நான்கு நாட்கள் கடந்தும் இதுவொரு கலவரமாக உருவெடுக்காமல் இருக்கிறதென்றால் அதற்கு பல காரணங்கள் உண்டு.
வேகமாக வதந்தி பரப்பக் கூடிய அளவுக்கு தொலைதொடர்பு சாதனங்களும், சமூக வலைத்தளங்களும் வளர்ந்திருந்தும் கூட அது நிகழாமல் இருப்பதற்கு இன்னொரு காரணம் அத்தகைய நவீன தகவல் தொடர்பு சாதன நுகர்வோரில் பலர் பொதுப்புத்திக்குப் பின்னால் செல்லாமல் அறிவுபூர்வமாக சிந்தித்து பிழையான போக்குகளையும், சிந்தனைகளையும் கண்டித்து, தடுத்து நிறுத்தும் போக்கும் கூடவே வளர்ந்திருப்பது தான். முகநூல், ட்விட்டர், யுடியூப் போன்றவற்றில் கூட முன்னர் போல நினைத்ததை பகிர்ந்துவிட முடியாது. வேகமான முறைப்பாடுகள் அவற்றை கட்டுபடுத்தி விடுகின்றன. அதுமட்டுமன்றி சமூகவிரோத உள்ளடக்கங்களை (தகவல், கருத்து, படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை) தன்னியல்பாக கட்டுப்படுத்தும் அல்கோரிதம் (Algorithm) அந்நிறுவனங்களால் நன்றாகவே வளர்த்தெடுக்கப்பட்டிருக்கிறது.
அடுத்தது இலங்கையில் நிகழ்ந்த கடந்தகால கலவரங்களின் போதெல்லாம் பெரும்பான்மை சமூகத்துக்கு அரச அனுசரணை நேரடியாகவோ மறைமுகமாகவோ கிடைத்தது. இன்று அது சர்வதேச அளவில் அம்பலப்பட்டிருக்கிறது. இலங்கை அரசை இந்த விடயத்தில் உலகம் முழுவதும் உற்றுக் கவனித்து கொண்டிருக்கிறது என்பதை அரசும் அறியும். எல்லாவற்றுக்கும் மேல் இலங்கை அரசு சர்வதேச மனித உரிமைகள் விசாரணைக்கு உட்படுத்துவதிலிருந்து கடந்த பத்தாண்டுகளாக தப்பி வருகிறது. இந்த நிலையில் தன்னை தற்காத்துக்கொள்ள அரச இயந்திரம் கணிசமான விலையைக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. மேலதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருக்கிறது.
கலவரங்களுக்கு அரச அனுசரணை வழங்குவது என்பது முன்னர் போல எல்லாக் காலத்திலும் அரசியல் லாபமீட்டக்கூடியதல்ல என்பதை இன்றைய அரசியல் தலைவர்கள் பலர் உணர்ந்திருகிறார்கள்.
எங்கேயாவது குண்டுவெடிப்பு அல்லது கொலை, சண்டை போன்ற ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்ததும் உண்மை வெளிவருமுன்னரே ஊகங்களே அந்த இடைவெளியில் ஆக்கிரமித்து விடுகின்றன. அதுவே ஆரம்பநிலை கலவரங்களுக்கு காரணமாகி விடுகின்றன. இலங்கை வரலாறு நெடுகிலும் இதுவே நிகழ்ந்துள்ளது. 1883இல் சரியாக 136 வருடங்களுக்கு முன்னர் இப்படி ஒரு குருத்து ஞாயிறன்று தான் இலங்கையின் முதலாவது மதக் கலவரம் இதே கொட்டாஞ்சேனைப் பகுதியில் நிகழ்ந்தது. வதந்திகள், ஊகங்கள் எப்படி ஒரு கலவரத்தை உண்டுபண்ண வல்லவை என்பதற்கு அங்கிருந்தே உதாரணம் பெறலாம்.
இலங்கையில் நிகழ்ந்த அத்தனை கலவரங்களின் போதும் வதந்திகளே கலவரத்தை மேலதிக சூடேற்றி அழிவுகளை உண்டு பண்ணியுள்ளன. பல்லின, பல்மத நாடான இலங்கையின் வளர்ச்சியை பல ஆண்டுகளுக்கு பின்னோக்கித் தள்ளியதற்கு அடிப்படை காரணமே இந்த பல்லின சமூகங்களுக்கு இடையில் நிகழ்ந்துவந்த பாரபட்சங்களும், ஆண்டாண்டு காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட பரஸ்பர வெறுப்புணர்ச்சியும் தான். எரியுற வீட்டில் பிடுங்குவது லாபம் என்பதைப் போல இந்த சந்தர்ப்பங்களை பல்வேறு சக்திகள் தத்தமது நலன்களுக்காக எரிகிற தீயில் எண்ணையையூற்றி லாபம் காண முற்பட்டிருக்கின்றன.
உறைய வைக்கும் பீதி
யுத்தம் நடந்த காலப்பகுதியில் சாதாரண தமிழ் மக்கள் எப்படி பீதிக்குள் உறைய வைக்கப்பட்டிருந்தார்களோ அந்த நிலைமையை இனி முஸ்லிம்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை தெளிவாக உணர முடிகிறது. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் எப்போதும் கண்காணிப்புக்கு உள்ளாகியிருத்தல், பொலிஸ் பதிவை எப்போதும் கூடவே வைத்திருத்தல், எப்போதும் சுற்றி வளைப்புக்கும், சோதனைக்கும், கைதுக்கும் உள்ளாதல், இதன் விளைவாக தமது இன அடையாளத்தை மறைத்து நடந்து கொள்ள முயற்சித்தல், சமூகத்தில் அதிக சமரசப் போக்கை வெளிக்காட்டுதல், பல இடங்களில் விட்டுக்கொடுத்தலை செய்தல். எந்த நேரத்திலும் தாம் வீணாக சந்தேகத்துக்குள்ளாகலாம் என்கிற பீதியுடனேயே எங்கும் பயணித்தல், எவர் தம்மை பார்த்தாலும் தம்மை சந்தேகிப்பதாக கருதிக் கொள்ளும் உளவியல், அரச, தனியார் நிறுவனங்களின் சேவையைப் பெறுவதிலும், தொழில்களைப் பெறுவதிலும் சந்தர்ப்பங்கள் பாதிப்படைதல் என இது தொடரப் போவதை கட்டியமாகவே கூறலாம்.
ஏனென்றால் அப்படி ஒரு சூழலில் கடந்த காலம் தமிழ் மக்கள் இருத்தப்பட்டார்கள். அரச இயந்திரம் இதைப் புரிவதற்கு ஏற்கெனவே பழகியிருக்கிறது. சிங்கள சிவில் சமூகமும் அத்தகைய நிறுவனமயப்பட்ட பாரபட்சத்தை நிகழ்த்தியிருக்கிறது. பாதுகாப்பு சார்ந்த அதிகாரம் பாதுகாப்புத் துறையினரிடம் இருந்து சிங்கள சிவில் சமூகத்துக்கும் பகிரப்பட்டிருந்தது சந்திரிகா காலத்தில் பொலிசாரோடும், படையினரோடும் சேர்ந்து பணியாற்றக்கூடிய “சிவில் பாதுகாப்பு அமைப்பு” என்கிற பேரில் அரசால் அமைக்கப்பட்ட சிறு சிறு அமைப்புகள் மூலை முடுக்கெல்லாம் பண்ணிய அட்டகாசத்தை நாம் மறந்திருக்கமாட்டோம்.
சிங்கள இனவாத சக்திகள் தமது கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு அராஜகத்தையும், தனிப்பட்ட குரோதங்களையும் கூட தீர்த்துக்கொண்ட சந்தர்ப்பங்களை நாம் எப்படி மறப்பது. தெருவில் ஒரு சிங்களவர் இன்னொருவரைக் காட்டி “இதோ புலி” என்று ஒரு சவுண்டு விட்டால் போதும் குறித்த நபர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க எந்த சந்தர்ப்பமும் கிடைக்காமல் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக கொலன்னாவை எண்ணெய்க்குதங்கள் புலிகளால் தாக்கப்பட்ட வேளை தெமட்டகொட, கொலன்னாவ, தொட்டலங்க பகுதிகளில் அப்பாவி மலையக இளைஞர்கள் இந்த “சிவில் பாதுகாப்பின்” பேரில் குரூரமாக கொள்ளப்பட்ட சம்பவங்களை நேரில் சென்று விசாரித்து சரிநிகரில் கட்டுரைகளாக எழுதியிருக்கிறேன். அதனைப் பதிவு செய்ய தொட்டலங்க என்கிற இடத்துக்கு போயிருந்தபோது என்னையும் அதே பாணியில் ஒரு கூட்டம் விரட்டிக்கொண்டு வந்தபோது அதே பிரதேசத்தைச் சேர்ந்த என்னுடைய உறவினர் ஒருவரால் காப்பற்றப்பட்டதையும் சரிநிகரில் பதிவு செய்திருக்கிறேன். இந்த நிலையில் தற்போது அரசாங்கம் மீண்டும் அவசர கால சட்டத்தை இப்போது கையிலெடுக்கப்போவதாக அறிவித்திருப்பதையும் கவனத்திற்கொள்க.
அரச பயங்கரவாதத்துக்கு நியாயங்களை உருவாக்கியவர்கள்?
சகல இலக்குகளும் பொதுமக்களை நேரடியாக குறி வைத்த இலக்குகள். அதிகார வர்க்கமோ, அரச இயந்திரமோ குறி வைக்கப்படவில்லை.
குறைந்தபட்சம் கடந்த கால யுத்தத்தின் போது அரசுக்கு எதிரி யார் என்று தெரிந்திருந்து. அவர்களுக்கு என்று கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்று இருந்தது. அவர்களுக்கு என்று நிபந்தனைகள், கோரிக்கைகள் இருந்தன. ஆனால் இங்கே சமரசம் பேச எவரும் கிடையாது. அவர்களுக்கென்று அரசிடம் கேட்க ஒரு கோரிக்கையும் இல்லை. இருக்கவும் முடியாது. இதுவே அரசுக்கும் மக்களும் ஏற்படுத்தியிருக்கிற மிகப் பெரும் அச்சமும், எச்சரிக்கையும். எங்கேயும்-எவராலும்-எப்போதும்-எதுவும்-நிகழலாம் என்பதே எந்த முஸ்லிம் நபர் மீதும் சந்தேகம் கொள்ள வாய்ப்பை விரித்துள்ளது.
ஈழப்பாராட்டம் ஓய்ந்ததன் பின். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடுத்த இலக்கு முஸ்லிம்கள் மீது திருப்பபட்டுவிட்டது என்பது பற்றி கடந்த ஐந்து வருடங்களாக பல கட்டுரைகளின் மூலம் பல கோணங்களில் இதற்கு முன்னர் விளக்கி எழுதியிருக்கிறேன். அந்த இலக்குக்கு மேலும் நியாயங்களை உருவாக்கியிருக்கிறது இந்தத் தாக்குதலும் நிலைமையும்.
கடந்த காலங்களில் படையினரின் இராணுவ தேடல், கைது கடத்தல், சித்திரவதை, காணாமல் போதல் என்பனவற்றை மேற்கொள்ள முன் ஒரு வதந்தியை அதற்கு முன் பிரபல ஊடகங்களின் மூலம் பரப்பிவிடுவார்கள். அந்த வதந்தியே அந்த அரச அட்டூழியங்களுக்கான முன் கூட்டிய நியாயங்களை உருவாக்கிவிடும். அதன் பின் நடக்கும் கொடுமைகளை தட்டிக்கேட்கவும் எவரும் வரமாட்டார்கள். இதை இராணுவம் மட்டுமல்ல பேரினவாதமயப்பட்ட மக்களும், சிங்கள பௌத்த சக்திகளும் கூட இப்படியான வதந்திகளை தூக்கிக்கொண்டு தமது அராஜக அட்டகாசங்களுக்கு கிளம்பிவிடுவார்கள். அதற்குரிய நியாயமும் முன் கூட்டியே உருவாக்கப்பட்டிருக்கும். இன்று அதே நிலை முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ள மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை.
“இஸ்லாத்துக்கும் இவர்களின் நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்புமில்லை. நாம் இவர்களை கண்டிக்கிறோம்", என்பதெல்லாம் இந்த நிலைமையை மாற்றிவிடப்போவதில்லை. “முஸ்லிம்கள் தவிர்ந்தவர்கள் காபிர்கள், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது, அதுவே ஒவ்வொரு முஸ்லிமுடைய புனிதக் கடமை. சிறந்த மறுமையை அடைய அதுவே சிறந்த வழி” என்று அதே இஸ்லாத்திலிருந்து தான் "தேசிய தவ்ஹீத் ஜமாஅத்" தலைவர் சஹ்ரான் மேற்கோள் காட்டுகிறார் என்றால் அதனை ஏனைய முஸ்லிம்கள் மறுத்து, எதிர்த்து இயங்கியிருக்கவேண்டும். ஆனால் அப்படி அவர்களின் சித்தாந்தத்தை எதிர்த்து நிற்கும் பிரபல கருத்துநிலையோ, உரையாடலோ முஸ்லிம் சமூகத்திடம் இல்லாததே; ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீது பாய்வதற்கு ஏதுவான வழிகளை உருவாக்கியிருக்கிறது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது.
இதுவரை சிங்களப் பேரினவாத சக்திகள் முஸ்லிம்களை இலக்கு வைத்து பிரச்சாரங்களை செய்த போதெல்லாம். இதுவெல்லாம் Islamophobia என்றும், முஸ்லிம் வெறுப்புணர்ச்சி என்றும், மோசமான பாசிச பாய்ச்சல் என்று நாம் எல்லாம் எழுதிக் குவித்தோம். இப்போது அவர்கள் நாங்கள் எச்சரித்தபோதெல்லாம் எங்களை இனவாதிகள் என்றீர்களே. அவர்களைப் பாதுகாத்தீர்களே, ஆதரித்தீர்களே இப்போது இந்த அழிவுகளுக்கு நீங்களும் பங்காளிகள், பொறுப்பாளிகள் என்கிறார்கள். அவர்களின் தரப்புக்கு நியாயங்களை உருவாக்கியமைக்கு இதுவரை இதனை எதிர்த்து நிற்காத அனைவரும் பொறுப்பாளிகள் தான்.
இனி வரபோகும் நாட்களில் சிங்கள பேரினவாத சித்தாந்தமும், அதன் கட்டமைப்பும் தமக்கான புதிய நிகழ்ச்சிநிரலையும், தந்திரோபாயங்களையும் உருவாக்கப் போகிறது. அதனை எதிர்கொள்ள நாமும் புதிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தயாராக வேண்டிருக்கிறது.
சொந்த அனுபவம்
இதே 90களில் சிங்களப் பொதுக்கூட்டமொன்றில் நான் ஆற்றிய உரை பின்னர் ஹிரு பத்திரிகையில் பிரதான கட்டுரையாக பிரசுரித்திருந்தார்கள். அதை இந்த இடத்தில் பகிர்வது பொருத்தமென நம்புகிறேன்.
“தாய்மார்களே... சகோதர்களே... நான் தினசரி எனது வீட்டில் இருந்து கிளம்பும் முன் என்னை சுய பரிசோதனை செய்துகொள்வேன். அடையாள அட்டை இருக்கிறதா? எனது உடைகள் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறதா? உருவ அமைப்பில், எனது நடை உடையை வைத்து சந்தேகம் கொள்ள வாய்ப்புண்டா? என்று உறுதி செய்துகொண்டதன் பின்னர்தான் வெளியேறுவேன். வீட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து கொட்டாஞ்சேனை பஸ் தரிப்பு நிலையம் செல்லும் வரை ஒவ்வொரு திருப்பத்திலும் என்னை எவரும் அவதானிக்கிறர்களா? சந்தேகப்படுப்படும்படி போலீசாரோ வேறெவரோ தெரிகிறார்களா? என்பதை பீதியுடன் பார்த்து திரும்புவேன். பஸ்ஸில் கண்டக்டருடன் வீண் உரையாடலைத் தவிர்ப்பதற்காக எப்போதும் மாற்றிய சில்லறைகளை கொண்டுவந்திருப்பேன். சரியாக 4.50 சதத்தைக் கொடுத்துவிடுவேன். என்னிடம் பத்திரிகையில் எழுதுவதற்கான உசாத்துணை நூல்களோ ஆவணங்களோ இருக்கும். சரிநிகர் அலுவலகத்துக்குப் போக கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் ஆகும். அந்த இடைவேளையில் தப்பித்தவறி கூட ஒரு நூலை எடுத்து வாசிப்பதை தவித்துவிடுவேன். எவர் கண்களுக்கும் எனது தமிழ் அடையாளம் வெளித்தெரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பேன். இறங்கும் இடம் வந்ததும் முன் கூட்டியே வாசல் வரை சென்று அந்தக் கதையுமின்றி இறங்கிவிடுவேன். மீண்டும் அலுவலகத்துக்குள் நுழையும் வரை ஒவ்வொரு திருப்பத்திலும் அதே பீதியுடன், படபடப்புடன், சந்தேகத்துடன் தான் போய் சேர்வேன். இத்தனைக்கும் நான் கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட, சிங்களம் தெரிந்த, அரசாங்கம் கொடுத்த ஊடக அடையாள அட்டையையும் கொண்டிருக்கிற ஒரு இளைஞன். நிரபராதி...
இப்போது நான் கேட்கிறேன் தாய்மாரே... என் வயதையொத்த உங்கள் பிள்ளைகள் இப்படித்தான் வாழ்கிறார்களா? இது என் கதையல்ல என்னைபோன்ற லட்சகணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் நாளாந்தம் இத்தகைய பீதியில் தான் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். சராசரி சிங்கள இளைஞர்களின் நாளாந்த வாழ்வுக்கும் தமிழ் இளைஞர்களின் அனுபவித்துவரும் வாழ்வுக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது...”
என்றேன். இந்த உரை பலரின் உணர்வுகளைத் உலுக்கியிருந்தது என்று ஹிரு பத்திரிகையின் நண்பர்கள் அன்று என்னிடம் தெரிவித்தார்கள்.
யுத்தம் முடிந்ததும் சகல இன மக்கள் மத்தியிலும் பரஸ்பரம் இருந்த சந்தேகம் போய்; சரளமாக பழகும் சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. அந்த வாய்ப்பு இப்போது மீண்டும் பறிக்கப்படுகிறது. இப்போது அந்த நிலைமை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பப்படப் போகிறது.
புர்காவை தடை செய்யக் கோரிக்கைகளை இப்போதே தொடங்கி விட்டார்கள். பாராளுமன்றத்தில் பிரேரணையும் செய்யப்பட்டிருக்கிறது. புர்காவுடன் இந்தக் கடைக்குள் நுழையாதீர் என்கிற பதாகைகளை பகிரங்கமாக தொங்கவிடத் தொடங்கியுள்ளார்கள்.
புர்காவை தடை செய்யக் கோரிக்கைகளை இப்போதே தொடங்கி விட்டார்கள். பாராளுமன்றத்தில் பிரேரணையும் செய்யப்பட்டிருக்கிறது. புர்காவுடன் இந்தக் கடைக்குள் நுழையாதீர் என்கிற பதாகைகளை பகிரங்கமாக தொங்கவிடத் தொடங்கியுள்ளார்கள்.
முஸ்லிம்களுக்கு எதிரான “பேரச்ச வெருண்ட உணர்வு” (islamicphobia) ஏற்கெனவே வளர்த்தெடுக்கப்பட்டு இருக்கிறது. ஈஸ்டர் படுகொலைகள் அந்த நிலைமையை உச்சகட்டத்திற்கு நகர்த்தியிருக்கிறது.
இப்போதைக்கு வன்முறை வடிவம் எடுக்காதது நிம்மதியே. ஆனால் இந்த அமைதி இப்படியே தொடரும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.
ஏனென்றால் இப்போது இலங்கை தேசம் “பயங்கரவாதத்தை ஒழித்த” கோட்டாபாயவையும், “முஸ்லிம்களுக்கு எதிரான சித்தாந்தத்தை சமீபகாலமாக கட்டியெழுப்பிய” பிதாமகனான ஞானசாரவையும் மீண்டும் களத்தில் இறக்கவேண்டும் என்கிற பிரச்சாரங்கள் வேகமாக சிங்கள பௌத்தர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ளதை சமூக வலைத்தளங்களின் மூலம் அவதானிக்க முடிகிறது. இத்தகைய சூழலானது சாதாரண முஸ்லிம்களும் சேர்ந்து பலியாக்குவதற்கான நுழைவாசலே.
நன்றி - அரங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...