Headlines News :
முகப்பு » , , , , » நமது மலையகத்துக்கு ஜனாதிபதி விருது - எப்படி உருவானோம்!? - என்.சரவணன்

நமது மலையகத்துக்கு ஜனாதிபதி விருது - எப்படி உருவானோம்!? - என்.சரவணன்


இவ்வருடத்திலிருந்து சிறந்த ஊடகத்துறையினருக்கான “ஜனாதிபதி ஊடக விருது” அரசு வழங்கத் தொடங்கியுள்ளது. இந்த வருடம் சிறந்த வலைப்பதிவாளருக்கான விருது எனக்கு “நமது மலையகம்” (www.namathumalayagam.com) இணையத்தளத்துக்காக கிடைத்துள்ளது. இது பற்றிய அனுபவப் பகிர்வை வாசகர்களோடு பகிந்துகொள்ள விரும்புகிறேன்.


மலையகம் பற்றிய செய்திகள், ஆய்வுக் கட்டுரைகள், அதற்கான தளமமைக்கும் ஊடகங்கள் எல்லாம் இன்று சற்று பெருகியுள்ளன. ஆனால் 10ஆண்டுகளுக்கு முன் வரை மலையகத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி மற்றவர்களுக்கோ, சொந்த மக்களுக்கோ விழிப்பூட்டும் ஊடக மார்க்கங்கள் இருக்கவில்லை.

2000 ஆம் ஆண்டு சென்னையில் நிகழ்ந்த “தமிழ் இனி” மாநாட்டில் கலந்துகொண்டு அங்கு இது பற்றிய ஒரு கட்டுரையை சமர்ப்பித்தேன். குறிப்பாக வடக்கு கிழக்கில் போராட்டம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் சர்வதேச அளவில் அப்போராட்டம் குறித்த பிரச்சாரத்துக்கென புகலிடத்தில் ஏராளமான ஊடகங்கள் கூட வளர்ந்திருந்தன. இணையத்தளங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலிகள், தொலைக்காட்சி சேனல்கள் என ஒரு வளமான ஊடகங்களைக் கொண்டிருந்தது ஈழப்போராட்டம் சார் புலம்பெயர் சமூகம். இத்தனை இருந்தும்; வடக்கில் நடக்கும் சிறிய செய்திகள் கூட பெரிய அளவில் கொண்டுபோக முடிந்தது. ஆனால் மலையகத்தில் நடக்கும் பெரிய விடயங்களைக் கூட சிறிய அளவிலாவது தமிழ் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் அக்கறையோ, பிரக்ஞையோ அங்கு இருக்கவில்லை.

மலையகத்தின் பால் அக்கறை கொள்வதற்கும், அவர்களுக்காக குரல் கொடுக்கவும், ஆதரவு வழங்கவும் புகலிடத்தில் கணிசமான சக்திகள் இருந்தபோதும் அவர்களுக்கு மலையகம் பற்றிய எந்த செய்திகளும் உரியவகையில் கொண்டு செல்லப்படாதால் மலையக மக்கள் ஒரு வகையில் அனாதைகளாகவே தொடர்ந்தும் இருந்தார்கள்.

தமிழ்த் தேசியமும் - மலையகத் தேசியமும்
இலங்கையில் 1948இல் தமிழரசுக் கட்சியின் தோற்றக் காலத்திலிருந்தே மலையகம் அவர்களின் நிகழ்ச்சிநிரலில் பிரதான இடத்தைப் பிடித்திருந்தது. மலையகத்துக்கான மாநாட்டுத் தீர்மானங்கள் பல நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. தமிழ்த் தேசிய அரசியலின் வளர்ச்சிக்கும் மலையகப் பிரச்சினை முக்கிய இடத்தை வகித்திருக்கிறது. தமிழ் மக்களின் பிரச்சினையை தொகுத்து பேசும்போது மலையக மக்களின் பிரச்சினை முக்கிய இடத்தை வகித்திருக்கின்றன. ஆயுதப்போராட்ட காலத்தில் நிகழ்ந்த முக்கிய பேச்சுவார்த்தைகளில்; குறிப்பாக திம்பு பேச்சுவார்த்தை, இலங்கை – இந்திய ஒப்பந்தம் என்பவற்றில் கூட இந்திய வம்சாவளியினரின் பிரச்சினை ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. 80 களுக்குப் பின் மலையகம் ஈழப் போராட்டத்தின் நிகழ்ச்சிநிரலில் இருந்து கழற்றிவிடப்பட்டுவிட்டது என்று தான் கூற வேண்டும். ஈழப்போராட்டத்துக்கு எல்லாக் காலத்திலும் மானசீகமாகவும், நடைமுறையிலும் ஆதரவு தந்த மக்களாக இருந்தார்கள். முப்பது வருட யுத்தகாலத்தில் மலையகத்தில் சிங்கள பேரினவாத அரசு மேற்கொண்ட கைதுகள், கடத்தல்கள் சித்திரவதைகள் என்பனவற்றை யார் மறுக்க முடியும்.

1939 இல் இலங்கையில் முதலாவது சிங்கள – தமிழ் இனக்கலவரம் மலையகத்தில் ஏற்பட்டது. ஜி.ஜி.பொன்னம்பலம் மலையகத்தில் வந்து மகாவம்சத்துக்கு எதிராக பேசியது அந்தக் கலவரத்துக்கு உடனடிக் காரணமாக அமைந்தது. அதன் பின்னர் இலங்கையில் நிகழ்ந்த அத்தனை கலவரங்களிலும் அதிகமாக பாதிக்கப்பட்டது மலையகமும் இந்திய வம்சாவளி மக்களுமே என்பது யாவருக்கும் தெரியும். வடக்கு – கிழக்கு தமிழ்த் தேசிய அரசியலால் சிங்களப் பேரினவாதம் கடுப்பேறும் காலங்களிலெல்லாம் மலையக மக்களே தாக்குதலுக்கு ஆளானார்கள். அகதிகளானார்கள். இறுதியில் அரசியல் அனாதைக்களுமானார்கள். 

ஏற்கெனவே இலங்கை அரசால் திட்டமிட்டு நாடுகடத்தும் கைங்கரியத்தால் வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட காலம் போய் ஒவ்வொரு கலவரத்தின் பின்பும்; இருந்த கொஞ்ச சொத்துக்களையும் இழந்து, நம்பிக்கையும் இழந்து கூட்டம் கூட்டமாக தமிழகம் போய் சேர்ந்தார்கள். வடக்கே பாதுகாப்பு என்று நம்பி அங்கும் சென்று குடியேறினார்கள். ஈழ விடுதலைப் போராட்டத்தில் இணைந்து ஏறத்தாழ அத்தனை இயக்கங்களின் மூலமாகவும் தமது உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். 

இப்படியெல்லாம் தமிழ்த்தேசிய அரசியலில் பிரிக்க முடியாத அங்கமாக இருந்த மலையக மக்கள் அதிலிருந்து துண்டிக்கப்பட்டதன் அரசியலை ஒரு முறை திரும்பிப் பார்க்க வேண்டும்.

குறைந்தபட்சம் மலையகம் பற்றிய செய்திகள் வெளிவந்தால் தான் அந்த தகவல்களும், தரவுகளும், நிகழ்வுகளும் மலையகத் தேசியத்துக்கான கருத்தாக்கத்துக்கு கருத்துருவம் கொடுக்க முடியும். ஆனால் ஈழச் செல்வாக்கு மிகுந்த புகலிட ஊடகங்கள் அதைச் செய்யவில்லை. எனவே வடக்கு சமூகத்திலிருந்து இதற்கான ஆதரவைத் தேடாமல் நாமே நமக்கான ஊடகங்களை உருவாக்கிக்கொள்ள முனைவோம் என்று தான் நாங்கள் பரவலாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினோம்.


ஒஸ்லோவில் தொடங்கிய இணையத்தளம்.
“Malayagam.com” என்கிற இணையப்பெயரை 2002 ஆம் ஆண்டு நான் வாங்கி அதனை நடத்துவதற்காக மலையகத்தில் அக்கறையுள்ள நண்பர்களை அணுகினேன். அது வெற்றியளிக்கவில்லை கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அந்த இணையத்தளம் பறிபோகாமல் இருப்பதற்காக பணத்தைக் கட்டிக்கொண்டே இருந்தேன். ஒரு வருடம் அக்கட்டணத்தை கட்ட தவறியதால் அது பறிபோனது. ஓரிரு வாரங்களுக்குள்ளேயே யாரோ ஒருவர் அதனை வாங்கிவைத்துக்கொண்டார். ஆனால் நான் www.malayagam.net என்கிற ஒரு இணையப்பெயரை மீண்டும் வாங்கினேன். 

10 ஆண்டுகளுக்குப் பின் நான் 2012 இல் மீண்டும் இலங்கை செல்லும் வாய்ப்பைப் பெற்றேன். மலையகத்துக்கான ஒரு இணையத்தளத்தின் அவசியத்தைப் பற்றி பல நண்பர்களுடன் பேசினேன். நோர்வே திரும்பியதும்  12.12.2012 அன்று சரியாக 12 மணிக்கு நோர்வேயில் அசோக், ரஜினி, ரமேஸ், அரவிந்த் ஆகிய இந்தியவம்சாவளி நண்பர்கள் இணைந்து முதல் தடவையாக மலையகம் இணையத்தளத்தை (www.malayagam.net) அங்குரார்ப்பணம் செய்தோம். இங்கு இருந்த நண்பர்கள் அந்த இணையத்தளத்தில் தொழில்நுட்ப ரீதியில் ஒத்துழைக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கவில்லை.


இந்த இடைக்காலத்தில் எனது நெருங்கிய தோழர்களான லெனின் மதிவானம், தோழர் திலக் (இப்போது பாராளுமன்ற உறுப்பினர்) ஆகியோருடன் இது குறித்து தொடர்ந்து கலந்துரையாடினோம். ஒரு அணியாக உருவானோம். ஆனால் தோழர் லெனின் மதிவானம் அந்தப் பெயரை மாற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்தார். நான் விளக்கியும் கூட அவர் அந்தப் பெயரில் ஆர்வமாக இருந்தார். அவரின் விருப்பப்படியே “நமது மலையகம்” என்கிற புதிய பெயருக்கு இணையத்தளத்தை மாற்றிக்கொண்டேன்.


இலங்கையில் அங்குரார்ப்பணம்
2013 இலங்கை சென்று நமது மலையகத்தின் அறிமுக நிகழ்வை யூலை 28அன்று கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நிகழ்த்தினோம். இதனை நடத்துவதில் தோழர் லெனின், திலக் , ஜெயக்குமார் போன்றோர் பெரும்பங்கு வகித்தார்கள். பேராசிரியர் சந்திரசேகரன், தெளிவத்தை ஜோசப், ஏ, லோரன்ஸ், லெனின், திலக் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இணையத்தளத்தை உருவாக்கினால் போதாது அதனைத் கிரமம் பாதிக்காது தொடர்ந்து நடத்தவேண்டும் அதற்காகத்தான் ஒரு அணி தேவைப்பட்டது. சக தோழர்களின் வேலைப்பங்கீடு, பங்களிப்புடன் அது நிறைவேறும் என்கிற நம்பிக்கையுடன் தான் தொடங்கினோம். ஆனால் வேலைப்பங்கீடு சாத்தியப்படவில்லை.

இதற்கிடையில் பல சவால்கள். இணையத்தளத்தை நடத்துவதில் நான் தனித்து நின்றேன். இனியும் இதனை விடுவதில்லை எப்பேர்பட்டும் இதனை விடாது தொடர்வேன் என்று எனக்குள் உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். நான் செய்ய வேண்டிய எனது ஆய்வுப் பணிகளுக்கான நேரத்தையும், உழைப்பையும், சக்தியையும் “நமது மலையகம்” இணையத்தளத்துக்கான தொழில்நுட்ப பணிகள் உறிஞ்சிக் கொண்டன. இலங்கையில் ஆங்காங்கு ஊடக பயிற்சிநெறிகளை நடத்தினேன். அதில் எம்மோடு இணைந்து தொண்டர்களாக; இதன் ஆசிரியர்களாக பணியாற்றும்படியும்  பலரைக் கேட்டுக்கொண்டேன். சிலர் இணைந்தார்கள். பயிற்சியளித்தேன். சில வாரங்களில்  அவர்களும் செயலிழந்தார்கள்.

