Headlines News :
முகப்பு » , , , » சிங்களத்தின் "தீட்டும்", பௌத்தத்தின் "துடக்கும்" - என்.சரவணன்

சிங்களத்தின் "தீட்டும்", பௌத்தத்தின் "துடக்கும்" - என்.சரவணன்


மே தினம் பின் போடப்பட்டுள்ளது. இம்முறை சர்வதேச மே தொழிலாளர் தினத்தை அதே தினம் அனுஸ்டிக்காமல் எதிர்வரும் மார்ச் 07 அன்று நடத்துவது குறித்து அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் அன்றைய மே 07 அன்று போது விடுமுறையாக அறிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். மகாசங்கத்தினரின் வேண்டுகோளிற்கிணங்கவே இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாகவும் மார்ச் 27ஆம் அன்று அறிவித்தார். 


உலகத் தொழிலாளர் தினத்தை அன்றே செய்யவிடாமல் இப்படி ஒத்திவைப்பு செய்யும் கேலிக்கூத்து பௌத்த மதத்தின் பேரால் நிகழ்கிறது என்பது இங்கு முக்கியமானது. இது இந்த நாட்டிலுள்ள வேறெந்த மதத்தவருக்கும் கிடைக்காத வரப்பிரசாதம். சலுகை. இத்தனைக்கும் பௌர்ணமி வருவது கூட ஏப்ரல் 29ஆம் திகதி தான். 

வெசாக் நாள் என்பது புத்தர் பிறந்த நாள். அவர் இறந்த நாளும் கூட அதேவேளை புத்தர் விஜயனிடம் அடுத்த 5000 வருடங்களுக்கு இலங்கை தான் பௌத்தத்தக் காக்கும் என்று கூறி விஷ்ணு கடவுளுக்கு ஊடாக விஜயனுக்கு பிரித் நூலைக் கட்டி பௌத்தத்தை ஒப்படைத்த நாளாகக் வெசாக் நாளை குறிப்பிடுகிறார்கள்.. அன்றிலிருந்து தான் “சிங்கள பௌத்த” இனம் தோற்றம் பெற்றதாகக் சிங்கள பௌத்தர்களால் கூறப்படுகிறது. அப்பேர்பட்ட “சிங்கள பௌத்த புனித நாளில்” எந்த பொது நிகழ்வைச் செய்வதற்கும் எவருக்கும் இடமில்லை என்கிற பிரகடனமாகவே கொள்ள வேண்டியிருக்கிறது.

மேற்படி கட்டுக்கதைகளை மகாவம்சத்தைத் தவிர வேறெந்த பௌத்த நூல்களும் தெரிவிக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. வெசாக் நாளைக் கொண்டாடும் நேபாள், பூட்டான், சிங்கப்பூர், தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, மியான்மார், சீனா, ஜப்பான், கொரியா, தைவான், வியட்நாம் உள்ளிட்ட எந்த நாடும் பௌத்தத்தை காப்பதற்காக இலங்கைக்கு 5000 குத்தகைக்கு கொடுத்த ‘ஏகபோக” கதையை எற்றுகொண்டதில்லை என்பதும் கவனிக்கத் தக்கது.

மகாவம்சத்தில் இருக்கும் இரு வருகைகள் பற்றிய புனைவுகள் பற்றி பகிரங்கமாக பேச வேண்டியிருக்கிறது. ஒன்று விஜயனின் வருகை, மற்றது புத்தரின் வருகை. இவை இரண்டும் “சிங்கள பௌத்த” பூர்வீக உரிமைகோரலுடன் எப்படி முரண்படுகின்றன என்பதைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது.

இலங்கை சிங்கள பௌத்தர்களின் நாடு என்றும் ஏனையோர் வந்தேறு குடிகள், அந்நியர் (பறயா), கள்ளத் தோணிகள் என்றெல்லாம் நிறுவப்பட்டுள்ள ஐதீகத்தை இன்று தர்க்க ரீதியில் கேள்விக்குள்ளாக்க வேண்டியிருக்கிறது.


எது அந்நியம்? எவர் அந்நியர்?

அந்நியர்களை“பற தேசீன்” என்று சிங்களத்தில் அழைப்பார்கள். அதே “பற” (பிறர்) என்கிற அடைமொழியுடன் சேர்த்து “சுத்தா” (அந்நிய வெள்ளையர்களே) என்றவர்கள் பின்னர் காலப்போக்கில் பற தெமலா? பற ஹம்பயா?  என தமிழர்களையும் முஸ்லிம்களையும் பார்த்து வெறுப்புமிழ்வதை கண்டிருக்கிறோம். “பற” என்கிற பதத்தின்  பூர்வீகத்துக்கு உண்மையான சொந்தக்காரர்கள் “சிங்கள” + “பௌத்தர்கள்” தான் என்று சிங்கள பௌத்தர்களே தமது புனித வரலாற்றுக் காவியமாக  போற்றும் மகாவம்சம் தருகிறது ஆதாரம். அப்படி இருக்க அந்தத் தர்க்கம் உண்மையானால் “பற சிங்களயா” என்று தமக்குத் தாமே சுய அடையாளம் சூட்டவேண்டியவர்கள் அவர்களே. சுய வெறுப்பும் அங்கிருந்து தொடங்க வேண்டும்.

நமது நாட்டுக்குள் இந்தியாவில் இருந்து கொண்டு வந்து சேர்த்தது தான் பிரதான மதங்கள், பண்பாடு, கலை, கலாசாரம், உணவு, உடை சடங்கு, சம்பிரதாயங்கள், பழக்க வழக்கங்கள் அனைத்துமே இலங்கைக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்பட்டவற்றால் தான் நிறுவப்பட்டிருக்கிறது.

விஜயன் தொடக்கம் பல்வேறு ஆக்கிரமிப்பாளர்கள் காலத்துக்கு காலம் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். அதன் பின் மன்னர்கள் பலர் இந்தியாவில் பெண் எடுத்து, மணம் முடித்து வந்திருக்கிறார்கள். இவற்றின் போதெல்லாம் பல்லாயிரக்கணக்கானவர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். பின்னர் காலனித்துவ காலத்திலும் இந்திய வம்சாவழி மக்களின் மூலம் நிறையவே பண்பாட்டு பரிமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இன்றைய சமகாலத்தை எடுத்துக் கொண்டால், இலங்கைத் தொலைக்காட்சிகளையும், திரைப்பட அரங்குகளையும் ஆக்கிரமித்திருக்கும் திரைப்படங்கள், தொடர் நாடகங்கள், விளம்பரங்கள், என்பனவற்றுடன் இந்திய நாட்டு நடப்புகளும், அரசியலும் கூட வந்து கருத்தாதிக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இன்று சிங்கள பௌத்த பண்பாட்டு அம்சங்கள் என்று சொல்லக்கூடிய அனைத்தும் இலங்கையின் பூர்வீகம் தான், இலங்கையின் பாரம்பரிய முதுசம் தான் என்று எவராவது சொல்வாராயின் அது கேலிக்குரிய ஒன்றாகத் தான் எஞ்சும்.

இன்றைய சிங்கள பௌத்தர்கள் பலரின் பெயர்களில் அதிகமாக கலந்திருப்பது போர்த்துக்கேய, ஒல்லாந்துப் பெயர்கள் தான் (பெர்னாண்டோ, பெரேரா, மென்டிஸ், பொன்சேகா, ரொட்ரிகோ, அல்மேதா போன்றவை உதாரணங்கள் ) என்பதையும் இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

சிங்க “லே” பூர்வீகம்

சிங்கள வம்ச உருவாக்க பூர்வீகம் பற்றிய கதைகளில் மிகவும் புனைவுமிக்க, கேலிக்குரிய மூன்று விடயங்களைப் பற்றி விளக்கி பிரபல சிங்கள அறிஞரான காமினி வியங்கோட ஹிரு தொலைகாட்சி சேவை நடத்திய ஒரு விவாதத்தின் போது எதிரணிகளை போட்டு பந்தாடினார். இந்தக் கருத்தை நாம் சொன்னால் வினையாகிவிடும் என்பதால் அவர் என்ன கூறினார் என்பதையே இங்கு தருகிறேன்.

“காட்டுக்குள் நடந்து போய்க்கொண்டிருந்த சுப்பாதேவி அங்கிருந்த சிங்கத்தைக் கண்டு ஆசைப்பட்டு குகைக்குச் சென்று ஆலிங்கனம் செய்துகொள்கிறாள். இந்த மனிதப் பிறவிக்கும் மிருகத்தும் பிறந்தவர்கள் தான் சிங்க பாகுவும், சிங்க சீவலியும்.
மனிதர்கள் மிருகத்துடன் உடலுறவு கொள்வது நமது குற்றவியல் சட்டத்தின் ஏதோ 304வது பிரிவின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம். அந்த வகை குற்றத்தை நாங்கள்  பெஸ்டியாலிட்டி (Beastiality) என்போம்.
அதன் பின்னர் இந்த சிங்கபாகு தன்னைப் பெற்ற தந்தையை படுகொலை செய்கிறான் (பீத்று காதனய). இரண்டாவது குற்றம்.
அதன் பின்னர் இந்த சிங்கபாகு சும்மா இருக்கவில்லை. தன்னோடு ஒன்றாக ஒரேநேரத்தில் கூடப் பிறந்த சகோதரியை தனது மனைவியாக்குகிறான். இதனைத் தான் நாங்கள் Incest என்கிறோம். அதாவது குடும்ப இரத்த உறவுகளுக்குள் பாலுறவு கொள்தல். இதுவும் நமது குற்றவியல் சட்டத்தின்படி குற்றம்.
ஆக இதைத் தான் “சிங்க  - லே” (சிங்க இரத்தம்) என்கிறோமா. இந்த கேடுகெட்ட குற்றங்களைப் புரிந்து தான் சிங்கள இனம் உருவானதா? வெட்கப்படவேண்டாமா? எங்களிடம் ஓடுவது அந்த இரத்தம் தான் என்று சொல்லிக்கொள்வதில் பெருமிதம் வேறா...?” என்கிறார்.

விஜயன் சிங்கத்தின் பேரன் அல்ல என்றும், சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல் அல்லர் என்றும் கூறவேண்டிய நிர்ப்பந்தமும் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் தோன்றியுள்ளது. ஆகவே அவர்கள் மத்தியில் இன்னொரு போக்கும் கடந்த இரு தசாப்தகாலமாக வலுத்து வருகிறது. அதாவது தாம் சிங்கத்தின் வம்சம் அல்ல, இராவண வம்சம் என்கிற இன்னொரு கதை. சமீப காலமாக சிங்களவர்களின் பூர்வீகத் தலைவனாக இராவணனை நிறுவுகின்ற ஆய்வுகளும், புராதன கதைகளும், புனை கதைகளும் அடங்கிய சிங்கள நூல்கள் நூற்றுக்கணக்காவை வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கலாம். இராவணன் பெயரில் பல அமைப்புகளும் கூட உருவாகியுள்ளன.

விஜயன் பற்றிய புனைவுகளை மறுத்து இராவணனை ஏற்றுக்கொண்டால் அவர்களின் புனித நூலான மகாவம்சத்தை நிராகரிக்க வேண்டும். ஆனால் அதற்கு சிங்கள பௌத்தம் தயாரில்லை. பல்லாயிரம் வருடங்களுக்கு முந்திய பூர்வீகக் குடிகள் சிங்களவர் என்கிற புனைவை நிலைநாட்ட இப்போது இராவணன் தேவைப்பட்டுள்ளார். இதுவரை தாம் ஆரியர் பரம்பரை என்று கூறி வந்தவர்கள் இப்போது திராவிட பூர்வீகத்தைக் கொண்டவர்கள் என்றும் கூறியாகவேண்டும். ஆனால் அதில் அரசியல் சங்கடம் நிறைந்துள்ளது. கூடவே தமிழர்களை சிங்களத்தில் “திரவிட” (திராவிடர்) என்று தான் பொதுவில் அழைத்து வருவதை நாம் அறிவோம்.


சிங்கள இனம் தோன்றி 2500 வருடங்களை முன்னிட்டு விஜயன் கரையிறங்கிய போது குவேனியை சந்திப்பதை சித்தரிக்கும் ஓவியத்தைக் கொண்ட  மூன்று சத அஞ்சல் முத்திரை, 23/05/1956 இலங்கையில் வெளியிடப்பட்டது. இது ஒரு வகையில் முதலாவது கள்ளத்தோணி என்பதை நிறுவி விடும் என்று நினைத்தார்களே என்னவோ 01/10/1966 அன்று அந்த முத்திரை வாபஸ் பெறப்பட்டு நிறுத்தப்பட்டது.

சிங்களத்தைக் கொண்டுவந்தவர் விஜயன் என்றால், பௌத்தத்தைக் கொண்டுவந்தவர் மன்னர் அசோகனின் மகன் மகிந்தன். சிங்கள மொழி கூட இந்திய மொழிகளின் கலவை தான்.

சண்டா அசோகனாக ஆக்கிரமிக்க முடியாது போன இலங்கையை தர்ம அசோகனாக ஆக்கிரமித்தான் என்றும் ஒரு தர்க்கத்துக்குக் கூறுபவர்களும் உள்ளார்கள். (“சண்டாள அசோகன்” என்பது அசோகன் பல கொன்றொழிப்புகளைப் புரிந்து ஆக்கிரமிப்புப் போர்களை நிகழ்த்திய காலத்தில் சூட்டப்பட்ட பெயர் அது. அரியணைச் சண்டைக்காக கூடப் பிறந்த 99 சகோதரர்களையும் கொன்றொழித்தான் அசோகன்.)

கி.மு ஐந்து நூற்றாண்டுக்கு முன்னர் சிங்கள பௌத்தர்கள் தோன்றியதாகக் கூறும் மகாவம்சம் மூன்றாம் நூற்றாண்டில் தான் மகிந்தன் மூலம் இலங்கையில் பௌத்தம் நிருவப்பட்டதாகக் கூறுகிறது. “சிங்கள மொழி உருவானது கிட்டத்தட்ட கி.பி. 6ம் நூற்றாண்டில் தான். அதற்கு முன்னர் மொழி ரீதியாக சிங்களவர்கள் என அழைக்கப்படும் மக்கள் கூட்டம் இந்த நாட்டில் வாழ்ந்ததாக ஆதாரங்கள் இல்லை.

கி.பி.2ம் , 3ம் நூற்றாண்டாம் காலப் பகுதியில் தமிழ் மக்கள் பௌத்தர்களாக மாறி இருந்தார்கள் என்பதற்கு தொல்பொருள் சான்றுகள் உண்டு. அக்காலத்தில் “சிங்கள பௌத்தர்கள்” வாழ்ந்தமைக்கு இடமே இல்லை. இது பற்றி பேராசிரியர் சுனில் ஆரியரட்ன  தனது " தெமழ பௌத்தயா" (தமிழ் பௌத்தர்) என்கிற சிங்கள நூலில் விரிவாக விலகியிருக்கிறார்.

தேச பக்தர்களே இங்கு தேசியம் எங்கே? சுதேசியம் எங்கே?

வல்பொல கல்யாணதிஸ்ஸ மஹா தேரோவின் உபதேச உரையொன்றின் காணொளியொன்றைக் காணக் கிடைத்தது.

“பௌத்த பிக்குவாக ஆகப்போகிறவருக்கு தீட்சை வழங்குவதற்கு (“உப்பசம்பதா”) அதிகாரமுள்ள ஒரு பீடம் இலங்கையில் இருக்கவில்லை. அதற்காகவென்றே முதன் முதலில் இலங்கையிலிருந்து சீயத்திற்கு (தாய்லாந்து) போய் அங்கிருந்து அதிகாரமுடைய பௌத்த பிக்குகளை வரவழைத்தார்கள். முதன் முதலில் சீயம் நிக்காய அப்படித்தான் தோன்றியது. அதன் பின்னர் பர்மாவுக்குச் சென்று தீட்சை பெற்று வந்து அமரபுர நிக்காயவை உருவாக்கினார்கள். இன்னொரு குழு மீண்டும் பர்மாவுக்கு விரைந்து அங்கு தீட்சைப் பெற்று ராமன்ய நிக்காயவை அமைத்துக்கொண்டனர். “சிங்கள நிக்காய” என்று இன்று வரை இலங்கையில் தோற்றுவிக்கப்பட்டது கிடையாது. அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டது. பௌத்தரும், விஷ்ணுவும், கந்தனும் வெளியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடவுளரே”
பூர்வீக தேசிய மதம் என்ற ஒன்று இலங்கையில் உண்டா? தேசிய இனம் என்று தான் ஒன்று உண்டா? பௌத்தமும், சிங்களமும் இந்த நாட்டின் பூர்வீக அடையாளமா? ஒருவகையில் இவை இரண்டும் கூட ஆக்கிரமிப்பின் எச்சங்கள் அல்லவா? பிறகென்ன இதில் உள்ள புனிதம். அப்படி என்றால் இந்த நாட்டின் பூர்வீக இன, மத அடையாளங்கள் எவை? இந்தத் தீவின் பூர்வீகக் குடிகளுக்கு என்ன நிகழ்ந்தது? இந்த “மண்ணின் மைந்தர்களின்” உண்மையான பூர்வீக பண்பாட்டு மூலங்கள் எங்கே? அவற்றை அழித்தவர் எவர்? அந்நிய அடையாளங்களை பிரதியீடு செய்தவர் யார்?


இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு அகதித் தஞ்சம் தேடி இலங்கையில் குடியேறிய "சட்டவிரோத குடியேற்றவாசியாக" விஜயனையும் கூட வந்த குற்றவாளிக் கூட்டாளிகளையும் தான் கூற முடியும். தஞ்சம் கொடுத்த இந்தத் தீவின் ஆதிவாசிகளைக் கொன்று சிம்மாசனம் ஏறிய விஜயன் குவேனியையும் கைவிட்டு தனக்கும் தனது கூட்டாளிகளுக்குமாக பாண்டிய நாட்டிலிருந்து பெண்ணெடுத்து வந்து தளைத்தது தானே சிங்கள இனம். (விஜயனுக்கும் பாண்டிய இளவரசிக்கும் பிள்ளைகள் பிறக்கவில்லை என்கிறது மகாவம்சம்) ஆக இதில் எங்கே சுதேசியம் இருக்கிறது. மகாவம்சம் தரும் தகவல்களைக் கொண்டு பார்த்தால் இலங்கையின் முதல் கள்ளத் தோணிகள் சிங்களவர் என்றல்லவா தர்கிக்க முடிகிறது.


நாடு அந்நியர் கைகளில் சிக்காமல் அது வரை அந்நியருடன் போரிட்டு காத்து வந்த ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனை 1815இல் வெள்ளையரிடம் காட்டிக் கொடுத்து நாட்டையும் அவர்களிடம் பறிகொடுத்தவர் யார்? ஆக, நாட்டைக் காத்த விதேசி யார், காட்டிக்கொடுத்த சுதேசி யார் என்பதை வரலாறு சான்று பகர்ந்துள்ளது.

இலங்கையில் சுதேசியத்தையும், பூர்வீகக் குடிகளையும் தேடித் போவதாயின் மஹியங்கனைக்குத் தான் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் எஞ்சிய தேசியத்தையாவது காண நேரிடலாம். அவர்களிடமும் காலகாலமாக கலந்து திரிக்கப்பட்டது போக எஞ்சியதைத் தான் நமது பாரம்பரிய பண்பாடு என்றும், முதுசம் என்றும் கூற முடியும்.

இனத் தூய்மை என்பது இன்றைய உலகில் சாத்தியந்தானா என்கிற கேள்வி வலுவாக இருக்கும் போது இனப் புனிதத்தன்மைக்கு என்ன உத்தரவாதம் எஞ்சியிருக்கிறது.

இலங்கை இனக்குழுமங்களின் மூல மரபு எதுவென ஆராய்ந்த மரபணுப் பரிசோதனைகள் பலவும் கூட சிங்களவர்களும், தமிழர்களும் இந்திய பின்னணியைச் சேர்ந்தவர்களே என்று நிரூபித்திருக்கின்றன. (Journal of Human Genetics 59(1) · November 2013)


"புத்தரின் இலங்கை விஜயம்" கட்டுக்கதை?
பௌத்த நாடு என்கிற கருத்தை ஸ்தூலமாக விதைக்க மகாவம்சத்திலிருந்து தரும் இன்னொரு கட்டுக்கதை புத்தர் மூன்று தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்தார் என்பது.

அந்த மூன்று சந்தர்ப்பத்திலும் அவர் இலங்கையில் நிகழ்ந்த சண்டைகளை நிறுத்துவதற்கான சமாதானத் தூதுவராகத் தான் வந்து சென்ருக்கிறார் என்று மகாவம்சம் கூறுகிறது. முதலாவது தடவை நாகர்களுக்கும் யக்ஷகர்களுக்கும் இடையில் நிகழ்ந்த சண்டையை தீர்த்து வைப்பதற்காக வருகிறார் (மஹியங்கனை). இரண்டாவது தடவையும் நாகர்களுக்குள் ஏற்பட்ட சொத்துச் சண்டையை தீர்ப்பதற்காக வந்தார் (நாகதீபம்), மூன்றாவது தடவை களனிக்கு வந்து அங்கு நடந்த சண்டையை தனது உபதேசதிற்கூடாக தீர்த்து வைத்தார் என்கிறது மகாவம்சம். இந்த மூன்று விஜயங்களின் போது இலங்கையில் அவர் 16 இடங்களுக்கு விஜயம் செய்திருப்பதாகவும் கூறுகிறது.


இதையும் மகாவம்சத்தைத் தவிர எந்த பிரதான பௌத்த நூல்களும் குறிப்பிட்டதில்லை. புத்தரின் வாழ்வையும் அவரின் போதனைகளையும் கூறும் ஆதார நூலான “திரிபீடகம்” நூல்களில் கூட இந்த விபரங்களும் எதுவும் இல்லை. குறைந்தபட்சம் இந்த பயணங்களில் கடந்திருக்கக் கூடிய தென்னிந்திய பகுதிகளுக்கு புத்தர் விஜயம் செய்ததாகக் கூட எந்த குறிப்பும் இல்லை. தமிழ்நாடு போன்ற தென் பகுதிகளுக்கு கூட விஜயம் செய்யாத புத்தர் இலங்கைக்கு வந்தார் என்பது வெறும் கட்டுக் கதை என்று பல ஆதார்ணக்லடன் பலரும் உறுதிசெய்துவிட்டனர். இலங்கையின் முக்கிய தொல்பொருள் நிபுணராகப் போற்றப்படும் பேராசிரியர் பரணவிதான கூட புத்தரின் இலங்கை விஜயத்தை ஆதாரபூர்வமாக மறுத்திருக்கிறார்.

புனைவுகளால் புண்ணிய பூமியாக புனிதப்பட்டது?

இனவாதமயப்படுத்தப்பட்ட மக்களுக்கு மீண்டும் மீண்டும் உறுதியான ஐதீகங்களும், அதன்பாற்பட்ட சமன்பாடுகளும் நிறுவப்பட்டுள்ளன. அவை வாய்ப்பாடாக பல கட்டுக்கதைகளின் மூலம் சிந்தனைகளில் ஏற்றப்பட்டுள்ளன. இனவாத விஷத்துக்கு ஆட்பட்ட சிங்களப் பாமரர்கள் இந்த வாய்ப்பாடுகளின் மூலம் தான் கணக்குபோட்டுக்கொள்கிறார்கள். ஐதீகங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட நம்பிக்கைகள் ஏனைய சமூகங்களுக்கு எதிரான ஆயுதங்களாக ஆக்கப்பட்டுள்ளன. மோசடிமிக்க வரலாற்றுத் திரிபுகள் பெருங்கதையாடல்களாக நிலைநாட்டப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் ஏனைய சமூகங்களை வாழவிட்டிருப்பதே தமது பெருந்தன்மை / தயவு என்று நம்ப வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். 

சிங்கள பௌத்தம் தன்னை சுயவிமரசனத்துக்கு உள்ளாக்குவதற்குப் பதிலாக சிறுபான்மை சமூகங்களிடம் சகிப்புத் தன்மையைக் கோருவது என்ன நியாயம். இப்போதும் சகிப்பும், சமரசமும் செய்து கொண்டு போவதே நல்லிணக்கம் என்றும் ஜனரஞ்சகமாக போதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.

புனைவுகளாலும் புரட்டுகளாலும் கட்டமைக்கப்பட்ட கருத்துருவாக்கத்துக்கு போலியாக உயிர்கொடுத்து ஒரு அழகான தேசத்தை துவம்சம் செய்துகொண்டிருப்பதை இந்தத் தீவு இனி எத்தனைக் காலம் தான் பொறுத்திருக்கும்.

நன்றி - தினக்குரல்

மேலதிக வாசிப்புக்கு இன்னொரு பரிந்துரை

சிங்கத்திலிருந்து சிங்களம் வரை - என்.சரவணன்


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates