இலங்கையின் பிரதான நகரங்களில் சிறப்பானதொரு நகரமாக விளங்குவது கண்டி மாநகரமாகும். அது மட்டுமன்றி பெரும்பான்மை மக்களுடன் தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மக்களும் செறிந்து வாழும் ஒரு நகரமாகும்.
இம் மாநகர பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழ்ந்து வருகின்ற போதும் இம் மக்களுக்கு நீண்ட காலமாக சகல வசதிகளையும் கொண்ட தமிழ் தேசியப்பாடசாலை அமைக்கப்படவில்லையே என்ற குறைபாடு இருந்து வருகின்றது.
இதேபோன்று முஸ்லிம்களுக்கான தனியான சகல வசதிகளையும் கொண்ட ஆண்கள், பாடசாலை ஒன்றில்லையே என்ற குறைபாடும், கவலையும் இருந்து வருகின்றது.
முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் காலஞ்சென்ற சௌமியமூர்த்தி தொண்டமான் பாராளுமன்றம் சென்ற காலம் தொட்டு அமைச்சராக இருந்த காலம் வரை மலையக மக்களுக்காகவும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் பாடசாலைகளையும் மகாவித்தியாலயங்களையும் உருவாக்கிக் கொடுத்ததுடன், அவற்றுக்கான ஆசிரியர்களையும் வளங்களையும் பெற்றுக்கொடுத்து மலையகத்தில் கல்விமான்களை உருவாக்க காரணமாக இருந்து வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி மாநகரில் அல்லது அதனை அண்மித்த பகுதி ஒன்றில் சகல வசதிகளையும் கொண்ட தமிழ் மகாவித்தியாலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் செயற்பட்டு வந்தார்.
காலஞ்சென்ற தொண்டமான் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு கண்டி நகரத்திலும் அதனை அண்மித்த ஹந்தானை, பல்லேகலை போன்ற இடங்களில் இவ்வாறான பாடசாலை ஒன்றினை அமைக்க கண்டியில் உள்ள முக்கியஸ்தர்களையும் அழைத்துச்சென்று அதற்குரிய காணிகளையும் பார்வையிட்டார் என்றாலும் அது கைகூடவில்லை.
இவ்வாறான நிலையில் 1993 ஆம் ஆண்டு இறுதியில் மத்திய மாகாண சபையில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த முன்னாள் அமைச்சர் காலஞ்சென்ற காமினி திஸாநாயக்க தலைமையில் அப்போதைய முதலமைச்சர் காலஞ்சென்ற டபிள்யூ.பி.பீ. திஸாநாயக்காவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெற்று வந்தது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை அமைச்சர் தொண்டமானும் ஆதரித்தார். இதன் போது இ.தொ.கா. வின் 11 உறுப்பினர்கள் ஆளும் தரப்பில் (ஐ.தே.க) இணைந்து செயற்பட்ட போதும் இவர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாகவே காணப்பட்டனர்.
என்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியில் சிலர் ஒன்றுபட்டு 11 இ.தொ.கா. உறுப்பினர்களில் 8 பேர் முதலமைச்சருக்கு ஆதரவாக இரகசிய உடன்பாடுகளுடன் வசப்படுத்திக்கொண்டனர்.
அவ்வாறான உடன்பாடுகளில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சை உறுப்பினர் ஏ. கதிரேசனுக்கு வழங்கவும் தமிழ் மகா வித்தியாலயம் ஒன்றினை அமைத்துக் கொடுப்பதும் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சில நாள் விவாதங்களின் பின்னர் சட்டப்பிரச்சினைகள் காரணமாக அதனை நிராகரித்தார்.
இதன் மூலம் அப்பிரேரணை தோல்வியடைந்தது. இதனையடுத்து, முதலமைச்சருக்கு ஆதரவாக இருந்த இ.தொ.கா. உறுப்பினர் 8 பேரின் குழு தலைவராக இருந்த ஏ. கதிரேஷனுக்கு மத்திய மாகாண தமிழ் கல்வி இந்து கலாசார அமைச்சுப் பொறுப்பு கையளிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பள்ளேகலையில் மத்திய மாகாண சபைக்கு அண்மித்த இடத்தில் மகா வித்தியாலயம் ஒன்றினை அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
காலப்போக்கில் அங்கு பாடசாலைக் கட்டடம் ஒன்று அமைக்கப்பட்ட போதும் கண்டி நகரத்திற்கான சகல வசதிகளையும் கொண்ட மகா வித்தியாலயமாக அது அமையவில்லை.
இதனால் கண்டி நகரின் தமிழ் மகா வித்தியாலயத்தின் தேவை கைகூடவில்லை.
இதன் பின்னர் (நீண்ட நாட்களின் பின்) மாகாண சபைகளுக்கான தேர்தல் வந்தது. தேர்தலில் மத்திய மாகாண சபைக்கு போட்டியிட்ட இரண்டு இ.தொ.கா உறுப்பினர்கள் தமிழ் வர்த்தகப் பிரமுகர்களின் ஆதரவைத்திரட்டும் பொருட்டு கண்டி மாநகர தமிழ் மக்களின் குறையைப் போக்கும் வகையில் சகல வசதிகளையும் கொண்ட பூரணமான தமிழ் மகா வித்தியாலயம் ஒன்றினை பெற்றுத்தருவோம் அல்லது பதவி விலகுவோம் என்று சூளுரைத்தனர்.
தேர்தலில் வெற்றியும் பெற்றார்கள். ஆனால், அவர்கள் வழங்கிய உறுதி மொழி கைகூடவுமில்லை பதவி விலகவுமில்லை.
அக்காலப்பகுதியில் அமைச்சராக இருந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கண்டி கட்டுகலை ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சராக இருந்த வி. இராதாகிருஷ்ணனிடம் கண்டி நகருக்கான தமிழ் மகா வித்தியாலயம் ஒன்றினை நிர்மாணிப்பதற்காக கண்ணொருவையில் அமைந்துள்ள கால்நடை அபிவிருத்தி அமைச்சுக்கு சொந்தமான காணியில் நிலத்தை ஒதுக்கி அதற்கான காணி உறுதிப்பத்திரம் ஒன்றினை கையளித்தார்.
இதன் பின்னர் அமைச்சரான ஆறுமுகன் தொண்டமான் மற்றும் கண்டி நகர் வாழ் பிரமுகர்கள், அமைச்சரின் அதிகாரிகள், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் உட்பட பலர் அங்கு சென்று பார்வையிட்டனர்.
இச் சம்பவத்தின் பின்னர் இக்காணி அமைந்துள்ள பிரதேசத்தை சேர்ந்த பெரும்பான்மையின மக்கள் சிலரும் சில பெளத்த குருமாரும் அங்கு தமிழ் மகா வித்தியாலயம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கெட்டபே சந்தியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இவ்வாறான எதிர்ப்புக்கள் காரணமாக அத்திட்டமும் கைவிடப்பட்டது.
இதன் பின்னர் கடந்த 2014ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் கண்டி பேராதனை வீதியில் அமைந்துள்ள இந்து சிரேஷ்ட பாடசாலையை 6 கோடி ரூபா செலவில் நான்கு மாடிக் கட்டடமாக அமைத்து சகல வசதிகளையும் கொண்ட தமிழ் வித்தியாலயமாக அமைக்க திட்டமிட்டு அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டதாக பாடசாலை அபிவிருத்தி சங்க பிரமுகர்கள் சுட்டிக்காட்டினர். அத்திட்டமும் இன்றுவரை செயற்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
எனவே, பலமிக்க மலையக தமிழ் அரசியல் வாதிகள் எனக் கூறிக்கொள்ளும் மலையக தமிழ் அரசியல்வாதிகள், காலத்திற்கு காலம் கட்சி மாறி ஆட்சியில் பங்காளிகளாக மாறி மக்களின் பிரச்சினைகளை தீர்க்கவும் தமது சமூக மக்களின் உரிமைகளை பெற்றெடுக்கவும் அவற்றை பாதுகாக்கவுமே கட்சி மாறி ஆளும் தரப்புடன் இணைந்து கொள்வதாக கூறும் அரசியல்வாதிகள் எவ்விதமான உரிமைகளை பெற்றெடுத்தார்கள் என்பதே கேள்விக்குறியாக காணப்படுகின்றது.
கண்டி மாவட்ட தமிழ் மக்களுக்காக கண்டி மாநகரில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சகல வளத்தையும் கொண்ட ஒரு தமிழ் மகாவித்தியாலயத்தை பெற்றெடுக்கவோ அமைத்துக் கொள்ளவோ தமிழ் அரசியல் வாதிகளுக்கு முடியாதுள்ளதே என தமிழ் மக்கள் மன வேதனையுடன் கவலை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை, கண்டி மாநகரில் ஆண்களுக்கான பிரத்தியேக முஸ்லிம் பாடசாலை ஒன்றினை கண்டியில் அமைக்க வேண்டும் என்ற கல்வி மான்களின் கோரிக்கையை ஏற்று காலஞ்சென்ற முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.சி.எஸ். ஹமீட் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அதனை நிறைவேற்ற தயாரென கண்டி மாவட்டத்தில் அதே கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல்வாதியான பிரபல அரசியல்வாதி ஒருவர் அதற்கு பெரும்பான்மையான சிலரை தூண்டி விட்டு ஹமீதின் திட்டத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தி அதனை தடுக்க முயன்றார்.
அவரின் அந்த குறுகிய எண்ணம் நிறைவேறி முஸ்லிம் ஆண்கள் பாடசாலை ஒன்றினை பெற்றுக்கொள்ள முடியாமல் போனது. இச் செயல் குறித்து முன்னாள் அமைச்சர் மர்ஹூம் ஏ.சி.எஸ் ஹமீட் கவலையையும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...