பெண்கள் சபரிமலைக்கு நுழைவதற்கு இருந்த தடையை நீக்கி இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தமை தென்னிந்தியாவில் சர்ச்சைக்குள்ளாகியிருப்பதுடன். இலங்கையிலும் அது எதிரொலித்ததை செய்திகளில் கண்டோம்.
ஆனால் இந்தத் தீர்ப்பு ஒரு வகையில் தீண்டாமைக்கு எதிரானத் தீர்ப்பே. எப்படி கடந்த காலங்களில் சாதியத் தீண்டாமையை ஒழிப்பதில் சட்டம் பங்கு வகித்ததோ அதே வழியில் தான் பெண்களுக்கு எதிரான தீண்டாமையை எதிர்த்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. வரலாறு நெடுகிலும் வெறும் நம்பிக்கைகளால் நசுக்கப்பட்ட உரிமைகளை சட்டம் தான் மனித குலத்திற்கு மீட்டுக்கொடுத்திருக்கிறது.
அன்று சாதியத் தீண்டாமை, கோவில் பிரவேச மறுப்பு, தேவதாசி முறை, என்பவை தெய்வத்தைக் காரணம் காட்டி ஐதீகங்கள் மத நம்பிக்கை, சமூக வழக்கு, மரபு என்பவற்றின் பேரால் தான் நியாயப்படுத்தப்பட்டன. அவற்றுக்கான நீதியை சட்டங்கள் தான் பெரும் போராட்டங்களின் பின்னர் பெற்றுக்கொடுத்தன.
இந்தத் தீர்ப்பு தெய்வ நம்பிக்கைகளின் பேரால் “மறுக்கப்படுகின்ற உரிமைகளுக்கு” எதிரான சிறந்த முன்னுதாரணத் தீர்ப்பு.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய தீர்ப்பில் பக்தி என்பது தீண்டாமைக்கு வழி வகுக்கக் கூடாது என்று குறிப்பிட்டார். மேலும் ஆன் வழிச் சமூக சிந்தனைகளும் விதிமுறைகளும் மாற்றப்பட வேண்டும். வழிபாடு போன்ற விசயங்களில் பாலியல் வேறுபாடுகளை கருத்தில் கொண்டு அனுமதியை மறுப்பதை சற்றும் ஏற்றுக் கொள்ள இயலாது என்று கூறினார்.
நீதிபதி கான்வில்கர் கேரள மக்களின் இந்து வழிபாட்டுத் தளங்கள் விதிமுறைகள் 1965 இந்து பெண்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது என்று கூறினார். வயதை காரணம் காட்டி தடை விதிப்பதை ஒரு மத வழிமுறையாக பின்பற்றுதல் கூடாது என்று கூறினார்.
இதே விதிமுறைகளை எடுத்துக் கூடி நீதிபதி நரிமன் “இது பெண்களின் அடிப்படை உரிமை” என்று குறிப்பிட்டார்.
நீதிபதி சந்திரசூட் தன்னுடைய தீர்ப்பில் “பெண்கள் அவர்களின் இனப்பெருக்க காலங்களை வைத்து அவர்களை கோவிலுக்குள் நுழைய விடாமல் தடுப்பது தவறு. 10 வயதில் இருந்து 50 வரையிலான பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பது அவர்களுக்கு அவமரியாதையை உருவாக்குவதாகும்” என்று குறிப்பிட்டார். மத நம்பிக்கையுள்ள பெருவாரியான ஐயப்ப பெண் பக்தர்கள் பலர் இந்தத் தீர்ப்பை ஆதரிப்பார்கள் என்றோ, கோவிலுக்குச் செல்வார்கள் என்றோ பொருள் கொள்ள முடியாது. ஆனால் பெண்களைத் தீட்டுக்கும் துடக்குக்கும் உள்ளாக்கி அவர்களுக்கான சந்தர்ப்பங்களை மறுத்தும் கட்டுப்படுத்தியும் வரும் வைதீக சமூகம் காலாவதியாகி வருகிறது.
சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் என்பவற்றை மதத்தின் பேரால் கட்டுப்படுத்துகின்ற காலம் இன்று கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிற அரசியலமைப்பின் அடிப்படை உரிமையை எந்த மத சடங்குகளாலும், வைதீக நிர்ப்பந்தங்களாலும் கட்டுப்படுத்த முடியாது என்பதை சகலறும் உணர வேண்டும்.
உலகில் உள்ள எந்த மத விதிகளும் பெண்களால் உருவாக்கப்பட்டதில்லை. ஆண்களே உருவாக்கினார்கள். ஆணாதிக்க சமூகத்தை மறுத்து தொழிற்பட முடியாத பெண் சமூகம் அதனை பின்பற்ற நிர்ப்பந்திக்கப்பட்டது. காலப்போக்கில் அந்த விதிகளை அவர்களே பேண வேண்டும் என்கிற நம்பிக்கைக்கு அவர்களே ஆளாக்கப்பட்டார்கள். அதன் விளைவு; பெண்களே பெண்களுக்கு எதிரான ஆசாரங்களை பாதுகாத்து நியாயப்படுத்தி, அமுல்படுத்தும் நிலைக்கு ஆனார்கள். அதாவது ஆணாதிக்க நிகழ்ச்சிநிரலை தாமே ஏற்று நடத்தினார்கள். அதன் பின்னர் ஆணாதிக்க விதிகளையும், நிர்ப்பந்தங்களையும் அமுல்படுத்த நேரடியாக ஆண்கள் தேவைப்பட்டதில்லை. பெண்களே அதனைப் பார்த்துக் கொண்டார்கள்.
உதாரணத்திற்கு இன்றும் போது வழக்கில் கூறப்படும் சில காரணிகளைப் பார்ப்போம்.
“பெண்கள் தான் இன்று வரதட்சினை கேட்கிறார்கள். ஆண்கள் அல்ல” என்பார்கள்.
“சபரிமலைக்கு பெண்கள் நுழைவதை எதிர்த்து பெண்களே போராடுகிறார்கள்!” என்று செய்தி வரும்.
இப்போது சொல்லுங்கள் பெண்கள் தான் வரதட்சனையை வலியுறுத்துகிறார்களா? அல்லது ஆணாதிக்க அவசியத்தின் முகவர்களாக பெண்கள் செயல்படுகிறார்களா?
சபரிமலை தரிசனத்தை பெண்களுக்குத் தடை செய்திருப்பது தீட்டு, துடக்கு போன்ற காரணங்களால் என்றால் அதனை வலியுறுத்தியது பெண்களா அல்லது ஆணாதிக்க விதிகளா? இந்த விதிகளை இயற்றியது பெண்களா? அல்லது ஆண்களா? அல்லது ஐயப்பன் தான் இந்த சட்டத்தை இயற்றினாரா?
இயற்கையான மாதவிலக்கை தீட்டு, துடக்குகுள்ளாகி தம்மை அசிங்கப்படுத்தும் ஆணாதிக்க சிந்தனையை கேள்விக்கு உட்படுத்தாமல் அதை ஏற்றுக்கொள்ள நம் பெண்களுக்கு எப்படி முடிகிறது?
பாலுறவுக்கு பாலுறுப்பு வேண்டும், பரம்பரை தழைக்க பாலுறுப்பு வேண்டும். ஆனால் அதன் இயற்கை இயல்பு மட்டும் எப்படி தீட்டானது. அதைக் காரணம் காட்டி எப்படி உரிமைகளைத் தடுக்க முடிகிறது? சடங்குகளுக்கும், வைதீக மரபுகளுக்கும் அப்பால் மனசாட்சியின் பால் ஆண்கள் சிந்திக்க முடியாதா? தன்னை ஈன்ற தாயை, வாழ்க்கையின் சக பயணியை, தான் பெற்ற மகளை தீட்டு - துடக்கின் பேரால் பலவற்றிலும் ஒதுக்கி வைக்கும் நிலையை நெஞ்சில் ஈரமுள்ள ஆண்கள் ஆதரிக்க முடியுமா? சகிக்க முடியுமா? எதிர்க்க வேண்டா? கொதித்தெழ வேண்டாமா?
வைதீக நம்பிக்கைகள், சடங்குகள், மரபுகள் அனைத்தையும் கேள்விக்குட்படுத்தும் நவீன சமூகத்தில் உலகம்; உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும், ஜனநாயகத்துக்கும், சமத்துவத்துக்கும் முன்னுரிமை கொடுத்து அடுத்தக் கட்டத்திற்கு வளர்ந்து கொண்டு செல்கிறது.
இன்றைய நீதித்துறையும் அதன் அடிப்படையிலேயே வைதீக நம்பிக்கைகளை கேள்விக்குள்ளாக்குகிறது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்கிறது.
நன்றி - தினகரன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...