Headlines News :
முகப்பு » , , , , , » இலங்கையின் ஓலைச்சுவடிகளை டென்மார்க்குக்கு கடத்திச் சென்ற “ரஸ்மஸ் ரஸ்க்” - என்.சரவணன்

இலங்கையின் ஓலைச்சுவடிகளை டென்மார்க்குக்கு கடத்திச் சென்ற “ரஸ்மஸ் ரஸ்க்” - என்.சரவணன்


சிங்கள எழுத்துருவத்துக்கு நிலையான நவீன வடிவம் கொடுத்தது டச்சுக் காரர்களே. அதுபோல சிங்கள மொழியின் இலக்கணத்தை ஒழுங்குபடுத்தி வெளியிட்டு அதனை அடுத்தக் கட்டத்துக்கான ஆரம்பத்தை ஏற்படுத்தியவர்களும் ஆங்கிலேயர்கள் தான். சிங்கள மொழியும், எழுத்துக்களும் எதன் வழி வந்தது என்பது பற்றிய ஆய்வுகளையும் பல்வேறு ஆய்வாளர்கள் 17-18ஆம் நூற்றாண்டுகளிலேயே ஆரம்பித்துவிட்டனர்.

சிங்கள மொழியானது திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது என்கிற கருத்தாக்கம் மேலெழுந்திருந்த காலத்தில் அதை மறுத்து; சிங்கள மொழியானது இந்தோ – ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்கிற ஆய்வுகளை வெளியிட்டவர்களில் முக்கியமானவர்கள் ரஸ்முஸ் ரஸ்க் (Rasmus Rask – 1787- 1832), வில்ஹைம் கைகர் (Wilhelm Geiger 1856-1943).

இவர்களில் வில்ஹைம் கைகர் பற்றி நாமறிவோம். மகாவம்சத்தை மொழிபெயர்த்தது மட்டுமன்றி அது குறித்த முக்கிய ஆய்வை வெளியிட்டவர். ஆனால் ரஸ்முஸ் குறித்து நாம் அதிகம் அறிந்திருக்கமாட்டோம்.


டென்மார்க்கில் பிறந்த ரஸ்முஸ் பழைய நோர்வேஜிய மொழி, ஐஸ்லாந்து மொழி ஆகியவற்றில் ஆழ்ந்த ஈடுபாடுகொண்டார். ஐஸ்லாந்து எழுத்துவடிவத்தை நூர்டிக் நாட்டு மொழிக்குடும்ப எழுத்துக்களுடன் ஆராய்ந்து ஒழுங்குக்கு கொண்டு வந்த பெருமையும் ரஸ்முஸ் ஐச் சாரும். ஆங்கிலம், டேனிஷ், சுவீடிஷ், ரஷ்யா, ஜேர்மன், டச்சு, லத்தீன், கிறீக், ஹீப்ரோ, பிரெஞ்சு, சாமிஸ்க், போலிஷ், செக்கொசுலோவேக்கிய, இத்தாலி, ஸ்பானிஷ் போன்ற மொழிகளில் சிறந்த ஆளுமையைப் பெற்றார். டென்மார்க் மொழியின் உச்சரிப்பை மேலும் எளிமைப்படுத்திய அறிஞராக போற்றப்படுகிறார் ரஸ்க்.

1811 இல் அவர் “Introduction to the Icelandic or Old Norse Language” (ஐஸ்லாந்து, பழைய நோர்வேஜிய மொழிக்கான அறிமுகம்) என்கிற முதல் நூலை வெளியிட்டார். 1815 இல் பண்டைய நோர்வேஜிய மொழி பற்றி எழுதிய ஒரு கட்டுரைக்காக டென்மார்க் விஞ்ஞான காலத்தால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்த மொழி ஆய்வுகளின் மீதான அவரின் ஆர்வம் ஆசிய மொழிகளின்பால் ஈர்த்தது. குறிப்பாக இந்தியாவில் சம்ஸ்கிருத மொழியையும் அதனோடு தொடர்புடைய மொழிக்குடும்பத்தையும் பற்றி ஆராய முடிவு செய்து இந்தியாவுக்கு 1820இல் கிளம்பினார். இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு சென்று தனது ஆராய்ச்சியை தொடர்ந்தபடி  இலங்கை வந்தடைந்தார். அவர் மெட்ராசில் இருக்கும் போதே மூன்றே மாதத்தில் சிங்களத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது என்கிறார் பிரபல தொல்பொருள் ஆய்வாளரும் தொல்பொருள் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான சார்ல்ஸ் கொடகும்புர. அதனைத் தொடர்ந்து ஐரோப்பிய மொழியில் இந்திய மொழி சத்தங்கள் குறித்து ஒரு ஆய்வை ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

அதுபோல அவர் 1821 இல் வெளியிட்ட ‘சிங்கள மொழி எழுத்துக்கள்” (Singalesisk Skriftlaere) என்கிற நூல் மிகவும் முக்கியமான ஆய்வாக அமைந்தது. அது முதலில் டேனிஷ் மொழியில் தான் வெளியிடப்பட்டது. இதை அவர் தனது சொந்த செலவில் வெளியிட்டார். பின்னர் ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. சிங்கள மொழி குறித்து ஐரோப்பிய மொழியில் வெளிவந்த முதல் நூலாக இது கருதப்படுகிறது. சிங்கள எழுத்துக்கள், சொற்கள், அதன் இலக்கண அமைப்புமுறை என்பன பற்றி அதுவரை ஒரு ஒழுங்கான நூல் வெளிவந்ததில்லை என்றே கூறலாம். இந்த நூல் அதன் பின் வந்த ஆய்வுகளுக்கெல்லாம் ஒரு முன்னோடி.

இந்த நூலுக்காக ரஸ்க் சேகரித்த பலநூற்றுக்கணக்கான சிங்கள ஓலைச்சுவடிகளை அவர் 1823ஆம் ஆண்டு டென்மார்க்குக்கு திரும்பிச் செல்லும் போது கையோடு கொண்டு சென்று விட்டார். இந்த ஓலைச்சுவடிகள் இன்னமும் கொப்பன்ஹேகன் நூலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. அந்த ஓலைச்சுவடிகளை பட்டியல்படுத்துவதற்காக கொடகும்புர அழைக்கப்பட்டு அந்தப் பணிகள் முடிக்கப்பட்டது குறித்தும் கொடகும்புர எழுதியிருக்கிறார். மேலும் இந்த ஓலைச்சுவடிகளே ஐரோப்பாவில் இருக்கும் மிகப்பழமையான சிங்கள ஓலைச்சுவடிகளாக இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கொடகும்புர பட்டியலிட்டுக்கொடுத்த ஓலைச்சுவடிகள் பற்றிய தகவல்கள் 416 பக்கங்களில் கொப்பன்ஹேகன் நூலகம் 1980இல் வெளியிட்டிருக்கிறது. இந்த நூலை அதன் இணையத்தளத்திலும் முழுமையாக பாரவையிட முடிகிறது. மிகவும் ஆச்சரியம் தரும் ஓலைச்சுவடிகளின் பட்டியலை நீங்கள் பார்க்க முடியும். கீழே அதனை இணைத்திருக்கிறேன்.

கொடகும்புர தொகுத்த தொகுப்பு மிகவும் முக்கியமானது. ஏராளமான விபரமான தகவல்களை அவர் உள்ளடக்கியிருக்கிறார். ஆய்வாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு தொகுப்பு அது. ஆனால் அவர் அங்கு பட்டியலிட்டிருக்கும் ஓலைச்சுவடிகள் பற்றிய விபரங்களில் ஏன் தமிழ் ஓலைச்சுவடிகள் பற்றிய விபரங்கள் இல்லாமல் போனது என்பது கேள்வியாகவே எஞ்சி நிற்கிறது.

ரஸ்க் இலங்கையில் தங்கியிருந்து ஆய்வு செய்த காலத்தில் எழுதிய டயரிக் குறிப்புகளை கொடகும்புர இந்த நூலில் அப்படியே நாள் வரிசைப்படி தொகுத்திருக்கிறார். அதில் அவர் பயணம் செய்த இடங்கள், சந்தித்த நபர்கள், ஓலைச்சுவடிகளை கொள்வனவு செய்த விபரங்கள், சிங்கள மொழியை ஆய்வு செய்தது பற்றியெல்லாம் குறிப்புகள் காணக்கிடைக்கின்றன.

12.11.1821 யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்ததிலிருந்து 9.09.1822 அன்று அவர் மெட்ராசுக்கு திரும்பிச் செல்வது வரை அவரது டயரிக் குறிப்புகளை தொகுத்திருக்கிறார்.

சிங்கள எழுத்தின் மூலம் எலு மொழி என்கிறார். எலு, சமஸ்கிருதம், பாளி, சிங்களம் என்பவற்றை அவர் கற்றது குறித்த குறிப்புகளை எழுதியிருக்கிறார்.

சிங்கள ஓலைச்சுவடிகளாக சேகரிக்கப்பட்டவற்றில் சிங்களம், சமஸ்கிருதம், பாளி, எலு போன்ற மொழிகளில் எழுதப்பட்டிருக்கிறது. ரஸ்க் கொண்டு சென்ற ஓலைச்சுவடிகளில் இலங்கையின் வரலாற்றோடு சம்பந்தப்பட்ட முக்கிய பதிவுகளும், இலன்க்கியங்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக பூஜாவலிய, தூபவம்சம் போன்றவற்றின் பகுதிகளும் இன்னும் பல சிங்கள காப்பியங்களும் அடங்கும். 

ரஸ்க் இலங்கையில் இருந்து மட்டுமல்ல இந்தியா உள்ளிட்ட இன்னும் பல நாட்டு ஓலைச்சுவடிகளையும் இவ்வாறு கொண்டு போய் சேர்த்திருக்கிறார். உதாரணத்திற்கு கொப்பன்ஹேகன் நூலகத்திலுள்ள சமஸ்கிருத ஓலைச்சுவடிகளின் எண்ணிக்கை 1127, சிங்கள ஓலைச்சுவடிகள் 152, தமிழ் ஓலைச்ச்சுவடிகள் 97 என அவர்களின் இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

டென்மார்க்குக்கு சிங்கள மொழி பரீட்சயம் ஏற்கெனவே உண்டு. எப்படி என்றால் 1604 – 1635 காலப்பகுதியில் கண்டியை ஆண்ட மன்னன் செனரத் டென்மார்க்குக்கு சென்று டேனிஷ் கிழக்கிந்திய கம்பனியுடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றிருந்தார். 1618 இல் ஒரு ஒப்பந்தத்தையும் அவர் அங்கு கைச்சாத்திட்டிருந்தார்..

ரஸ்க் இலங்கையில் இருந்த காலத்தில் தென்னிலங்கையில் இருந்த பிக்குமார்களை அணுகி சிங்கள – ஆங்கில அகராதியின் அவசியத்தை வலியுறுத்தியது குறித்து கொடகும்புர தனது நூலில் விபரிக்கிறார்.

ரஸ்க் கடத்திச் சென்ற இலங்கையின் புராதன ஓலைச்சுவடிகள் பற்றி சிங்கள அறிஞர்கள் ஆதங்கப்படுவதைவிட அவற்றைக் கொண்டு ரஸ்க் ஆற்றிய புலமைத்துவ வெளிப்பாடுகளை போற்றுகின்றனர்.


ரஸ்க் தனது 44 வது வயதில் கொப்பன்ஹேகனில் இறந்துபோனார். ஆனால் அவர் வாழ்ந்த குறுகிய காலத்தில் அவர் ஆற்றிய பாத்திரம் மலைக்கத்தக்கது. இன்றும் அவரை ஸ்கண்டிநேவிய நாடுகள் கொண்டாடுகின்றன. கொப்பன்ஹேகனில் உள்ள அவரது கல்லறையில் அரபு, பழைய நோர்வேஜிய மொழி, சமஸ்கிருதம், டெனிஸ் போன்ற மொழிகளில் எழுதப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.

நன்றி - அரங்கம்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates