இந்தியாவின் அசாம் மாநிலத்தில் உள்ள #தேயிலை தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் மிக கடுமையான நிலைமைகள் தொடர்பில் பி.பி.சி ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டது.
அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைமை, ஏழ்மை நிலை, வசதியற்ற வீடுகள், அசுத்தமான மலசலகூடம், பாதுகாப்பற்ற தொழில்முறைகள், பாதுகாப்பற்ற நச்சு மருந்து பாவனை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதில் சுட்டிக்காட்டப்பட்டன.
இதனை அடுத்து அசாமில் இருந்து தேயிலை இறக்குமதி செய்யும் பிரித்தானியாவின் பி.ஜி.ரிப்ஸ், ரெட்லெய்ஸ் மற்றும் ருவினிங்ஸ் போன்ற பல்தேசிய நிறுவனங்கள், இந்தியாவில் தாங்கள் கொள்வனவு செய்யும் தேயிலைத் தோட்டங்களின் அடிப்படை வசதிகளை விருத்தி செய்வதாக இணங்கியுள்ளன.
புகழ்பெற்ற ஹொரோட்ஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற குறிப்பிட்ட சில வகை தேயிலையை விற்பனை செய்வதை நிறுத்திக் கொண்டுள்ளது.
இவை அனைத்தும் ஒரு ஆவணப்படத்தால் நிகழ்ந்த விடயங்கள்.
2007ம் ஆண்டளவில் நான் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய போது, டென்மார்க் மற்றும் இந்தியாவில் இருந்து வந்த மூன்று ஆவணப்பட இயக்குனர்களின் நட்பு கிடைத்தது.
இலங்கையில் தேயிலைத் தரம் குறித்த ஆவணப் படம் ஒன்றை எடுப்பதற்காக அந்த குழு இரண்டு முறை இலங்கைக்கு வந்த போதும், நான் அவர்களுடனேயே பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
ஆனால் அந்த ஆவணப்படம் வெளியானதா என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை.
இருந்தாலும், அவர்கள் அதற்கு முன்னர், ராஜஸ்தானில் “கென்செர் ட்ரெயின்” என்ற புற்றுநோயாளர்கள் பயணிக்கும் புகையிரதம் ஒன்று குறித்த அற்புதமான ஆவணப்படம் ஒன்றை எடுத்திருந்தார்கள்.
அதற்கு ஐந்து சர்வதேச விருதுகள் கிடைத்திருந்தன.
(அது என்னிடம் இருக்க வேண்டும், அவர்களின் அனுமதி கிடைத்தால் தரவேற்றுகிறேன்)
டென்மார்க்கிற்கு #ஏற்றுமதி செய்வதற்காக டவல் (துவாய்) உற்பத்தி செய்யும் நிறுவனம் மற்றும் அதன் தொழிலாளர்களின் மிக மோசமான வாழ்க்கை நடப்புகள் குறித்த ஆவணப்படம் அது.
அமிலத்தில் காலை இறங்கி சாயமிட்டு அவர்கள் தயாரிக்கும் டவல் (துவாய்) ஒன்றின் விலை பெறுமதி கூட அவர்களின் நாளாந்த வருமானம் இல்லை.
அந்த #தொழிற்சாலையில் பணியாற்றுகின்றவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள்தான்.
அவர்கள் பயணிப்பதற்காகவே ராஜஸ்தானில் ஒரு புகையிரதம் ஓடுகிறது. கென்சர் ட்ரெயின் என்று அதற்கு பெயர்.
மிகவும் கடினமான சூழ்நிலையில் தொழில் புரிந்து உற்பத்திகளை மேற்கொள்கின்ற தொழிலாளர்களின் வேதனம் சொற்பமாகவே கிடைக்கது.
ஆனால் அதே உற்பத்திகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, பன்மடங்கு விலையில் விற்னை செய்யப்படுகின்றன.
இதில் மிகப்பெரிய லாபம் அடைவது இடைத்தரகர்களே.
ஒரு பொருள் 100 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால், அதன் உற்பத்தி செலவு 10 ரூபாவாக இருக்கிறது.
அதில் தொழிலாளரின் ஒருநாள் #வேதனம் 5 ரூபாவிற்கும் குறைவாக இருக்கும்.
எஞ்சிய பணத்தில் 80 சதவீதம் இடைத்தரகர்களிடம் போய் சேர்ந்துவிடுகிறது.
இந்த அளவு கொள்ளை இலாபத்தை பெறும் #இடைத்தரகர்கள், #உற்பத்தி தொழிலை தொடர்ந்தும் கொண்டு செல்கின்ற தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை விருத்தி செய்ய எந்த நடவடிக்கையையும் எடுப்பதில்லை.
இதுவே அந்த ஆவணப்படத்தின் சாரம்சம்.
குறித்த ஆவணப்படம் வெளியாகிய பின்னர், ராஜஷ்தானில் இருந்த அந்த தொழிற்சாலை மூடப்பட்டுவிட்டதாக அறியமுடிந்தது.
அத்துடன் டென்மார்க்கில் அதன் டவல்களை இறக்குமதி செய்து விற்பனை செய்த நிறுவனமும், குறித்த தமது விற்பனையை இடைநிறுத்திக் கொண்டது.
இந்த படத்தை தயாரித்தமைக்காக அவர்களுக்கு இந்தியாவுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். உறுதியாக தெரியவில்லை.
அதேபோன்று அண்மையில் இலங்கையிலும் ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தது.
சர்வதேச கடல்வள சட்டங்கள் பின்பற்றப்படுவதில்லை என்று தெரிவித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையில் இருந்து கடலுணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்துள்ளன.
தற்போது அந்த தடையை நீக்கிக் கொள்வதற்காக, சர்வதேச கடல்வள சட்டங்களை முறையாக அமுலாக்க அரசாங்கமும், மீனவ சங்கங்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
படகுகளுக்கு ஜீ.பி.எஸ். கருவிகள் பொருத்தப்படுகின்றன.
இந்த அழுத்தம் மலையக தொழிலாளர்களின் விடயத்தில் பிரயோகிக்கப்படுமாக இருந்தால், நிச்சமயமாக அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உணர்த்த முடியும் என்பதே எனது எண்ணம்.
மலையக தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழலில் பல்வேறு சர்வதேச சட்டங்கள் மீறப்படுகின்றமை குறித்து எத்தனை பேர் குரல்கொடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
நான் கூட அவ்வாறு இருந்ததில்லை என்பதே உண்மை.
மலசல கூடங்கள் இல்லை, காடு மலை என்று ஏறும் அவர்களுக்கு தொழில் பாதுகாப்பு இல்லை.
அண்மையில் ஹப்புத்தளையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று,
ஆற்றின் மேற்பகுதியில் மருந்து கலக்கப்பட்டதால், ஆற்றின் இன்னொரு பகுதியில் இருந்து தேனீர் தயாரித்து பருகிய தொழிலாளர்கள் 60 பேர் வரையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களுக்கான உரிய பாதுகாப்பான முறைகள் குறித்த #தெளிவுப்படுத்தல்கள் இல்லை.
தாங்கள் தேயிலையை பறித்து தொழிறசாலைக்கு கொடுத்து, அவை தூளாக்கப்பட்டதன் பின்னர் என்ன நடக்கிறது, எவ்வளவு வருமானம் வருகிறது போன்ற எந்த விடயங்களும் மலையக மக்களுக்கு தெரியாது.
அவர்கள் மலை காடு ஏறி பறித்து வருகின்ற கொழுந்தின் அளவை குறைத்து எழுதியும், குச்சி இருப்பதாகவும், முத்தி இருப்பதாகவும் கண்காணி முதல் கணக்குப்பிள்ளை வரையில் கொழுந்து கிலோவை வெட்டியும், நாளாந்தம் ஏமாற்றுகிறார்கள்.
வேதனம் வேதனம் என்று மட்டுமே கூறி அரசியல்வாதிகளாலும், தொழிற்சங்கவாதிகளாலும் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை வருடங்களாக அவர்களின் வேதனத்தை பற்றி மாத்திரமே பேசி பேசி இருந்ததாலேயே என்னவோ தெரியவில்லை, அவர்களுக்கு இருக்கும் உரிமைகளையும், ஓன்றிணையும் சுதந்திரத்தையும் மக்கள் மறந்தே போய்விட்டனர்.
இவை அனைத்துமே சர்வதேச #உரிமை மற்றும் #தொழில் உரிமை மீறல்கள்.
இவ்வாறான சூழலில் உற்பத்தியாகின்ற தேயிலையையே பல வெளிநாடுகள் இறக்குமதி செய்கின்றன.
கறுப்பு தங்க நிறத்தில் அவர்கள் பருகும் தேனீருக்கு பின்னால் இருக்கும் தொழிலாளர்களின் அவமானங்கள், உரிமை மீறல்கள் இவை அனைத்தும் தெரிவதில்லை.
மலையக தொழிலாளர்களின் உரிமை மீறல்கள் குறித்தும் சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும்.
அதற்கான ஆலி (சுவிட்ச்) உங்களில் யாரிடமேனும் இருக்கலாம்.
முடிந்தால் பகிருங்கள்.. என் பெயர் வரவேண்டும் என்று அவசியம் இல்லை. இதை கொப்பி செய்து பேஸ்ட் செய்தேனும்
பகிருங்கள்.
விக்கி விக்னேசின் முகநூலிளிருந்து நன்றியுடன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...