பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு மற்றும் அவர்களின் நலன்புரி சேவைகள் தொடர்பாக தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் 1994 ஆம் ஆண்டு முதல் கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு வருகின்றது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து கொள்ளப்படும் இந்தக் கூட்டு ஒப்பந்தம், ஒரு முறையாவது எந்தவிதமான பேரப் பேச்சும், போராட்டமுமின்றி சுமுகமான முறையில் செய்து கொள்ளப்பட்டதாக வரலாறு எதுவும் கிடையாது.
இதுவரை செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களைவிட இம்முறை செய்து கொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையவுள்ளது. காரணம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை 1000 ரூபாவாகப் பெற்றுக் கொடுக்க உள்ளதாக இ.தொ.கா. தொடர்ந்தும் சூளுரை விடுத்து வந்துள்ளது. இதற்கு மலையகத்திலுள்ள சகல அரசியல், தொழிற்சங்க மற்றும் சிவில் அமைப்புகளும் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வந்துள்ளன. அதேநேரம், பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு சம்பள உயர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார். எனவே, இம்முறை கூட்டு ஒப்பந்தமும், அதன்மூலம் பெறப்படவுள்ள சம்பள உயர்வும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
சம்பள உயர்வும் பொதுத் தேர்தலும்
வழமையாக நாட்டில் இடம்பெற்ற தேர்தல்களுக்கும், நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலுக்கும் நிறைய வேறுபாடுகள் காணப்பட்டிருந்தன. ஏனெனில், ஒவ்வொரு தேர்தலிலும் ஏதாவது பொதுவான பிரச்சினைகளை, வாக்குறுதிகளை வேட்பாளர்கள் முன்வைத்து வாக்குகளைக் கேட்பார்கள். ஆனால், இம்முறை அனைத்து வேட்பாளர்களும் வலியுறுத்தி, பிரஸ்தாபித்த ஒரே விடயம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுதான்.
இ.தொ.கா. இறுதி நேரத் தேர்தல் பிரசாரத்திலும் எப்பாடு பட்டாவது ஆயிரம் ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக அதன் தலைவர் முத்து சிவலிங்கம், பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர் தெரிவித்திருந்தார்கள். அதேபோல், தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பி. திகாம்பரம், மலையக மக்கள் முன்னணி அரசியல் துறை தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் ஆகியோரும் தேர்தல் முடிந்த பிறகு, நியாயமான சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க பிரதமர் தகுந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் கூறியிருந்தார்கள்.
அனைத்துக்கும் மகுடம் வைப்பது போல, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நுவரெலியா, தலவாக்கொல்லை உட்பட மலையகத்தில் அவர் கலந்துகொண்ட கூட்டங்களில் தேர்தல் முடிந்த பிறகு சம்பள உயர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தமை தொழிலாளர்களுக்கு ஒருவகையான நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிரதிபலிப்பாக ஐ.தே.க.வுக்கு அமோகமான வாக்குகளை மலையக மக்கள் அளித்திருந்தார்கள். எனவே, சம்பள உயர்வு என்பது தேர்தல் கால வாக்குறுதி என்ற நிலை மாறி, மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது.
சம்பள உயார்வுக்கு சரியான சந்தர்ப்பம்
வழமையாகக் கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டக் கம்பனிகளின் சார்பில் முதலாளிமார் சம்மேளனமும், தொழிற்சங்கங்களின் சார்பில் இ.தொ.கா., இ.தே.தோ.தொ. சங்கம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஆகிய மூன்று அமைப்புகள் மாத்திரமே பங்கு கொண்டு வந்துள்ளன. இம்முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் மற்றும் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் சார்பில் நாட்டின் பிரதமரே தலையிட முன்வந்துள்ளமை சிறப்பம்சமாகும்.
ஏனெனில், இ.தொ.கா., இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி உட்பட சகல அமைப்புகளும் தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கவும், அரசாங்கத்தில் பங்காளிகளாக இருக்கவும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. இது மலையக அரசியல், தொழிற்சங்க, கூட்டு ஒப்பந்த வரலாற்றில் ஒரு திருப்பு முனையாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு அமைப்பும் தமது கருத்தையும், ஆலோசனையையும் பிரதமரிடம் வலியுறுத்தவும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் போது, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் ஆலோசனைகள், கருத்துகள் பல சந்தப்பங்களில் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன. இதனால், கூட்டு ஒப்பந்த காலங்களில் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் இடம்பெற வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருந்தது. ஆனால், இம்முறை அனைத்தும் சுமுகமாக இடம்பெறக் கூடிய அருமையான சூழல் தோன்றியுள்ளது. பிரதமரின் மத்தியஸ்தத்தின் கீழ் சம்பள உயர்வு கிடைக்கக் கூடிய வரலாற்று நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
கூட்டு ஒப்பந்த முறையை நீக்குவதற்கு கூட்டாகக் குரல் கொடுத்தால் என்ன?
இலங்கையில் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வருடாந்தம் சம்பள உயர்வு கிடைத்து வருகின்றது. அரசாங்க ஊழியர்களுக்கு வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக சம்பள அதிகரிப்பு கிடைத்து வருகின்றது. அதேபோல், அரசாங்கத்தின் அனுசரணையுடன் தனியார்துறை ஊழியர்களுக்கும் வருடாந்த சம்பள உயர்வு வழங்கப்படுகின்றது. ஆனால், பெருந் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மாத்திரம் தான் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது. அதுவும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானிக்கப்பட்டு வருகின்றது.
இந்த இரண்டு வருட காலப்பகுதியில், நாட்டில் விலைவாசி எவ்வளவு உயர்ந்தாலும் அதைப்பற்றிக் கவலைப்பட முடியாது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து கொள்ளப்படும் சம்பள உயர்வுக்கான கூட்டு ஒப்பந்தம் காரணமாக சம்பள உயர்வு கோரி எந்தவிதமான போராட்டமும் செய்ய முடியாது. அடிமைச் சாசனம் போன்ற கூட்டு ஒப்பந்தம் இதைக் கட்டுப்படுத்துகின்றது.
இது தொழிற்சங்கங்களுக்கு நன்றாகத் தெரிந்த விடயம் தான். என்றாலும், அவர்களாலும் எதுவும் செய்ய முடியாது. இதனால், பாதிக்கபடுவது தொழிலாள வர்க்கமேயொழிய தொழிற்சங்கங்களுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என்றே கூற வேண்டும்.
போனது போகட்டும். கூட்டு ஒப்பந்த முறை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதிப்பான ஒன்று என்பது இன்று பலராலும் உணரப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் ஆளுங்கட்சியில் சில தொழிற்சங்கங்களும், எதிரணியில் சில தொழிற்சங்கங்களும் இருந்து கொண்டு தொழிலாளர்களின் நலன் கருதிய விடயங்களில் ஒருமித்துக் குரல் கொடுக்க முடியாமல் அவர்களின் கௌரவப் பிரச்சினை தடையாக இருந்து வந்துள்ளது. ஆனால், இன்று நிலைமை அவ்வாறல்ல. நாட்டின் நலன் கருதி ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. இதில், அரசியல் கட்சிகளின் தனிப்பட்ட கௌரவப் பிரச்சினைக்கு அப்பால் நாட்டு நலனே முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி இதற்கு வழிவகுத்துள்ளது.
அவ்வாறானதொரு சூழ்நிலையில் மலையக மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அமைப்புகளுமே இன்று தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை மலையகத்துக்கும் விமோசனத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும். தேசிய நலனுக்காக தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுக்கும் மலையக அமைப்புகள், மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை உணர வேண்டியது அவசியமாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...