ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் பிரதான வீதிகளே காரணமாக அமைகின்றன. அதனால்தான் அபிவிருத்தியடைந்த நாடுகளும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளும் வீதி அமைப்புக்கு முதலிடத்தை வழங்குகின்றன.
ஒரு பிரதேசத்தில் வாழும் மக்கள் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம் மற்றும் சமூக ரீதியாக அபிவிருத்தியடைய வேண்டுமானால் அந்தப் பிரதேசத்துக்கான வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.
தலவாக்கலையிலிருந்து நுவரெலியா வரையிலான பிரதான வீதி நவீன முறையில் அகல வீதியாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தலவாக்கலை – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை நகரிலிருந்து டயகமவுக்கான வீதி பிரிந்து செல்கிறது. லிந்துலை நகரத்திலிருந்து டயகமவுக்கான சுமார் 15 கி.மீ. வீதியே இதுவரை புனரமைக்கப்படாமலுள்ளது.
டயகம செல்லும் வீதியிலுள்ள நாகசேனை நகரத்திலிருந்து பிரிந்து செல்லும் வீதி இராணிவத்தை, பம்பரகலை, நோனாத் தோட்டம் போன்ற பல தோட்டப் பகுதிகளை ஊடறுத்துச் செல்கிறது. இவ்வீதியும் புனரமைக்கப்பட வேண்டும்.
தொடர்ந்து டயகம செல்லும் வீதியிலுள்ள திஸ்பனை சந்தியிலிருந்து பிரிந்து செல்லும் வீதி திஸ்பனை, மரேயா, தங்கங்கலை, எல்ஜின் வரை நீண்டு செல்கிறது.
அடுத்ததாக மன்றாசி நகர சந்தியிலிருந்து பிரிந்து செல்லும் மற்றுமொரு வீதி பெல்மோரல் பேர்டைஸ் டிக்கோயா வழியாக ஹட்டன் செல்கிறது. மலையக பெருந்தோட்ட பிரதேசங்களின் ஊடாக செல்லும் பிரதான வீதிகள் 1947ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த நாட்டை ஆட்சி செய்த வெள்ளைக்கார ஆட்சியாளர்களினால் அமைக்கப்பட்டவையாகும். இன்றுவரை அதேநிலையில் காணப்படுகின்றன. இன்னமும் எந்தவிதமான அபிவிருத்தியும் செய்யப்படாமல் உள்ளன.
தோட்டங்களுக்குள் காணப்படும் பாதைகள் தற்போது ஓரளவு தார்ப்பாதையாகவும் கார்ப்பெட் பாதையாகவும் கொங்கிரீட் பாதைகளாகவும் காணப்படுகின்றன. ஆனால், தலவாக்கலையில் இருந்து டயகம வரையும் செல்லும் டயகம–தலவாக்கலை பிரதான வீதியானது எந்தவிதமான அபிவிருத்தியுமின்றி நீண்ட காலமாக உடைந்து குன்றும் குழியுமாக காணப்படுகிறது.
லிந்துலை நகரத்தில் இருந்து டயகம செல்லும் 15 கிலோ மீற்றர் தூரமுடைய இவ் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பீ. பிரிவுக்கு உட்பட்டதாகும். இவ்வீதியை தினமும் பல நூற்றுக்கணக்கான வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அரச மற்றும் தனியார் பஸ்கள் கொழும்பு, கண்டி, நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை ஆகிய நகரங்களுக்கும் டயகம, அக்கரைப்பத்தனை, மன்றாசி, பசுமலை ஆகிய நகரங்களுக்கும் செல்ல பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். மரக்கறி சந்தைகளுக்கு பல லொறிகள் மரக்கறிகளை தினமும் ஏற்றி செல்லுகின்றன. போபத்தலாவ, மெனிக்பாலம், டெபர்ட்பாம் ஆகிய பாற்பண்ணைகளில் இருந்து பாலை ஏனைய பால் சேகரிக்கும் நிலையங்களுக்கு கொண்டு செல்ல இவ்வீதியையே பயன்படுத்தி வருகின்றார்கள்.
அகலம் குறைந்ததும் குறுகியதுமான இவ்வீதி மேடு பள்ளமாகவும் அதிக வளைவுகள் கொண்டதாகவும் காணப்படுகின்றது. 2014 ஆம் ஆண்டு அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பஷில் ராஜபக் ஷவிடம் முன்னாள் கால்நடை வள சமூக அபிவிருத்தி அமமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் மேற்படி வீதியை அகலமாக்கி கார்ப்பெட் வீதியாக அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கமைய கடந்த வருடம் 2014 ஆகஸ்ட் மாதம் இவ்வீதியின் அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அப்பொழுது தோட்ட நிர்வாகம் தேயிலைச் செடிகளையும் மரங்களையும் வெட்டுவதற்கு அனுமதிக்காமையினால் வேலைகள் இடை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக ஆறுமுகன் தொண்டமானின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதையடுத்து, அவர் அக்கரைப்பத்தனை பெருந்தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பின்னர் டயகமயில் இருந்து அக்கரைப்பத்தனை சட்டன் தோட்டம் வரையிலான சுமார் 4 கிலோ மீற்றர் தூரப் பாதையை அகலமாக்கும் வேலைகள் நடைபெற்று வந்தன.
கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் பதவி ஏற்றதைத் தொடர்ந்து இவ்வேலைகள் யாவும் இடைநிறுத்தப்பட்டன. வெட்டப்பட்ட மண், கற்பாறைகள் அகற்றப்படாமல் வீதி ஓரத்திலேயே போடப்பட்டுள்ளன. இதனால் மழைக் காலங்களில் வீதி சேறு நிறைந்து காணப்படுகின்றது.
வாகனங்கள் செல்ல முடியாமல் உள்ளன. வீதியில் செல்லும் பயணிகளும் மாணவர்களும் பெரும் அசெளகரியங்களுக்குள்ளாகின்றனர்.
அவசர தேவைகளுக்காக நோயாளர்கள், கர்ப்பிணித்தாய்மார்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல முடியாத நிலையும் காணப்படுகின்றது.
ஆகவே, புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள், பிரதேச பொதுமக்களின் நலன் கருதி இடை நிறுத்தப்பட்டுள்ள இவ்வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதேச மக்கள் கோருகின்றார்கள்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...