Headlines News :
முகப்பு » » மலையகம் சில வரலாற்றுக் குறிப்புக்கள் - எம். முத்துவேல்

மலையகம் சில வரலாற்றுக் குறிப்புக்கள் - எம். முத்துவேல்


பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனித்துவ வாதிகளே பெருந்தோட்டங்களை நிர்மாணித்தார்கள் என்பது காலங்காலமாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகின்ற வரலாற்று நிகழ்வென்பது தெரிந்ததே. ஆயிரத்தெண்ணூற்றுப் பதினைந்தாம் (1815) ஆண்டில் பிரித்தானியா, இலங்கையின் முடியாட்சிப் பிரதேசங்களனைத்தையும் கண்டி இராச்சியத்தையும் ஒன்றிணைத்ததன் மூலம் இறுதியாக ஒரே இறைமைக்குள் கொண்டு வந்ததன் பின்னர் நாட்டின் பொருளியற் பிரயோகத்திற்கு மலையகப் பிரதேசம் உட்படாமையைக் கண்டு காலனித்துவ நாடான இங்கிலாந்தின் நலன்களுக்காக அதனைப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்ததன் விளைவாக பெருந்தோட்டங்களை திறக்கும் திட்டம் உருவானது. சர்வதேச மட்டத்தில் கோப்பி, தேயிலை ஆகிய நுகர் பொருட்களுக்கான தேவையும் சந்தை நிலைவரமும் உணரப்பட்டதோடு, இவ்விரு பயிர்களையும் உற்பத்தி செய்வதனால் காலனித்துவப் பிரித்தானியா எய்தத்தக்க இலாபமும் உய்த்துணரப்பட்டது. இவ்வுணர்வானது பெருந்தோட்டங்களைத் திறப்பதற்கான செயன் முறையொன்றினையும் தோற்றுவித்தது.

முந்நூறு (300) மீற்றருக்கும் மேற்பட்ட உயரமுடைய மலைப்பிரதேசம் துண்டங்களாகப் பிரிக்கப்பட்டு பிரிட்டிஷ் நிலப்பரப்புக்களுக்கு விற்கப்பட்டது. இவ்வாறு விற்கப்பட்ட போது வரையறுக்கப்பட்டவையே இன்றுள்ள தோட்டங்களுக்கிடையிலான எல்லைகளாகும். தோட்டங்களை எல்லை வகுத்தமைத்த போது ஏலவே அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடந்த கிராமங்களும் அவற்றிற்குப் பாரம்பரியமாக வழங்கப்பட்டு வந்த பெயர்களும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட்டன.

கம்பளை, தலவாக்கலை, இரத்தினபுரி, வெலிமடை, நுவரெலியா, நானுஓயா, டிக்கோயா, நாகசேனை, லுணுகலை, தெளிவத்தை என வழங்கும் நகர்ப் பெயர்களும் தோட்டப்பெயர்களும் இன்றும் வழக்காற்றிலிருப்பதை நோக்கி இதனை உய்த்துணரவியலும் சிங்கள மொழியில் வழங்கப் பெறும் கெலே (காடு), சேனை (சேனை), கந்த (மலை), வத்த (தோட்டம்), ஓய (ஆறு) போன்ற இன்னோரன்ன சொற்கள் மலையகத்து இடப்பெயர்களின் விகுதிகளாயமைந்து நிலவல் நோக்கி இதனை உறுதி செய்து கொள்ளவியலும். இவற்றோடு புதியனவாயும் தோட்டங்களின் பெயர்களமையலாயின.

ஹட்டன் Hatton (Haton எனும் தொடரே Hatton எனவமைந்து நிலை பெற்றதாக ஆய்வாளர் கருதுவர்) ரொக்வூட் (Rockwood), ஸ்பிரிங் வெலி (Spring velly), மவுண்ட்வேர்ணன் (Mount vernon), கீரீன்வூட் (Green wood), சென்.ஜோன்ஸ் (St. Johns), சென்.லியனார்ட்ஸ் (St. Leonards) போன்ற தோட்டப் பெயர்களையும் பிறவற்றையும் இதற்குக் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். இவ்வாறு புதியனவாயமைந்த தோட்டங்களுக்கு பெரும்பாலான இங்கிலாந்திலான இடங்களுக்கான பெயர்களையும் வேறு சில ஆங்கில நிலப் பிரபுக்களான தோட்ட சொந்தக்காரர்களின் பெயர்களாயும் காணப்படுதலை அப்பெயர்களே வெளிப்படுத்துவனவாயுள்ளன. நுவரெலியா பிரதேசத்திலான கிளரென்டன் (Clarendon), சென்.ஜோன்ஸ் (St. Johns, என்பனவும் நாவலப்பிட்டிய பிரதேசத்திலான வெஸ்ட்ஹோல் (West hall), பார்க்கேபல் (Barcaple) போன்றனவும் மஸ்கெலிய பிரதேசத்திலான பிரன்ஸ்விக் (Brunswick) போன்றனவும் பண்டாரவளை பிரதேசத்திலான ஸ்பிரிங்வெளி (Springvelly) போன்றனவும் இதற்கு உதாரணங்களாய் கொள்ளத்தக்கன.

மேற்குறித்தவை பூர்வ காலந்தொட்டு இந்நாட்டில் வழக்காறு பெற்று வந்த கிராமப் பெயர்கள் பற்றியனவும் காலனித்துவ வாதிகளான பிரிட்டிஷ் நிலப்பிரபுக்களாலமைந்த பெயர்களைப் பற்றியனவுமேயாகும். இவையேயல்லாது மலையக மக்களது இருப்பின் நிலைப்பேறுடைமையை உறுதி செய்வனவாக பெயர்களும் தோட்டங்களிற்கு அமைந்து வழக்காறு பெற்ற நடத்தல் கணக்கிலெடுக்கப்படத்தக்கனவாகும். மலையக மக்களாகிய எமது குடியேற்றத்தையும் எமது இருப்பின் நிலைப்பேறுடைமையையும் ஆதாரப்படுத்துவதற்கான காட்டுகளாய் மட்டுமல்லாது, நமது தனித்துவத்தை அடையாளப்படுத்துவதற்குப் பயன்படத்தக்க வரலாற்றம்சங்களாயும் இப்பெயர்கள் காணப்படுகின்றன. மனிதரே அண்ட முடியாத வனாந்தரங்களை ஜீவனை பணயமாக வைத்து அழித்து செம்மையாகவும் வளமும் மிக்க பூமியாக நாம் மலையக மண்ணை மாற்றிய வரலாற்றுக்கட்டத்திற் பெற்ற அனுஷ்டானங்களின் தூண்டுதலால் அமைந்த தமிழ்ப்பெயர்களே நமது இருப்பின் நிலைபேறுடைமை குறித்த நிதர்சனங்களாகும். தமிழக்கொல்லை, மல்லியப்பூ (மல்லியப்பு), வாழைமலை, புதுக்காடு, பழையக்காடு, மலைத்தோட்டம், மேமலை, மேகமலை, உச்சிமலை, பளிங்குமலை (பளிஞ்சிமலை), புலிகண்டாமலை (பிலிகண்டாமலை), நடுத்தோட்டம், தாமரைக்காடு, தாமரைவல்லி, உருளைவள்ளி, குளிராட்டி, செம்பகவத்தை, தகரமலை, அல்லித்தோட்டம், குரங்குமலை, கண்டித்துறைதோட்டம், செல்வகந்தை, அமிர்தவல்லி, அமிர்தகங்கை, அழுதமுள்ளி (அழுத்முள்ள), தென்மதுரை, சீயான்கொல்லை, குருவிக்கொல்லை, கொத்தமல்லி ஆகிய தோட்டப் பெயர்கள் சிறந்த எடுத்துக்காட்டாகும். இப்பெயர்கள் பற்றி இதுவரை எழுதப்பட்ட விளக்கங்கள் மேற்போக்கானவையாயும் தெளிவற்றனவாயும் காணப்படுவதனை உணர்தல் இன்றியமையாதது.

எந்த நிகழ்வும் ஒன்றன் பின் ஒன்றாய் நிகழ்வதான ஒரு படிமுறை நிகழ்வோட்டத்தை கொண்டிருப்பதில்லை. பெருந்தோட்டத்துறை யின் நிர்மாணம் இலங்கையின் மொத்த வரலாற்றுடன் எவ்வாறு இயைபுபட்டவொன்றாயிருக்கின்றதோ, அவ்வாறே பெருந்தோட்டங்களிலமைந்த தோட்டங்களின் பெயர் முதலானவையும் பிரதேச வரலாற்றோடும் தேசிய வரலாற்றோடும் இயைபுடைய தொடர் நிகழ்வாயும் அந்தந்தச் சூழ்நிலையின் புவியியல் சமூகப் பின்புலங்களை அடிநிலையாகக் கொண்டனவாயும் அமைந்தனவென்பது மறுக்கவியலாததும் மனங்கொள்ளத்தக்கதுமாகும்.