எம்மோடு பணிபுரிய முன்வந்தவர்களிடம் இந்த இணையத்தளத்துக்கு நோர்வே நிதியுதவி செய்வதாக ஒரு புரளியையும் சில நல்ல உள்ளங்கள் கிளப்பிவிட்டார்கள். இது முற்றிலும் எனது சொந்த செலவில் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்க படாதுபாடுபட்டேன். உழைப்பு சக்தி, நேரம், வளங்கள் என அத்தனையும் கொடுத்ததும் என் பிரக்ஞை பற்றிய அவதூறு செய்தவர்களிடம் இருந்து விலகி இருக்கத் தான் முடிந்தது.

“நமது மலையகம்” இணையத்தளம் எந்த வணிக விளம்பரங்களையும் செய்து வருமானம் ஈட்டியதில்லை. அப்படி ஒரு நோக்கமுமில்லை. கூகிள் விளம்பரங்களை இணையத்தளத்தில் செய்தால் பணம் வரும் என்றார்கள். அப்படி செய்வதை தவிர்த்தோம். நமது கொள்கைகளை மீறிய விளம்பரங்கள் வந்தால் அது அறமீறலாக அமைந்துவிடும் என தவிர்த்துவிட்டோம்.

இது ஒடுக்கப்படும் மக்களின் இணையத்தளம். அறம் சார்ந்து மிகவும் எச்சரிக்கையுடன் இருந்துவருகிறோம். மலையகத்துக்கான செய்தித்தளங்கள் சில இன்று உருவாகியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. செய்திகளுக்காக நாங்கள் இயங்க வேண்டும் என்கிற அவசியம் இப்போது இல்லை. அதற்கான கொள்ளளவும் எம்மிடம் இப்போதைக்கு இல்லை. செய்யப்படாத பணிகள் இருந்தால் அதனை செய்கிறோம். குறிப்பாக நல்ல ஆக்கங்கள் வேறு இடங்களில் வெளிவந்தால் அதனை மீள் பதிவு செய்து மேலும் பலரிடம் கொண்டு போய் சேர்க்கிறோம். இணையத்தளத்தின் ரேட் கருதி மலையகம் சாராத முக்கிய படைப்புகளையும், ஆய்வுகளையும் வெளியிட்டுவருகிறோம். குறிப்பாக எனது கட்டுரைகள் அனைத்தையும் அதிலேயே வெளியிடுகிறேன். தரமான இணையத்தளம் என்கிற வரவேற்பை அதன்மூலம் பெற்றிருக்கிறோம். சமூகத்தில் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறோம்.

கூகிளில் முதன்மை இடம்
சாதியத்துக்கு எதிராக வெளிவந்த சில கட்டுரைகள் முகநூலில் ஆதிக்க தரப்பினர் முறைப்பாடுகளை செய்ததன் விளைவாக முகநூலில் கடந்த வாரம் நமது மலையகத்தின் சகல இணைப்புகளும் தடை செய்யப்பட்டிருந்தன. பின்னர் உரிய விளக்கங்களை அளித்து மீள இயங்கத் தொடங்கியிருக்கிறது. இன்று கூகிளில் “மலையகம்’ என்று தேடினால் முதன்மை இடம் பிடிக்கும் இணையத்தளமாக கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம்.

எம்மோடு இதுவரை பயணித்த அத்தனை தோழர்களுக்கும் இந்த விருதின் பெருமை சேரும். இதனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டங்கள் எமக்கு உண்டு. ஆனால் மனித வளம் இல்லை. எம்மோடு தோள்கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கான பயிற்சிகளை நாம் வழங்குவோம்.

இது ஒடுக்கப்பட்டவர்களுக்கான இணையத்தளம். “குரலற்றோருக்கான குரல்” சகல ஒடுக்குமுறைகளையும் பாரபட்சமின்றி எதிர்ப்போம், விப்புணர்வூட்டுவோம், கருத்துருவாக்குவோம்.

அரசிடம் விருதுகளைப் பெறுவது குறித்து எம்மீது விமர்சனங்கள் இருக்கின்றன. இந்த அரசாங்கம் மட்டுமல்ல எந்த அரசாங்க காலத்திலும் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான போக்குகள் இருக்கவே செய்திருக்கின்றன. அரசாங்கத்துக்கு அரசாங்கம் அளவு-பண்பு-வடிவ ரீதியில் தான் இந்த ஒடுக்குமுறை மாறியிருக்கின்றன. அந்த வித்தியாசத்தின் அடிப்படையிலேயே இம்முறை இந்த விருதை ஏற்றுக்கொள்ள முடிகிறது. “முதலாளித்துவ ‘அரசு’ என்பது ஒடுக்கும் கருவி” என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதுபோல அந்த அரசின் செல்வாக்கில் இருந்து எந்த ஒரு தனிநபரும் தனித்து போக முடிந்ததில்லை. விரும்பியோ விரும்பாமலோ நாம் அதன் அங்கமாகவே இருக்கிறோம். இந்த விருதுகள் எமது அரச எதிர்ப்பு கருத்துக்களையோ, செயற்பாடுகளையோ மாற்றப்போவதில்லை. இன்னும் சொல்லப்போனால் “அரசு”க்கு எதிரான எழுத்துக்களும், செயற்பாடுகளும் தான் எமது அன்றாட கடமையாகவும் இருக்கிறது.

ஒரு அரசு என்கிற வகையில் தம் மக்களின் திறமையாளர்களை தெரிவு செய்து கௌரவிக்கும் பொறிமுறைகளைக் கொண்டிருக்கிறது. நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களால் அத்திறமையாளர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவ்விருதுகள் பல்வேறு வகையில் அத்திறமையாளர்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கவே செய்கின்றன என்பது மறுப்பதற்கில்லை. விருதை மறுக்கவேண்டும் என்று கூறுபவர்கள் பலர்  இவர்களுக்கு ஆதரவாக இருந்ததில்லை. குறிப்பாக “நமது மலையகம்”  இணையத்தளத்தையோ அல்லது என்னையோ சற்றும் கண்டுகொள்ளாதவர்களும், அலட்சியப்படுத்தியும் வந்தவர்களே இத்தகைய எதிர்ப்பை வெளிக்காட்டி வருகிறார்கள். எம்மில் இதுவரை அக்கறை காட்டாத எவருக்கும் எம்மீது இத்தகைய எதிர்ப்பை வெளிக்காட்டும் தார்மீகம் கிஞ்சித்தும் கிடையாது என்பதையும் இங்கு நாம் வெளிப்படுத்தியாக வேண்டும்.

“நமது மலையகம்” இணையத்தளத்துக்கு கிடைத்த “ஜனாதிபதி தேசிய விருது” ஒடுக்கப்பட்டவர்களின் குரலுக்கு கிடைத்த மரியாதை, அங்கீகாரம். அவர்களுக்கே இந்த விருதைக் காணிக்கையாக்குகிறேன்.


மலையகம் சார்ந்த ஒரு ஊடகத்துக்கு கிடைக்கப்பெற்ற முதல் தேசிய விருது இது. விருதுகள் எமது சுயவிளம்பரத்துக்கோ, செருக்குக்கோ பயன்படுத்தியதில்லை. ஒடுக்கப்படும் சமூகங்களுக்கு ஆதிக்க சமூகத்தால் என்றும் வரவேற்பும், அங்கீகாரமும், ஆதரவும் கிடைப்பதில்லை. எமது போராட்ட வடிவத்துக்கு இந்த விருதுகள் ஒரு அரண். எமக்கான பாதுகாப்பு. எம்மை மேலதிகமாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஒரு உத்தி. அந்த அளவில் இந்த தேசிய விருதை நாம் ஏற்கிறோம்.

நன்றி - அரங்கம்

Share this post :

+ comments + 1 comments

5:31 PM

வாழ்த்துக்கள்

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates