Headlines News :
முகப்பு » , , , , » சிறில் மெத்தியு: பேயை உயிர்ப்பித்தல்! - என்.சரவணன்

சிறில் மெத்தியு: பேயை உயிர்ப்பித்தல்! - என்.சரவணன்


இலங்கையின் இனவாத வரலாற்றில் குறிப்பாக 70களிலும்  80களிலும் தலைமைப் பாத்திர மட்டத்தில் இருந்தவர் சிறில் மெத்தியு. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் சித்தாந்தத் தளத்தில் மாத்திரமல்ல நடைமுறையிலும் களத்தில் இறங்கி தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் சிறில் சிறில் மெத்தியு.

சிறில் மெத்தியு 77, 81, 83 கலவரங்களின் பின்னணியில் செயற்பட்டவர்களில் ஒருவராகவும் யாழ் நூலக எரிப்பின் பின்னணியில் இருந்தவரும் கூட.

இனவாதத்தைத் தூண்டும் வகையில் சிறில் மெத்தியு 70கள், 80களில் எழுதிய நூல்கள் இப்போது மீண்டும் மீள்பதிப்பு செய்து வெளியிடப்பட்டிருப்பத்தை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த மாபெரும் புத்தக சந்தையில் காண முடிந்தது. அந்த நூல்கள் அன்று நிகழ்த்திய அழிவுகளில் இருந்து இந்த நாடு பாடம் கற்றுக்கொள்ளவில்லையோ என்று சிந்திக்கும் அளவுக்கு இந்த நூல்களின் மறுபதிப்புகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.

சிறில் மெத்தியு தென்னிலங்கையில் பாரிய அளவில் இனவாத பிரச்சாரத்தை முன்னெடுத்தார். துண்டுப்பிரசுங்கள், சுவரொட்டிகள், நூல்கள் வெளியீடு, கூட்டங்கள் நடத்துதல் என்று ஓயாமல் தமிழர்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். தமிழர்கள் வந்தேரிகள் என்றும் அவர்களுக்கு சொந்தமில்லாத இலங்கைத் தீவை உரிமைகொண்டாடி தனி நாடாக பிரித்துக் கொண்டு செல்லப்போகிறார்கள் என்பதே அதன் அரசியல் உள்ளடக்கமாக இருந்தது.


கவுத கொட்டியா?

“கவுத கொட்டியா” என்கிற தலைப்பில் 1980இல் வெளியிட்ட நூல் அன்றைய சூழலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. அன்றைய கால சூழலில் இனவாதத்தின் தன்மையை நாடி பிடித்தறிய குமாரி ஜெயவர்த்தன உட்பட பல ஆய்வாளர்களும் அந்த நூலைக் கையாண்டுள்ளனர். அது 2011இல் மீண்டும் மறுபதிப்பை வெளியிட்டிருப்பவர்கள் “சிங்கள ஹன்ட” (சிங்களக் குரல்) என்கிற அமைப்பு.

இந்த நூலை கொழும்பு நூலக சேவைகள் சபையில் 17.08.2011 பெரும் எடுப்புடன் இனவாதத் தலைவர்கள் பலர் முன்னிலையில் வெளியிட்டுவைத்தார்கள். அங்கு உரையாற்றிய பேராசிரியர் பீ.ஏ.த.சில்வா
“துப்பாக்கியைப் பிரயோகித்த காலம் முடிந்து விட்டது. இப்போது பேனையைப் பாவிக்க வேண்டிய காலம் வந்திருக்கிறது. யுத்தத்தில் வால் இன்னும் மிச்சம் இருக்கிறது. அதையும் இன்று வெட்டியெறிய வேண்டியிருக்கிறது.” என்றார் (திவயின – 29.08.2011)
“கவுத கொட்டியா” (புலிகள் யார்) என்கிற நூலின் அட்டைப்பட கேலிச்சித்திரத்தில் வெள்ளை வேஷ்டியுடன் நெற்றியில் விபூதிபட்டை பூசிய உருவம் அமிர்தலிங்கத்தைக் குறிக்கிறது. அமிர்தலிங்கம் கண்ணாடியில் தன்னை புலியாகக் காட்டுவதைக் கண்டு மிரண்டு போவதாக அந்த கேலிச்சித்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. 

பின் அட்டையில் இலங்கையின் வரைபடத்தின் மீது இருந்து கொண்டு ஆனொருவர் சிங்கக் கொடியின் கம்பத்தை ஈட்டியாக்கிக் கொண்டு புலியின் நெஞ்சில் குத்திக் கொல்லும் படம். கூடவே இரு வெவ்வேறு வாசகங்கள்.
“இது சிங்களவர் எங்கள் நாடு, நாங்கள் பிறந்து இறக்கின்ற நாடு” மாமக சேகர
“தமிழர்களுக்கு இந்தியாவில் தமிழ் நாடுண்டு, சிங்களவர்களுக்கு இலங்கைத் தவிர வேறெந்த இடமுமில்லை.” – சிறில் மெத்தியு
நூலின் முகப்பை விரித்தால் அடுத்த பக்கத்தில் இப்படி இருக்கிறது.
“தயவு செய்து இதனை வாசித்ததன் பின் அடுத்தடுத்தவர்களுக்கு அனுப்புங்கள்”
அந்த நூலை வெளியிட்ட சிங்கள ஹன்ட அமைப்பின் சார்பில் “சிங்கள நாட்டை இரண்டாக பிளக்க; புலிகளுக்கு இருக்கும் உரிமை தான் என்ன?” என்கிற தலைப்பில் பெரியதொரு அறிமுகத்தை எழுதியிருப்பவர் நரவெல்பிட்ட பஞ்ஞாராம தேரர். இவர் மூன்று நிக்காயக்களின் மகா சங்க சபையின் நிறைவேற்றுக் குழுவில் இருப்பவர் என்பதை இங்கு கவனிக்க வேண்டும்.
சிறில் மெத்தியு, பிரேமதாச, லலித் அத்துலத் முதலி, ஜே.ஆர்.
அதில் ஒரு இடத்தில் இப்படிக் குறிப்பிடப்படுகிறது.
“இலங்கையில் 29வீதத்தினரைக் கொண்ட தமிழ் பேசும் மக்களுக்காக இலங்கையை இரண்டாக பிரித்து தனி நாடு கோரி வருகின்றனர் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள். அப்படி தமிழ் பேசும் மக்கள் ஒரே குடையின் கீழ் இல்லை. அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம்கள், இன்னொரு மூன்றில் ஒரு பகுதியினர் இந்திய வம்சாவளியினர். ஆக இலங்கைத் தமிழர்களாக அடையாளம் காணக் கூடியவர்கள் சுமார் 12 வீதத்தினர் மாத்திரமே. அதிலும் ஒரு பகுதியினர் கிழக்கைச் சேர்ந்தவர்கள். ஆக இலங்கையின் ஜனத்தொகையில் வடக்குத் தமிழர்கள் வெறும் 5% வீதத்தினர் மட்டுமே. புலிகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அந்த 5%வீதத்தினருக்குள் மட்டுமே இருக்கிறார்கள். வடக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பகுதியினர் வெள்ளாளர்களால் சூத்திரர்கள் ஆக்கப்பட்ட ஹரிஜனர்களும், வன்னித் தமிழர்களுமே ஆவர். இந்த சூத்திரர்களும் கூட தென்னிந்திய தமிழர்களால் சிங்களப் பிரதேசங்கள் ஆக்கிரமிக்கப்பட்டபோது சிங்களவர்களோடு கலந்து உருவான வம்சத்தினரே. அப்போது அடிமைகளாக பிடிக்கப்பட்ட சிங்களவர்களுக்கு தமிழ் மொழியையும், இந்து மதத்தையும் திணித்தார்கள். அவர்களின் சிங்களப் பின்னணியாலும், பௌத்த பின்னணியாலும் இழிசாதியினராக நடத்தப்பட்டார்கள். அவர்களே ஹரிஜனர்கள். அவர்கள் மீது தீண்டாமை மோசமாக திணிக்கப்பட்டது. இந்த சூத்திர ஹரிஜனர்களில் பெரும்பாலானோருக்கு ஈழம் தேவைப்படவில்லை...” (பக்கம் xiii, xiv)
என்று அப்பட்டாமான கற்பனாவாதப் புனைவுகளைப் போதிக்கிறது.

இரண்டாம் பதிப்புக்கு “சிங்கள ஹன்ட” அமைப்பு வழங்கியிருக்கும் முன்னுரையில்
“விடுதலைப் புலிகளை ஆயுத ரீதியில் தோற்கடித்துவிட்டதாக நாம் கூறிக்கொள்கிறபோதும் இன்றைய நிலையில் பிரிவினைவாத கருத்தியல் தோற்கடிக்கப்படவில்லை. அதனை செய்வதற்கு வரலாற்றின் பங்கு முக்கியமானது. “யார் புலிகள்” என்கிற நூல் அந்த வகையில் பெரும் பாடத்தைக் கற்றுத் தருகிறது.....”
“...இதில் அடங்கிய உரைகளில் தமிழ் பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளின் பின்னணியில் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி இருந்திருக்கிறது என்பதை நிறுவப்படுகிறது... அந்த வகையில் பயங்கரவாதத்தை யுத்தத்தால் மட்டும்தான் அழிக்கமுடியும் என்கிற கோஷத்தை முதன் முதலில் முன்வைத்தவர் சிறில் மெத்தியு. அவர் கூறியபடி ஆயுத ரீதியில் பயங்கரவாதத்தை அழித்துவிட்ட பின்புலத்தில் தான் இந்த இரண்டாம் பதிப்பு வெளியாகிறது..”
“அன்று புலிகளை கட்டியெழுப்பிய தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும், இன்றைய கூட்டமைப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. 70களில் புலிகளைத் தோற்றுவித்தது போலவே இன்றும் பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கும் அடிப்படை பின்புலத்தை இன்றைய கூட்டமைப்பு மேற்கொண்டு வருகிறது.” (பக்கம் i, ii)
“தமிழர்களின் பாரம்பரிய பூமி என்கிற அடிப்படையில் தீர்வைக் கோரும் போக்கு இன்னமும் தொடர்கிறது... அதை முறியடிப்பதே அடுத்த இலக்கு...”
என்று விரிகிறது அந்த முன்னுரை. 


இந்த நூலில் சிறில் மெத்தியுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உரைகளும் அறிக்கைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அவை:
  • 19.05.1978ஆம் திகதி விடுதலைப் புலிகளையும் அதற்கு சமமான இயக்கங்களையும் தடை செய்யும் சட்டம் குறித்த பாராளுமன்ற விவாதத்தில் சிறில் மெத்தியுவின் உரையும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களுக்கும் இடையில் நிகழ்ந்த விவாதம்.
  • 08.08.1978 அன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு குறித்த விவாதத்தில் சிறில் மெத்தியு சிங்கள மக்களின் உரிமைகள் குறித்து ஆற்றிய உரையும் விவாதமும்.
  • 19.12.1978 அன்று சிறில் மெத்தியுவின் “பயங்கரவாதத்தை பயங்கரவாதத்தால் தான் நசுக்க முடியும்” தலைப்பிலான பாராளுமன்ற உரையும் விவாதமும்.
  • 03.04.1979 அன்று ஆற்றிய உரை. “எதிர்க்கட்சித் தலைவர் சலுகைகைகளைப் பெற்றுக்கொண்டு ஈழத்துக்காக வெறுப்பைப் பரப்புகிறார்.” (அமிர்தலிங்கமும் அவரது துணைவி மங்கையற்கரசியும் தமிழகம் சென்று நிகழ்த்திய பிரச்சாரங்களுக்கு எதிர்வினை)
  • விடுதலைப் புலிகளையும் அதற்கு சமமான இயக்கங்களையும் தடை செய்யும் 1978ஆம் ஆண்டின் 16இலக்கச் சட்டத்திருத்தத்தின் மீதான விவாதத்தில் சிறில் மெத்தியுவின் உரை. (“சுதந்திரத் தேர்த்தலை துப்பாக்கித் தோட்டாக்களால் நிறுத்திவிட முடியாது” எனும் தலைப்பில்)
  • 11.07.1979 அன்று எதிர்க்கட்சித் தலைவர்அமிர்தலிங்கத்தால் வெளியிடப்பட்ட கட்டுரையொன்றைப் பற்றி அன்றைய ஜனாதிபதி ஜே.ஆருக்கு தொழிற்துறை மற்றும் விஞ்ஞான அலுவல்கள் அமைச்சர் சிறில் மெத்தியு அனுப்பிய பகிரங்கக் கடிதம்.
  • 04.10.1979 அன்று பாராளுமன்றத்தில் சிறில் மெத்தியு ஆற்றிய உரை (“வடக்கில் அவசர நிலை: மனித உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாத்தல்” என்கிற தலைப்பில்)
இந்த நூலில் அத்தியாயங்களுக்கு இடையில் வரும் பக்கத்தில் பெரிய எழுத்துக்களில் சில உரைகள் மேற்கோள் காட்டப்படுகின்றன. உதாரணத்திற்கு... 
“நம் நாட்டு மக்களில் குறிப்பாக வேறெங்கும் போக முடியாத இலங்கையில் மட்டுமே பேசக்கூடிய மொழியைக் கொண்டிருக்கும் சிங்களவர்களின் உரிமைகள், பாரம்பரியம், மதம், கலாசாரம் என்பவற்றை பேணிப் பாதுகாக்கப்பதற்கு நானும் எனது அரசாங்கமும் உத்தரவாதப்படுத்துவதை இத்தால் அறிவிக்கிறேன். அதுவே உங்களால் எமக்கு வழங்கப்பட்ட ஆணையின் ஒரு பகுதி.”
(14.10.1979 அன்று சிலுமின பத்திரிகையில் வெளியான ஜனாதிபதி ஜே.ஆர் அகலவத்தையில் ஆற்றிய உரையிலிருந்து...)
சிங்களவர்களின் நேரடி எதிரிகள்
அடையாளத்தை அழிக்க ஆதாரத்தை அழி!

சிறில் மெத்தியு தமிழர்களுக்கு எதிரான வேறு சில நூல்களும் எழுதியிருக்கிறார்.
  • “சிங்ஹலயாகே அதிசி சதுரா” (சிங்களவர்களின் நேரடி எதிரிகள்),
  • “சிஹளுனி! புதுசசுன  பேராகனிவ்” (சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!),
  • “பல்கலைக்கழகத்துக்கு கள்ளப்பாதை (1981)”
ஆகிய  நான்கு நூல்களும் முக்கியமானவை. இவை பல்கலைக்கழக சிங்கள இளைஞர்கள், இனவாதமயப்பட்டு வந்த படித்த தரப்பினர் மத்தியில் பிரபல்யமாக இருந்ததுடன் அந்நூல்கள் தமிழரெதிர்ப்புக்கு வேகமாக எண்ணெய் வார்த்தவை.

இந்த நூல்களில் சிறில் மத்தியு தனது கட்டுரைகளையும், தனது பாராளுமன்ற உரைகளையும் உள்ளடக்கியது மட்டுமன்றி ஜே.ஆர். மற்றும் இன்னும் பல சிங்களத் தலைவர்கள் தமிழர்களுக்கு எதிராக முன்வைத்த கருத்துக்களையும் தொகுத்து வெளியிட்டார். “சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!” என்கிற நூலின் பின் அட்டையில் இப்படி இருக்கிறது.
“மண்டையில் மூளையிருந்தும்  இதைப் பற்றி சிந்திக்காதிருப்பது; கண்களிரண்டிலும் ஆணி அறைந்திருப்பதாலா சிங்களவர்களே”
"சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!"
தமிழர்களுக்கு எதிரான புனைவுகளையும், சிங்கள பௌத்தர்களின் நாடு இது என்பதை நிறுவ கையாளும் போலிக் கதைகளையும் ஆதாரங்களையும் நிரப்பி வெளியிடப்பட்ட நூல்கள் அவை. "சிங்களவர்களே பௌத்தத்தைக் காத்திடுங்கள்!" என்கிற நூலின் 12வது அத்தியாயம் முழுவதும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தமிழ் மக்களின் தாயகக் கோரிக்கைக்கு எதிராக அதுவரை வெளியிட்ட கருத்துக்கள் பல தொகுக்கப்பட்டுள்ளன.

சிறில் மெத்தியு சிங்கள பௌத்த சக்திகளால் ஒரு வீரனாக போற்றப்படுவதை பல்வேறு கட்டுரைகளில் காண முடிகிறது. வடக்கு கிழக்கு பகுதிகளில் புராதன வரலாற்று தொல்பொருள் இடங்களை அறிந்து அவை அனைத்தும் சிங்கள பௌத்த வரலாற்று ஆதாரங்களே என்று நிறுவ பல முனைகளில் இயங்கினார் சிறில் மெத்தியு. அது பற்றிய விபரங்களை சேகரித்து ஆவணமாக ஆக்கி 1983 யூலை 20 அன்று பாராளுமன்றத்தில் வடக்கில் 261 பௌத்த அகழ்வாராய்ச்சிக்கு உரிய இடங்கள் இருப்பதாக அறிக்கை சமர்ப்பித்து ஹன்சார்டில் பதிவு செய்தார்.

இந்தப் பணிகளை மேற்கொள்வதற்காக “அரச தொழிற்துறை பௌத்த சங்கம்” என்று ஒன்றை ஆரம்பித்து திருமலையில் புல்மூடை – குச்சவெளி பிரதேசத்தில்  “அரிசிமலை ஆரண்ய சேனாசனய” என்கிற ஒரு பௌத்த தளத்தை  ஆரம்பித்தார். சிறில் மெத்தியு தயாரித்த அறிக்கையை அதிகாரபூர்வமாகவே இலங்கையின் கலாசார உரிமைகள் பற்றி யுனெஸ்கோ நிறுவனத்திடம் 20.10.1983 அன்று கையளித்து அந்த பிரதேசங்களை பாதுகாத்து தருமாறும் முறைப்பாடொன்றை செய்தார். அந்த அறிக்கை இன்றுவரை சிங்கள தேசியவாதிகளால் போற்றப்பட்டுவருகிறது. வடக்கு கிழக்கு சிங்களவர்களின் பூர்வீக உடமை என்கிற வகையில் அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு "பௌத்த புராதன" இடங்களைக் காட்டுதல்
வடக்கையும் கிழக்கையும் துண்டாடுவது, தமிழர் தாயகக் கோட்பாட்தை எதிர்ப்பதற்கும் இந்த பிரச்சாரப் பணிகள் அவசியப்பட்டன. கிரிஹண்டு, வெஹர, சேருவில வெல்கம் வெஹர போன்ற விகாரைகளின் பாரம்பரியம் பற்றி நூல்களை எழுதினார்.

மாவட்ட சபைத் தேர்தல் காலத்தில் சிறில் மெத்தியு “தமிழர்களுக்கு எதிராக எழுங்கள்” என்கிற கோசத்துடன் சுவரொட்டிகளை எங்கெங்கும் ஓட்டினார். சிங்கள பௌத்த நாட்டைப் பாதுகாப்பதற்கு தமிழர்களின் பிரதேசங்களில் குடியேறுங்கள் என்று அறைகூவினார்.

யாழ் நூலக எரிப்பில் சிறில் மெத்தியுவின் வகிபாகம் பற்றிய தகவல்கள் பல இடங்களில் பதிவாகியுள்ளன. 83 கலவரத்தின் வடிவமைப்பாளனாக அறியப்படுபவர். ஒரு முறை ராவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவன் தான் முன்னால் கொழும்பு மேயர் கணேசலிங்கத்துடன் உரையாடியபோது கணேசலிங்கம் கக்கிய விடயங்களை சரிநிகர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டியில் வெளியிட்டிருந்தார். கணேசலிங்கம் இப்படி கூறுகிறார்.

ஐவன்: 83 கலவரத்தில் சிறில் மெத்தியுவுக்கு நேரடிப் பங்கு இருந்ததை ஏற்றுக் கொள்கிறீர்களா?
கணேசலிங்கம்: “1983 கலவரத்திற்கு நானும் பங்களிப்பு செய்திருக்கிறேன். நானும் சிறில் மெத்தியுவும் மட்டுமல்லஅரசோடு இருந்த எல்லா சிரேஷ்ட அரசியல் வாதிகளும் அக்கலவரத்தைப் பாவித்தார்கள்..
(சரிநிகர் - மார்ச் 1993)
கலுவாதேவகே சிறில் மெத்தியு
களனியின் வரலாற்றை எடுத்தால் இனவாதத்தத்தின் கோட்டை எனலாம். பல இனவாதிகளை உருவாக்கிய இடம் அது. சிங்கள சாதியமைப்பில் வகும்புற சாதியைச் சேர்ந்தவர சிறில் மெத்தியு. சிங்கள சாதியமைப்பில் உயர் சாதியாக கொள்ளப்படும் கொவிகம சாதியிலும் பார்க்க உயர்வான நிலவுடைமை சாதி தாம் என்று கூறிக்கொள்ளும் சாதி அது. காலனித்துவ காலத்தில் கத்தோலிக்க மதமாற்றம் செய்துகொள்ளாத ஒரு சாதியாக சுயபெருமிதம் கொள்ளும் சாதி அது.  மேல் மாகாணத்திலும், சப்பிரகமுவா மாகாணத்திலும் அதிகமாக வாழ்த்து வருபவர்கள். சிங்கள சனத்தொகையில் கிட்டத்தட்ட 30% வீதத்தினரைக் கொண்டவர்கள் வகும்புற சாதி. ஒரு காலத்தில் வர்த்தகத்தில் பெரும் செல்வாக்கு செலுத்திவந்த போதும் 70கள், 80களில் கராவ சாதியினரின் எழுச்சியும், வியாபார வர்த்தகத்தில் தமிழர்களும் போட்டியாக வளர்ச்சியடைந்ததன் பின்னர்  பொருளாதார ரீதியில் வீழ்ச்சியைச் சந்தித்த சமூகமாக அறியப்படுகிறார்கள். களனி தொகுதியில் வகும்புற சாதியைச் சேர்ந்த சிறில் மெத்தியுவின் உறவினர்கள் அதிகம் வாழும் பகுதி.

ஆக தம்மை கொவிகம சாதியினரை விட தூய சிங்கள பௌத்த தேசியவாதி என்று நிறுவ பிரயத்தனப்பட்ட ஒரு அரசியல்வாதியாக கருதப்படுபவர். அவரது பரம்பரைப் பின்னணி; கேரளாவிலிருந்து வழிவந்தோர் என்று கூட ஆங்காங்கு சிங்களத்தில் வாதிடுவதையும் காண முடிகிறது.

சிறில் மெத்தியு கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் சட்டம் பயின்று வழக்கறிஞராக ஆகி, 1977 தேர்தலின் மூலம் பாராளுமன்றத்துக்கு பிரவேசித்து அதே தொகுதியைச் சேர்ந்த ஜே.ஆரின் நெருங்கிய நண்பருமானார். ஐக்கிய தேசியக் கட்சியின் இணைச் செயலாளராகவும், பின்னர் அதன் உப தலைவராகவும் இருந்தவர். ஐ.தே.க.வின் தொழிற்சங்கமான “ஜாதிக்க சேவக சங்கமய”வின் தலைவராக நீண்டகாலம் இருந்தவர்.
யாழ் கந்தரோடை பகுதியை அன்றைய கலாசார அமைச்சர் ஈ.எல்.பீ.ஹுருல்லேவுக்கு சிங்கள "கந்துருகொட" வுக்கு நேர்ந்த அவலம் என்று சிறில் மேத்தியுவால் காண்பிக்கப்படுகிறது. இந்தப் படம் "சிங்களவர்களே புத்த சாசனத்தை காப்பாற்றுங்கள்" என்கிற நூலில் 230வது பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது. 
எதிர்காலத்தில் தமிழர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடக்கினால் அதனை ஒடுக்குவதற்காக ஆயுத உற்பத்தியை மேற்கொள்ளவேண்டும் என்று தனது அமைச்சரவைக்கு கீழ் இருந்த இரும்புக் கூட்டுத்தாபனத்தின் மூலம் ஆயுத உற்பத்தியை மேற்கொள்வதற்கான திட்டத்தை வகுத்து அக்கூட்டுத்தாபனத்தின் அன்றைய தலைவராக இருந்த பேராசிரியர் பீ.ஏ.த.சில்வாவையும் அழைத்துக் கொண்டு போய் அதனை ஜே.ஆரிடம் சமர்ப்பித்தார். ஆனால் ஜனாதிபதியிடம் இருந்து அதற்கான ஒப்புதல் கிடைக்கவில்லை. (திவயின – 16.11.2011)

1985 ஆம் ஆண்டு திம்பு பேச்சுவார்த்தைக்கு எதிராக ஆளுங்கட்சிக்குள் குரல் எழுப்பியதால் அவரது அமைச்சு பதவி பறிக்கப்பட்டது. ஜே.ஆரின் அமைச்சரவையில் இருப்பதை விட ஒரு பாம்புடன் சீவிப்பது மேல் என்று பத்திரிகைகளிடம் கூறினார். (லங்காதீப – 02.06.2018)

தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவை சிறில் மெத்தியுவால் சகிக்கக் கூட முடியவில்லை. எம். சிவசிதம்பரம் சிறில் மெத்தியுவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடுமையான வாதம் நிகழ்ந்தது. தமிழ் மாணவர்களை குறுக்குவழியில் பல்கலைக்கழகத்துக்கு அனுப்புவதற்காக வினாத்தாள் திருத்துனர்கள் மோசடி செய்து அதிக புள்ளிகளை வழங்கினார்கள் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். அந்த விவாதத்தில் அவரை ஆதாரத்தை முன்வைக்கக் கோரியபோதும் கையில் ஒரு கடுதாசியை வைத்துக் கொண்டு கடைசி வரை சமர்ப்பிக்கவில்லை. ஆனால் இன்று வரை சிங்கள நூல்களில் சிறில் மெத்தியு கூறியது உண்மை என்றே பதிவு செய்யப்பட்டுள்ளதையும் காண முடிகிறது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆருக்கும் இது குறித்து நீண்ட கடிதத்தை அவர் எழுதினார். இவை இரண்டும் “கவுத கொட்டியா” நூலிலும் இடம்பெற்றுள்ளது. 
“நாம் எதனையும் ஏற்றுக்கொள்வோம்; ஆனால், நேர்மையற்றவர்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது... கஷ்டப்பட்டு படித்துப் புள்ளிகள் பெறும் மாணவர்களை நோகடிகின்ற, இழிவுசெய்கின்ற கருத்துக்கள் இவை” 
என்று சிவசிதம்பரம் ஆத்திரத்துடன் உரையாற்றினார்.


1987 ஆம் ஆண்டு ஜே.ஆரும் ராஜீவ் காந்தியும் செய்துகொண்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தையும், 13வது திருத்தச்சட்டத்தையும் எதிர்த்ததோடு நில்லாமல் பாராளுமன்றத்தில் அதனை எதிர்த்து வாக்களித்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இருவர் ஒருவர் காமினி ஜெயசூரிய மற்றவர் சிறில் மெத்தியு. இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக இனப்பிரச்சினை விடயத்தில் ஜே.ஆர் சற்று கவனமாக காய் நகர்த்த வேண்டிய நிலை தலைதூக்கியது. கண்துடைப்புக்காக என்றாலும் ஜே.ஆரால் மேற்கொள்ளப்பட்ட சகல நடவடிக்களுக்கும் எதிராக சிறில் மெத்தியு இயங்கினார். சர்வகட்சி மாநாடு, மாவட்ட சபைகள், திம்பு பேச்சுவார்த்தை, இலங்கை இந்திய ஒப்பந்தம், மாகாணசபை அனைத்தின் போதும் அவர் இனவாத சக்திகளோடு கைகோர்த்து இயங்கினார். அப்போது தலைமறைவாக இருந்த ஜே.வி.பி “மவ்பிம சுரகீமே சங்விதான” (தாய் நாட்டை பாதுகாப்பதற்கான இயக்கம்) என்கிற முன்னணி அமைப்பை உருவாக்கி பல்வேறு இனவாத சக்திகளை ஒரே குடையின் கீழ் இணைத்தது. அதில் பகிரங்கமாக இயங்கியவர் சிறில் மெத்தியு.

களனி நகரம் புனித பூமியாக பிரகடனப்படுத்தி 33 நிறைவு நிகழ்வில் (1981) சிறில் மெத்தியு, ஜனாதிபதி ஜே.ஆர், பிரதமர் பிரேமதாச
இதே ஆண்டு தான் யாழ் நூலக எரிப்பும் நிகழ்த்தப்பட்டது.
அப்போது ஜே.ஆர் பலம் பொருந்திய நபராக இருந்தார். அவரை எதிர்த்து எவரும் கருத்து கூறக்கூட துணிய மாட்டார்கள். பல உறுபினர்களின் இராஜினாமா கடிதத்தை முன்கூட்டிய வாங்கி வைத்துக்கொண்டவர் அவர். இந்த நிகழ்வுக்குப் பின் சிறில் மெத்தியு கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆளும் இனவாத அரசாங்கத்துக்கே பொறுக்க முடியாத அளவுக்கு எல்லை கடந்திருந்தன சிறில் மெத்தியுவின் நடவடிக்கைகள். அவர் இறப்பதற்கு 6 மாதங்களுக்கு முன்னர் பிரேமதாச கட்சியின் உறுப்புரிமையை மீளக் கையளித்தார்.

சிறில் மெத்தியு 17.10.1989 அன்று இறக்கும்போது 80வயது.

சிறில் மெத்தியு இனப்பிரச்சினையை அடுத்த மோசமான கட்டத்துக்கு நகர்த்தியதில் முக்கிய காரணகர்த்தா. இன்றும் சிறில் மெத்தியுவுக்கு உயிர் கொடுக்கிறார்கள் என்றால் பேரினவாதம் சற்றும் சளைக்காமல், குற்றவுணர்ச்சியே இல்லாமல் முழுமையான இனச்சுத்திகரிப்புக்கு வியூகம் அமைக்கிறது என்றே விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.

நன்றி - தினக்குரல்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates