இலங்கையின் வரலாற்றில் வில்லெம் கைகர் (Wilhelm Ludwig Geiger 1856-1943) தவிர்க்கமுடியாத ஒரு பெயர். அவர் ஒரு கீழ்த்திசை நாடுகளின் மொழியறிஞர். குறிப்பாக இரானிய மற்றும் இந்திய மொழி குடும்பங்களின் பழமையான பண்பாடுகளை ஆய்வுநோக்கில் கற்றுச் சிறந்த இவர், பாளி மொழியிலும் சிறந்து விளங்கினார். அத்துடன் சிங்களம், மாலைத்தீவு மொழி போன்றவற்றிலும் சிறப்பாற்றல் கொண்டவர்.
கைகர் ஆரம்பத்தில் கிரேக்கம், லத்தீன் ஆகிய மொழிகளைப் பற்றி கற்கத் தொடங்கியவர் அதனை இடையில் கைவிட்டுவிட்டு கலாசார கற்கையை முடிப்பதற்காக பிரபல மொழி அறிஞரான பேராசிரியர் பிரெடீக் வொன் ஸ்பீகலிடம் (Friedrich von Spiegel, 1820-1905) சேர்ந்தார். ஸ்பீகல் எழுதிய “கம்மல்வாக்ய” (Kammavâkya Bonn, 1841) என்கிற நூலே ஐரோப்பாவில் வெளியான முதலாவது பாளி மொழி நூல். பாளியில் மேலும் பல நூல்களை எழுதியவர் அவர். ஐரோப்பிய மொழியை விட்டு தூரகிழக்கு நாடுகளின் கலாசாரத்திலும், மொழியிலும் கைகருக்கு ஈடுபாடு ஏற்பட்டது ஸ்பீகலால் தான் என்று அவரின் சுயசரிதத்தில் குறிப்பிடுகிறார். ஸ்பீகலுக்குப் பின்னர் அப்பல்கலைக்கழகத்தில் அவரின் இடத்தை நிரப்பியவர் கைகர். அதே எர்லங்கன் (Erlangen) பல்கலைக்கழகத்தில் இரண்டு சந்தர்ப்பங்களில் அவர் உபவேந்தராகவும் கடமையாற்றினார்.
1895ம் ஆண்டு நவம்பர் 18 ஜெர்மனிலிருந்து கப்பலில் புறப்பட்ட கைகர் டிசம்பர் 6 அன்று இலங்கை வந்து சேர்ந்தார். அவரின் முதலாவது ஆராய்ச்சி ரொடி மக்களின் மொழி பற்றியதாக இருந்தது. ரொடி மக்கள் இலங்கையின் ஓடுக்கப்பட்ட சாதியினராக நாடோடிகளாக வாழ்ந்து வந்தார்கள். 1898 இல் அவரின் “இலங்கைப் பயணக் குறிப்புகள்” (Ceylon: Tagebuchblätter und Reiseerinnerungen) நூலில் இவை பற்றிய விபரங்கள் அடங்கியுள்ளன. இந்தப் பயணமே அவரை தொடர்ந்தும் இலங்கையின்பால் தொடர்ச்சியாக ஆய்வுகளை மேற்கொள்ள ஈர்த்தது.
ஆரம்பத்தில் தனது ஆய்வுகளுக்கான நூல்கள், ஆவணங்கள், ஓலைச்சுவடிகள் என்பவற்றை வஸ்கடுவே ஸ்ரீ சூபித்த தேரரரின் ஊடக பெற்றுக்கொண்டார். 01.11.1902 அன்று அவர் அத் தேரருக்கு பாளி மொழியை சிங்களத்தில் எழுதிய கடிதமொன்றில் மகாவம்சம் பற்றிய குழப்பங்கள் பலவற்றுக்கு பதில் அளிக்க உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அக்கடிதத்தில் தான் மகாவம்சத்தின் வெவ்வேறு வடிவங்களை சில நாடுகளில் இருந்து திரட்டிக்கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக "கம்போடிய மகாவம்சம்" இலங்கையின் மகாவம்சத்தை விட அதிகம் விரிவானது என்று குறிப்பிட்டு தனக்கு தூபவம்சத்தின் பிரதியை பெற்றுத்தருமாறு கோரியிருக்கிறார்.
மகாவம்சம் பற்றிய தனது ஆய்வுக்காக அனுராதபுரம், பொலன்னறுவ, மகியங்கனை, முல்கிரிகல, திஸ்ஸமாராமய, மிகிந்தலை, வேஹெரபெந்திகல, ரிட்டிகல, சீகிரிய, யாபஹுவ, தம்பதெனிய, அருன்கெலே, ரத்னபுர, குருநாகலை, பெழ்மடுள்ள, அம்பலன்தொட்ட, அலுத்னுவர போன்ற வரலாற்று முக்கியத்துமில்ல இடங்களுக்கு சென்று அங்குள்ள தொல்பொருள்கள், ஓவியங்கள், சிற்பங்கள், கல்வெட்டுகள் என்பவற்றை ஆராய்ந்திருக்கிறார். 1926 ஆம் ஆண்டு அவர் இலங்கை வந்த போது தனது மனைவியுடன் சேர்ந்து பராக்கிரமபாகு காலத்தில் தனக்கெதிரான கிளர்ச்சியை அடக்குவதற்கு அவரது படைகள் பயணம் செய்த பாதையில் பயணம் செய்ததாக தனது நாட்குறிப்பில் தெரிவித்திருக்கிறார்.
1905இல் ஜேர்மன் மொழியில் (Die geschichtliche uberlieferung) “தீபவம்சம் மகாவம்சம்: இலங்கையின் வரலாற்றுப் பாரம்பரியம்” என்கிற நூலை வெளிக்கொணர்ந்தார் கைகர். அதை ஈ.எம்.குமாரஸ்வாமி (Ethel M. Coomaraswamy) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து (The Dipavamsa and Mahavamsa and their historical development in Ceylon) 1908ஆம் ஆண்டு கொழும்பில் வெளியானது.
சூலவம்சத்தின் முதற்பாகம் 1925 இலும் இரண்டாம் பாகம் 1927இலும் லண்டனில் ஜேர்மன் மொழியில் வெளியானது. மாபெல் ரிக்நேர்ஸ் (Mabel Rickners) அவற்றை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார்.
மகாவம்ச மொழிபெயர்ப்பு
இலங்கையின் வரலாற்றை அவர் ஆய்வுசெய்யத் தொடங்கியபோது இலங்கையின் வரலாற்றைக் கூறக்கூடிய பிரதான நூலாக கருதப்பட்ட மகாவம்சத்தை பாளி மொழியில் இருந்து ஜேர்மன் மொழிக்கு 1908ம் ஆண்டு காலவரிசைப்படுத்தி மொழிபெயர்த்தார். திருமதி மாபெல் ஹெய்னஸ் போத (Mabel haynes Bode) ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். பின்னர் அவரின் உதவியுடன் மீண்டும் மொழிபெயர்ப்பை சரிசெய்து அதன் பின்னர் 1912ம் ஆண்டு லண்டனில் உள்ள பாளி வெளியீட்டு சங்கத்துக்கு (Pali text society) ஊடாக வெளிக்கொணர்ந்தார். ஒரு வகையில் இதனை “கைகர் மகாவம்சம்” என்று கூட பல நூல்களில் குறிப்பிடுவதை கவனித்திருப்போம்.
மகாவம்ச மொழிபெயர்ப்புக்கான ஆராய்ச்சியின் போது அவர் இலங்கையின் 6 மகாவம்ச பிரதிகளையும், பர்மிய மொழிமகாவம்ச பிரதிகள் இரண்டையும், கம்போடிய மொழி பிரதிகள் இரண்டையும் ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார். இந்த ஒப்பீட்டு பணிகளுக்காக மட்டும் மூன்று வருடங்களை கைகர் செலவிட்டிருக்கிறார். இந்த ஆய்வுக்காக அவர் ஏராளமான ஆவணங்களை சேகரித்து ஒன்றுபடுத்தியிருக்கிறார். இத்தனை ஆராய்ச்சிக்குப் பிறகும் அவர் தனது நூலில் மகாவம்ச மொழிபெயர்ப்பில் தான் முழுமையான திருப்தியை அடையவில்லை என்று செருக்கில்லாத புலமையாளராக ஒப்புக்கொண்டுள்ளார். அதாவது அதனை மேலும் செப்பனிடலாம் என்கிற கருத்து அவரிடம் இருக்கவே செய்துள்ளது.
கைகரின் நூல் அதன் பின் இலங்கையின் வரலாறை ஆராய முற்பட்டவர்களுக்கான பிரதான திறவுகோலாக ஆகியது.
1883 இல் தொன் அன்திரிஸ் த சில்வா பட்டுவந்துடாவ (DON ANDRIS DE SILVA BATUWANTUDAWA) என்பவரைக் கொண்டு ஆங்கிலேய அரசாங்கம் மொழிபெயர்த்த பிரதி வெளிவந்தது. அதன் பின் ஜோர்ஜ் டேனர் (George Turnour) என்பவர் முதலியார் எல்.சீ.விஜேசிங்கவுடன் இணைந்து 1889 இல் பாளியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்து இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். ஆனால் இவை இரண்டிலும் பல மொழிபெயர்ப்புப் பிழைகள் இருந்ததை விளக்கித் தான் கைகரின் மகாவம்சம் வெளியானது. அது மட்டுமன்றி கைகர் மட்டும் தான் மகாவம்சத்தை விஞ்ஞானபூர்வமான வரலாற்று நோக்கில் அதை அணுகினார். இன்றும் சகலரும் கைகரின் மொழிபெயர்ப்பைத் தான் ஏற்றுக்கொள்கிறார்கள். வெறும் மொழிபெயர்ப்பாளராக மட்டுமன்றி அவர் ஒரு வரலாற்று ஆசிரியராக அதனை விமர்சனபூர்வமாகவும் ஆய்வுபூர்வமாகவும் அணுகியதும் ஒரு காரணமாக இருக்கலாம்.
370 பக்கங்களைக் கொண்ட அவரது நூலில் 70 பக்கங்களில் மகாவம்சத்துக்கு “அறிமுகம்” எழுதியிருக்கிறார். அதை மட்டுமே சிறு நூலாகவும் பின்னர் வெளியிட்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு அந்த அறிமுகம் முக்கிய ஆய்வாக கருதப்படுகிறது. மொழிபெயர்ப்பு சிக்கல்கள் பற்றி மட்டுமல்ல மகாவம்சத்தில் காணப்படும் பல முரண்பாடுகளையும், குறைகளையும் கூட அதில் சுட்டிக்காட்டுகிறார்.
அவரது ஆய்வின் முடிவில் அவர் பௌத்த மதத்தின் மீது எப்பேர்பட்ட மதிப்பையும் பற்றையும் வைத்திருந்தார் என்பது அவரது எழுத்தில் இருந்து உணரமுடியும். சிங்களத்தை மட்டுமல்ல பௌத்தத்தின் தொன்மைகளையும் மீட்டதில் அவருக்கு பங்குண்டு என்றே கூறவேண்டும். இத்தனைக்கும் கைகரின் தகப்பனார் (Johannes Leonhard Geiger) ஜெர்மனில் ஒரு கிறிஸ்தவ பாதிரியார்.
“உண்மையைச் சொல்லப்போனால் இலங்கை வரலாற்றின் முக்கியத்துவத்தை ஐரோப்பியர்கள் இன்னமும் சரியாக புரியவில்லை. ஆனால் மனிதகுல வரலாற்றில் அது முக்கியமானதொரு பக்கம்.” என்று தனது “இலங்கைபயணக்குறிப்புகள்” நூலில் குறிப்பிடுகிறார்.
இலங்கைக்கு அவர் 1895 இல் முதற் தடவை வந்திறங்கியதை அவர் விளக்கும் போது
“கருநீல நிற சமுத்திரமும் அதற்குப் பொருந்துகிறபடி வெளிர்நிற கடற்கரையும் மனதைக் கொள்ளைக்கொள்பவை கரைக்கு அப்பால் கண்ணில் தெரிந்த பரந்த நிலம் தென்னையால் மூடியிருந்தது...”
கொழும்பிலிருந்து கல்கிஸ்ஸவுக்கு ரயில் பயணத்தை மேற்கொண்டபோது..
“... இதுவரை கனவுலகில் மட்டுமே என்னை ஆட்கொண்டிருந்த வர்ணநிறங்களில் இந்தப் பகுதியின் மரங்களைக் கண்டேன். சூழத் தெரிந்த அத்தனையும் கடும் பச்சை நிறத்தில் காணப்பட்டது....”
கைகரை மகாவம்சத்தை பாளி மொழியிலிருந்து வெளிக்கொணர்ந்தவர் என்று மட்டும் தான் பலர் அறிந்திருப்பார்கள். ஆனால் அது மட்டுமன்றி சூலவம்சம் (ஜெர்மன், ஆங்கிலம் இரு மொழிகளிலும்), ரசவாகினி, சங்யுக்த நிக்காய, சிங்கள அகராதி உட்பட இன்னும் பல மொழிபெயர்ப்புகளையும், நூல்களையும் கொண்டுவந்திருகிறார். வேடுவ மொழி, ரொடி உப மொழி, சிங்களம், பாளி மற்றும் சிங்கள கலாசாரம், இலக்கியம், அதன் இலக்கணம், வரலாறு, மொழி, கலை, பௌத்த இலக்கியங்கள், இந்திய தொல்பொருள், பூகோள சாஸ்திரம், அகராதியாக்கம் என பல்துறை அறிஞராக அவர் இருந்திருக்கிறார்.
சிங்கள மொழியானது திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்கிற ஒரு கருத்து பரவலாக இருந்துவந்த காலத்தில் அது அப்படி இல்லை என்று தனது ஆய்வுகளின் மூலம் உறுதிபடுத்தினார் கைகர். அப்படி அது நிரூபிக்காது போயிருந்தால் பிற் காலத்தில் ஈழப் போராளிகளுக்கு மொழி ரீதியாக சிங்களத்தை தன்னுள் இழுத்துக்கொள்ள வாய்ப்பிருந்திருக்கும் என்று சிங்களவர்கள் பிற்காலத்தில் கூறினார்கள். சிங்கள மொழியை ஐரோப்பியர்களுக்கு அறிமுகப்படுத்திவர்களில் முக்கியமானவராக கைகர் கருதப்படுகிறார். அவரது இறுதிக் காலத்தில் அவர் சிங்கள அகராதியை ஆக்குவது, இலக்கண நூலை எழுதுவது என்பவற்றில் செலவழித்தார்.
மகாவம்சத்தை அவர் நேர்த்தியாக ஒப்பேற்றிய வெற்றியின் காரணமாக அன்றைய ஆங்கிலேய அரசு சூலவம்சத்தை மொழிபெயர்ப்பதற்கும், தொகுப்பதற்கும் கைகரை இலங்கைக்கு அழைத்தது. 1926இல் மீண்டும் இலங்கை வந்து அதனை முடித்தார்.
மகாவம்சம் ஒரு வீரகாவியம் என்றார் கைகர். அது அந்தக் கலைப் படைப்பாளரின் பிரதியாகவும் பார்க்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். அதே வேளை அவர் “அதில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றது என்பதைவிட என்ன சொல்லப்படாமல் மறைக்கப்பட்டிருக்கின்றது என்பதை ஆராய்வதே மிகவும் சிரமமான பணி.” என்பதை சொல்லத் தவறவில்லை.
கைகரைப் பற்றி ஆய்வு செய்பவர்கள் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கிய பகுதி அவர் இலங்கை வந்த காலச் சூழலில் இருந்த இலங்கையின் அரசியல், சமூக நிலை.
இந்தக் காலப்பகுதியில் தான் பௌத்த மறுமலர்ச்சி காலப்பகுதி. ஒல்கொட் தலைமையில் பிரம்மஞான சங்கம் இலங்கையில் பௌத்த எழுச்சியில் பாரிய பங்காற்றிய காலம்., மிகெட்டுவத்த ஸ்ரீ குணானந்த தேரர், ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரர், அநகாரிக்க தர்மபால, வலிசிங்க ஹரிச்சந்திர, பியதாச சிறிசேன போன்ற தீவிர சிங்கள பௌத்தத் தலைவர்கள் இயங்கிய காலம். ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், மிஷனரிகளுக்கு எதிராகவும் சுதேசிகள் எழுச்சி கொண்ட காலம். இப்பேர்பட்ட சூழலில் இலங்கையின் சிங்கள பௌத்தத்தின் தொன்மையை தூசு தட்டி வெளிப்படுத்த கைகருக்கு கிடைத்திருக்கக் கூடிய ஆதரவும், ஒத்தாசையும் கவனத்திற் கொள்ளலாம். அதுபோல இந்த சுதேசிய எழுச்சி கைகரின் கவனத்தையும் ஈர்க்கத் தவறவில்லை. அவரது “Unter Tropische Sonne” (சூரிய வெப்பத்தின் கீழ் 1930) என்கிற நூலில் இலங்கையின் அரசியல், சமூக, ஆன்மீக, சூழலியல் விடயங்களைப் பற்றி நிறைய பேசுகிறார். அப்போது அவர் 74வயதைக் கடந்திருந்தார்.
கைகரின் சகல நூல்கள் பல ஆங்கிலத்தில் மட்டுமல்ல சிங்கள மொழியிலும் இன்று கிடைக்கின்றன. ஆனால் தமிழில் மகாவம்சத்தைத் தவிர வேறெதுவும் வெளிவந்ததில்லை. கைகரின் பணிகள் பற்றிய ஆய்வுகளை இன்னும் பல்கலைக்கழகங்களில் செய்துகொண்டு தானிருக்கிறார்கள். 1943 இல் அவர் தனது 87வது வயதில் ஜெர்மனியில் இறந்தபோது மகத்தான சாதனைகளை விட்டுவிட்டுச் சென்றிருந்தார். குறிப்பாக இலங்கையின் வரலாற்றை மீள் கண்டுபிடிப்பு செய்ததில் அவரது பங்கு அளப்பரியது.
1989ம் ஆண்டுகளின் இலங்கை அரசு, கைகரின் உருவத்தைதைக் கொண்ட தபால்தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியது. இலங்கை வரலாற்றில் இவரது வில்ஹெல்ம் கைகரின் அழியாதப் பெயராக நிலைத்து விட்ட ஒன்றாகும்.
கிட்டத்தட்ட அவர் எழுதிய 26 நூல்களை பட்டியலிட்டுள்ளது “தென்னாசியக் கற்கைக்கான இங்கிலாந்துப் பேரவை”
கைகர் எழுதிய நூற்றுக்கணக்கான நூல்களில் இலங்கை சார்ந்த நூல்களை இப்படி பட்டியலிடலாம்.
அவற்றில் இலங்கை சார்ந்து அவர் எழுதிய நூல்களே அதிகம்
- “தீபவம்சம் மகாவம்சம்: இலங்கையின் வரலாற்றுப் பாரம்பரியம்” (1905)
- மகாவம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு (1908)
- சிங்களத்தின் மகாவம்சக் கதை எனும் மகாவம்சம் (1912)
- ரசவாகினி மொழிபெயர்ப்பு (1918)
- சங்யுக்த நிக்காய (1925)
- சூலவம்சம் - ஜேர்மன் மொழிபெயர்ப்பு 1-2(1925-1927)
- சூலவம்சம் ஆங்கில மொழிபெயர்ப்பு 1-2(1929-1930)
- சிங்கள மொழி அகராதி (1930)
- சிங்கள மொழி இலக்கணம் (1938)
- சிங்கள மொழி உளவியல் கலைக்களஞ்சியம் (1941)
- Ceylon. Tagebuchblätter und Reiseerinnerungen (இலங்கை டயரித் தாள்களும் பயண நினைவுகளும்) (1898)
- Unter Tropische Sonne (சூரிய வெப்பத்தின் கீழ்) (1930)
நன்றி - அரங்கம்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...