"ஈஸ்டர் படுகொலைகள்: முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளப் போகும் சிக்கல்கள்!" என்கிற கட்டுரைக்கு சகோதரி அப்துல் ஹக் லறீனா முன்வைத்த கருத்துக்காண பதில்
//“இஸ்லாத்துக்கும் இவர்களின் நடவடிக்கைகளுக்கும் எந்த தொடர்புமில்லை. நாம் இவர்களை கண்டிக்கிறோம்", என்பதெல்லாம் இந்த நிலைமையை மாற்றிவிடப்போவதில்லை. “முஸ்லிம்கள் தவிர்ந்தவர்கள் காபிர்கள், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது, அதுவே ஒவ்வொரு முஸ்லிமுடைய புனிதக் கடமை. சிறந்த மறுமையை அடைய அதுவே சிறந்த வழி” என்று அதே இஸ்லாத்திலிருந்து தான் "தேசிய தவ்ஹீத் ஜமாஅத்" தலைவர் சஹ்ரான் மேற்கோள் காட்டுகிறார் என்றால் அதனை ஏனைய முஸ்லிம்கள் மறுத்து, எதிர்த்து இயங்கியிருக்கவேண்டும். // என்கிறீர்கள் அண்ணா.
அந்த நபரது தீவிரவாதக் கருத்துக்களை மறுத்தும் எதிர்த்தும் அவரது சொந்த ஊரைச் சேர்ந்த காத்தான்குடி முஸ்லிம் ஆண்களும் பெண்களும் தெருவுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்தார்கள். முஸ்லிம் கவுன்ஸில் உள்ளிட்டு முஸ்லிம் சமூகத்தில் இருந்து குறித்த நபருக்கு எதிராகப் பல முறைப்பாடுகளும் செய்து இருக்கிறார்கள். இருந்தும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியவர்கள் அவற்றை எல்லாம் காதிலேயே போட்டுக் கொள்ள வில்லை. விஷக் கிருமி பரவும் வரை இடமளித்து வாளாவிருந்து விட்டார்கள். உண்மை நிலை இப்படி இருக்கையில், முஸ்லிம் சமூகம் அதைவிட வேறென்ன பெரிதாகச் செய்துவிட முடியும்? சட்டத்தைத் தன் கையில் எடுக்கவா முடியும்?
தவிர, இஸ்லாம் தீவிரவாதத்தையோ பயங்கரவாதத்தையோ ஒரு போதும் ஆதரிக்கவில்லை என்பதை ஏனைய முஸ்லிம் மௌலவிமார் தொடர்ந்தும் உரையாற்றித் தான் வந்துள்ளார்கள். அவை தமிழில் இருப்பதனால் பெரும்பான்மை மக்களை அடையவில்லை என்பது எப்படி முஸ்லிம் மக்களின் பிழையாகும்? தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திற்குள் சிந்தனை மாற்றத்தை ஏற்படுத்த நான் உள்ளிட்ட பலரும் தொடர்ந்தும் இச்சமூகத்தின் குறைபாடுகளை விமர்சித்து எழுதித்தான் வருகிறோம். ஆனால், அவை அனைத்தும் பெரும்பாலும் தமிழில் அமைந்துள்ளன. யாருக்குப் பேசுகிறோமோ அவர்களின் மொழியில் - தமிழில் - நாம் பேசுவதுதான் இயல்பும் நியாயமும்கூட. ஆக, இது தமிழ் மொழி தெரியாத சிங்களப் பெரும்பான்மை யினருக்குத் தான் விளங்கவில்லை என்றால், உங்களுக்குமா விளங்கவில்லை Sarawanan Komathi Nadarasa அண்ணா? முஸ்லிம்கள் ஸஹ்ரானின் நிலைப்பாட்டுக்கு எதிராக எந்தக் கதையாடலையும் நிகழ்த்தவோ, மாற்றுத் தரப்புக் கருத்தை முன்னிறுத்தவோ இல்லை என்பதான தொனி உங்கள் மேற்போந்த வரிகளில் தொனிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது, அண்ணா?
அன்புக்குரிய சகோதரி லறீனா அவர்களுக்கு!
மேற்படி நீங்கள் பதிவிட்டிருந்த கருத்தைக் கவனித்தேன். இதை நீங்கள் கூறியதால் இந்த கேள்விக்கான பதிலை அளிக்கும் மேலதிக தார்மீக பொறுப்பை உணர்கிறேன். அதற்காகவே பதிலளிக்க கடமைபட்டுள்ளேன்.
- நான் எழுதியவற்றிலிருந்து மேலே நீங்கள் காட்டிய எனது மேற்கோளில் அடுத்த வரிகளை வசதியாக நீங்கள் தவிர்த்து விட்டீர்களே; ஏன் என்று நான் உங்களைக் கேட்கப் போவதில்லை ஏனென்றால் உங்களைப் போன்றவர்களின் மீது எனக்கு நம்பிக்கை விட்டுப்போகவில்லை.
- அந்த விடுபட்ட அந்த வரிகளை நானே குறிப்பிடுகிறேன் “...ஆனால் அப்படி அவர்களின் சித்தாந்தத்தை எதிர்த்து நிற்கும் பிரபல கருத்துநிலையோ, உரையாடலோ முஸ்லிம் சமூகத்திடம் இல்லாததே; ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மீது பாய்வதற்கு ஏதுவான வழிகளை உருவாக்கியிருக்கிறது என்பதையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டியிருக்கிறது.”
- இங்கு நான் “பிரபல கருத்துநிலை” என்று அழுத்திக் கூறுவதே எதிர்ப்பு என்பது பெரும்போக்காக இருக்கவில்லை என்பதற்காகத் தான். கல்விப் புலமைத்துவம் உள்ள உங்களுக்குத் தெரியும் நாம் ஒரு கருத்தை வெளியிடும் போது தற்செயல்களை வைத்து முடிவுகளுக்கு வருவதில்லை. ஒரு முடிவுக்கு அவற்றின் போக்கு... தொடர்ச்சி... என்பனவே ஒரு முடிவாக எடுக்க வழிகளைத் தருகிறது. அந்த வகையில் முஸ்லிம் சமூகத்தில் இந்த சஹ்ரான் போன்றவர்களின் சித்தாந்தத்துக்கு எதிராக பலமான, பிரபலமான கருத்து பெரும்போக்காக இருக்கவில்லை என்பதையே நான் இங்கு குறிப்பிட்டேன். அப்படி ஒரு எதிர்ப்பு எங்கும் இருக்கவில்லை என்று எனது கட்டுரையில் நான் எங்கும் குறிப்பிடவில்லை.
- நீங்கள் குறிப்பிட்டது போல “அந்த நபரின்” தீவிரவாத கருத்துக்களை எதிர்த்து காத்தான்குடியில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்கி நடத்திய ஆர்ப்பாட்டத்தையும், அவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளையும் ஊடகங்கள் அப்போதே பதிவு செய்திருந்தன. அதை மற்றவர்கள் போலவே நானும் அறிந்தே வைத்திருக்கிறேன். அவை எதையும் அறியாமல் எனது கருத்தை வெளியிடவில்லை. அந்த தற்செயல் சம்பவத்தைத் தவிர குறைந்தபட்சம் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்காவது எத்தனை எதிர்ப்பு நடவடிக்கைகளை நம்மால் கூறிவிடமுடியும்.
- //நான் உள்ளிட்ட பலரும் தொடர்ந்தும் இச்சமூகத்தின் குறைபாடுகளை விமர்சித்து எழுதித்தான் வருகிறோம்.// உண்மை! உங்களைப் போல எனது நட்பு வட்டத்தில் உள்ள பல நண்பர்களை அப்படி நான் அறிவேன். ஆனால் உங்களைப் போன்ற வெகு சிலரை வைத்து “ஒரு பானைக்கு ஒரு சோற்றுப் பதம்” என்கிற முடிவுக்கு நான் எப்படி வருவது. உங்களைப் போன்ற விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்களை வைத்து அது தான் mainstream என்று நான் முடிவுக்கு வருவது சரி என்று நினைக்கிறீர்களா?
- கடந்த 7 வருடங்களில் நான் சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக ஞாயிறு தினக்குரலில் எழுதிய கட்டுரைகளில் பெரும்பாலானவை முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான பாசிச போக்கை எதிர்த்துத் தான் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதன் ஒரு அங்கமாகவே 1915: கண்டி கலவரம் நூலையும் வெளிக்கொணர்ந்தேன். முஸ்லிம்களுக்கு எதிரான போக்கை எதிர்த்து சமீபகாலமாக அதிகம் எழுதிய தமிழ் எழுத்தாளராக என்னைக் கருத முடியும் என்றே நம்புகிறேன்.
- சிங்கள பேரினவாத போக்கை எப்படி பின்தொடர்ந்து அவதானித்தபடியே இருக்கிறேனோ அடிப்படைவாத முஸ்லிம் போக்கையும் அவதானித்தே வந்திருக்கிறேன். ஆனால் அந்தப் போக்கைப் பற்றி தமிழ் எழுத்தாளனாக நான் எழுதுவதை தவிரத்தே வந்திருக்கிறேன். அதை எதிர்த்து முஸ்லிம் சமூகத்திலிருந்து தான் கருத்துக்கள் பலமடைய வேண்டும் என்பதே எனது கருத்தாக இருந்து வந்தது. ஆனால் இன்றைய நெருக்கடி நம்மையும் சற்றென்றாலும் பேச வைத்திருகிறது.
- என்னுடைய கட்டுரையில் மேலே குறிப்பிட்ட மேற்கோளத் தவிர மிகுதி எல்லாமே இனி இருக்கிற அச்சத்தைப் பற்றியதே. தமிழ் சமூகம் எதிர்கொண்டதை முஸ்லிம் சமூகமும் எதிர்கொள்ளப் போவதை பற்றி எச்சரிக்கை செய்யும் விபரங்களே என்பதை நீங்கள் அறிவீர்கள்.
- இந்த சூழலில் முஸ்லிம் தவிர்ந்த சமூகங்களில் இருந்து இனவாத-காழ்ப்பு-துவேச கருத்துக்களை எங்கெங்கும் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதிலிருந்து நேர்மையான – இதய சுத்தியான – ஆரோக்கியமான – நல்ல விளைவுக்கான கருத்துக்களை வடிகட்டி எடுத்து பரிசீலிப்பது முக்கியம். முஸ்லிம் அல்லாதவர் என்பதற்காக சகல கருத்துக்களையும் சந்தேகிக்க தேவையில்லை என்பதே எனது கருத்து. உங்களைக் குறிப்பிடவில்லை. எனது பொதுவான செய்தி தான்.
சமீபகாலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிரான பேரினவாத போக்குகள் குறித்த எனது கட்டுரைகளில் சிலவற்றையும் இங்கே பரிந்துரைக்காக இணைக்கிறேன்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...