Headlines News :
முகப்பு » » தேர்தல் காலத்தில் மட்டும் களமிறங்கி வாக்கு அறுவடை பெற முடியாது - சி.கே. முருகேசு

தேர்தல் காலத்தில் மட்டும் களமிறங்கி வாக்கு அறுவடை பெற முடியாது - சி.கே. முருகேசு


கேகாலை மாவட்டத்தில் நாற்பதாயிரம் தமிழ் வாக்காளர்கள் இருப்பதாகவும் இவர்களில் பதினேழாயிரம் வாக்காளர்கள் வாக்களிக்கும் பட்சத்தில் ஓர் உறுப்பினர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி விடலாமெனவும் பத்திரிகை வாயிலாக அறிக்கைகளை வெளியிட்டு இம்மாவட்டம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஈராயிரத்து நானூறு (2400) வாக்குகளை மட்டுமே பெற்று கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.

இது இவ்வாறிருக்க, இம்மாவட்டத்தில் பதினெட்டாயிரத்து நானூறு வாக்குகளை பெற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் ஓர் உறுப்பினர் கூட தெரிவாகவில்லை. தவறான வாக்குகளின் எண்ணிக்கையையும் புள்ளிவிபரங்களையும் வெளிப்படுத்தி இம்மாவட்ட தமிழ் மக்கள் மத்தியில் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வாங்கியை சிதறடித்து ஐக்கிய சுதந்திர முன்னணியின் வெற்றியை உறுதி செய்வதற்காக அம்முன்னணியின் பூரண அனுசரணையுடன் ஒரு பிரிவினர் வாக்கு வேட்டையில் ஈடுபட்டதை நன்கு உணர முடிந்தது.

மாவட்ட ரீதியிலான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் இன்று வரையிலும் பாராளுமன்றம் அல்லது மாகாண சபை தேர்தல்களில் சகல அணிகளுக்கும் பிரிந்து சென்ற தமிழர் வாக்குகள் பதினையாயிரத்தைக் கடந்ததாக தெரியவில்லை. பிரதான அரசியல் கட்சிகளின் மனதில் இடம் பிடிப்பதற்காக இம்மாவட்ட தமிழ் மக்கள் சார்பில் அமைப்புக்கள் வாக்காளர் தொகையை மிகைப்படுத்தி வெளிப்படுத்தியிருந்தமையை இவர்கள் உண்மையென கருதியுள்ளனர்.

கடந்த மாகாண சபை தேர்தலில் எண்ணாயிரம் வாக்குகளைப் பெற்ற கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இருந்தமையினால் ஓர் உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டது உண்மை. எனினும், பாராளுமன்ற தேர்தலில் மாவட்டத்தில் அளிக்கப்படும் மொத்த வாக்குகளின் ஐந்து சதவீதமெனப்படுவது இருபத்தையாயிரத்தைத் தாண்டிச் செல்ல வேண்டியிருந்தது.

எனவே, அடுத்து வரும் காலங்களில் இவ்வாறு தனித்து போட்டியிடக் கூடிய நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கி விட்டனரெனலாம். நாட்டை ஆட்சி செய்யும் பாராளுமன்றத்திற்கான தேர்தல் களத்தில் வாக்காளர் பட்டியலை நிரப்புவதற்காகவே என்னும் காரணத்தினால் வேட்பாளர் தெரிவுகள் இடம்பெற்றிருந்தாலும் கூட சில தகைமைகளைக் கருத்தில் கொண்டிருக்க வேண்டும். பிரதான வேட்பாளர்கள் ஓரிருவரைத் தவிர ஏனையவர்களின் பெயர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தியிருக்கக்கூடாது.

கேகாலை மாவட்டத்தில் இம்முறை தானசாலைகளும் சாராய விநியோகமும் வரலாறு காணாத விதத்தில் மேற்கொள்ளப்பட்டதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். பெருந்தோட்டத் தொழிலாளர் சமூகத்தை சாராயத்திற்கும் சோற்றுக்கும் வாக்குகளை விற்பனை செய்பவர்களாக வெளிப்படுத்திய சில சம்பவங்களினால் அதிருப்தியடைந்த பல இளைஞர்கள் குறித்த வேட்பாளர்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டனர்.

அடிக்கடி பொலிஸ் நிலையத்தில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளினால் அச்சுறுத்தலும் தாக்குதல்களும் மேற்கொள்ளப்பட்டதாக புகார் செய்தும் அதனை செய்திப் பத்திரிகைகள் வாயிலாக வெளிப்படுத்தியும் அனுதாபம் தேடும் முயற்சியில் சிலர் ஈடுபட்டனர். உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிட்டனர். சம்பவம் நடைபெற்றதாக கூறப்பட்ட தோட்டங்களில் வசிப்போரின் கடும் கண்டனங்களுக்கும் இவர்கள் உள்ளாக நேரிட்டது.

தோட்டங்களில் வாழும் தமிழர்கள் தற்போது வாக்குரிமையுடையோராக இருக்கின்ற காரணத்தினால் பிரதான அரசியல் கட்சிகள் இம்மாவட்ட தமிழ் மக்கள் மீது மாறி மாறி அன்பைப் பொழிந்து வருகின்றனர். இதனால் ஒரு வகையில் இன ஒற்றுமை ஏற்பட்டு வருகின்றது. இந்த நிலையில் தமிழ் மக்களை பிரித்தெடுத்து வாக்கு வேட்டையாடுவதற்காக தமிழ் குழு ஒன்று கையாண்ட பல நடைமுறைகள் மாவட்டத்தில் இன ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவித்து விடுமோ என்று மக்கள் அச்சம் கொள்ள வைத்தது.

மாகாண சபை, பிரதேச சபைகளில் கிடைக்கும் வெற்றி வாய்ப்பை பாராளுமன்றத் தேர்தலில் அடைவதற்கு இன்னும் காலம் கனியவில்லையென்றே கூற முடியும். வாக்காளர்களை பதிவு செய்வதில் காட்டப்படும் அசிரத்தையை மாற்றியமைக்க வேண்டும். தேர்தல் காலத்தில் மாத்திரம் சாராயமும் சாப்பாடும் விநியோகித்து வாக்கு வேட்டையாடாமல் மாவட்டம் முழுவதும் சூறாவளிப்பயணம் மேற்கொண்டு தமிழ் மக்களை வாக்காளர்களாக பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை இவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

அமரர் கே.ஜி.எஸ். நாயர் காலம் முதல் குடியுரிமை வாக்குரிமை பற்றிய விழிப்புணர்வு தொடர்ந்து பேணப்படுவதாலேயே எட்டியந்தோட்டைத் தேர்தல் தொகுதியில் மாத்திரம் வாக்காளர் தொகை வருடா வருடம் வளர்ச்சி காண்கிறது. இம்மாவட்டத்தின் ஏனைய தேர்தல் தொகுதிகளிலும் இம்முயற்சி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு அடுத்து வரும் காலங்களில் சாதகமான பலனை எதிர்பார்க்கலாம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates