Headlines News :
முகப்பு » » மலையகப் பெண்கள்: ஒரு புதிய பரிமாணம் கலாநிதி - ஏ. எஸ். சந்திரபோஸ்

மலையகப் பெண்கள்: ஒரு புதிய பரிமாணம் கலாநிதி - ஏ. எஸ். சந்திரபோஸ்


மலையகப் பெண்கள் ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளனர். இவர்களில் கணிசமானோர் பெருந்தோட்டங்களில் உள்ள தொழில்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவந்தாலும், அவர்கள் மத்தியிலிருந்து பிரவாகம்பெற்ற அடுத்த தலைமுறையினர் நாட்டில் வளர்ந்துள்ள பல்வேறுபட்ட வர்த்தகத்துறைகளில் தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக் கொண்டவர்களாகவும் காணப்படுகின்றனர்.

அத்துடன் அரசாங்க பொது நிர்வாகத் துறைகளிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் தொழில் வாய்ப்புக்களை பெற்றுள்ளனர். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, கணிசமானோர் மத்தியகிழக்கு போன்ற நாடுகளுக்கு பணிப்பெண்களாக இடம் பெயர்ந்து செல்கின்றனர். மலையகப் பெண்களிடம் ஏற்பட்டுள்ள இம்மாற்றங்கள் பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்வதும் இதனாலான சமூக மாற்றம் பற்றி சுருக்கமாகக் குறிப்பிடுவதும் இக்கட்டுரையின் இலக்காகும்.

மலையகப் பெண்களின் நிலைவரங்கள் பற்றி மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்ட வேறுபட்ட தொகுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள முன்னணி பெண்கள் அமைப்புக்கள் யாவுமே மலையகப் பெண்களின் துன்பங்கள்பற்றி கணிசமாக எழுதியுள்ளன.

அதுமட்டுமன்றி கருத்தரங்குகளையும் நடத்தி வருகின்றன. இதனூடாக மலையகப் பெண்களின் நிலைவரங்கள்பற்றி பேசக்கூடிய அல்லது பாண்டித்தியம் பெற்றுள்ள அறிஞர்களும், ஆர்வலர்களும் உருவகிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் காத்திரமான பங்களிப்பை செய்தவர்களாக Ruchal Kurian, Kumari Jayawardana, Nimalka Fernando, Anaela little போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாகும்.
இதைவிட மலையகப் பெண்கள் பற்றிய தெளிவான பார்வையை தொடர்ச்சியாக முன்வைப்பவர்களில் மேகலா சிவப்பிரகாசம், புவனேஸ், கேகாலை தங்கேஸ்வரி சந்திரலேகா, சோபனாதேவி ராஜேந்திரன் மற்றும் அண்மையில் காலமான சாந்தி சச்சிதானந்தன் போன்றோரும் பிரதானமானவர்களாகும்.

இவர்களின் எழுத்துக்கள், சொற்பொழிவுகள் என்பன ஆய்வாளர்கள் மத்தியில் பெறுமதிமிக்கதாகக் கருதப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டுதல் அவசியமாகும்.

R. Kurian 1980களில் மலையகப் பெண்களிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மற்றமொறு வடிவத்தினை 1990களில் வெளியிட்டதுடன், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக இலங்கைக்கு வருகைதந்து குமாரி ஜயவர்தனவுடன் இணைந்து எழுதிய மற்றுமொரு வரலாற்று தொகுப்பையும் கொழும்பு, சுலைமான் வீதியில் அமைந்துள்ள Social Scientist Associasion (SSA) அனுசரணையுடன் வெளியிட்டுவைத்தார். இதுபோன்ற ஆய்வுகள பல நடைபெறுகின்றன.

இந்தக் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளும்போது மலையகப் பெண்களின் சமகால நிலைவரங்கள் என்னவென்பதை அறியமுடிகின்றது.

மேற்கொள்ளப்பட்ட அனுமானங்களின்படி இன்றுள்ள மலையகப் பெண்களின் ஈடுபாட்டினை பின்வருமாறு மூன்று பிரிவில் உள்ளடக்கலாம்.

1.பெருந்தோட்டங்களிலேயே தொடர்ந் தும் நாளாந்த வேதனத்திற்கு வேலைசெய்யும் பெண் தொழிலாளர்கள். இவர்களின் எண்ணிக்கை சுமார் 250,000இற்கு சற்று அதிகமாக இருக்கலாம்.

2. மலையகப் பாடசாலைகளில் காணப்படும் 10,000 ஆசிரியர்களில் சுமார் 6,500 பேர் கல்வித் தராதரத்துடன் ஆசிரியத் தொழிலுக்கு வந்த பெண்களாக இருக்கின்றனர்.

3. மலையகத்திலிருந்து குடிபெயர்ந்து நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களில் வேலை பார்ப்பவர்களும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு குடிபெயர்ந்து செல்பவர்களுமாகும்.

பெருந்தோட்டப் பெண்களைப் பொறுத்தவரையில் மேற்குறிப்பிட்ட வேறுபாட்டில் முதலாவதாகக் குறிப்பிட்ட பெருந்தோட்டத் தொழில்கள் பற்றிய போதுமானளவு விடயங்களை யாவரும் அறிந்துள்ளனர்.
இலங்கையில் காணப்படுகின்ற ஏனைய துறைகளில் தொழிலாளர்களின் பங்களிப்பு (Labour Participation) கிராமங்களில் குறைந்த வீதமாக இருக்கும்போது தோட்டங்களில் 53 வீதமாக, ஏறக்குறைய இரண்டு மடங்கு அதிகமாக காணப்படுகின்றது. இதற்குக் காரணம் கிராமப் பெண்களைவிட தோட்டத்துறையைச் சார்ந்த பெண்கள் அதிகமாகத் தொழிலாளர்களாக பங்களிப்பு செய்கின்றமையாகும்.

அண்மைக் காலத்தில் பெண்கள் தொழில்புரியும் நிறுவனங்கள் பல உருவாகியிருந்தாலும் இன்றளவில் இலங்கையிலேயே அதிகளவில் பெண்கள் தொழில்புரியும் துறையாக பெருந்தோட்டங்கள் குறிப்பாக தேயிலைத் தோட்டங்களே தொடர்ந்தும் காணப்படுகின்றன.

இங்கு பெண்களுக்கென தொழில்கள்; மட்டுமன்றி சமூகநல ஏற்பாடுகளும் உண்டு. ஒவ்வொரு தொழிற்சங்கமும் தமது அமைப்பில் பெண்கள் அமைப்பு (Woman Wing) முக்கியமானதொரு அமைப்பாகக் காணப்படுகின்றது. தொழிற்சங்க மாவட்டத் தலைவர்களில் மாதர் சங்கதலைவிகளும் உள்ளனர். இவர்கள் தொழிற்சங்க செயற்பாட்டில் உள்வாங்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் இவர்களின் பங்களிப்பு மிகவும் செல்வாக்கு பெற்றதாகவும் உள்ளன.

தொழிற்சங்கங்கள் இவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சியும் வழங்குகின்றன. பெண்களின் தலைமைத்துவப் பயிற்சிக்காக சர்வதேச தொழிற்சங்கங்கள் பெருமளவு நிதியையும் வழங்குகின்றன. கணிசமானோர் சர்வதேச கருத்தரங்குகளிலும் பங்குகொள்கின்றனர். தொழிற்சங்க வேலைகளில் மாதர்சங்க உறுப்பினர்களின் பங்களிப்பு பெருமிதப்படக் கூடிய நிலையில் இருந்தாலும், இவர்கள் அரசியல்துறையில் வருவதற்கான போதுமான வாய்ப்புகளை சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் ஏற்படுத்தவில்லை என்றே கூறவேண்டும்.

ஆனாலும், இவர்கள் தொழிற்சங்கங்களின் மறுவடிவமாக மாறியுள்ள அரசியல் கட்சிகளில் தமது திறமைகளை காட்டக்கூடியவர்களாக வளரமுடியாமல் இருக்கின்றனர்.

இதனால் இவர்களுடைய எண்ணங்கள் தொழிற்சங்க வட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுகின்றதேயன்றி தேசிய மட்டத்தில் வெளிக் கொண்டுவரப்படவில்லை.

இரண்டாவதாக, குறிப்பிடப்படும் ஆசிரியர்களின் வரவு மலையகப் பெண்கள் என்று அடையாளப்படுத்தக்கூடிய மற்றுமொறு முன்னேற்றகரமான சமூக அடுக்காகும். இவ்வாறு உள்வாங்கப்பட்ட கணிசமான ஆசிரியர்களின் பெற்றோர்கள் இன்னமும் தோட்டங்களில் வேலை செய்கின்றனர். இந்த ஆசிரியர்கள், அவர்களின் தொழில் நிலைகளிலிருந்து விடுபட்டு மேலெழுந்து வந்த மற்றுமொறு சமூக அடுக்காக வளர்ந்துள்ளவர்களாகக் கருதலாம். இவர்களில் ஆரம்பக் கல்வியை போதிக்கும் ஆசிரியைகளில் அதிகமானோர் அதற்குறிய கல்வித் தராதரத்தை பெற்றுக் கொண்டுள்ளதுடன், ஆரம்பக் கல்விப்பிரிவின் அடைவுகளை தேசிய மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளனர் என்பதும் வரவேற்கத்தக்க விடயமாகும். மலையகப் பாடசாலைகளில்; ஆரம்பிக்கல்வி; வெற்றிக்கரமாக அடைவதற்கு இவர்களின் பங்களிப்பு அளப்பரியதொன்றாகும்.

