மலையகத்தின் கல்வி வளர்ச்சியை
கருத்திற் கொண்டு எத்தனையோ அமைப்புகள் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. அவை
தோன்றிய வேகத்திலேயே மறைந்தும் உள்ளன. எனினும், மலையக மாணவர்களின் நலன் கருதி தலைநகர் செட்டியார் தெருவில்
பணிபுரியும் இளைஞர்களால் தோற்றுவிக்கப்பட்ட “மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்” ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்து பத்தாவது அகவையில் வெற்றிகரமாகத் தடம்
பதித்துள்ளது.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக மன்றத்தின்
செயற்பாடுகளுக்கும், வெற்றிக்கும் தலைநகரில் பணிபுரியும் இளைஞர்களின் எண்ணங்களுக்கும் ஏக்கங்களுக்கும்
தகுந்தபடி உற்சாகம் கொடுத்து, எழுச்சியுடன் செயற்படவும் மன்ற உறுப்பினர்களோடு போஷகர்களும் உந்து
சக்தியாக இருந்து வருகின்றார்கள். அவர்களோடு மன்றத்தின் தலைவர் கே. சிவசுப்பிரமணியம், பணிப்பாளர் செ. மோகன்ராஜ், இணை பணிப்பாளர். தனராஜ், செயலாளர் ஏ. பாஸ்கரன், மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்கள் அனைவரும்
மிகவும் அர்ப்பணிப்புடனும் ஈடுபாட்டுடனும் பாடுபட்டு வருவதாக மன்றத்தின் உப தலைவர்
ஏ.எஸ். ஞானம் தெரிவிக்கின்றார்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவி
சாதாரணமாக ஐந்தாந் தரப் புலமைப்
பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இலவசமாக மாதிரி முன்னோடிப் பரீட்சையை
நடத்துவதற்கு வினாத்தாள்களைத் தயாரித்துக் கொடுக்க முன்வந்த மலையகக் கல்வி அபிவிருத்தி
மன்றம், காலப்போக்கில்
அதிபர்கள், ஆசிரியர்களின்
வேண்டுகோளுக்கு அமைய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான
இலவச முன்னோடிப் பரீட்சையுடன் கருத்தரங்குகளை நடத்தவும் ஏற்பாடு செய்திருந்தது.
தொடர்ந்து உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான மாதிரி பரீட்சையையும் நடத்தி அவை வருடாந்த
நிகழ்வுகளாக இடம்பெற்று வருகின்றன. இதில் வருடந்தோறும் மலையக மாணவர்கள் மாத்திரமல்லாது
வடக்கு, கிழக்கு மாகாணங்கள்
உட்பட ஏனைய மாகாணங்களையும் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்களும் ஆயிரக்கணக்கில் பயனடைந்து வருகின்றார்கள்.
மேலும், பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மலையக மாணவர்கள் சுமார் 200 பேர்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் ஊடாக மாதாந்தம் புலமைப் பரிசிலைப் பெற்று
வருகின்றார்கள். 2015 ஆம் ஆம் ஆண்டின் விசேட திட்டமாக பல்கலைக்கழக மாணவர்கள் 15
பேருக்கு முதற்கட்டமாக இலவசமாக மடிக் கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றை லண்டன் LAPTOP FOR LADIES நிறுவனம் இலவசமாக
வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து வருடத்துக்கு 100 மாணவர்களுக்கு
இவ்வாறு இலவச மடிக் கணினிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கணித, விஞ்ஞான பாடங்களில் வலுவூட்டல் வகுப்புகள்
மலையகத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களில்
அமைந்துள்ள பாடசாலைகளைத் தெரிவு செய்து அங்கு மாணவர்களின் இடைவிலகலைக் குறைக்கும்
வகையில், அனைத்து மாணவர்களுக்கும்
இலவசமாக கற்றல் உபகரணங்கள், புத்தகப் பைகள் முதலானவற்றையும், பாடசாலை கட்டடத் திருத்த வேலைகள் மற்றும் கணினிகள், போட்டோ பிரதி இயந்திரங்கள் போன்றவற்றையும்
மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் வழங்கி வந்துள்ளதால் கடந்த ஒன்பது ஆண்டுகளில் 25
க்கும் மேற்பட்ட பாடசாலைகளும் 3 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களும் பயனடைந்துள்ளார்கள்.
அதன் அடுத்த கட்டமாக 2015 ஆம் ஆண்டு
முதல் நகர்ப்புறங்களை அண்மித்து, இல்லாத மிகவும் வசதி குறைந்த கோவில், பொது இடங்கள் போன்றவற்றை அண்டியுள்ள இரண்டு மூன்று பாடசாலை மாணவர்கள்
பயன் பெறும் வகையில் பொதுவான ஒரு பாடசாலையைத் தெரிவு செய்து மாணவர்களை வலுவூட்டும்
வகையில் மாலை நேரங்களில் கணித, விஞ்ஞான, கணினி வகுப்புகளை நடத்தி ஊக்குவிக்கவும், வாசிகசாலை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் பாரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் முதற்படியாக புசல்லாவ மெல்போன்
தோட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றை மேற்பார்வை செய்து நடத்துவதற்காக அந்தந்தப்
பிரதேசங்களைச் சேர்ந்த நிலையப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் மலையகக்
கல்வி அபிவிருத்தி மன்றம் வழங்கவுள்ளது. இது தவிர, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வலுவூட்டும்
நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி இசை நிகழ்ச்சிக்கு உதவி
தலைநகரில் இருந்து கொண்டு மலையக மாணவர்களுக்கு
உதவி வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் தலைநகரில் தொழில் புரியும் அனைத்து
இளைஞர், யுவதிகளையும்
ஒன்றிணைக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மேதினத்தன்று விளையாட்டுப் போட்டியையும், கிரிக்கெட் சுற்றுப் போட்டியையும் மலையகக்
கல்வி அபிவிருத்தி மன்றம் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.
இம்முறை ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டில் கல்லூரி ஆண்டு விழாவை கொண்டாடவுள்ளதை முன்னிட்டு, அதன் பழைய மாணவர் ஒன்றியத்துக்கு நிதி
திரட்டுவதற்காகவும், மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பத்தாவது ஆண்டை கொண்டாடுவதற்காகவும்
மாபெரும் இசைநிகழ்ச்சி ஒன்றை கொழும்பில் நடத்த மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் களம் அமைத்துக் கொடுக்கவுள்ளது.
மலையக இளைஞர்களின் முன்மாதிரிகை
ஒரு காலத்தில் மலையகப் பெருந்தோட்டங்களில்
தமது குடும்ப பொருளாதாரச் சுமை காரணமாக கல்வியைத் தொடர முடியாமல் இடைநடுவில்
கைவிட்டு தலைநகருக்கு தொழில் தேடி நூற்றுக்கணக்கான இளைஞர்,
யுவதிகள் சென்றிருந்தார்கள். அவர்கள் தமது உழைப்பின்
மூலம் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார்கள்.
எனினும், தமது குடும்பப்
பொறுப்பை மனம் விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள், தாங்களும் குடும்பத்தவர்களும் மாத்திரம் சந்தோசமாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்தால் போதும்
என்று நினைத்து விடவில்லை.
தம்மைப் பற்றிச் சிந்தித்த அவர்கள், தமது சமூகத்தைப் பற்றியும் சிந்திக்கத்
தொடங்கினார்கள். தங்களைப் போன்று கல்வி கற்க வேண்டும் என்று மனமிருந்தும், கல்வி கற்க முடியாமல் குடும்பச் சூழ்நிலை
காரணமாக தூர இடங்களுக்கு வேலை தேடி வருகின்ற வர்களைத் திசைமுகப்படுத்தி அவர்கள் கற்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக்
கொடுக்க வேண்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே “மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்” ஆகும். அவர்களின் தூய்மையான சமூகப்
பணிக்கு வர்த்தகப் பிரமுகர்கள், நலன் விரும்பிகள் பலரும் ஆதரவு நல்கி வருகின்றார்கள்.
விரல் விட்டு எண்ணக் கூடிய உறுப்பினர்களோடு
ஆரம்பிக்கப்பட்ட மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தில் இன்று நாடளாவிய ரீதியில் 3
ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். முகப் புத்தகத்தில் 15
ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு உற்சாகமூட்டி
வருகின்றார்கள்.
எமது சமூகத்தில் ஆலயத்
திருப்பணிகளுக்கு அள்ளி வழங்கும் வள்ளல்கள் இருக்கின்றார்கள். ஆடம்பரப் பிரியர்கள்
ஏராளம் இருக்கின்றார்கள். அவர்கள் தமது செலவுகளோடு “அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்ன யாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர்
ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்னும் மகாகவி பாரதியின் வரிகளுக்கு ஏற்ப, கல்விப் பணிக்கு கைகொடுக்க தம்மோடு
இணைந்து கொண்டு சமூகப் பணியாற்ற முன்வருமாறு மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம்
அன்புக் கரம் நீட்டி அழைப்பு விடுக்கின்றது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...