பொதுத்தேர்தல் ஒன்று நடந்து முடிந்துள்ள வேளையில் அதனைப்பற்றியும் அதனோடு தொடர்புடைய விடயங்களைப்பற்றியும் யோசிப்பது பயனுடையது.
டிமோக்ரசி என்ற கிரேக்க மொழி வழி பிறப்பான மக்களாட்சி எனும் சொல்லாடல் கிரேக்க நாட்டின் தன்னாடல் கட்டத்தில் நமது நாட்டில் மக்களாட்சிக்கான பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது.
நம்மை ஆண்ட பிரித்தானிய விழுமியங்களை வியந்தேற்கும் நாம் தேர்தல் பற்றிய அவர்களது விளக்கங்களை ஞாபகப்படுத்திக் கொள்வது பயனுள்ளது. டிஸ்ரேல் எனும் பிரித்தானிய பிரதமர் ஒருவர் காலத்துக்கு காலம் தேர்தல்களை நடத்துவது அவசியம். இதனால் மக்கள் தமது பிரதிநிதிகளின் மூலமாக தம்மைத்தாமே ஆளுவதாக நம்புவர். அவ்வாறில்லா விட்டால் வேறு வழிகளினூடாக தம்மை தாமே ஆளும் மார்க்கத்தினை நாடுவர் என கூறியுள்ளதன் உட்கிடக்கையினை உணர்ந்து கொள்ளல் பயனுள்ளது. நடந்து முடிந்த தேர்தலைப்பற்றிய ஆங்கில வார பத்திரிகை ஒன்றின் பத்தி ஒன்று வடக்கிலும் தெற்கிலும் இளைஞர்கள் புறந்தள்ளப்பட்டுள்ளமை அபாய சமிக்ஞை என குறிப்பிட்டுள்ளதும் இதன் பாற்பட்டதே.
சுதந்திர இலங்கையின் முதலாவது தேர்தலின் பெறுபேறு மலையக மக்களின் மீதான பேரிடியாக இருந்தது. இதிலிருந்து பெறக்கூடிய படிப்பினைகள் ஏராளம். இதற்கான மூலங்களை சோல்பரி யாப்பு முதல் 2 ஆம் குடியரசு யாப்பு வரை தேடி விளக்கக்கூடிய விற்பன்னர்கள் உளர்.
யாப்புக்கும் மக்களின் வாழ்நிலைக்கும் உள்ள தொடர்பு நூல் இழையினை விட மெல்லியதானது. எனவே யாப்பு திருத்தங்களினூடாக மக்களுக்கான விமோசன வாயில் திறக்குமென்பது யதார்த்தமற்றது.
2015 ஜனவரி 8 தேர்தல் ஒரு சிறிய திருப்புமுனை நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை திருத்தி நானே யாவும் எனும் உச்ச சர்வதிகார போக்கினை இது திருப்பியது. 2009 உள்நாட்டுப்போர் வெற்றி தமதே என்று போரில் ஈடுபடாத குடும்பம் ஒன்று உரிமை கோரி சகலவிதமான மாற்றுக்கருத்துக்களையும் முடமாக்கியதோடு, கருத்தாடல்களையும் மௌனிக்கச் செய்தது. இத்தகைய அராஜக போக்குக்கெதிராக வெகுஜன வெறுப்பின் பிரதிபலிப்பு ஓகஸ்ட் 17 பொதுத்தேர்தலில் பதிவு செய்யப்பட்டது. இதற்கு மேலதிகமாக மக்களுக்கு எதுவும் கிடைக்குமென்பது கனவின் பாற்பட்டது.
இதனை உணர்ந்து கொள்வதற்கு இந்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டினை அறிந்து கொள்வது அவசியமாகும். இதில் இன்று கூத்தாடும் ஐ.தே.க., ஸ்ரீல. சு.கட்சி ஆகிய இரண்டினையும் பற்றி மேலோட்டமாகவாவது தெரிந்து கொள்வது பயனுடையது.
ஐ.தே.க. மலையக மக்களின் குடியுரிமையையும் வாக்குரிமையையும் பறித்து குற்றுயிராக்கிய கட்சி இதன் வடுக்களின் வலியினை இன்றும் சுமந்து கொண்டிருக்கின்றோம். இதன் சூட்சுமத்தினை உணர மறந்த சிலர் இன்று கனவான்களாக திரிவு பெற மலையகத்தார் அவர்களை இரட்சகர்களாக மதிக்க வேண்டுமென்று கனா காண்கின்றனர். இவ்வுண்மையை அறியாதோர் ஏதோ ஓர் அடிப்படையில் இத்தகையோரையும் சகபாடிகளாக வரித்துக்கொள்வது எதன் பாற்பட்டது என்பது பரம இரகசியமாக இருக்கலாம். தொழிலாளர் வர்க்க விமோசன மார்க்கத்தினை உணரும் பிரக்ஞையற்ற ஞான சூன்யங்கள் மீட்பர்களாக வலம் வரும் காலம் அருகி விட்டது.
ஐந்து சக்திகளின் திரட்சி எனக் கூறப்பட்ட ஸ்ரீல.சு.க. கம்கறு (தொழிலாளர்) என்பதில் பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்களை புறந்தள்ளி வெகுஜன கவர்ச்சி ஆட்சியை அமைத்து 1964 இல் ஸ்ரீமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலமாக மலையகத் தமிழரின் பாதி அங்கத்தினை சிரச்சேதம் செய்தது. இரு தேசியக்கட்சிகளின் செயற்பாடுகள் இவை. இவைகளின் அருட்கிரகத்தினூடாக மலையக மக்களுக்கு விமோசனம் தேடியோரில் ஒருவர் மறைந்த பெ. சந்திரசேகரன். சமூகப் பெறுமதியான கருத்துக்களை முன்வைப்போரை புறந்தள்ளிய இ.தொ.கா. கற்றோரை அரவணைப்பதாக கூறிய மோசடியில் சிக்கி சீந்துவாரற்றவரான ஊடாக மேதாவியின் மோக வலையின் சூட்சுமத்தினை உணரத்தவறியமை வியப்புக்குரியது.
பொதுத்தேர்தலுக்கு முன்னர் தமிழர் முற்போக்கு முன்னணி ஒன்று உருவாக்கப்பட்டது. உருவாக்கியோர் முற்போக்கு எனும் சொற்பிரயோகம் கவர்ச்சியானது என கருதி இருக்கலாம். இதிலடங்கியோர் யாருக்கும் முற்போக்கு அரசியலோடு எந்தவிதமான தொடர்புகளும் இருந்ததில்லை. அவர்களின் வாக்கு மூலங்களின்படி தொண்டமான், வெள்ளையன், வி.பி.கணேசன் ஆகியோரின் பாசறைகளில் தீட்சை பெற்ற வலது சாரி வல்லமை பெற்றோர் இப்பாசறைகளின் மூலவர்கள். இத்தகைய பின்னணியில் இவர்களின் தேர்தலின் வெற்றி மமதை செருக்கேறியோருக்கு எதிரான பிரதிபலிப்பு என ஆறுதலடையலாம்! இவ்வாறான ஆறுதலுக்கு ஆதரவாக செயற்பட வேண்டியது வெற்றி பெற்றோரின் கடப்பாடு. இது ஒரு வகையான சமூக ஒப்பந்தம். இதனை மீறும்போது நீத்துப்போகும் ஆபத்து காத்திருக்கும். இத்தகைய சமூக ஒப்பந்தத்தினை தமிழர் முற்போக்கு கூட்டணியினர் பிரகடனப்படுத்தி வாக்கு கேட்டனர் இதனால் இவர்களுக்கு உடனடி நீண்ட கால செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு உண்டு. அதனை சுட்டிக்காட்டுவது அவர்களது தேர்தல் கால வாக்குறுதிகளையும் சபதங்களையும் ஞாபகப்படுத்திக் கொள்ள உதவும். அவர்களது சபதங்களில் உடனடி நடவடிக்கைகள் பின்வருமாறு.
* தொழிலாளர்களுக்கு நாளாந்த வேதனமாக 1000 ரூபா பெற்றுத்தருதல்
* மீரியபெத்த அனர்த்த பாதிப்பாளர்களுக்கு பூரண நிவாரண ஏற்பாடுகள்
* இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சகல மலையகத்தாருக்கும் தரமான வீடமைப்பு
* சட்டபூர்வமான வீடு, காணி பத்திரம் வழங்கல்
* குளவி முதலான விஷ ஜந்துக்கள் சிறுத்தை பன்றி போன்ற மிருகங்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
* காணி விடயத்தில் பெ. சந்திரசேகரனின் 7 பேர்ச் அளவு என்பது சிந்தனாபூர்வமான முடிவு அல்ல. தொழிலாளர்களின் உழைப்புச்சுரண்டலின் மூலம் வர்த்தக நிலையங்களையும் பங்களாக்களையும் உைடமையாகக் கொண்டோர் தொழிலாளர்களுக்கு கிள்ளிக்கொடுக்க கோரியதே பெரிய மனதின் வெளிப்பாடாகும். இந்த ஞானத்தடத்தில் தொடர்ந்து பயணிப்பதா என்பதனை சமூகத்தொண்டர்கள் தீர்மானிக்க வேண்டும். சாய்ந்தால் சாயிற பக்கம் சாயும் அரசியல் பரம்பரையினர் பேதங்களுக்கு மேலாக அடையாளம் காணப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தோட்ட தரிசு காணிகளை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வல்லமையை நிரூபிக்க வேண்டும்.
முற்போக்கு கூட்டணியினரின் தேர்தல் வாக்குறுதிகள் பல அவற்றில் குறுகிய கால திட்டங்களுக்கு மேலதிகமாக குறிக்கப்பட வேண்டியவை.
* உள்ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயம் விடயம் பற்றி மீளாய்வு
* உள்ளூராட்சி சபைகளின் மூலமாக தோட்டப்புறங்கள் பயனடையக் கூடிய சட்டத்திருத்தம்
* தோட்டப்புறங்களை கிராமிய அமைப்புக்களாக மாற்றுவதற்கான வேலைத் திட்டங்களை சிவில் அமைப்புகளின் ஆலோசனைகள் கலந்துரையாடல்கள் மூலமாக மேற்கொள்ளல்.
* எல்லை நிர்ணயம் பற்றி விரிவான விவாதங்கள் /கலந்துரையாடல்களை மேற்கொள்ளல்
* 1970க்கு பிந்திய கட்டத்தில் கிடைத்துள்ள மனித வளங்களில் ஒன்றான ஆசிரியர் படையினை வள ஆய்வு பரிந்துரை அடங்கலான சமூக முன் நகர்வுக்காகப் பயன்படுத்தும் பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்தல்.
மலையக பாராளுமன்ற உறுப்பினர்களாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கான கடப்பாடுகள் இவை. இவற்றின் மீதான சமூக ஒப்பந்தம் இவர்களுடைய பரப்புரைகளாக இருந்தமை யாவருக்கும் தெரிந்தது. பேரம்பேசி கட்சிகளோடு இணையும் வல்லமை உடையோர்களாக இவர்கள் இல்லை. இதனால் தேசிய அரசாங்கம் என்ற பூதம் கிளம்பியதோடு எலியாக கிலி கொண்டு மெலிந்துள்ளனர் தேசியப்பட்டியலில் தமக்கும் வாய்ப்புண்டு என எதிர்பார்த்த கல்விப் புலத்தோரும் புலம்பத்தொடங்கியுள்ள அவலத்தினை பார்க்கின்றோம். இவை யாவற்றுக்கும் ஸ்தூல நிலைமைகளை ஆராய்ந்து பார்க்கும் நுண்மான நுழைபுல வறுமை காரணமாக இருக்கலாம்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...