“”வறுமையே வாழ்வானதே, வாழ்வே வறுமையானதே. தீராத வேதனையுடன் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் மலையகச் சமூகத்திற்கு வறுமையைத்தாண்டி ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய அவலம்தான் இயற்கையின் ஊழித்தாண்டவத்திற்கு ஈடுகொடுக்க முடியாமை’’.
இயற்கை என்பதமனிதகுலத்தின் இன்றியமையாத செல்வம். ஆனால், அவ்வியற்கையின் கோரத்தாண்டவத்தால் பஷீக் கப்படும் உயிர்கள் எண்ணி லடங்காதவையாகும்.
எழில் கொஞ்சும் மலையகம் என்று வர்ணிக்கப்படும் மத்திய மலைநாட்டில் ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் தாக்கம் காரணமாக பல நூறு உயிர்கள் வருடா வருடம் காவுகொள்ளப்படுகின்றமை மலையக மக்கள் சந்திக்கும் வறுமையிலும் மிகப்பெரிய வேதனையாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை 2.30 மணிவரை சாதாரண கிராமமாகக் காட்சியளித்த கொத்மலை வெதமுல்லை கிராமம், அடுத்த 15 நிமிடத்தில் மிகப்பெரிய மண்சரிவைச் சந்தித்திருந்தது. பிற்பகல் 2.45 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 7 உயிர்கள் அங்கு காவுகொள்ளப்பட்டன. உயிரிழந்த ஏழு பேரில் 4 பேர் சிறுவர்களாவர். பாடசாலையை விட்டு ஆயிரம் கனவுகளோடு வந்தோர் வீட்டில் படித்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் அடுத்த நிமிடத்தில் நாம் இறக்கப்போகின்றோம் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். பகல் வேளையில் பெரியவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்றுவிடுவதால் வீட்டில் பெரும்பாலும் சிறுவர்கள்தான் இருப்பார்கள். அதேவேளை, இக்கோரத் தாண்டவத்தில் 3 பெரியவர்களும் இறந்துள்ளனர்.
சின்னஞ்சிறுசுகளான புவனா (வயது - 6), சுபானி (வயது - 9), மனோஜ் (வயது - 4 ), ரூபினி (வயது - 2 ) ஆகியோரும். பெரியவர்களான லோகநாயகி ( வயது - 48), காந்திமதி (வயது - 23 ), லட்சுமி (வயது - 67) ஆகியோரும் உயிரிழந்துள்ளனர்.
இங்கு ஏற்பட்ட மண்சரிவின் காரணமாக 40 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கிராமத்தில் வசித்த 45 குடும்பங்களைச் சேர்ந்த 188 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இலங்கையில் இயற்கை அனர்த்தம் தொடர்ந்து ஏற்படுவது சகஜம்தான். ஆனால், அவ்வனர்த்தங்கள் மலையகத்தில் ஏற்படுகின்றமைதான் தீராத வேதனை. அதிலும் மிகப்பெரிய வேதனை அவ்வனர்த்தங்கள் பெருந்தோட்டக் குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களில் ஏற்படுகின்றமை. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் உலகையே உலுக்கிய உயிர்க்கொல்லி மண்சரிவாக, கொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவு பதிவாகியிருந்தது.
சுமார் ஒரு கிலோ மீற்றர் வரையிலான நிலப்பரப்பு சரிந்து வந்ததில் கொஸ்லந்தை என்ற ஒரு கிராமம் இலங்கை வரைபடத்தில் இருந்த இடமே இல்லாமல் போயிருந்தது. அவ்வனர்த்தத்தில் 35 பேர் வரையில் உயிரிழந்ததுடன் 800 பேர் வரையில் இடம்பெயர்ந்தனர். இவர்களுக்கு இன்னமும் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படாத நிலையில், உறவினர் வீடுகளிலும், கூடாரங்களிலும் வாழ்ந்துவருகின் றனர். ஆறு மாதத்தில் வீடுகள் கட்டிக்கொடுப்பதாகக் கூஷீய அரசும், அமைச்சர்களும் இன்னமும் இந்த மக்களின் காயத்துக்கு மருந்து போடாத அவலம் தொடர்கின்றது.
ஆங்கிலேய காலனித்துவக் காலத்தில் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை சூறையாடுவதற்காகப் பொருளாதார நலன் கருதி மலையகப் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட லயன் குடியிருப்புகள் 200 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் அப்படியே காணப்படுகின்றன. அவ்வாறு அமைக்கப்பட்ட குடியிருப்புகள் மக்கள் நலன் கருதி அமைக்கப்பட்டவைஅல்ல. நிலத்தின் தன்மை, மண்ணின் உறுதி என்பவற்றைக் கண்டுகொள்ளாமல் தேவைக்கு ஏற்றவாறு அமைக் கப்பட்டவையாகும். இவ்வாறு அமைக்கப்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வாழமுடியுமா? என்பதை எந்தவொரு அரசோ, அமைச்சர்களோ இன்றுவரை ஆய்வுசெய்து பார்த்ததில்லை. பெருந்தோட்டத்துறையினரின் உழைப்பை மட்டும் சுரண்டுகின்றனர்.
வெதமுல்லையில் இதற்கு முன்னரும் இவ்வாறான மண்சரிவு அபாயங்கள் ஏற்பட்டுள்ளன. இதை வரலாற்றில் அமைச்சர்கள் மூடி மறைத்துள்ளனர். 1970ஆம் ஆண்டும், 1978ஆம் ஆண்டும் இப்பிரதேசத்தில் மண்சரிவுகள் ஏற்பட்டதன் காரணமாக பல மக்கள் இடம்பெயர்ந்ததுடன், பல குடியிருப்புகளும் முற்றாக அழிந்துள்ளன. அந்தத் தருணத்தில் இலங்கை அரசும், அப்போதைய அமைச்சர்களும் முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் இன்று இச்சிறுவர்கள் உலகை விட்டுப் பிரியும் அவலம் ஏற்பட்டிருக்காது.
பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவில் வாழ்ந்துவரும் மலையக மக்களின் வாழ்வில் இயற்கையின் கோரத்தாண்டவமும் மிகப்பெரிய வலியை ஏற்படுத்தி வாழ்வைத் துன்பக்கடலில் மூழ்கடித்துள்ளது; மூழ்கடித்து வருகின்றது. வெதமுல்லையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் அங்கு பல அமைச் சர்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர். புதிய கிராமங் கள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் பாதிக்கப்பட்ட 7 வீடுகளையும் 12 இலட்சம் ரூபா செலவில் ஆறு மாதத்திற்குள் கட்டிக்கொடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார். அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினரான தொண்டமானும், இராஜராம், புத்திரசிகாமணி, ஸ்ரீதரன் சக்திவேல், சதாசிவம், பிலிப்குமார், ரமேஷ் உள்ளிட்ட பல மாகாண சபை உறுப்பினர்களும் ஏனைய துறையைச் சார்ந்தவர்களும் சென்று பார்வையிட்டுள்ளனர்.
பிரச்சினை இடம்பெற்ற இடத்திற்கு விரைவது வரவேற்கத்தக்கதே. ஆனால், அதனை அவ்விடத்திலே விட்டுவிடாமல் முன்நோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். அவ்வாறு கொண்டுசென்றால் இவ்வாறான இயற்கை அனர்த்தங்களை முஷீயடித்து பெருந்தோட்டத்துறையினர் அச்சமின்ஷீ வாழக்கூடிய சூழலை உருவாக்க முடியும்.
கடந்த அரசுகளின் காலங்களில் பல தவறுகள் இடம்பெற்றமையை மலையக மக்கள் மறக்கவில்லை. என்றாலும், அதற்கான தண்டனையை வழங்கப்போவதில்லை மாறாக, மலையகமெங்கும் இவ்வாறு இயற்கையின் கோரத்தாண்டவத்திற்கு உட்படப் போகும் கிராமங்களை வேறு சூழலில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைளைத் துரிதமாக முன்னெடுக்க வேண்டும். அத்துடன், இனிவரும் காலங்களில் அமைக்கப்போகும் வீடுகளை முறையான நிலப்பரப்பில் அமைக்கவேண்டும். வெதமுல்லையில் உயிரிழந்த ஏழு பேரின் சடலங்கள் நேற்று தோட்ட மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இங்கு புதைக்கப்பட்டவைதான் மலையகத்தில் மண்சரிவாலும், இயற்கையின் ஊழித்தாண்டவத்தாலும் புதைக்கப்படும் இறுதி உயிர்களாக இருக்க வேண்டும். இனிவரும் காலங்களில் மலையக மக்கள் சிந்தும் ஒவ்வொரு துளிக் கண்ணீருக்கும் ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.
எனவே, இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கும் அதேவேளை, இனிவரும் காலங்களில் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கும் வண்ணம் மலையகத்தில் அபாயமான இடங்களை இனங்கண்டு வெகுவிரைவில் மீள்குடியேற்றம் செய்யும் வகையில் காத்திரமான முறையில் மலையக அரசியல் தலைமைகள் செயற்படவேண்டும் என்பதே எல்லோரதும் எதிர்பார்ப்பு.
நன்றி - சுடரொளி 28.09.2015
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...