவற்றிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த செய்தி மன்னரின் காதுகளுக்கு எட்டியது. இந்த பின்னணியில் தான் குறித்த சட்டத்தை மன்னர் கொண்டு வந்தார் என்கின்றன குறிப்புகள். சாதி மேலாதிக்க கொவிகம சாதியினருக்கு இது வாய்ப்பாகப் போனது.

கொவிகம அல்லாதோர் அந்த சட்டம் குறித்து தமது கவலையை தெரிவித்ததுடன், அவர்களின் முறைப்பாடுகளும் மன்னரை சேர்ந்தன. ஒன்றும் நடக்கவில்லை. எனவே அந்த மூன்று சாதியினரும் சேர்ந்து 1772 இல் தாமே இரண்டு இடங்களில் துறவற நிகழ்வை ஏற்பாடு செய்தனர். ஆனால் அதனை மலைநாட்டு பௌத்த பெரியார்களிடமிருந்தோ, மக்கள் மத்தியிலோ எந்த மதிப்பும் கிடைக்கவில்லை.

துறவறத்துக்குள் நுழைந்த பிக்குகளுக்கு “உபசம்பதா சடங்கு” என்கிற துறவற நிகழ்வு மிக முக்கியம். அதன் பின்னர் தான் உத்தியோகபூர்வமான நிலைக்கு அவர்கள் உயர்த்தப்படுவார்கள். அதனை இரண்டு நிகாயக்களும் மறுத்த நிலையில் இந்த மூன்று சாதியினரும் பர்மாவுக்கும், தாய்லாந்துக்கும் (சீயம்) 1799-1813 காலப்பகுதியில் பல தடவைகள் சென்று அங்கு துறவற நிகழ்வை நடத்தி விட்டு வந்தார்கள். அதற்கான செலவுகளை சலாகம சாதியை சேர்ந்த வர்த்தகர்கள் ஒழுங்கு செய்து கொடுத்தார்கள்.

ஞானவிமலதிஸ்ஸ தேரர் “உபசம்பதா” செய்துகொண்டு அந்த பிக்கு பரம்பரையின் தலைமைப் பதவிக்கு பர்மா அரசர் நியமித்திருப்பதாக ஒரு கடிதத்தைக் கொண்டு வந்ததுடன் மல்வத்து பீடத்தின் சங்க நாயக்கருக்கும் ஆங்கில தேசாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டபோதும் அவை எதுவும் கணக்கில் எடுக்கப்படவில்லை. கண்டியைச் சேர்ந்த உயர்சாதி நிக்காயக்கள் இப்படி ஒரு புதிய நிக்காய தோற்றம் பெறுவதில் அதிருப்தியுற்றிருந்தனர். கண்டி கைப்பற்றப்படாத காலத்தில் கூட சங்க நாயக்கர்களுக்கும் ஆங்கில தேசாதிபதிக்குமிடையில் அன்று நட்பு இருந்தது என்று டொய்லியின் நாட்குறிப்பில் இருக்கிறது. எனவே அன்றைய தேசாதிபதி பிரவுன்றிக்கு ஊடாக புதிய நிக்காய  தோற்றம் பெற முடியாதவாறு தடை செய்தனர்.

தேசாதிபதியின் இந்த தடையை எதிர்த்து அப்போது களுத்துறை முதல் மாத்தறை வரையிலான கருவா தோட்டங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் (சலாகம சாதியைச் சேர்ந்தவர்கள்) வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் விளைவாக அந்தத் தடையை தேசாதிபதி நீக்கியிருக்கிறார். இந்த விபரங்கள் விரிவாக மிகெட்டிவத்த குணானந்த தேரரின் சுயசரிதத்தில் (கொடகே வெளியீடு) விபரிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் வடக்கு பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு சைவக் கோவில்கள் தடைசெய்யப்பட்டு இருந்ததைப்போல பௌத்த விகாரைகளிலும் நிலைமை இருந்திருக்கிறது.

இந்த நிலமைகளைத் தொடர்ந்து கொவிகம சாதி அல்லாதோருக்கான நிக்காய "அமரபுர நிக்காய" என்கிற பெயரில் தொடங்கப்பட்டது. குறிப்பாக கராவ (மீன் பிடி சமூகம்), சலாகம (கருவா செய்கையில் ஈடுபடுவோர்), துராவ (கள் இறக்குவோர்) ஆகிய சாதியினரே அமரபுர நிக்காயவில் உள்ளடங்குபவர்கள்.


ராமக்ஞ நிக்காயவின் தோற்றம்
பிக்குகளின் "சங்க சபை"களுக்குள் இருக்கும் சாதியத்துக்கு எதிராக போராடிய பிக்குகளின் கதைகள் கூட ஏராளமாக இருக்கின்றன. 1810 இல் பாணந்துறையிலுள்ள கல்கொட பௌத்த விகாரையில் நடக்கும் நிகழ்வுகளில் கொவிகம சாதியினருக்கு ஒருபுறமும் ஏனைய சாதியினருக்கு மறுபுறமும் ஒதுக்கப்பட்ட நிலை காணப்பட்டது. இந்த நிலைமையை எதிர்த்து கராவ சாதியச் சேர்ந்த 18 பேர் வெளியேறி தமக்கான சொந்த விகாரையை அமைத்துக்கொண்டனர். அந்த விகாரை இன்றும் பாணந்துரையில் "ரன்கொத் விகாரை" என்கிற பெயரில் இருக்கிறது.

ரன்கொத் விகாரை - பாணந்துறை
கொவிகம அல்லாதோருக்கான நிக்காய ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் கரையோரப்பகுதிகளில் கொவிகம சாதி அல்லாதோரால் புதிய விகாரைகள் தோற்றுவிக்கப்பட்டன. அவற்றுக்கு கராவ, சலாகம, துராவ சாதிகளைச் சேர்ந்த தனவந்தர்கள் உதவினார்கள். அந்த விகாரைகள் சாதிபேதமற்று இயங்கத்தொடங்கிற்று.

அதே பர்மாவில் ‘ராமக்ஞபுர’த்தில் இருந்த விகாரையில் தீட்சை பெற்று திரும்பிய பிக்குமார்களால் 1863 இல் ஆரம்பிக்கப்பட்டது தான் “ராமக்ஞ நிக்காய”.

அரசியல் அதிகாரத்தில் சீயம் நிக்காயவின் வகிபாகம்
உயர் சாதி “சீயம் நிக்காய”வின் கீழ் மாத்திரம் 8 பிரிவுகள் உண்டு. அஸ்கிரி, மல்வத்து என்பவை அவற்றில் பலமான பிரிவுகள். அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்கள் ஓடிச்சென்று ஆசி பெற முனைவதும், அரசியல் விளக்கங்கள் அளித்து தமக்கு சாதகமாக இருக்கக் கோருவதும் இந்தப் பிரிவுகளிடம் தான். தேர்தல் காலங்களில் தமது கட்சி விஞ்ஞாபனத்தின் முதற் பிரதிகளை இந்த பீடத்தலைவர்களிடம் கொடுத்து, ஆசீர்வாதம் பெற்றுவிட்டு, அதனை ஊடகங்களில் பெரிதாக காட்டிவிட்டு பிரச்சாரங்களைத் தொடக்குவது ஒரு மரபாகவே இருக்கிறது.

தேர்தல்  விடுதலைப் புலிகளுக்கும் அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது நோர்வே பிரதிநிதி எரிக் சுல்ஹைம் பல தடவைகள் சமாதான யோசனைகளை எடுத்துக் கொண்டு ஓடிப்போய் விளக்கம் கொடுத்து ஆசி பெற்று திரும்பியதும் இந்தத் தரப்புகளிடம் தான். கண்டி தலதா மாளிகையும், புத்தரின் புனித தாதுப்பல் என்பவையும் இந்த இரு தரப்பினரின் பொறுப்பில் தான் இருக்கின்றன.


சீயம் நிக்காயவின் கோட்டே பிரிவைச் சேர்ந்தவர் தான் பிரபல சிங்கள பௌத்த இனவாத பிக்குவாக அறியப்படும் ஞானசார தேரர். ஞானசார தேரரை விடுவிக்கச் சொல்லி இன்று சகல நிக்காயக்களும் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருப்பது தமது இனவாத தலைமைப் பிரதிநிதி என்பதால் மட்டுமல்ல; கூடவே அவர் சீயம் நிக்காயவைச் சேர்ந்த ஒருவர் என்பதாலும் தான். ஞானசார தேரர் மீது பௌத்த பீட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுவாக பிக்கு தரப்புகளில் யோசனை முன்வைக்கப்பட்ட வேளை அவர் பாதுகாக்கப்பட்டு வருவதும் அவரின் அதிகாரத்துவ சாதி நிக்காயவின் பலத்தால் தான்.

அமரபுர நிக்காயவும் தமக்குக் கீழ் 22 பிரிவுகளைக் கொண்டிருக்கிறது. ஆனால் ஓடுக்கப்பட்ட சாதியினரின் நிக்காய அது. இந்த பிரிவுகளுக்கென தனியான மகா நாயக்கர்கள் உள்ளார்கள்.

சிங்கள வெள்ளாளர்களான கொவிகம சாதியின் ஆதிக்கம் சிங்கள அரசியல் சூழலில் எத்தகையது என்பது பற்றி நிறையவே சமகால ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன.

கண்டியிலுள்ள ராமக்ஞ நிக்காய, அமரபுர நிக்காய ஆகியவை சாதிய ரீதியில் பிளவுண்டிருந்தாலும் கூட அங்கே வெளிப்படையான நடைமுறை கிடையாது. அனால் சீயம் நிக்காய வெளிப்படையாக சாதியத்தைக் கைகொள்கிறது. பௌத்த பிக்குவாக மாறவிரும்புபவர்கள். அல்லது மாற்றப்படும் சிறுவர்கள் உயர் சாதி கொவிகம குலத்தைச் சேராதவருக்கு பௌத்த தீட்சை வழங்குவதில்லை. அதாவது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு பௌத்த பிக்குவாக தமது நிக்காயவுக்குள் உள்வாங்குவதிலை. ஆனால் சீயம் நிக்காய போன்றவை உயர்சாதியற்ற பெரும் பணக்காரர்கள் வழங்கும் உதவிகளையும், வசதிகளையும் அனுபவிக்கவே செய்கின்றன.


கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிய கெப்பட்டிபொல உள்ளிட்ட “வீரர்களை” துரோகியாக பிரகடனப்படுத்திய வர்த்தமானிப் பத்திரிகையை செல்லுபடியற்றதாக்கி அவர்களை தேசிய வீரர்களாக அறிவிக்கும் தேசிய நிகழ்வை ஜனாதிபதித் தலைமையில் கண்டி மகுல் மடுவவில் நிகழ்த்தப்பட்டது. அந்த நிகழ்வில் ராமக்ஞ நிக்காயவைச் சேர்ந்த மகாநாயக்கர்களுக்கு ஆசனங்களை வைப்பதற்கு சீயம் நிக்காய மகாநாயக்கர்கள் எதிர்த்திருந்த செய்திகளையும் இந்த இடத்தில் நினைவுகொள்ளவேண்டும்.

இன்னமும் இலங்கையின் நாளாந்த பத்திரிகைகளில் பௌத்த பிக்குவாக ஆவதற்கு கொவிகம சாதியைச் சேர்ந்தவர்கள் “இன்ன” விகாரைக்கு தேவை என்கிற நாளாந்த பத்திரிகை விளம்பரங்கள் வெளிவரவே செய்கின்றன. 

இலங்கையின் பௌத்த துறவிகள் நிக்காயக்களாக பிரிந்து இருந்தாலும் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு தமது அனுசரணையை ஒன்று சேர்ந்து வழங்கத் தயங்குவதில்லை. அஸ்கிரிய, மல்வத்து, கோட்டே, அமரபுர போன்ற நிக்காயக்களுக்கு மகா நாயக்கர்கள் உள்ளனர். அதுவும் அமரபுர நிக்காயவுக்கு 20க்கும் மேற்பட்ட மகா நாயக்கர்கள் இருக்கின்றார்கள்.

கண்டியில் நிகழ்ந்த பாரபட்சம் பற்றி முகநூலில் நிகழ்ந்த விவாதமொன்றில் பிரபல சமூக செயற்பாட்டாளரும் “நீதியான சமூகத்துக்காக” என்கிற அமைப்பின் முன்னாள் தலைவரும் சமீபத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தென்மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டவருமான ரஞ்சித் கீர்த்தி தென்னகோன் சில கவனிக்கத்தக்க கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

சாராம்சத்தில் அவரின் கருத்தின் படி இதை சாதிய அடிப்படையில் பார்க்கத் தேவையில்லை என்றும் தேவையேற்பட்டால் யாரேனும் பிக்குவாக சீயம் நிக்காயவில் சேர்க்கவேண்டுமென்றால் தன்னை தொடர்பு கொள்ளும்படியும்; தான் அதை ஒழுங்கு செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். (மார்ச் 28 முகநூல் விவாதத்தில்) அதற்கு பதிலளித்த லொக்குலியன கீர்த்தி என்பவர்  “உங்களால் ‘மஹான’ செய்ய முடியும் (பிக்குவாக சேர்ப்பிப்பது) என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் உங்களால் அவர்களுக்கு அங்கே ‘உபசம்பதா’ (பௌத்த தீட்சை) செய்து வைக்க முடியுமா?” என்று சவாலிட்டிருந்தார். அந்த விவாதத்தில் பலவற்றுக்கும் பதிலளித்த ஆளுனர் இந்தக் கேள்விக்கு இறுதிவரை பதில் அளிக்கவில்லை.

பத்திரிகை விளம்பரம் : பிக்குவாக விரும்பும் கொவிகம சாதியைச் சேர்ந்த மூவர் தேவை.
சீயம் நிக்காய பன்சலை ஒன்றுக்கு தீட்சை கொடுத்து பன்சலையை பொறுப்பு வகிக்ககூடிய 20-65 இடைப்பட்ட வயதுடைய ஒருவரைக் கோரி விடுக்கப்பட்ட பத்திரிக்கை விளம்பரம் இது. "கே" என்று முடியும் பெயர்களில் இருக்காத பரம்பரைப் பெயரில் "லாகே" என்று முடியக் கூடியவர்கள் மாத்திரம் விண்ணப்பிக்கக் கோருகிறது. அதாவது நேரடியாக "கொவிகம" சாதியை மட்டும் விண்ணப்பிக்கும் படி கோருகிறது
இன்றும் பிக்குமாரை இணைந்து கொள்ளக் கோரும் பத்திரிகை விளம்பரங்களில் குறிப்பிட்ட சாதியை மட்டும் கோரும் விளம்பரங்களை காண முடிகிறது. அது போல திருமண விளம்பரங்களும் கூட சாதி கோருகின்ற சிங்கள விளம்பரங்கள் தொடரவே செய்கின்றன. அது மட்டுமன்றி தமது பரம்பரைப் பெயர்களை வைத்து சாதியை அடையாளம் காண்பதால் தமது பெயர்களை மாற்றிக்கொள்கிற விளம்பரங்களையும் கூட தேசிய நாளிதழ்களில் காண முடிகிறது.
“நஜஜ்ஜா வசலோ ஹோதி – நஜஜ்ஜா ஹோதி பிரஹ்மனோ கம்மனா வசலோ கோதி – கம்மனா ஹோதி பிரஹ்மனோ...” (வசல சூத்திரம்)
 “எந்தவொரு மனிதனும் பிறப்பால் தாழ்த்தப்பட்டவரோ, பிராமணரோ கிடையாது. ஒருவன் தனது நன்னடதையாலேயே உயர்ந்தவனாக போற்றப்படுகிறான்.” என்கிறார் புத்தர்.

இதனால் தான் சொல்கிறோம் இலங்கையின் தோல்விகளுக்குக் காரணம் “கௌதம பௌத்தம்” என்பது சிங்கள பௌத்தமாக மாற்றம் பெற்றதால் தான் என்பதை நாம் அடித்துச் சொல்ல முடியும். அந்த சிங்கள பௌத்தம் வெறும் மூடத்தனமான இனவாதத்தை மாத்திரம் தாங்கியிருக்கவில்லை மாறாக சொந்த சிங்கள பௌத்தர்களையே சாத்திய ரீதியில் பிளவுபடுத்தி அதிகாரதத்துவ படிநிலை அடுக்கையும் கொண்டு இயங்குகிறது.

நன்றி - தமிழர் தளம்.


Share this post :

+ comments + 1 comments

புதுமையான வாசிப்பு அண்ணா,உங்கள் தேடல் பிரமிக்க வைக்கின்றது.தொடருங்கள் .

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates