Headlines News :
முகப்பு » » கொடுப்பனவு உயர்வு சாத்தியமாகுமா? ஆசிரிய உதவியாளர்களுக்கு - சத்தியமூர்த்தி

கொடுப்பனவு உயர்வு சாத்தியமாகுமா? ஆசிரிய உதவியாளர்களுக்கு - சத்தியமூர்த்தி


மலையகத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக கோரப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆசிரிய உதவியாளர்கள் குறித்த பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

இவ்வாறு நியமனம் பெற்றுள்ள ஆசிரிய உதவியாளர்கள், தமது ஐந்து வருட சேவை காலத்திற்குள் நியமனம் பெற்ற விடயத்திற்கான ஆசிரியர் பயிற்சியை அல்லது வெளிவாரியான பட்டப்படிப்பை பூர்த்தி செய்ததன் பிறகே ஆசிரிய சேவைக்குள் உள்வாங்கப்பட உள்ளனர்.

இவர்கள் நியமனம் பெற்ற பாடசாலையில் 10 வருடகால சேவையை பூர்த்தி செய்வது அவசியமாகும்.

ஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவாக மாதமொன்றிற்கு ரூபா 6 ஆயிரம் மாத்திரமே வழங்கப்படும் என நியமனத்திலும், அவர்கள் குறித்த பதவிக்கு விண்ணப்பிக்கும் போதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

இரு மாதங்களுக்கு முன்னதாக மத்திய, ஊவா உட்பட அனைத்து மாகாணங்களிலும் ஆசிரிய உதவியாளர்கள் பெருவாரியாகப் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டனர். இதன்போது அவர்களது கொடுப்பனவை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென சம்பந்தப்பட்ட மாகாணங்களில் உறுதிமொழிகளும் வழங்கப்பட்டிருந்தன. 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை மாத்திரம் பெற்றுக் கொண்டு தங்களது தொழில் தகைமைகளை உயர்த்திக் கொண்டு ஆசிரிய சேவைக்குள் உள் நுழையும் எதிர்பார்ப்பில் வந்த ஆசிரிய உதவியாளர்களுக்கு கொடுப்பனவு உயர்வு தொடர்பான அறிவித்தல்கள் புது உற்சாகத்தை தந்திருந்தன.

ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சராக அப்போது பதவி வகித்து வந்த வடிவேல் சுரேஷ், மாகாணத்தில் முதற்கட்டமாக நியமனம் பெற்ற 599 பேர் உட்பட ஏனையவர்களுக்கும் 23,500 ரூபாவை மாதாந்த கொடுப்பனவாக பெற்றுக் கொடுக்க ஊவா மாகாண சபையினூடாக நடவடிக்கை எடுத்து அதை மாகாண அரசாங்க சேவை ஆணைக்குழுவிற்கும் அறிவித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி ஆசிரிய உதவியாளர்கள் தாம் நியமனம் பெற்ற நாளிலிருந்து (ஊவாவில்) 23,500 ரூபாவை கொடுப்பனவாக பெற முடியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது இவ் 23,500 ரூபா கொடுப்பனவு தொடர்பான வாதப் பிரதிவாதங்கள் ஆசிரிய உதவியாளர்களின் வாக்குகளை கவரும் வகையில் உச்ச கட்டத்தை எட்டியிருந்தன. எனினும் ஆசிரிய உதவியாளர்களுக்காக மாதம் 6ஆயிரம் ரூபா மாத்திரம் இதுவரை காலமும் கொடுப்பனவாக வழங்கப்பட்டு வருகின்றது.

ஆசிரிய உதவியாளர்களுக்கான முதற்கட்ட நியமனங்கள் கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தலைமையில் கொழும்பில் வைத்து வழங்கப்பட்ட போது அப்போதைய கல்வி அமைச்சரான அகிலவிராஜ் காரியவசம், ஆசிரிய உதவியாளர்களுக்கான கொடுப்பனவு போதுமானதாக இல்லை என குறிப்பிட்டிருந்தார்.

நாடளாவிய ரீதியில் இதுவரையும் சுமார் 2200 இற்கு இடைப்பட்டவர்கள் தமிழ் மொழிமூல பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாக சேவையில் இணைந்துள்ளனர். இன்னும் சிலர் புதிய அமைச்சரவை நியமனத்திற்குப் பின்னர் ஆசிரிய உதவியாளர்களாக பாடசாலைகளுக்கு நியமனம் பெற்று செல்லவுள்ளனர்.

ஆசிரிய உதவியாளர்கள் நியமனத்திற்கான விண்ணப்பங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சிக் காலத்தில் கால் நடை அபிவிருத்தி அமைச்சராக இருந்த ஆறுமுகன் தொண்டமானின் முயற்சியால் கோரப்பட்டிருந்தன. இப்பதவிக்கான கல்வித்தகைமை மற்றும் கொடுப்பனவு, ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவது தொடர்பான நிபந்தனைகளும் குறித்த ஒரு தரப்பினராலேயே தீர்மானிக்கப்பட்டிருந்தன.

அன்றைய காலகட்டத்தில் அரசாங்க தொழில் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த கல்வி கற்ற மலையக இளைஞர், யுவதிகள் சுமார் 12ஆயிரம் பேர் வரை இப்பதவிக்காக விண்ணப்பித்திருந்தனர். நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் சுமார் 6 ஆயிரம் பேர் வரை நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு அவர்களில் 3000 பேர்வரை கல்வித் தகைமையின் அடிப்படையில் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த வீ.இராதாகிருஷ்ணன் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்தே இந்நியமனங்களை ஜூன் மாத நடுப்பகுதியிலிருந்து கட்டங்கட்டமாக பெற்றுக் கொடுத்திருந்தார். ஆசிரிய உதவியாளர்களாக நியமனம் பெற்றவர்களில் பெரும்பாலானவர்கள் தொழிலுக்குரிய கல்வித் தகைமையை விட கூடுதல் தகைமைகளை கொண்டுள்ளனர். சிலர் வெளிவாரியாக பட்டப்படிப்பை நிறைவு செய்யும் தறுவாயில் உள்ளனர். இந்நிலையில் இவர்களுக்கான கொடுப்பனவு இவர்களது மாதாந்த தேவையை பூர்த்தி செய்வதற்குப் போதுமானதல்ல என்பது வெளிப்படையாகும்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவும், குடும்ப சூழ்நிலையும், பொருளாதார தேவைகளும் குறித்த ஆசிரிய உதவியாளர்களின் மாதாந்த கொடுப்பனவிற்கு முன்பு சவாலான விடயமாக மாறியுள்ளன நாட்டில் நல்லாட்சி தொடர்பான மாற்றம் கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் ஏற்பட்டது. ஆகஸ்ட் 17ஆம் திகதி இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலும் மீண்டும் நல்லாட்சியை உறுதிப்படுத்தியுள்ளது.
பாராளுமன்றத் தேர்தலில் மலையக கட்சிகளின் கூட்டாக களமிறங்கிய தமிழ் முற்போக்கு கூட்டணி மத்திய, ஊவா, மேல் மாகாணங்களில் 6 ஆசனங்களை பெற்றுள்ளது. இ.தொ.காவும் 2 உறுப்பினர்களை பெற்றுள்ளது. இந்நிலையில் 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் மலையக மக்களின் நலன் சார்பாக குரல் கொடுக்கக் கூடிய நல்ல வாய்ப்பே ஏற்பட்டுள்ளது.

ஊவா மாகாண தமிழ்க் கல்வி அமைச்சராக இருந்த வடிவேல் சுரேஷ் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றுள்ளார். கல்வி இராஜாங்க அமைச்சராக மீண்டும் இராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலைமை ஆசிரிய உதவியாளர்களின் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர் பான விடயத்தில் தீர்மானங்களை மேற் கொள்வதற்கு வாய்ப்பாக அமையும். ஆசிரிய உதவியாளர்களுக்கு ஊவா மாகாண சபையின் மூலம் ஏற்கனவே உறுதியளித்த 23,500 ரூபா கொடுப்பனவை வழங்க முன்வர வேண்டும். அவ்வாறு முடியாது போனால் அவர்களின் வாழ்க்கைச் செலவை நிவர்த்தி செய்து கொள்ளும் வகையிலான பொருத்தமான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். அப்போதே அவர்களின் சேவை பாடசாலைகளில் திருப்திகரமானதாக அமையும்.


Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates