Headlines News :
முகப்பு » » தேர்தல் முடிவு - தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னுள்ள சவால்கள் - பெ.முத்துலிங்கம்.

தேர்தல் முடிவு - தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னுள்ள சவால்கள் - பெ.முத்துலிங்கம்.


இலங்கையின் தேர்தல் வரலாற்றினைப் பொறுத்தவரை பாரிய வன்முறையற்ற அனைத்து வாக்காளர்களும் அச்சமும் பீதியுமின்றி தம் விருப்பிற்கேற்றவாரு பொதுத் தேர்தலில் வாக்களித்த முதல் சந்தர்ப்பம் இதுவேயாகும். தேர்தல் ஆணையாளரும் பொலிஸ் மாஅதிபரும் மற்றும் அவர்களது திணைக்களத்தின் கீழ் பணியாற்றிய அனைத்து ஊழியர்களும் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவோம் என துணிந்து கடமையாற்றியமையினால் தென்னாசிய நாடுகளின் தேர்தல் வரலாற்றில் இலங்கை நீதியான, அமைதியான தேர்தலை நடத்தியது என முத்திரை பதித்துள்ளது.

பிரதான அரச அதிகாரிகளான தேர்தல் ஆணையாளரும் பொலிஸ் மா அதிபரும் சட்டத்தின் ஆட்சியை அமுல்படுத்துவதற்கான பூரண அதிகாரத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியமையே இதற்கான அடித்தளமாகும். 1970ஆம் ஆண்டிற்குப் பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களும் வன்முறையுடனான தேர்தலாக அமைந்ததுடன் வாக்காளர்கள் அச்சுறுத்தல், பீதி என்பவற்றிற்கு மத்தியிலேயே வாக்களித்தனர். நாட்டின் அனைத்து மக்களுடன் ஒப்பிடுகையில் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தேர்தல் வன்முறைகளில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாவர். வாக்களிக்கச் செல்வது தடுக்கப்பட்டமை, வாக்காளர் அட்டைகள் பறிக்கப்பட்டமை, உடல் ரீதியான தாக்குதல்களுக்கு உட்பட்டமை மற்றும் தேர்தலின் பின்னர் தாக்குதலுக்கு ஆளானமை முதலிய வன்முறைகளை மலையக மக்கள் எதிர்கொண்டனர். ஆனால் நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் நாட்டின் ஏனைய மக்களைப்போல் மலையக மக்களும் எவ்வித அச்சமும், பீதியும், வற்புறுத்தலுமின்றி வாக்களித்துள்ளனர். இதன் விளைவாக நாட்டின் அரசியல் செல்நெறிகையில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதுபோல் மலையக அரசியல் செல்நெறிகையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

மலையக மக்களைப் பொறுத்தவரை பாராளுமன்றத்திற்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் வாய்ப்பு 1947 இன் பின்னர் 1977 ஆம் ஆண்டே கிடைத்தது. 1977 முதல் அண்மைய தேர்தல் வரை மலையக மக்கள் சார்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.க.) அங்கத்தினர்களே பாராளுமன்றத்தைப் பெரும்பான்மையாகப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இ.தொ.கா. யாரை வேட்பாளர்களாக நியமித்தாலும் அதனை வரவேற்று அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வதை மலையக மக்கள் கடமையாகக் கருதி செயற்பட்டனர். ஆனால் இம்முறை நாட்டின் பொது அரசியல் செல்நெறிகையில் ஏற்பட்ட மாற்றத்தைப்போல் மலையக அரசியல் செல்நெறிகையிலும் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தின்பால் கோலோச்சிய இ.தொ.கா. இரண்டு ஆசனங்களை பெற்றுள்ளதுடன், புதிதாக உருவான தமிழ் முற்போக்கு கூட்டணி நுவரெலியாவில் மூன்று ஆசனங்களையும் கண்டி மற்றும் பதுளை மாவட்டத்தில் தலா ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

இந்திய வம்சாவளி மலையக மக்களின்பால் ஆதிக்கம் செலுத்தி வந்த இ.தொ.கா, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷவிற்கு வாக்களிக்கும்படி ஜனவரி 8 ஆம் திகதி நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோரியது. இவ்வேண்டுகோளை மலையக மக்கள் நிராகரித்து அவருக்கு எதிராகப் போட்டியிட்ட இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் வாக்குகளை அளித்திருந்தனர். அதேவேளை, இ.தொ.கா.வின் வேண்டுகோளுக்கு செவிமடுத்து ஐம்பதாயிரம் பேர் வாக்குகளை அளித்திருந்தனர். நடந்து முடிந்த பொதுத்தேர்தலின் போது இ.தொ.கா. சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு பெருமளவு வாக்களிக்காது புதிதாகத் தோன்றிய தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு அதிகளவு வாக்களித்து வெற்றிபெறச் செய்துள்ளனர்.

நாட்டின் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மாற்றத்திற்காக வாக்களித்த மலையக மக்கள், மலையகத்திலும் அரசியல் மாற்றம் வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். ஆறு தசாப்தங்களுக்கு மேலாக மலையக மக்களது அரசியல் செல்நெறிகையை தீர்மானித்து வந்த இ.தொ.கா.வின் முதன்மை வேட்பாளராகப் போட்டியிட்ட ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான் பெற்ற விருப்பு (61897) வாக்குகளைவிட அவருக்கு நேரடி எதிர்ப்பாளராகப் போட்டியிட்ட பழனி திகாம்பரம் இரு மடங்கு வாக்குகளைப் ( 101,528) பெற்றுள்ளார். இதேவேளை பழனி திகாம்பரத்துடன் இணைந்து போட்டியிட்;ட புது முகமான எம். திலக்ராஜ் ஆறுமுகன் இராமநாதன் தொண்டமான் பெற்ற விருப்பு வாக்குகளை (67,761) விட ஆறாயிரம் விருப்பு வாக்குகளை அதிகமாகப் பெற்றுள்ளார். அதேவேளை, வீ.இராதாகிருஷ்ணன் ஆறுமுகன் இராமநாதன் தொண்டமானைவிட மேலதிமாக (87,735) 36 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ளார். இத்தேர்தல் முடிவுகள் எதனை வெளிப்படுத்துகின்றதெனில், 1.மலையக மக்கள் தொடர்ச்சியாக ஒரு அரசியற் தொழிற்சங்கத்தின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதை விரும்பவில்லை. 2. பல்கட்சி ஜனநாயக அமைப்பு முறையை வரவேற்கின்றனர். 3. நாட்டின் தேசிய அரசியல் நீரோட்டத்தில் ஏற்படும் மாற்றத்தில் பங்கேற்பதன் அவசியத்தை அடையாளம் கண்டுள்ளனர். 4 நாட்டில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களிலும் மலையகம் உள்வாங்கப்படல் வேண்டும் என்பதை வெளிப்படுத்தியுள்ளனர். 5. இவற்றுடன் தேசிய அரசியல் செல்நெறிகையை அவதானித்து வாக்களிக்கும் பிரிவினராக மலையகம் பரிமாற்றம் அடைந்துள்ளது என்பதையுமே வெளிப்படுத்தியுள்ளது. 

இம்மாற்றம் மத்திய மலைநாட்டில் மட்டுமல்லாது இந்திய வம்சாவளி மக்கள் பெரும்பான்மையாக வாழும் அனைத்து மாகாணங்களிலும் ஏற்பட்டுள்ளது. இப்பரிமாற்றத்தின் வெளிப்பாடே புதிதாக உருவான தமிழ் முற்போக்கு கூட்டணியின் வெற்றியாகும். இப்புதிய மாற்றத்தைப் புரிந்துக்கொண்டு அரசியல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை; தமிழ் முற்போக்கு முன்னணி முன்னெடுக்காவிடின் அடுத்து வரும் பொதுத் தேர்தலின் போது மலையகம் மாற்றுத் தீர்மானத்தை எடுக்க நிர்ப்பந்திக்கப்படும். இந்நிலையில் வெற்றி பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு (த.மு.கூ) முன்னுள்ள சவால்கள் யாதெனில் 1. நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் வாழும் அனைத்து இந்திய வம்சாவளி மக்களினதும் பாதுகாவலனாக செயற்பட வேண்டியுள்ளமை. அதாவது மத்திய மலைநாடு, ஊவா மற்றும் கொழும்பில் த.மு.கூ பெற்றாலும் நாட்டின் அனைத்து மாகாணங்களில் சிறுபான்மையாக வாழும் இந்திய வம்சாவளி மக்கள் முகம் கொடு;க்கும் பிரச்சினை தொடர்பில் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியுள்ளது.

2. தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள தனியுரிமையுடனான வீட்டுத்திட்டத்தை வேகப்படுத்துவது.

3. தனியார் தோட்டங்களில் கொத்தடிமைகளாக வாழும் தோட்டத்தொழிலாளர் குடும்பங்கள் தேசிய வீட்டுத்திட்டம் மற்றும் காணிப்பகிர்வு திட்டங்களின் கீழ் உள்வாங்கப்படுவதை உறுதி செய்தல்.
4. நாட்டின் அனைத்து மாநகரசபை மற்றும் பிரதேச சபைகளின் கீழ் பணிபுரியும் இந்திய வம்சாவளி மக்கள் தேசிய வீடமைப்பு திட்டங்களின் கீழ் உள்வாங்கப்படுவதை உறுதி செய்தல்.

5. நாட்டின் ஏனைய இளைஞர்களுடன் அரசியற் பிரவாகத்தில் மலையக இளஞர்கள் இணைந்தபோதிலும் கல்வி, திறன்தேர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பில் பின்னடைவையே சந்தித்துள்ளனர். ஆட்சியை முன்னெடுக்கவுள்ள அரசாங்கம் இலங்கையின் இளைஞர் யுவதிகள் சர்வதேச வேலை சந்தையில் போட்டியிடும் அளவிற்கு தொழில்நுட்பத்துறையில் அவர்களை ஊக்குவிக்க முயற்சியெடுப்பதாக கூறியுள்ளது. இத்தொழிற்சந்தையில் மலையக இளஞர்களும் பங்கு கொள்ளும் வகையில் அவர்களுக்கான ஒதுக்கீட்டை பெற்றுக்கொடுத்தல் . இதற்கு முதற்படியாக மலையக இளஞர்களின் கல்வித் தகைமைக்கேற்ப அவர்களது திறன்தேர்ச்சியை வளர்க்கும் வகையில் நடைமுறையில் இருக்கும் திறன்தேர்ச்சி கல்வி நிலையங்களில் அவர்கள் உள்வாங்கப்படுவதை உறுதி செய்யதல்.

6. அரசாங்க திணைக்களங்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கையில் மலையக இளஞர், யுவதிகள் மத்தியில் காணப்படும் குறை கல்வி நிலையை கருத்திற்கு கொண்டு சிற்று}ழியர் பதவிகளை பெற்றுக்கொடுக்க முனைதல். இப்பதவி நியமனங்களுக்கு போட்டிப் பாPட்சை தேவைப்படுவதில்லை. இது மலையக மக்களின் வாழ்வாதாரத்தை ஊக்குவிப்பதாக அமைவது மட்டுமல்லாது சமூகத்தின் அடுத்தகட்ட சமூக அசைவிற்கு வழிவகுக்கும்.

7. கூட்டுத்தாபனங்கள், அதிகாரசபைகள், மற்றும் து}துவராலய நிறுவனங்களுக்கான அரசியல் நியமனங்களின் போது இந்திய வம்சாவளி அறிவுஜீவிகளுக்கும் கல்விசார் புலமையாளர்களுக்கும் வாய்ப்புகளை பெற்றுக்கொடு;க்க வேண்டும். இது சமூக அந்தஸ்தையும் அவ்வமைப்புகளில் மலையக மக்களது பங்கேற்றலை அதிகரிக்க வழிகோலும்.

8. மலையக மக்கள் அரச திணைக்களுங்களுடன் தொடர்புகளை இலகுவாக ஆற்றிக் கொள்வதற்காக தமிழ் மொழி அமுலாக்கம் அனைத்து திணைக்களங்களில் நடைபெறுவதை உறுதிசெய்ய ஆவண மேற்கொள்ளல்.
9. தோட்;டங்களில் அண்மையில் மூடப்பட்ட எட்டாம் ஒன்பதாம் வகுப்பு வரையிலான பாடசாகைளை மீண்டும் ஆரம்பிக்கச் செய்தல் அல்லது பாடசாலைக்குச் செல்ல முறையான போக்குவரத்து வசதியை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுக்க ஆவண செய்ய வேண்டும்.

10. தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை தேசிய சுகாதார சேவையுடன் இணைப்பதை விரைவு படுத்துவதுடன் தகுதி வாய்ந்த வைத்தியர்களையும் ஊழியர்களையும் நியமிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது தவிர ஆட்சியிலிருக்கும் அரசாங்கம் ஐந்தடுக்கு ஐந்தாண்டு நிகழ்ச்சி திட்டம்; ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. இவ் ஐந்தடுக்கு திட்டத்திற்கமைய கல்வி, திறன்தேர்ச்சி, சுகாதாரம் மற்றும் மனிதவள அபிவிருத்தி, உற்பத்தியின் அடிப்படையிலான விவசாய தொழில்துறை சேவைகள், பொது சேவைகள் அபிவிருத்தி, அறிவை மையமாகக் கொண்ட உயர் தொழில்நுட்ப அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகக் கூறியுள்ளது. இவற்றுடன் 2500 கிராமங்களை உள்ளடக்கிய குழு கிராம அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதாக கூறியுள்ளது.

இத்திட்டங்களின் பயனை மலையக தோட்ட வாழ் மக்களும் சமமாக பெற வேண்டுமாயின் முதலாவதாக மலையகத்திற்காக கிராமங்களை அதிகரிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து குடிசனத்தொகைக்கமைய பிரதேச செயலகங்களை அதிகரிக்க வேண்டும். முன்னைய அரசாங்கம் எல்லை மீள் நிர்ணயத்திற்கான மக்கள் கருத்தை கோரிய போது மலையக சிவில் அமைப்புகள் மலையகத்திற்கான கிராமங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை அதிகரித்தல் தொடர்பாக விதந்துரைப்புகளை முன்வைத்தன . இவ்விதந்துரைப்புகள் பலவற்றை ஏற்று முன்னாள் அரசாங்கம் மலையகத்தில் பிரதேச செயலகங்களின் எண்ணிக்கையையும் கிராம சேவகர் பிரிவுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இணங்கி திட்டமொன்றினையும் முன்மொழிந்து. அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அத்திட்டத்தை அமுல்படுத்திய பின்பே குழு கிராம அபிவிருத்தி திட்டத்தை அமுல்படுத்தும்படி புதிய அரசாங்கத்தை நிhப்பந்திக்க வேண்டும். இல்லையெனில் சமனான அபிவிருத்தியை மலையக தோட்ட மக்களால் பெறமுடியாது போய்விடும். இதே வேளை பிரதேசபைச் சட்டத்தின் உறுப்புரை 33 ஐ நீக்குவதை உறுதி செய்ய வேண்டும். முன்னால் அரசசாங்கம் இவ்வுறுப்புரையை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற அமைச்சரவைக்கு நகல் திருத்தச்சட்டத்தை கடந்த வருட டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது. ஆயினும் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டதுடன் அமைச்சரவை கூட்டப்படவில்லை. எனவே அது நிறைவேறாமல் போய்விட்டது. எனவே அத் திருத்தச் சட்டதை உடனே கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

எனவே மேற்கூறப்பட்ட விடயங்கள்பால் கவணத்தை செலுத்தி முறையான நடவடிக்கைகளை தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்காவிடின் இந்திய வம்சாவளி மலையக மக்கள் நாட்டின் ஏனைய மக்களுடன் சமநடை போட முடியாது. மறுபுறம் தமிழ் முற்போக்கு முன்னணியின்பால் மலையக மக்கள் நம்பிக்கையிழந்து அதனை நிராகரிக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். ஏனெனில் மலையகத்தில் ஏற்பட்ட இப்பாரிய மாற்றத்திற்கு அடித்தள சக்தியாக செயற்பட்டவர்கள் இளைஞர்களே. அவ்விளஞர்கள் விழிப்புடன் தமிழ் முற்போக்கு முன்னணியின் செயற்பாடுகளை நோக்குவர் மேலும் அவர்கள் மாற்றத்தினை எதிர்பார்ப்பவர்கள் எனவே தமிழ் முற்போக்கு முன்னணினர் இச்சவால்களையும் அபாயத்தையும் கருத்திற் கொண்டு செயற்படத் தயாராக வேண்டும்.

நன்றி  - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates