பொது தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு விடயத்தில் ஓங்கிக் குரல் கொடுத்த தொழிற்சங்கங்கள் தற்போது ஒன்றுமறியாதவை போன்று ஓய்ந்து போய் இருக்கின்றன. எந்தவொரு தொழிற்சங்கமும் தொழிலாளரின் சம்பள உயர்வு பற்றியோ அல்லது கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியோ தற்போது வாயைத் திறக்காமல் இருக்கின்றன.
கடந்த ஏப்ரல் முதலாம் திகதி புதிய கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஏறக்குறைய ஆறு மாதங்களாகியும் இதுவரை புதிய கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படவில்லை.
முக்கியமாக கூட்டு ஒப்பந்தத்தினூடாகத் தீர்மானிக்கப்படும் தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை. இதனால் முதலாளிமார் சம்மேளனத்துக்கோ அல்லது தொழிற்சங்கங்களுக்கோ பாதிப்பில்லை. முழுமையாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கே பாதிப்பு என்பதை மறந்து விடக்கூடாது.
தேர்தலின் போது சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்திய தொழிற்சங்கங்கள் தற்போது வாய்மூடி மௌனமாக இருப்பது ஏனென்று தெரியவில்லை. எந்தவொரு மலையக தொழிற்சங்கமோ அல்லது மலையகக் கட்சியோ தேர்தலுக்குப் பின்னர் இந்த சம்பள உயர்வு பற்றி எந்தவிதமான அறிக்கையையும் வெளியிடவில்லை.
கூட்டு ஒப்பந்தம் காலாவதியாவதற்கு சில மாதங்களுக்கு முன்னரே தோட்டத்தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா நாட் சம்பளம் வழங்கப்பட வேண்டுமென்று இ.தொ.கா. அறிவித்தது. தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துடன் இடம்பெற்ற பல பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டு தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது.
ஏனைய தொழிற்சங்கங்களும் இ.தொ.கா. வின் கோரிக்கையை வரவேற்று ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்க வேண்டியதன் அவசியத்தை குறிப்பிட்டிருந்தன.
முதலாளிமார் சம்மேளனமோ உலக சந்தையில் தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்க முடியாதிருப்பதாக தெரிவித்தது. தொடர்ந்தும் இதனையே தெரிவித்து வருகிறது.
தேர்தலுக்கு முன்னர் தோட்டத்தொழிலாளரின் சம்பள உயர்வுக்காக குர ல்கொடுத்த தொழிற்சங்கங்கள் தேர்தலின் பின்னர் அதுபற்றி குரல் எழுப்பாமல் இருப்பதன் காரணம் என்ன ? குறிப்பாக கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் தோட்டத்தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி ஆகியவற்றுக்கு இவ்விடயத்தில் முக்கிய பொறுப்பு இருக்கிறது. எனவே இந்த தொழிற்சங்கங்கள் தமது பொறுப்பிலிருந்து விலகி விட முடியாது. சம்பள உயர்வுக்காக இந்த தொழிற்சங்கங்கள் முதலாளிமார் சம்மேளனம் மற்றும் அரசுடன் உடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
அத்துடன் மலையகத்தின் முக்கிய தொழிற்சங்கங்களான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் மலையக மக்கள் முன்னணி என்பன அரசின் பங்காளிகளாகவும் அதன் தலைவர்கள் அமைச்சர்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அரசினூடாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
ஆகஸ்ட் 17 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றதால் அக்காலப்பகுதியில் நடைபெற்ற சம்பள உயர்வுப் பேச்சுவார்த்தை தேர்தல் முடியும் வரை பிற்போடப்பட்டது. இப்போது தேர்தல் முடிவடைந்து ஒரு மாதம் முடிவடைந்து விட்டது. ஆனால் இதுவரை பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படவில்லை.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தோட்டத்தொழிலாளருக்கு நல்ல சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படுமென்று கூறியிருந்தார். எனவே இப்போது பிரதமர் ஊடாக இப்பிரச்சினைக்குத்தீர்வு காண நடவடிக்கை எடுக்கலாமல்லவா?
தற்போது பெருந்தோட்டத்தொழில்துறை அமைச்சராக நவின் திசாநாயக்கா பொறுபேற்றுள்ளார். அவர் பெருந்தோட்டத்துறை தொடர்பான அனைத்து விடயங்களையும் நன்கு அறிந்தவர். அவரது மாவட்டமான நுவரெலியாவிலுள்ள தோட்டத்தொழிலாளர்கள் பற்றி அவர் நன்கு அறிந்தவர். எனவே அவரும் இந்த விடயத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவாரென எதிர்பார்க்கலாம். எனவே இ.தொ.கா. மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து தொழிலாளரின் சம்பள உயர்வுக்காகக் குரல் கொடுக்க வேண்டும்.
தேயிலைத்தொழிலாளர்கள் இலங்கையில் மட்டுமன்றி இந்தியாவிலும் கூட சம்பள உயர்வுக்காகப் போராடி வருகின்றனர்.
தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் மூணாறு பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான தேயிலைத்தோட்டங்கள் காணப்படுகின்றன.
இந்தத்தோட்டங்களில் பெரும்பாலும் தமிழ் தொழிலாளர்களே பணி புரிகின்றனர். அதிலும் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழ் தொழிலாளர்கள் மூணார் பகுதி தோட்டங்களில் நீண்ட காலமாக வேலை செய்து வருகின்றனர்.
இந்தத்தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 231 ரூபா (இந்திய ரூபா) வழங்கப்படுகிறது. இந்தத் தொகை போதாது எனவும் எனவே தமது சம்பளத்தை 500 ரூபாவாக உயர்த்தித் தரவேண்டுமென கோரிக்கை விடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் 10 வீதமாக அறிவிக்கப்பட்ட போனஸை 20 வீதமாக அதிகரித்து தருமாறு பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து 9 தினங்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநில தேயிலைத்தோட்ட வரலாற்றில் இது ஒரு பெரும் போராட்டமாக அமைந்தது. சுமார் ஒன்பது தினங்களாக தொடர்ந்த இந்தப் போராட்டம் இறுதியில் கேரள மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டியின் தலையீட்டினால் முடிவுக்கு வந்தது. அதாவது, தொழிலாளருக்கு சாதகமான பதிலை பெற்றுத்தருவதாக தோட்டத் தொழிலாளர் பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார். அதன் பின்னர் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினர். ஆனால் இலங் கையில் தமது சம்பள உயர்வுக்கு மெதுவாக பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டும் இங்குள்ள தொழிலாளர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
நாட்டில் குறைந்த வருமானத்தை பெறுபவர்களாக தோட்டத்தொழிலாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும் சம்பளத்தையாவது முறையாக வழங்க நடவடிக்கை எடுக்காதிருப்பது வேதனைக்குரியது.
சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகளை விரைவில் ஆரம்பிக்க, நல்லதொரு சம்பள உயர்வைப்பெற்றுக்கொடுக்க அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...