இவ்வாறமைந்த தோட்டங்களினான பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்கு உழைப்புச் சக்தியை பெறுதலே ஜீவாதாரமான தேவையாயிருந்தது. இத்தேவையைப் பிரிட்டிஷ் காலனித்துவவாதிகள் சுலபமாக பூரணப்படுத்திக் கொண்டனர். அக்காலத்தில் தமது ஆதிக்கத்திற்குட்பட்டிருந்த இந்திய நாட்டின் ஒரு கூரான தமிழ் நாட்டு மக்களின் உழைப்புத்திறன் பிரிட்டிஷ்காரரின் கண்ணையுறுத்தியதன் விளைவாக தமிழ் நாட்டினரை கூலித்தொழிலாளராக குடியமர்த்த தீர்மானித்தனர். இத்தீர்மானத்தின் செயன்முறை வடிவமே "கம்பளை பிரதேசத்தின் சிங்ஹாபிட்டிய” எனுமிடத்திலான முதற்குடியேற்றமாகும். 1823ஆம் ஆண்டில் இக்குடியேற்றம் நிகழ்ந்ததாக வரலாற்றாய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதன் பின்னர் படிப்படியாக தமிழ் நாட்டினர் கூலித்தொழிலாளர்களாக மலையகத்தில் குடியேற்றப்பட்டனர். தமிழ் நாட்டிலிருந்து சாதாரண மக்கள் கூலித்தொழிலாளர்களாக கடத்தி வரப்பட்டனரென்பதே செய்தி. இச்செய்திக்கு எழுத்துருவிலான சான்றாதாரங்கள் இல்லையென்றாலும் கற்பனை ரீதியான தகவல் எனவும் கொள்ள முடியாது . முற்றிலும் உண்மையான செய்தியே. இவ்வாறு சாதாரண வறிய விவசாயிகளை கடத்தி வந்தவர்கள் தமிழ் நாட்டுப் பிரபுக்களே. கூலித்தொழிலாளர்களை கடத்தி வருவதிலான இலாபம் இந்நிலப்பிரபுக்களை இக்கைங்கரியத்தில் ஊக்கத்துடன் ஈடுபடுத்தியிருக்க வேண்டும். மலையக மக்களின் முன்னோர் தமிழ் நாட்டுக்கிராமங்களில் விவசாயிகளாகவிருந்தவர்களேயாகும்.

இவ்விவசாயிகள் இந்நாட்டில் குடியேறுவதை மனதார விரும்பி இங்கு வந்தனரா என்பது ஐயத்துக்கிடமானவொன்றே. பல்லாண்டு காலமாக நிலைபெற்று வாழ்ந்த மண்ணிலிருந்து வெளியேறி அந்நிய மண்ணில் குடியேறி புதிய வாழ்வமைத்து நிலைபெறுவதற்கான தேவைகளை தமிழ் நாட்டுச் சமூக அரசியல் பொருளாதாரப் பின்னணிகளே தோற்றுவித்தன. தமிழ் நாட்டு நிலப்பிரப்புக்களின் கொடூரமான சுரண்டலுக்குட்பட்டதால் வறுமையே அம்மக்கள் வாழ்வில் நிதர்சனமாயிருந்தது. நாட்டில் நிலவிய பிரிட்டிஷ் காலனித்துவ அடக்கு முறை ஏலவே நிலவிய பிரபுத்துவச்சுரண்டலுக்கும் அடக்குமுறைக்கும் மேலதிகமான அழுத்தத்தையேற்படுத்தியிருந்தது.

வேறு வகையில் சொல்வதாயின் தமிழ் நாட்டுப் பிரபுத்துவச் சுரண்டலுக்கான அடக்கு முறையோடு காலனித்துவத்தின் அடக்கு முறையானது மேலதிகப் பளுவை மக்கள் மீது சுமத்தியிருந்தது எனக் கூறலாம். அதனால் மக்கள் வாழ்வு நாளுக்கு நாள் நலிவுற்று வந்தது. அதனோடு கால நிலையும் பாதகமாயமைந்தமையால் வறிய விவசாயிகளின் துண்டு நிலங்களிலான பயிர்ச்செய்கை நலிந்து அன்றாட வாழ்க்கையே நிலை தடுமாறி போவதாயிற்று. இத்தியாதி காரணங்களினால் வாழ்விற்காக தமிழக வறிய விவசாயிகளில் ஒரு சாரார் மலையக மண்ணை நம்பி இங்கு குடியேறினர். தென்னிந்திய தமிழ் விவசாயிகளின் குடியேற்றம் வேற்றூர் நோக்கி செல்வதான ஒரு சுலபமான நிகழ்வாயிருக்கவில்லை. ஜீவமரணப் போராட்டத்துடனான ஒரு கோர நிகழ்வே அக்குடியேற்றமாகும். அக்காலத்து மலைப்பிரதேசம் கிஞ்சித்தும் அபிவிருத்தி காணாத பிரதேசமாகவே திகழ்ந்தது. மக்கள் வாழ்கின்ற கிராம அமைப்புக்களுடன் கூடிய பிரதேசமாக மலையகம் இருந்து வந்த போதிலும் பரந்துபட்ட நிலப்பிரதேசம் வனாந்தரங்களும் புதர்களும் செறிந்ததாக கொடிய விலங்குகளினதும் விஷப்பாம்புகளினதும் உயிராபத்து விளைகின்ற இதர ஜீவராசிகளினதும் உறைவிடமாக காணப்பட்டது.

மனிதர் நடந்து சுவடுபட்டுப்போன தடங்களும் ஒற்றையடிப்பாதைகளுமேயன்றி சீர்மையானதும் திருத்தமானதுமான பாதைகளமைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழக விவசாயிகள் அரிய வழி நடையென மலையக கவிஞர் பாடியவாறு சிக்கலானதும் கொடூரமானதும் அபாயமிக்கதுமான காட்டு வழியினூடாக உயிரைப் பணயம் வைத்து வழி நடக்க வேண்டியவராயினர். தமது வழிநடைப்பயணத்தின் இலக்கையடையு முன்னர் விஷப்பாம்புகளால் கடியுண்டு மரணிக்க வேண்டியிருந்தது. புலி, சிங்கம், கரடி, யானை போன்ற கொடிய விலங்குகளின் தாக்குதல்களினால் மடிய வேண்டியிருந்தது.

வாழ்க்கையிலேயே அனுபவித்திராத கொடிய ஜுரத்தினால் பாதிப்படைந்தும் மரணங்கள் நேர்ந்தன. சில நாட்களில் பட்டையுரிக்க சுட்டெரிக்கும் வெயிலில் தகிக்கும் வேறு சில நாட்களில் புயலுடன் கூடிய அடை மழை சீறியடிக்கும். அக்கொடிய வெயிலிலும் மழையிலுமான மரண வேதனைக்கு முகங்கொடுத்தும் தமிழகத்தின் மனிதவுயிர்கள் அநாதைகளாய் மரணிக்க நேர்ந்தது. மனித சஞ்சாரமேயில்லாத அந்த வனாந்தரங்களில் இறந்த தமிழக விவசாயிகளின் சடலங்கள் விலங்குகளின் சடலங்கள் தூக்கியெறியப்படுவது போல் அநாயாசமாக எறியப்பட்டன. வீட்டையும் சுற்றத்தையும் ஊரையும் நாட்டையும் துறந்து கண்காணாத மண்ணொன்றில் வனாந்தரத்தில் வழிநடந்தோரான ஏழை விவசாயிகளுக்கு மரணச்சடங்குகள் நிகழ்த்துவதற்கான வாய்ப்பு எவ்வாறு கிட்டும்? ஈராயிரம் ஆண்டு காலத்திற்கு மேலான கால வரலாறுடைய ஒரு சமூகச் சந்ததியினரின் இடர் மிகுந்த வாழ்க்கையின் கால்கோள் இவ்வாறு நிகழ்வதாயிற்று. துன்ப துயரங்களிடையே அரிய வழி நடந்த" மலையகத் தமிழரின் மூதாதையர்களில் மரணமடைந்தோரிலும் எஞ்சியவர்கள் தாம் உருவாக்க வேண்டிய தோட்டங்களையடைய வேண்டிய நிலையங்களையடைந்தனர்.
வெள்ளைத்துரைமார் ஒழுங்கமைத்துக் கொடுத்த தற்காலிகக் குடில்கள் அவர்களின் குடியிருப்புக்களாயின. இவர்களைக் கடத்திக்கொண்டு வந்தவர்கள் கங்காணிமார் எனப்பட்டனர். மலையகச் சமூக வரலாற்றில் இக்கங்காணிமார்களின் பாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரமே. தோட்டத்துரைமார்களுக்கான செயலாளர்களை போல கங்காணிமாரின் பாத்திரம் விளங்கியது. தமிழகத்தில் கணக்கு என்ற சொல்லின் பயன்பாடு இலக்கியத்தைச் குறிப்பதற்கானதெனக் கொள்வர். கணக்கு என்ற பதம் மலையக சமூகத்தில் விசேசித்த வேறொரு கருத்தில் பிரயோகிக்கப்பட்டது. மலையக மக்களின் முற்சந்ததியினரை கடத்தி வந்த கங்காணிமார் பெரியகங்காணிமார் எனப்பட்டனர். இக்கங்காணிமாரின் மேலாதிக்க அமைப்பிலேயே மலையகத் தோட்டங்களையுருவாக்கவெனக் குடியேற்றப்பட்ட கூலித்தொழிலாளர் அமர்த்தப்பட்டனர். தொழிலாளர் கங்காணிமாருக்கும் கடமைப்பாடுடையவராயினர். அதனால் அவர்களின் மாதாந்த ஊதியத்தினின்றும் குறித்தவொரு தொகையை கப்பத்தைப்போலச் செலுத்த வேண்டியவராயினர்.

இவ்வாறு பெரிய கங்காணிமாருக்குத் தொழிலாளர் செலுத்திய கப்பமானது 'பென்ஸ்' காசு என வழங்கப்பட்டது. தோட்டத்தில் வேலை செய்தல், குடியிருப்புக்கான லயக்கம்பராக்கள் பெறுதல், தோட்டத்தை விட்டு நீங்குதல், மீளக்குடியேறுதல், உணவுப்பங்கீடு, உடுதுணி விநியோகம், இந்தியாவுக்கும் இலங்கைக்குமான போக்குவரத்து போன்ற சகல வாழ்வம்சங்களிலும் கங்காணிமாரின் அதிகாரத்தின் பாதிப்பு மிக அழுத்தமாகவே காணப்பட்டது. இவ்வாறு தமிழ் நாட்டினின்றும் வந்து குடியேறிய கூலித்தொழிலாளர்களின் வாழ்க்கை கங்காணியெனப்பட்டோரின் ஆதிக்கத்துக்கு ஒரு சமூகவமைப்பின் வாயிலாக உட்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறான அமைப்பே கணக்கு என்ற சொல் மலையகப் பிரயோகத்திற்குறிப்பதாய் புதிய அர்த்தத்திற்குட்பட்டது. ஒரு கூலித்தொழிலாளி தன்னையறிமுகப்படுத்தும் போதுதான் இன்ன கங்காணியின் கணக்கிலிருந்தவரெனவோ இருப்பவரெனவோ குறித்தல் வழக்காறானது. தொழிலாளரின் தொழுகைக்குரிய கடவுளர்களின் மகோன்னத அவதாரங்களாய் இப்பெரிய கங்காணிமார் கருதப்பட்டனர். இவர்களோடு சில்லறைக் கங்காணியெனப்பட்டோரும் மலையகத்தோட்டங்களில் உலவினர். இற்றைநாள் காற்சட்டை சப்பாத்துடன் மேற்பார்வை செய்யும் சுப்பவைசர்களைப் போலத் தொழிலாளரின் வேலையைக் கண்காணிப்புச் செய்யும் நோக்குநர்களாயும் அறிவுறுத்துநர்களாயும் தொழிலாளர்களின் தவறுகளுக்கு (வேலை நேரத்துக்குப் பிந்திவருதல் தொழிலிலான தவறுகள் போன்றன) சிறு சிறு தண்டனைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவராகக் கருமமாற்றினர். சுருங்கக் கூறின் மலையக மக்களின் மூதாதையர் பெரிய கங்காணிமார்களின் ஆதிக்கத்திலான அடக்கு முறைக்குட்பட்டும் சில்லறை கங்காணிமாரின் அதிகாரத்திற்குட்பட்டதும் இவ்விருவரையும் விஞ்சிய மீதுயராதிக்காவாதிகளான தோட்டத்துரைமார் ஆகியோரின் அடக்குமுறைக் கொடூரங்களுக்கு முட்பட்டதுமான கொத்த டிமை வாழ்க்கையே வாழ்ந்தனர் எனல் வேண்டும்.

இவ்வடிமை வாழ்க்கையின் நிலைபேற்றை வலுவுடையதாக்கும் வகையிலேயே அவர்களுக்கான குடியிருப்புக்களும் நிர்மாணிக்கப்பட்டன. லயன் (line) எனப்படும் தொடர் வீடமைப்பு தொகுதிகளில் மலையக மக்கள் மந்தைகளைப்போல் அடைக்கப்பட்டிருந்தனர்.

"லயன்" என்பது ஐந்து, பத்து, இருபது, நாற்பது எனப் பல்வேறு எண்ணிக்கைகளில் சிறு சிறு அறைகள் தொடர்ச்சியாயமைந்த நீண்டதொரு குடியிருப்பமைப்பைக் குறிக்கும். இவ்வறைகள் மலையக வழக்கிற் காம்பராக்கள் எனப்பட்டன. "காம்பரா" என்பது பத்தடி அளவுடைய பக்கங்களை கொண்ட அறையொன்றைக் குறிக்கும் பதமாகும். இப்பத் தடிக்காம்பராவுடன் மிகச் சிறு வறாந்தாவொன்றும் காணப்பட்டது. இவ்வறாந்தா மலையக மக்களின் மொழி வழக்கில் இஸ்தோப்பு என வழங்கப்படுவதை இதுவரை வெளிவந்துள்ள புனைகதையிலக்கியங்களில் இச்சொல் பயின்று வருவதிலிருந்து அறியலாம். இந்தப்பத்தடி காம்பராவுக்குள்ளே ஒரு குடும்பத்திலான இனப்பெருக்கம் நடந்திருக்கின்றது. குடும்பம் பல்கிப்பெருகும் போது ஏற்படும் நெருக்கடிகள் பண்பாட்டுப் பிரச்சினைகளைக் கூட தோற்றுவித்திருக்கின்றன. தெளிவத்தை ஜோசப்பின் "மீன்கள்" என்னும் சிறுகதை இவ்வகைப்பண்பாட்டுப் பிரச்சினையை ஒருவாறு வெளிக்கொணர்வதாயமைந்ததென்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

லயத்துக் காம்பராக்கள் வாழ்க்கைக்குப் பொருத்தமானவையாகாது. சமைப்பதற்கும் பொருட்களைப் பேணி வைப்பதற்கும் உடுத்துணிகளைப் பராமரிப்பதற்கும் இது போன்ற இதர கருமங்களுக்கும் பத்தடிச் சதுர காம்ராவையே பயன்படுத்த வேண்டும். அந்த அறைக்குள்ளேயே பரண் அமைத்து விறகு சேகரித்து வைத்துக்கொள்ளுதல் வேண்டும் என்பது மலையக வழக்கில் அட்டாள் எனப்படுகிறது. இவ்வாட்டளிற் சேகரித்து வைக்கப்படும் விறகே நாளாந்தம் எரிப்பதற்குப் பயன்படுத்தப்படுதல் வேண்டும். பனிக்காலத்திலும் மழைக்காலங்களிலும் தாக் கும் கடும் குளிரினின்றும் நிவாரணம் பெறுவதற்காக குளிர் காய்வதற்கும் விறகே பயன்படுத்தப்பட்டது.

இந்தப் பத்தடிக்காம்பராவிலேயே குடும்பத்தாம்பத்தியம் நடந்தது. பெற்ற மக்களுடனான அன்புறவும் குடும்பத்தின் இதரவுறுப்பினர்களுடனான உறவுகளும் பேணப்பட வேண்டியனவாயிருந்தன. விருந்தினரையுபசரித்தல் நிகழ வேண்டியதாயிற்று. இதற்குள்ளேயே அண்ணன் தம்பிமார்களின் சொத்துப் பங்கிற்கான சமர்களும் இதர குடும்பச்சச்சரவுகளும் அவற்றுக்கான தீர்வுகளும் நிகழ்ந்தன. வயது வந்த குமரிகளுக்கான மரபுச்சடங்குகளும் ஆசாரங்களும் இடம்பெற்றன.

திருமணம், மகப்பேறு, மரணம், மரணத்திற்கான இறுதிக்கிரியைகள், தெய்வ வழிபாடு என எண்ணிலடங்கா மனித வாழ்வுடன் தொடர்புடைய கருமங்கள் யாவும் நிகழ்ந்தன.

இந்த லயத்து வாழ்க்கை முறைமை தொழிலாளர்களிடையே அடிமைத்தனத்தை நிலைத்திருக்கச் சுரண்டலை இடையீடின்றி கொண்டு நடாத்துவதற்கான ஸ்திர தன்மையை பெற்றிருந்தமை நிதர்சனமானது. அடிமைத்தனத்தின் நிலைப்பேறு செல்வந்த நிலைமைகளில் நிலைகொண்டிருப்பதன்று. மாறாக வறிய வாழ்நிலைமையை அடிமைத்தனத்தின் நீடித்த நிலைபேற்றுக்கு அவசியமானதாகும். ஆதலால் காலனித்துவம் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளேனும் இல்லாத குடியிருப்பமைப்பிற் தொழிலாளரை குடியமர்த்துவதே அவர்களை நிரந்தர அடிமைகளாய் ஸ்திரப்படுத்துவதற்கும் நீண்ட கால சுரண்டலை நிதர்சனமாக்குவதற்குமான வழியெனக் கண்டது. மாட்டுத்தொழுவங்களையொத்த லயத்து அறைகளை வீடுகளெனும் பெயரில் வழங்கியமைக்கான காரணமிதுவே. தோட்டத்தொழிலாளிகளின் வாழ்க்கையிலான இப்பாதகமான நிதர்சனமே ஒரு சாதகமான மாறுதலுக்கும் மலையக சமூகத்தை இட்டுச் சென்றுள்ளதென்பதே மலையகத்தின் பிற்கால வரலாறு நோக்கியறியலாம்.

தமிழகத்தினின்றும் இலங்கையின் மலையகத்திற் குடியேறிய கூலித் தொழிலாளர்கள் தமிழகத்தில் நிலவிய பிரபுத்துவச் சமூக வர்க்க அமைப்பிலான வாழ்க்கைக்கு முகங்கொடுத்தவர்களாவர். இந்திய பிரபுத்துவச்சமூக வர்க்க அமைப்பு சாதியமைப்பே அவ்வமைப்பின் பல்வேறு சாதிகளைச்சார்ந்த வர்க்கங்களும் மலையகப் பெருந்தோட்டங்களில் குடியேறியிருந்தன.

லயத்து குடியிருப்பமைப்பானது சாதியமைப்பின் ஆதிக்கத்தைப்படிப்படியாகத் தகர்ப்பதற்கேதுவானது. உயர்சாதியெனப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரெனக் கருதப்பட்டோருமான இருவேறு சாதியினரும் அடுத்தடுத்த லயக்காம்ராக்களில் குடியிருக்கும் கட்டாயத்தினை இக்குடியிருப்பமைப்பு ஏற்படுத்தியது.

தமிழ் நாட்டிலிருந்த குடியிருப்பு முறையிலும் பெருந்தோட்டங்களிலான குடியிருப்பு முறைமை முற்றிலும் வேறுபட்டிருந்தது. தமிழ் நாட்டில் ஒவ்வொரு சாதியினருக்கும் ஒவ்வொரு தெருவென குடியிருப்புச்சூழல்கள் வேறுபடுத்தியமைக்கப்பட்டிருந்தன. அதனால் வேறுபட்ட சாதியினருக்கிடையே மனித உறவுகள் அனுமதிக்கப்படாதிருந்தன. உயர் சாதியினரால் தாழ்த்தப்படோரெனக் கருதப்பட்ட மக்கள் பல்வேறு முறையில் நசுக்கப்பட்டனர். உடையணிவது முதற்கொண்டு தலைப்பாகையணிதல் தெருக்களில் நடமாடுதல் வீடுகளையமைத்தல் போன்ற யாவற்றிலும் மனித சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது.

தலைப்பாகையணிந்து செல்லும் தாழ்குலத்தவர் உயர்குலத்தவரையும் கண்டதும் தமது தலைப்பாகையைக் களைந்து கையிடுக்கில் வைத்துக்கொண்டு தொழுகை செய்தல் வேண்டும் என்பதும் கணுக்கால்வரை மேலுயர்த்தியே வேட்டியணிவதற்கான நிர்ப்பந்தமும் செருப்பணிந்து செல்லக்கூடாது என்பதுவும் தாழ்குலத்தார்க்கெதிரான அடக்கு முறைகளின் சிலவம்சங்ளென்பதைக் கொண்டு சாதியடக்கு முறையின் சொரூபம் எத்தகையதாயிருந்ததென்பதை யூகித்துக் கொள்ளலாம்.

லயம் எனப்படும் குடியிருப்பமைப்பு தொடர்ச்சியான அறைகளைக் கொண்டிருந்தமை காரணமாக வேறுபட்ட சாதியினர் அடுத்தடுத்து குடியிருக்க நேர்ந்ததால் தொடர்புகள் தவிர்க்க முடியாதவையாயின. பிரச்சினைகள் இடர்பாடுகள் நேரும்போது நோயுற்ற தருணங்களிலும் அயற்காம்பராக்களின் அனுசரணையும் உதவியும் நிராகரிக்கவியலாதவையாயின. உணவுப் பொருட்களிலான பற்றாக்குறை ஏற்படுகையில் ஒருவருக்கொருவர் கைமாறிக்கொள்ள வேண்டிய நிலையில் சாதியுணர்வைக் கடந்து பறிமாற்றம் செய்ய வேண்டியிருந்தது. இது போன்றே திருமணம் இறப்பு பிறப்பு முதலான தவிர்க்கவியலாத சம்பவங்கள் நிகழும் போதும் பெண்கள் பருவமடையுங் காலத்து நிகழும் சடங்காசாரங்களின் போதும் இதுபோலும் வாழ்க்கையில் நடைபெறும் வேறு அத்தியாவசிய சம்பவங்களின் போதும் ஒருவருக்கொருவர் மனிதருக்கு மனிதர் உறவு கொள்ள வேண்டியவராயினர். வாழும் சூழலிலான இப்புதிய உறவுக்கான நிலைமைகள் சா திதொடர்பான உணர்வுத்தளங்களில் சிறுகச்சிறுக மாறுதல்களைக் கொணர்ந்து சாதியச் செயன்முறைகளை தகர்த்தெறிந்தமை கவனிக்கத்தக்க வரலாற்று மாறுதலாகும். இலங்கையின் இதர தமிழ் பிரதேசங்களுடனும் தமிழ் நாட்டுடனும் ஒப்பு நோக்கிப்பார்க்கையில் மலையகத்தில் சாதி முறையிலான அழுத்தமானது எத்தனையோ சதவீதம் குறைந்ததெனவே கொள்ளல் வேண்டும். எனினும் சாதிய அடிப்படையிலான உணர்வும் அணுகலும் முற்றாக நீங்கி விட்டனவென கொள்ளவியலாது. அதன் மிச்ச சொச்சங்களை இன்றைக்குங் காணலாம்.

சாதியமைப்பு முறையிலான இறுக்கமான முரண்பாடுகள் தளர்ச்சி கண்டு மனித நேய உறவுகள் நிலைபேறடைவதற்கு மூலமாயமைந்தது. காலனித்துவம் தொடங்கி வைத்த முதலாளித்துவம் சார்ந்த வர்க்க அடிப்படையிலான உறவேயன்றி வேறல்ல. லயத்தில் வாழ்ந்த யாவரும் (பெரிய கங்காணிமாரைத் தவிர) கூலித்தொழிலாளர்களானதால் முகாமைத்துவ வர்க்கத்தினரதும் (MANAGERIAL CLASS) மலையகத்திலான மத்திய தர வர்த்தகத்தினரதும் இதர வர்க்கத்தினரதும் பார்வையில் தரங் குறைந்தவர்களாகவேப்பட்டனர். தொழிலாளர் யாவருக்கும் உழைப்பை விற்பதற்கான கூலியின் அளவு ஒன்றே இவ்வாறு காலனித்துவ அமைப்பினடியில் சேவை செய்தோரான அதிகாரத்துவ முகாமைத்துவ சிறு முதலாளித்துவ வர்க்கத்தினரின் தொழிலாளரை ஒரு சேர நோக்கியதான பொது நோக்கும் அணுகலும் நடத்துகையுமான யாவும் சாதி வேறுபாட்டுணர்வையும் அதன் செயன் முறைகளையும் மாறுபடுத்தின. தொழிலாளர்கள் முகங்கொடுக்க வேண்டிய பிரச்சினைகளனைத்தும் ஒரே மையத்தையே அடி நிலையாகக் கொண்டிருந்தன.

முரண்பாடென்பது உழைப்போருக்கும் உழைப்பைச் சுரண்டுவோர்க்குமிடையிலானதாகவிருந்தது. அடக்கு முறைகள் உழைப்பைச் சுரண்டுவோரிடமிருந்தேயெழுந்தன. அவர்களுக்குச் சேவை செய்யும் முகாமைத்துவ ம் முகாமைத்துவ வர்க்கத்தினரும் சுரண்டுவோரின் கருத்துக்களைத் தாங்கியே அவர்களின் பிரதிநிதிகளாக நின்று ஒடுக்கு முறையை முன்னெடுத்தனர். இந்த முரண்பாடு பாட்டாளி வர்க்கத்தினரிடையே ''தாம் ஒரே வர்க்கம்'' என்ற பிரக்ஞையை பிறப்புடனே கூடி ஏற்படுத்தியிருந்தது. மலையகத்தில் சாதியமைப்பு வலுவிழந்து போனமைக்கு மூலாதாரமானதும் யதார்த்தபூர்வமானதுமான காரணி இதுவே.

நன்றி - வீரகேசரி
Share this post :

+ comments + 1 comments

பயனுள்ள கட்டுரை

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates