Headlines News :
முகப்பு » » பெருந்தோட்டங்களில் வீடமைப்பு; PHDTயின் பங்களிப்பு - கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்

பெருந்தோட்டங்களில் வீடமைப்பு; PHDTயின் பங்களிப்பு - கலாநிதி ஏ.எஸ்.சந்திரபோஸ்


பெருந்தோட்டங்களில் வீடமைப்பு என்பது கிராமங்களில் அல்லது நகரங்களில் மேற்கொள்வது போல இடம்பெற முடியாது என்பதை யாவரும் அறிவோம். கிராமிய நகர வீடமைப்பிற்கு தேசிய அளவில் கொள்கைத்திட்டங்கள் இருப்பது போல பெருந்தோட்டங்களுக்கான வீடமைப்புக்கொள்கை அல்லது அதற்கான சட்டரீதியான ஏற்பாடுகள் தேசியமட்டத்தில் மேற்கொள்ளப்படவில்லை, கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணியுடனான வீடுகள் அமைக்க மந்திரி சபையினால் அனுமதி கிடைத்தது. ஆனாலும் அந்த 7 பேர்ச் காணியில் அமைக்கும் வீடுகள் தொழிலாளர்களுக்கு சொந்தமாக வழங்கப்படுமா? என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கப்பெறவில்லை. இதற்கு பசுமை வீடு திட்டமும் 100 நாள் வேலைத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக அதனை காணி உறுதிப்பத்திரமாக பயன்படுத்தலாமா? போன்ற விபரங்கள் கிடைக்கவில்லை.

இந்நிலையில், பெருந்தோட்டங்களில் வீடமைப்பதற்கான சட்டபூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றுள்ள PHDT (Plantation Human Develop Trust) இன் வேலைத்திட்டங்களையும் அவ்வமைப்பின் சாதனைகளையும் யாவரும் அறிந்துகொள்வது அவசியம் என்று உணரப்படுகின்றது. இதற்கான விபரங்களை 2004 ஆம் ஆண்டு PHDT இன் இயக்குநர் தயாரித்து வெளிப்படுத்திய வேலைத்திட்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடயங்களையும் இந்த PHDT எவ்வாறு வீடுகளை கட்டி முடித்துள்ளது என்பதை உதாரணமாக காட்டுவதற்காக கொட்டகலைக்கு அண்மையில் உள்ள DRYTON தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்பினை உதாரணமாக கொண்டு இங்கு விளக்கப்படுகின்றது.

PHDT 1992 இல் ஸ்தாபிக்கப்பட்ட அமைப்பாகும். ஆரம்பத்தில் பெருந்தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக நலன்களுக்கான (PHSW) அமைப்பாகவே உருவாக்கப்பட்டது. எனினும், 2002 ஆம் ஆண்டு முதல் இவ்வமைப்பில் வேலைத்திட்டமாக பெருந்தோட்ட மனித அபிவிருத்தி நிதியமாக (PHDT) மாற்றப்பட்டது.

இவ்வமைப்பின் பிரதான நடவடிக்கைகளாக வீடமைப்பு உட்கட்டமைப்பு வேலைகள், சிறுவர் பராமரிப்பு, விளை யாட்டு அபிவிருத்திக்கான பயிற்சிகளை அளித்தல் என்பனவற்றுடன் தோட்டங்கள் தோறும் Estate workers Housing co–operative Society (EWHS) ஸ்தாபித்தல் என்பதாகும். கம்பனிகளின் முகாமைத்துவத்தை உள்வாங்கியுள்ள பெருந்தோட்டங்களில் தொழில்நுட்பங்களுக்குள் உள்வாங்கப்பட்டு தொழற்சங்க சட்டத்தின் பிரகாரம் வாழ்கின்ற தொழிலாளர்களின் நிலங்களை பராமரிக்கும் உரிமை PHDT க்கு மட்டுமே உரித்தானதாகும். தோட்டங்களில் இடம்பெறுகின்ற எல்லாவிதமான மனித அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உரிமைபெற்ற நிறுவனமாகவே PHDT காணப்படுகிறது.

அரசாங்கம் மாவட்டரீதியிலான அபிவிருத்தி வேலைகளுக்கு பணம் ஒதுக்கலாம் அல்லது பாராளுமன்ற பிரதிநிதி தமக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் வேறுபட்ட அபிவிருத்திகளுக்கு பங்களிப்பு செய்யலாம். அதனைவிட மாகாண சபைகள் பிரதேச சபைகள் மூலமாகவும் பணம் ஒதுக்கப்படலாம். இதனைக்கொண்டு வேண்டுமானால் கலாசார மண்டபங்கள் அமைக்கலாம். அல்லது வாசிகசாலை அமைக்க முடியுமேயன்றி, வீடுகள் அமைப்பது என்பது சவாலான விடயமாகும். வீடுகட்டும் உரிமையுள்ள அல்லது வீடுகள் அமைப்பதற்கான பின்னணி வேலைத்திட்டங்களை வழங்குவதற்கு அதிகாரமுள்ள PHDT தோட்டங்கள் சுமார் 977,000 அல்லது 249,000 குடும்பங்கள் இருப்பதாகவும் அடையாளப்படுத்தியுள்ளது.1992 முதல் இன்றுவரையிலான 2014 காலப்பகுதியில் அதாவது கடந்த 22 வருட காலப்பகுதியில் 24.760 வீடுகள் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஏனைய (249,000 – 24,760) 224,240 குடும்பங்களும் அதாவது பெருந்தோட்டங்களில் உள்ள 90 வீதமான வீடுகள் இன்றுவரை PHDT யில் நிர்மாண வேலைகளுக்கு கொண்டுவரப்படவில்லை என்பது புலனாகின்றது. PHDT இல் 2014 ஆம் ஆண்டு அறிக்கையின்படி பெருந்தோட்டங்களில் நிர்மாணிக்கப்படும் வீடுகளில் முன்னேற்றமும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக பதுளையில் 2014 ஆம் ஆண்டில் 87 வீடுகள் நிர்மாணிக்க திட்டமிட்டிருந்தாலும் 67 வீடுகள் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. காலியில் 161 வீடுகளுக்கான திட்டம் காணப்பட்டபோதும் 60 வீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஹட்டனில் 115 வீடுகள் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டாலும் 46 வீடுகள் கட்டுவதற்கே அடிப்படை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவ்வாறான பின்னடைவுகள் எல்லா மாவட்டங்களிலும் காணப்படுகின்றன.
PHDT யின் வேலைத்திட்டங்கள் வீடுகள் நிர்மாணிப்பதற்கு மட்டும் இல்லை. லயத்தில் உள்ள கூரைகளை மாற்றுதல், நீர்விநியோகம், மலசல கூடங்களை நிர்மாணித்தல், புதிய பாதைகள் அமைத்தல், தொழிலாளர்களின் வீடுகள் அமைப்பதற்கான சங்கத்தை அமைத்தல், (EWHCS), சிறுவர் அபிவிருத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்தல், மருந்துகளை விநியோகித்தல், சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ளவர்களுக்கு டிப்ளோமா கற்கை நெறியை போதித்தல், (CDOS) பற் சிகிச்சை முகாம் ஏற்படுத்தல், கண்நோய்களை பராமரித்தல், புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் போன்ற நடவடிக்கைகளும் PHDT இல் பெருந்தோட்ட மக்களுக்காக மேற்கொள் ளும் நடவடிக்கைகளாக காணப்படுகின்றன.

இவ்வேலைத்திட்டங்களால் பலர் நன்மை பெற்றுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதாரணமாக பெருந்தோட்டங்களில் உள்ளவர்களில் 135,450 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கியுள்ளனர்.

128,547 பேருக்கு மலசல கூட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. தோட்டத்தில் உள்ள 235 வைத்தியசாலைகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு வேறுபட்ட அபவிருத்தி வேலைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் வீடுகளை நிர்மாணித்தல் எதிர்பார்த்ததைவிட துரிதமாக மேற்கொள்ளப்பட வில்லை என்பது ஒரு குற்றச்சாட்டாகும். அவ்வாறே வீடுகள் நிர்மாணிக்கப்பட்டாலும் அவை இன்றுவரை அவர்களுக்கு உரிமையுடையதாக மாற்றப்படவில்லை. வீடுகள் நிர்மாணிக்கும்போது தொழிலாளர்கள் தமக்கு சொந்தமான ஒரு வீடு நிர்மாணிக்கப்படுவது போல செலவுகள் செய்துள்ளனர். உரிமை இல்லாத வட்டிகள் கடன்பட்டு செலவு செய்து அதன் உரிமையை அனுபவிக்க முடியாதவர்களாகவே பெருந்தோட்டத்தொழிலாளர்கள் காணப்படுகின்றனர்.
PHDT இன் அனுசரனையுடன் கொட்டகலைக்கு அருகில் உள்ள Dryton ESTATE மண்வெட்டி தோட்டத்தில் அமைக்கப்பட்ட வீட்டின் வரலாற்றினை சுருக்கமாக இங்கு அறியத்தருகின்றேன்.

1997 ஆம் ஆண்டு இந்த தோட்டத்தில் PHDT இன் அனுசரணையுடன் 30 வீடுகள் நிர்மாணிக்கப்படுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஒவ்வொரு வீட்டினையும் பூர்த்தி செய்ய50,000 ரூபா பெறுமதியான பொருட்களை தோட்ட முகாமையாளரிடம் இருந்து பெற்றுக்கொள்ள வழி ஏற்பட்டது. வீட்டை அமைப்பதற்கான திட்டம் என்பனவற்றிக்கான அனுமதி என்பன 1999 இல் கிடைக்கப்பெற்றன. 50,000 ரூபா பெறுமதியான பொருட்களை தோட்டமுகாமையிடமிருந்து இருந்த பெற்றுக்கொள்ள 12% வட்டியும் அவ்வீட்டை நிர்மாணித்து குடியேறவுள்ள தொழிலாளரிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 2008 ஆம் ஆண்டில் இவ்வீடு நிர்மாணிக்கப்பட்டது. இருப்பினும் மலசல கூடவசதிகள், மின்சாரம் குடி தண்ணீர் என்பன வழங்கப்படவில்லை. இச்சந்தர்ப்பத்தில் PHDT 80 சீமெந்து கற்களும் 2 மூட்டை சீமெந்தும் அரை கீயூப் மணல் 2 தகரம் மற்றும் இதனை நிர்மாணிக்க ஒரு மேசன் ஒருவரையும் வழங்கினர்.

தோட்டத்தில் இருபது பெற்றுக்கொள்ளப்பட்ட 50,000 ரூபா பெறுமதியான பொருட்களுக்கான செலவை அவ்வீட்டில் குடியிருப்பதற்காக ஏற்படாகிய தொழிலாளர் மாதாந்தம் 250 ரூபா என்றவாறு மாதச்சம்பளத்தில் வழங்கினர். இந்த கடனை 50 மாதத்தில் திரும்பி வழங்கவேண்டும் என்பது நியதியாகும்.
நாம் ஏற்கனவே பார்த்தது போல வீடுகள் கட்டி முடிந்தாளும் குடிநீர் மின்சாரம் சுவருக்கு வெள்ளை பூசுதல் போன்றவற்றிக்கான செலவுகளை அவ்வீட்டில் குடியிருக்கப்போகும் குடும்பத்தினரின் செலவாகும்.

இவ்வேலைகள் யாவும் 2011ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்பட்டன.இதற்காக இக்குடும்பம் தோட்டத்தில் வழங்கிய 500,000 ரூபா கொடுப்பனவு என்பதுடன் (இதனை வட்டியுடன் 50 மாதத்தில் திருப்பி வழங்கவேண்டும்) அதற்கு மேலதிகமான சுமார் 300,00 ரூபா செலவு செய்துள்ளனர்.

இதில் PHDT என்ன செய்துள்ளது? நிலத்தை அடையாளப்படுத்தியுள்ளது குறிப்பிட்ட பிரமாணங்களிலேயே கட்டி முடிக்க வேண்டும் என்று அனுமதி வழங்கப்பட்டதே அன்றி வீட்டை நிர்மாணிப்பதற்கான எந்த கொடுப்பனவையும் வழங்கவில்லை. (மலசல கூடம் அமைத்து கொடுத்தல்) போக இப்படித்தான் கடந்த 22 வருடங்களாக 23.470 வீடுகளும் மலையக பெருந்தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுப்பதாக PHDT பெருமை கொள்கின்றது.

நிலவுரிமை இல்லாத நிலையில் தனது உழைப்பில் குறிப்பிட்ட பிரமாணங்களில் வீடுகள் கட்டும் இத்தகைய செயல்பாடுகள் மலையக பெருந்தோட்டங்களிலேயே இடம் பெறுகின்றன.

இந்த நடைமுறையை பின்பற்றினால் மிகுதியான வீடுகள் எப்படி கட்டிமுடிப்பது அது எப்போது இவர்களுக்கு சொந்தமான வீடாக மாறும்?

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates