தற்போதைய தேசிய அரசாங்கம் நல்லாட்சி தத்துவத்தின் கீழ் ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதாக கூறிவரும் நிலையில் பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு நெருக்கடிகளுக்கும், அழுத்தங்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றது.
அந்த வகையில் கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ச எனும் தனிமனித மற்றும் குடும்ப வல்லாதிக்க, கொடூர சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்ட அரசியலமைப்பில் 18 வது சீர்த்திருத்தத்தின் ஊடாக நாட்டில் இயங்கி வந்த சுயாதீன ஆணைக்குழுக்களையும், பாராளுமன்ற பேரவையையும் தனது ஆளுகையின் கீழ் ஒரு கைபொம்மையாக வடிவமைத்திருந்தார்.
இக்காலகட்டத்தில் இலங்கை ஜனநாயக சோசலிஸத்தை நோக்கி நகர்வதை முற்றாக இல்லாதொழித்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் என்பது இல்லாதொழிக்கப்பட்டு நாட்டை இருவேறு திசையில் பயணிக்க செய்திருந்தார். எனினும் அத்தகைய ஆட்சி இவ்வருடத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிரிசேன தெரிவு செய்யப்பட்டதும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்று தேசிய அரசாங்கத்தை தாபித்து ஜனநாயக மற்றும் நல்லாட்சி என்ற மாய விம்பத்தினுள் அனைவரையும் கட்டிவைத்துள்ளது..
இவற்றின் அடிப்படையில் இலங்கையில் சிறுபான்மை இனத்தவர்களின் மீதான பௌத்த தேசியவாத தீவிரவாத போக்கு காலம் தொட்டு கட்டவிழ்த்துவிடப்பட்டு வருகின்றது. அதிலும் இலங்கைத் தழிழர் மற்றும் முஸ்லிம்கள் நாட்டின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஏதேனும் ஒரு வகையில் பங்குதாரர்களாக இருக்கின்ற போதிலும் நாட்டின் நான்காவது தேசிய இனமாக பரிணமித்துள்ள மலையக தமிழர்கள் காலம் தொட்டு வஞ்சிக்கப்பட்டுவரும் அவலநிலை தொடர்கின்றது. அவை அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் தொடர்ச்சியான நெருக்குதல்களுக்கும,; பின்னடைவுகளுக்கும் சவால் விடுக்கக்கூடிய வகையில் ஆட்சிக்கு வருகின்ற அனைத்து அரசாங்கங்களும் அவற்றை செயற்படுத்தி வருகின்றன.
அரசியல் ரீதியான உரிமைகளை மலையக தமிழர்கள் பெற்றுக்கொள்வதற்கு முனைந்த காலம் தொட்டு இன்றுவரை அவற்றின் மீதான மீறல்கள் வெறும் வாய்வார்த்தைகளாகவே இருந்துவருகின்றது. குறிப்பாக இலங்கையின் அரசியல் வரலாற்றில் தற்காலிக மனிங் சீர்த்திருத்தத்தில் மலையக தமிழரின் அரசியல் பிரவேசம் இடம்பெற்றதோடு அதனை தொடர்ந்து வந்த டொனமூர் சீர்திருத்தத்தில் சர்வசன வாக்குரிமையின் ஊடாக தமது அரசியல் ரீதியான அந்தஸ்தினை உறுதிப்படுத்திக் கொண்ட இவர்கள் தொடர்ச்சியாக 1947 ஆம் ஆண்டு சோல்பரி அரசியல் யாப்பின் கீழ் முழு மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 07 ஆசனங்களை பெற்று புதிய பாராளுமன்றத்தில் பெரும்பான்மை தேசியவாதிகளிடத்தில் பெரும் அச்ச உணர்வினை தோற்றுவித்திருந்தனர்.
அன்றைய நாள் முதல் இச்சமூகத்தினரின் மிதான பெரும்பான்மை தேசியவாதிகளில் ஒருவரான தேசப்பிதா டீ.எஸ் சேனாநாயக்கா பிரஜா உரிமைச் சட்டத்தினையும், வாக்குரிமைச் சட்டத்தினையும் கொண்டுவருவதின் ஊடாக இவர்களின் அரசியல் பிரவேசத்தையும் அரசியல் உரிமையினையும் முழுமையாக பறித்துக் கொண்டனர். தொடர்ச்சியான இழுபறி நிலையில் 1964 ஆம் ஆண்டு சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக நாடுகடத்தம் முயற்சிகளும் அரசியல் ரீதியாக அநாதைகளாக மாற்றும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டது.
அதனைத்தொடர்ந்து முதலாம் மற்றும் இரண்டாம் குடியரசு யாப்புகளிலும் இவர்கள் அரசியல் ரீதியாக உரிமைகளற்றவர்களாக மாற்றும் ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன. ஏனினும் 1987 அம் ஆண்டு இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்தினை பெற்று கொண்ட போதும் அவர்கள் வேற்று நாட்டு பிரஜைகள் போல் இன்றும் அரசியல் அந்தஸ்து அற்றவகையில் தொடர்ந்தும் நடாத்தப்படுவதற்கு பல சான்றுரைகளும் முன்வைக்க முடியும்.
இவ்வாறான தொடர்ச்சியான அரசியல் புறக்கணிப்புகளுக்கு உள்ளாகி வரும் நிலையில் தற்போதைய புதிய தேசிய அரசாங்கத்திலும் ஒரு முக்கிய பங்குதாரர்கள் என்ற வகையில் அவர்களின் அரசியல் உரிமை அந்தஸ்து ஒரு கேள்விக்குறிக்கு உட்பட்டுள்ளது. 19வது அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் நாட்டின் சுயாதீன தன்மைக்கு வழிவகுக்கும் வகையில் அரசியலமைப்பு பேரவையும் சுயாதீன ஆணைக்குழுக்களும் நிருவகிக்கப்படும் என கூறப்பட்ட போதும் இனவாத சிந்தனையும் இவ்வாட்சியிலும் தலைதூக்கியுள்ளது.
இதில் அரசியலைப்பு பேரவைக்கான உறுப்பினர்களின் தெரிவில் மலையக தமிழர்கள் சார்பில் ஒருவரேனும் உள்வாங்கப்படவில்லை. இவ்வரசியல் அமைப்பு பேரவைய நாட்டில் ஒரு தீர்மானம் மிக்க ஒரு அமைப்பாக விளங்குவதால் அதில் ஒரு இனத்தின் உறுப்புரிமை இன்றியமையாத ஒன்றாகும். ஆயினும் இப்பேரவைக்கு மூன்று முக்கிய உறுப்பினர்களில் தமிழர் சார்பில் கலாநிதி. ராதிகா குமாரசுவாமி மட்டுமே தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஆயினும் மலையக தமிழர்கள் சார்பில் ஒருவர் கூட தெரிவுசெய்யப்படவில்லை. என்பது இவ்வினம் சார்பான அரசியல் நலன்கள் முறியடிக்கப்படுவதையும் அவர்களின் அரசியல் உரிமைகள் மீறப்படுவதினையும் எடுத்துக்காட்டுகின்றது.
தொடர்ச்சியாக இலங்கையில் சுயாதீன ஆணைக்குழக்கள் உருவாக்கப்படுகின்ற போதும் அவற்றிலும் கூட மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஒருவரேனும் பிரேரிக்கப்படவில்லை என்பது இனரீதியான பாரபட்சத்தை எடுத்தியம்புகின்றது. அத்துடன் எட்டாவது பாராளுமன்ற தேர்தலில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தமிழர் முற்போக்கு கூட்டணியை அமைத்துக்கொண்டு இன்று கட்சிக்கான அந்தஸ்தினை பெற்றுக் கொண்டவர்கள் வெறுமனே அமைச்சுப் பதவிகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொண்டார்களே தவிர நாட்டின் முக்கிய அதிகாரம் மிக்க சபையாக விளங்கும் அரசியலமைப்பு பேரவைக்கு மலையக தமிழர் சார்பாக ஒருவரை பிரேரிக்கவும், அல்லது ஒரு உறுப்புரிமையை பெற்றுக் கொள்ளவும் திறனற்றவர்களாக காணப்படுவது முழு மலையக சமூகத்திற்கும் வெட்கக்கேடானது எனலாம்.
அத்துடன் இவர்களை தவிர மலையகத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அரசியல் தலைவர்கள், பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள், சமூக நலன்விரும்பிகள் அனைவரும் பாராமுகத்துடன் இருப்பது எதிர்காலத்தில் மீண்டும் நாடற்ற பிரஜைகளாக எம்மை மாற்றக்கூடும்.
தொடர்ச்சியாக அரசியல் உரிமையற்றவர்கள் என கூறிவருகின்ற நாம் இன்னும் எவ்வளவு காலம் அரசியல் உரிமையற்றவர்களாக இருக்கப்போகின்றோம்? . தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு இவ்வரசியல் அமைப்பு பேரவையில் மலையக தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தெரிவு செய்வது காலத்தின் தேவை என்ற வகையில் அதற்கான முயற்சிகளையும் அழுத்தங்களையும் பிரயோகிக்க அனைவருக்கும் அழைப்பு விடுக்கின்றறோம்.
இளம் சமூக விஞ்ஞானிகள் கழகம்- மலையகம்
நன்றி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...