சம்பந்தரின் எதிர்கட்சித் தலைமையேற்பு குறித்து பல கோணங்களில் இருந்தும் ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துக்கள் வெளியாகி வருகின்றன. சிங்கள பேரினவாத தரப்பு இந்த தெரிவு குறித்து கொதித்துப் போயுள்ளது. நாட்டைப் பிரிப்பதற்காக தமிழர்களுக்கு கிடைத்துள்ள சர்வதேச அங்கீகாரம் இது இந்த அடையாளம் என்கின்றனர்.
இன்னொருபுறம் ஆளும் சிங்கள தரப்பு தமிழர்களுக்கு சிங்களவர்களால் காட்டப்பட்டுள்ள "பெருந்தன்மை" என்கிற அர்த்தத்தில் குதூகலமடைகின்றன. தாராள விட்டுக்கொடுப்பாக நினைக்கின்றன.. தென்னிலங்கை ஜனநாயக முற்போக்கு சக்திகள் கூட இதனை ஆதரித்து கருத்து வெளியிடுவது கூட இனவாதிகளையும் மீறி தென்னிலங்கை தமது இனத்தாராளவாத சமிக்ஞையை வெளிப்படுத்திவிட்டது என்கிற அர்த்தத்தில் தான்.
தமிழர் தரப்போ வரலாற்றில் இரண்டாவது தடவையாக, அதுவும் 33 வருடங்களுக்குப் பின்னர் தமிழர்களுக்கு கிடைத்துள்ள பதவி என்று “தமிழ்ப் பெருமிதம்” கொள்கின்றன.
இந்த பதவியால் தமிழர் தரப்புக்கு மேலதிக சர்வதேச அங்கீகாரம் கிடைக்கிறதோ இல்லையோ. தாம் தமிழர்களுக்கு தீகிளைக்காத, அவர்களுக்கு வரபிரசாதம் வழங்கும், தாராளப்போக்குள்ள ஜனநாயக சக்தி என்கிற பிம்பத்தைக் காட்ட சிங்கள அரசுக்கு கிடைத்துள்ள சாதகம் என்றே புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. போர்குற்றச்சாட்டிலிருந்து மீளவும், இனபிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுக்கான வழிகளிலிருந்து காலந்தால்த்தவும், ஒத்திவைக்கவும் கூட சிங்களத் தரப்புக்கு இது வாய்ப்பாக பயன்படும்.
இனப்பிரச்சினைக்கு தீர்வைத் தருவதற்கு பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் தடுக்கின்றன என்றும் இதுவரை கால அரசாங்கங்கள் சாட்டு கூறி வந்திருக்கின்றன. பிரதான கட்சிகள் சேர்ந்து தேசிய அரசாங்கம் அமைத்தால் அதனை சாத்தியப்படுத்தலாம் என்றும் இதுவரை காலம் கூறி வந்திருக்கிறன. ஆனால் அந்த உத்தரவாதங்களுடன் இம்முறை இந்த “தேசிய அரசாங்கங்கம்” அமைக்கப்படவில்லை என்பதை நினைவிற்கொள்வோம். எனவே இது “நல்லாட்சியா” அல்லது இன்னொரு “காட்டாட்சியா” என்பதை இனிவரும் காலமே நமக்கு உணர்த்தும்.
அதே வேளை கூட்டமைப்புக்கு இந்த தகுதி சரியானது தானா என்கிற இன்னொரு கேள்வியும் எழுகிறது. தமிழ்த் தேசிய அரசியல் சக்திகள் ஒரு எதிர்க்கட்சிக்குரிய அரசியல் மரபை வளர்த்து வந்தது கிடையாது. இலங்கை என்கிற தேசத்தின் ஏனைய பிரச்சினைகளின் பால் நின்று ஏனைய எதிர்க்கட்சிகளோடு சேர்ந்து பணியாற்றிய அரசியல் அனுபவம் அவர்களுக்கு கிடையாது. ஒரு எதிர்க்கட்சிக்குரிய அரசியல் உள்ளடக்கத்தை அவர்கள் வளர்த்துக்கொள்ளவில்லை. இதுவரை ஈழத்தமிழர் அரசியல் என்பது எதிர்ப்பரசியலை அரசியல் கலாசாரமாக வளர்த்தெடுத்து வந்திருப்பதால் இலங்கையின்ஏனைய பிரச்சினைகளிலிருந்து அந்நியப்பட்டே வந்திருக்கின்றன என்பது கண்கூடு. ஏன் இப்படிப்பட்ட அனுபவத்துடன் தான் ஏனைய கட்சிகளும் எதிர்க்கட்சி பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றனவா என்கிற கேள்வி எழலாம். ஆனால் இன்றைய எதிர்க்கட்சி வரிசையில் இதற்க்கு தகுதிவாய்ந்த வேறு கட்சிகளே இல்லையா என்கிற கேள்வியை நியாயமாக எழுப்ப வேண்டியிருக்கிறது. அந்த வகையில் எதிர்க்கட்சிக்கு தகுதியான கட்சி ஜேவிபி.யே இலங்கையின் ஏனைய பிரச்சினைகள் குறித்த எதிர்ப்பரசியல் செய்த நீண்ட மரபு அவர்களுக்கு உரியது.
விரும்பியோ விரும்பாமலோ கூட்டமைப்பு அந்த பொறுப்புக்கு தெரிவாகிவிட்டது. கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சிப் பதவி கிடைத்து விடக்கூடாது என்கிற இனவாத போக்கை எதிர்த்து நிற்பது எவ்வளவு அவசியமோ அதுபோல கூட்டமைப்பு காத்திரமான எதிர்க்கட்சி தலைமைப் பாத்திரத்தை பொறுப்புடன் ஆற்றும்படி வலியுறுத்துவதும் மிகவும் அவசியம்.
எதிர்க்கட்சி தலைமைக்கு சம்பந்தரை ஆளும்தரப்பு தெரிவுசெய்ததானது பலவீனமான எதிர்க்கட்சித் தலைமையை உருவாக்கிக் கொண்டு ஆளுங்கட்சியை பலப்படுத்துவதும். தம்மை ஒரு இனத் தாராளவாதிகளாக சர்வதேசத்துக்கு காண்பிக்கும் கண்துடைப்பு மட்டுமே.
ஆளும் சிங்கள தரப்பின் அரசியல் நிகழ்ச்சிநிரல் சரியான திசையில் தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது.
நன்றி - IBCTAMIL
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...