ஏற்கனவே குறிப்பிட்டதுபோல 6,500 பேராக அடையாளப்படுத்தப்படும் ஆசிரியைகளில் ஆரம்பப்பிரிவிற்கு தகுதியுடையோர் போக ஏனையோர்களில் கணிசமானோர் பல்கலைக்கழக கல்வியையும் பூர்த்தி செய்துள்ளனர். ஆதிகமானோர் தேசிய பல்கலைக்கழகங்களிலும் தேசிய கல்வி நிறுவனங்களிலும்; மற்றும் சர்வதேச பல்கலைக் கழகங்களிலும்; உயர் பட்டங்களை பெற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். ஒருவகையில் இவர்கள் இச்சமூகத்தின் உயர்மட்டத்தில் மதிக்கப்படுபவர்களாக இருப்பதும் அவதானிக்கத்தக்கது. பல்கலைக் கழகத்தை பொறுத்தவரையில் இலங்கையிலுள்ள 15 தேசிய பல்;கலைக்கழகங்களில் விரிவுரையாளர்களாக உள்வாங்கப்பட்டுள்ள மலையகத்தைச் சேர்ந்தசுமார் 15 பேரில் 8 பேர் பெண்களாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர்களில் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில் மொழித்துறை விரிவுரையாளரான திருமதி சந்திரமோகன் கலா அண்;மையில் கலாநிதி பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பதும் பெருமைக்குரிய விடயமாகும்.

இவை யாவும் மலையகப் பெண்களின் புதியப் பிரவாகமாக அடையாளப்படுத்தலாம். இவர்களின் வளர்ச்சி மிகவேகமாக அதிகரித்துக் காணப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

மூன்றாவது வகையினராக அடையாளப்படுத்தும் மலையகப் பெண்கள,; மேலே குறிப்பிட்டதுபோல மலையகத்தில் இருந்துமட்டுமன்றி இலங்கைபூராகவும் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களாகவும் காணப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இடம்பெயர்ந்து வாழ்பவர்களாக உள்ளனர். பெரும்பாலானோர் நகரங்களில் வளர்ந்துள்ள வர்த்தக நிலையங்களில் வியாபார முகவர்களாக தொழில் புரியும் இளம் வயதுப் பெண்களாகும்.

இவர்களில் பெரும்பாலானோர் தாம் பெற்றோருடன் வாழ்ந்த பிரதேசங்களில் 11வருடம் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்துள்ளவர்கள் என்று மதிப்பிடப்படுகின்றது. மலையகப் பாடசாலைகளைப் பொறுத்தவரை க.பொ.த. சாதாரண தரத்திற்கு சுமார் 12,500 பேர் வரையில் பரீட்சைக்குத் தோற்றுபவர்களாகக காணப்படுகின்றனர். இவர்களில் சுமார் 5000 பேர் வரையில் க.பொ.த. உயர்தரத்தில் படிப்பதற்கானத் தகுதியை பெறுகின்றனர். மிகுதியான சுமார் 60 வீதமானவர்கள் தொழில்படையில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களில் அரைவாசிப்பேர் பெண்களாகும். க.பொ.த. சாதாரணதரத்துடன் பாடசாலையை விட்டு வெளியேறும் 16 அல்லது 17 வயதுடைய இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புக்கள் இந்நாட்டில் நன்கு விருத்தியடைந்துள்ளன. அதிகமாக வர்த்தக மற்றும் ஆடை அலங்காரப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்த இளம் வயதினரை 3 மாதகால குறுகிய பயிற்சியின் பின்னர் வேலைக்கு அமர்த்துகின்றன. மாதாந்தம் சுமார் 6000 ருபா முதல் 10000 ருபா வரையிலான சம்பளமும் வழங்கப்படுகின்றது.

கொழும்பில் குறிப்பாக வத்தளை, வெள்ளவத்தை, மட்டக்குளி போன்ற பகுதிகளில் உள்ள சிறப்பு அங்காடிகள் (ளுருPPநுசு ஆயுசுமுநுவு) பேக்கரிகள், தொலைத் தொடர்புநிலையங்கள, மருந்து விற்பனை நிலையங்கள் மற்றும் பொதிகள் செய்யும் நிலையங்கள் (PயுஊமுஐNபு ஊநுNவுசுநுளு), ஏற்றுமதி  இறக்குமதி நடவடிக்கையில் ஈடுபடும் தனியார் முகவர் நிலையங்கள் என்று வேறுபட்ட தொழில் துறைகளில் பெரும் எண்ணிக்கையிலான மலையக இளம் பெண்கள் தொழில் புரிவதைக் காணலாம்.

நாட்டில் நிலவிய 30 வருடகால யுத்தம், இளம் தமிழ் பெண்களின் நடமாட்டத்தில் ஏற்பட்ட கட்டுப்பாடு என்பன இப்போது நீக்கப்பட்டிருப்பதால் இவர்கள் சுதந்திரமாக வெளிவந்துள்ளனர். அவர்களின் தற்கால அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்குத் தொழில்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.
மலையகத்திலிருந்து குடிபெயர்ந்து சென்றும், மலையகப் பெண்கள் மற்றுமொறு வகையிலும் தங்களை அடையாளப்படுத்துகின்றனர். அவ்வாறானவர்கள் குடிபெயர்ந்து சென்று மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக வேலை செய்பவர்களாக அடையாளப்படுத்தலாம். நாளாந்தம் சுமார் 100 – 150 இளம் பெண்கள் குறிப்பாக திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த இளம் தாய்மார்களே இவ்வாறு இடம்பெயர்கின்றனர். குறைந்தபட்சம் இரண்டு வருட குத்தகைக்கு செல்லும் இப்பெண்களும் பெரும்பாலும் 11 ஆண்டுகள் பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்தவர்களாகக் காணப்படுகின்றனர்.

நாம் வாழ்ந்த வறுமை சூழலிலிருந்து விடுதலைபெறவேண்டும் என்பதும், தமது குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வாய்ப்பினை வழங்கவேண்டும் என்பதுவும்" வீட்டில் தளபாடங்கள் உட்பட பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்து சமூகத்தில் மதிக்கத்தக்க வாழ்க்கையை உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்ற நோக்கில் வெளிநாடு சென்ற பெண்களும் மலையகப் பெண்களின் அடுக்கில் காணப்படும் மற்றுமொறு பிரிவினராகும். இவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் என்பனவற்றை தேசிய ரீதியில,; சர்வதேச ரீதியில் வெளிப்படுத்தி இவர்களின் இன்னோரன்ன பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு மலையகத்தினுள் பல அமைப்புக்கள் செயற்படுகின்றன. இவற்றில் ர்னுழுஇ Pசுநுனுழு போன்றவற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கவையாகும்.

சுராசரியாக ஒவ்வொரு தோட்டத்திலிருந்தும் 15 – 20 குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் இ;வவாறு மத்திய கிழக்கு நாடுகளில் தொழில்புரியும் அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பங்களாக காணப்படுகின்றன. இவர்களில் 80 வீதமானவர்கள் பெண்களாகும்.
மலையகப் பெண்கள் என்று அடையாளப்படுத்தப்படும்போது அவர்கள் வெறுமனே தோட்டங்களில் வேலை செய்பவர்களை மட்டும் அடையாளப்படுத்த முடியாது என்பதை மேற்குறிப்பிட்ட விளக்களை சான்றாகக் கொள்ளலாம். இவர்கள் சமூகத்தில் வளர்ந்துள்ள மற்றுமொரு துறையில் மிகவும் சக்திமிக்க பங்காளிகளாக உள்ளனர். இவர்கள் சமூகம் சார்ந்த அரசியல், பொருளாதாரம், கலாசார நிகழ்வுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கணிசமான செல்வாக்கினை செலுத்துபவர்களாகவே உள்ளனர்.

முற்றையோர் இடம்பெயர்ந்து வாழ்பவர்கள். தங்களது இன, மொழி அடையாளங்களுடன் இடம்பெயர்ந்து தொழில்புரியும் பெண்களாவர். இவர்கள் மலையக சமூகத்தின் மற்றொரு அடையாளமாகும். இன்னும் சில வருடங்களில் மலையகப் பெண்களின் அடையாளம் வேலும் விஸ்தரிக்கப்படலாம். எவ்வாறெனினும் மாற்றமடைந்து செல்லும் சமூகத்திற்கு ஏற்ற தலைமைத்துவமும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் புதிய அணுகுமுறைகள் தேவைப்படும் என்பதை யாவரும் உணர்ந்துகொள்ளவேண்டும்.

வேறுபட்ட சிறப்புத்துறைகளில் வளர்ச்சியடைந்துள்ள மலையகப் பெண்கள் யாவரையும் உள்ளடக்கியதான அமைப்பின் உருவாக்கம் இப்போது தேவைப்படுகின்றது. இது மலையகத்தில் புதிய பிரவாகமாக ஊற்றெடுக்கும் காலம் நெருங்கிவிட்டதெனலாம்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates