Headlines News :
முகப்பு » » கண்டும் காணாது விட்டதன் விளைவு! - பாத்திமா மஜீதா

கண்டும் காணாது விட்டதன் விளைவு! - பாத்திமா மஜீதா


நடைபெற்று முடிந்த தாக்குதல்கள் அரச அதிகார சக்திகளின் துணையோடுதான் நடைபெற்றுள்ளன என்பதற்கு நிறைய சாட்சியங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் அரசினை மட்டுமே நாங்கள் பொறுப்புக்கூறுவது ஒரு வித தப்பித்தல் முறை. ஒரு வித அச்சம் சார்ந்த முறை. தாக்குதல்களை நடத்தியவர்கள் முஸ்லிம்கள் அல்ல, அவர்கள் பயங்கரவாதிகள் , அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமில்லை என்று சப்பைக் கட்டுவதை நிறுத்துங்கள் கூட எங்களை நாங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளாவிட்டால் எங்கேயோ போய் முட்டி மோதி விடுவோம்.

கிட்டத்தட்ட இரு சகாப்தத்தின் முன்னால் போய் நின்று பார்க்கின்றேன். என்னையும் என்னைச் சுற்றி இருந்தவர்களும் படித்த பாடசாலை, பல்கலைக்கழகங்கள், வேலை செய்த இடங்கள் எல்லாவற்றிலும் மனிதம் மட்டுமே இருந்தன. படிப்படியாக அரேபியக் கலாச்சாரம் தலைக்கு ஏறத் தொடங்கியது. முஸ்லிம் , காபிர் என்ற பிரிவினை வாதப் போக்கினை இந்த ஒற்றைக் கலாச்சாரம் ஏற்படுத்தி விட்டது . அன்று நாம் சாப்பிட்ட நாரிசாச் சோறு , பராத் ரொட்டி , போன்ற எல்லாவற்றினையும் ஹராம் என்ற ஒற்றைக் கதவு போட்டு அடைத்து விட்டார்கள்.

ஒவ்வொருவரும் அடுத்த சமூகத்திலிருந்து பிரித்து விடப்பட்டுள்ளோம். நான் ஐந்து வயதாக இருக்கின்ற பொழுது எனது ஆடையை பற்றி கேள்வி எழுப்பாத மத்ரஸாக்கள் இன்று எனது எட்டு வயது மகள் கருப்பு ஹபாயாவினை அணிந்து வந்தால் தான் ஓத முடியும் என்று சட்டம் வகுக்கின்றது. பாவாடை சட்டை தாவணி அணிந்து பாடசாலை சென்ற ராத்தா பல்கலைக்கழகம் செல்கின்ற அவளது மகளுக்கு கண்கள் இரண்டு மட்டும் தெரியும் விதமாக ஹபாயாவினை போர்த்தி அனுப்பி வைக்கின்ற சூழல். தெருவுக்குத் தெரு பள்ளிவாசல் , காபிர் . ஷைத்தான் என்று கதறுகின்ற ஒலி பெருக்கிகள். போதாக்குறைக்கு நோன்பு , பெருநாள் காலங்களில் பேரீச்சம் பழமும் குர்பான் இறைச்சியும் கொடுத்து இந்த அப்பாவிச்சனங்களை போட்டோ எடுக்கின்ற சகிப்புத் தன்மையற்ற வகாபிசத்தின் கொடூரங்கள். 

எல்லாவற்றினையும் நாங்கள் பார்த்தும் பார்க்காமலும் இருந்த இந்த நோயின் கடைசித் தருணம் தீவிரவாதமாக மாறி உயிர்களை பலியெடுக்கின்ற நிலைமை . இந்த குறிப்பிட்ட தீவிரவாத அமைப்பின் நடவடிக்கைகளினால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் இக்கட்டான நிலையில் நிற்கின்றது. இனிமேலாவது சவுதியின் கைக்கூலிகளான இத்தீவிரவாதப் போக்கினை கண்டுகொள்ளாமல் விடுவது முஸ்லிம் சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது.

ஆனால் இந்த நிலைமையை விளங்கிக்கொள்ளாது நம்மை நாமே தப்பித்துக் கொள்ளவதை விட்டு இந்த தீவிர வாத நோயிலிருந்து எமது தலைமுறைை காப்பாற்ற முனையுங்கள். எங்களைச் சுற்றி என்ன நடந்தது எப்படியெல்லாம் நாங்கள் மூலைச் சலவை செய்யப்பட்டோம் என்பதை உணருங்கள்.

(பாத்திமா மஜீதாவின் முகநூல் பதிவிலிருந்து நன்றியுடன்)
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates