Headlines News :
முகப்பு » » துங்கோரளை பிரதேச அரசியல் நிலைமை - ஜே. அந்தனி

துங்கோரளை பிரதேச அரசியல் நிலைமை - ஜே. அந்தனி


துங்கோரளை என்பது கேகாலை மாவட்டத்தின் ஒரு பிரதேசமாகும். இது ருவான்வெல்ல, எட்டியாந்தோட்டை, தெரணியகலை ஆகிய தேர்தல் தொகுதிகள் உள்ளிட்ட ஒரு பிரதேசமாகும். இடது சாரி இயக்கத்தின் தாய் பூமி என்றும் கொள்ள முடியும். ருவான்வெல்ல தேர்தல் தொகுதியை காலஞ்சென்ற கலாநிதி என்.எம். பெரேரா சுமார் 40 ஆண்டுகள் வரை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்தார். இலங்கை சமசமாஜக் கட்சியின் கோட்டை என்றும் கூறுவர்.

சிரேஷ்ட அரசியல்வாதிகளான அத்தாவுத செனவிரத்ன, சட்டத்தரணி எச்.ஆர். மித்ரபால, வை.ஜி. பத்மசிறி, பேராசிரியர் திஸ்ஸ விதாரண ஆகியோர் லங்கா சமசமாஜக் கட்சியின் தூண்களாவர்.

1977 இல் பொதுத்தேர்தலின்போது ஐக்கிய தேசியக்கட்சியின் அலை வீசத்தொடங்கியது. எட்டியாந்தோட்டையைச் சேர்ந்த கே. வின்சென்ட் பெரேரா என்ற இளைஞரால் அந்தத் தேர்தலில் லங்கா சமசமாஜக் கட்சியின் ஜாம்பவானான என்.எம். பெரேரா தோற்கடிக்கப்பட்டார். அதன் பின்னரே ஐக்கிய தேசியக்கட்சி துங்கோரளையில் புனர்ஜென்மம் பெற்றது.
பின்னர் சமசமாஜக் கட்சியில் ஒரு குழப்ப நிலை தோன்றலாயிற்று. கட்சியின் முக்கியஸ்தரான அத்தாவுத செனவிரட்ன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேர்ந்தார். அவரையடுத்து, எச்.ஆர். மித்ரபாலாவும் சுதந்திரக் கட்சியில் இணைந்தார். ஆனால் , வை.ஜி.பத்மசிறி மட்டுமே கட்சியுடன் இருந்தார்.

மாகாண சபை ஆரம்பிக்கப்பட்டு முதல் தேர்தல் நடந்தபோது ஜே.வி.பி. யினர் மாகாண சபை முறைமைக்கு எதிராக செயற்பட்டனர். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. பத்மசிறியின் தமயனார் அச்சுறுத்தலை பொருட்படுத்தாது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் அவர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் அவரது தம்பி வை.ஜி.பத்மசிறி மாகாண சபைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

துங்கோரளை சமசமாஜக் கட்சியை பேராசிரியர் திஸ்ஸ விதாரண, வை.ஜி. பத்மசிறி ஆகியோர் வழிநடத்தலாயினர். திஸ்ஸ விதாரண தேசியப்பட்டியலில் இடம்பெற்று அமைச்சரானார். விலகிச் சென்ற அத்தாவுத செனவிரட்ண, எச்.ஆர். மித்ரபால ஆகியோரும் அமைச்சுப் பதவி பெறலாயினர்.

பின்னர் அத்தாவுத செனவிரட்ணவின் புதல்வரும், எச்.ஆர்.மித்ராபாலவின் புதல்வரும், வை.ஜி.பத்மசிறியின் புதல்வியும் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்களாயினர்.

இவ்வருடம் ஆகஸ்ட்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்ட அத்தாவுத செனவிரட்ண தோல்வியுற்றார். சமசமாஜக் கட்சியின் ஒரே உறுப்பினரும், அமைச்சருமான வை.ஜி.பத்மசிறியும் தோல்வியுற்றார். பேராசிரியர் திஸ்ஸ விதாரணவுக்கு தேசியப்பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. துங்கோரளையில் சமசமாஜக் கட்சியை வழிநடத்திய இருவரும் அரசியல் அநாதைகளாயினர். இது துங்கோரளையில் சமசமாஜக் கட்சிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும்.

மாகாண சபையிலிருந்து பாராளுமன்றத்துக்கு
இம்முறை முன்னாள் அமைச்சர் எச்.ஆர்.மித்ரபால தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக தனது புதல்வனும் மாகாண சபையில் ஆளுங்கட்சியின் பிரதித் தவிசாளருமான சாரதி துஷ்மந்தவை தேர்தலில் போட்டியிடச் செய்தார். துஷ்மந்த கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்டு 64,836 வாக்குகள் பெற்று பட்டியலில் மூன்றாம் இடத்தைப்பெற்று வெற்றி ஈட்டினார்.

எட்டியாந்தோட்டையில் வசிக்கும் சுஜித் சஞ்சய பெரேரா காலஞ்சென்ற அமைச்சர் வின்சென்ட் பெரேராவின் புதல்வராவார். இவர் மாகாண சபை உறுப்பினர், ஐக்கிய தேசியக்கட்சியின் எட்டியாந்தோட்டை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளர். இவர் பலமுறை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர். ஆனால், இம்முறை 53,218 வாக்குகள் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

அடுத்து துஷிதா விஜயமான என்ற பெண்மணியாவார். காலஞ்சென்றவரான இவரது தந்தை ருவான்வெல்லயில் பிரசித்தி பெற்ற அரசியல்வாதியாவார். துஷிதா விஜயமான ஆரம்பத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் அரச சேவையிலிருந்து விலகி அரசியலில் ஈடுபட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் ருவான்வெல்ல அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சபையின் எதிர்க்கட்சித் தலைவியாக நியமிக்கப்பட்டார். இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 50,893 வாக்குகள் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். எனவே, துங்கோரளையிலிருந்து மூன்று மாகாண சபை உறுப்பினர்கள் எம்.பி. க்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

துங்கோரளையில் இ.தொ.கா.
சப்ரகமுவ மாகாண சபையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த அண்ணாமலை பாஸ்கரன் உறுப்பினராக உள்ளார். இவர் இம்முறை கேகாலை மாவட்டத்தில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 2,448 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியுற்றார். இவர் மாகாண சபைத்தேர்தலின் போது ஒன்பதாயிரத்துக்கு சற்று குறைவான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர். அவர்கள் அனைவரும் இந்தத் தேர்தலில் இவருக்கு வாக்களிக்காததற்கு பல காரணங்கள் உள்ளன.

சென்ற முறை சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து கணபதி இராமச்சந்திரனும், கேகாலை மாவட்டத்திலிருந்து அண்ணாமலை பாஸ்கரனும் தெரிவு செய்யப்பட்டனர். இருவருமே இ.தொ.கா. வைச் சேர்ந்தவர்கள்.

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களிலுள்ள தோட்டங்களைச் சுற்றி பெரும்பான்மை மக்கள் வாழும் கிராமங்களே உள்ளன. சிறுபான்மை தமிழர் மீது பெரும்பான்மை சிங்களவர்களின் ஆதிக்கம் உள்ளது. இங்கு தமிழ் வாக்கு என்றால் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குகளே ஆகும். தொழிற்சங்கங்கள் இவர்களைப் பிரித்து வைத்துள்ளன. தலைவர்களின் அறிவுறுத்தலின் படி வாக்களிப்பதில்லை. இதன் காரணமாய் ஒரு தமிழ் வேட்பாளரால் வெற்றி பெறுவது கடினமாகும். கடந்த மாகாண சபை தேர்தலின் போது இ.தொ.கா. மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் கூட்டணி போன்ற ஒன்றை ஏற்படுத்தி தேர்தலில் ஈடுபட்டனர். இந்த ஒற்றுமை காரணமாய் கேகாலையிலும், இரத்தினபுரியிலும் இரண்டு தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். ஆனால், தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்றவர்கள் வெளியிட்ட கருத்துக்களால் கூட்டணி முறிந்தது. அதன் பெறுபேற்றை பொதுத்தேர்தலில் காண முடிந்தது.

மேலும், சேவலில் போட்டியிட்டு அண்ணாமலை பாஸ்கரன் எதிர்பாராத சவால்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்தது. இதுவரை எட்டியாந்தோட்டை பிரதேச சபையில் பொதுஜன ஐக்கிய முன்னணி உறுப்பினராகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கேகாலை மாவட்ட அமைப்பாளராகவும் இருந்த எம்.ஏ. சத்தியானந்தன் தேர்தலுக்கு முன்னர் மலையக மக்கள் முன்னணியில் இணைந்தார். அதேபோல பல வருடங்களாக எட்டியாந்தோட்டைப் பிரதேசத்தில் இ.தொ.கா. வைப் பிரதிநிதித்துவம் செய்ததோடு, கேகாலை மாவட்ட அமைப்பாளருமாயிருந்த ஜெகநாதன் தேர்தலுக்கு முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்தார். இந்த இருவரும் தமக்கென பிரத்தியேக வாக்கு வங்கிகளை கொண்டிருந்தவர்கள். இந்த வாக்குகளெல்லாம் இம்முறை யானைக்கே வழங்கப்பட்டன. இவர்களது சேவலுக்கெதிரான பிரசாரமும் பலனளித்தது. இதனால் பாஸ்கரன் தனிமைப்படுத்தப்பட்டதோடு தேர்தலிலும் தோல்வியுற்றார்.

மாகாண சபைத் தேர்தலின்போது காணப்பட்ட ஒற்றுமை தொடர்ந்திருக்குமானால் ஒருவேளை பாஸ்கரனால் வென்றிருக்க முடியும். தமிழ் வாக்காளர்கள் சங்கம், கட்சி என்று பிரிந்திருக்கும் வரை கேகாலை, இரத்தினபுரி போன்ற மாவட்டங்கள் எதிர்காலத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் வெற்றி பெறுவதென்பது கடினமாகும்.


நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates