Headlines News :
முகப்பு » , » மாற்று ஏற்பாடொன்றுக்கு சென்றால் என்ன?

மாற்று ஏற்பாடொன்றுக்கு சென்றால் என்ன?


ஒப்பந்த பேச்சுவார்த்தை மப்பும் மந்தாரமுமாக இருக்குமானால்

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் இரண்டாவது சுற்று கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றது. இராஜகிரியவில் அமைந்துள்ள பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளன தலைமைப் பணிமனையில் நடந்த இப்பேச்சுவார்த்தை எதிர்வுகூறல்களை மெய்ப்பித்து தோல்வியிலேயே முடிந்தது. கம்பனித்தரப்பு 15 வீத சம்பள அதிகரிப்புக்கு மட்டுமே இணங்கியது. இதன்படி தற்போதைய அடிப்படைச் சம்பளமான 500 ரூபா 575 ரூபாவாக மாறும். ஆனால் இதனைக் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் மறுதலிப்புச் செய்தன. இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த இ.தே.தோ.தொ.ச பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், 1000 ரூபாவுக்குக் குறைந்த (அடிப்படைச் சம்பளம்) சம்பளத்தை ஏற்கப்போவதில்லை என்றார். இதனையே இ.தொ.கா.வும் வலியுறுத்தியது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (12) நடைபெறவிருந்த மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறாது என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அறிவித்துள்ளது. நாளை (15) திங்கட்கிழமை கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகவுள்ள நிலையில் சம்மேளனத்தின் இந்த அறிவிப்பால் தொழிற்சங்கத் தலைவர்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. நாளை பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதாயின் பேச்சு ஆரம்பித்து அது நிறைவடையும் காலப்பகுதி வரையான நிலுவைச் சம்பளத்தை வழங்குவதாக எழுத்துமூலம் உத்தரவாதமளிக்க வேண்டும் என தொழிற்சங்கத் தலைவர்கள் சம்மேளனத்திற்கு அறிவித்திருப்பதாக தெரியவருகிறது.

பொதுவெளியைப் பொறுத்தவரை நியாயமான சம்பள உயர்வு ஆயிரத்திலிருந்து 1281 ரூபா வரை அவசியம் என்னும் கருதுகோளை முன்வைக்கின்றது. ஆனால் கிடைக்கும் தகவல்களின்படி சம்பள அதிகரிப்பு ஆயிரத்தை எட்டப்போவதில்லை என்று தெரிகின்றது. இதேநேரம் அற்பசொற்ப தொகையாக வெறும் 50, 60 ரூபாய் அதிகரிப்பினை இம்முறை தொழிலாளர் வர்க்கம் ஏற்றுக் கொள்ளத்தயாரில்லை என்பதையே முன்னெச்சரிப்பு நடவடிக்கையான கவனயீர்ப்புப் போராட்டங்கள் உணர்த்துகின்றன. இ.தொ.கா. இதை விமர்சித்தாலும் கூட கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தை மேசையில் இவ்வாறான போராட்டங்களைத் தமது தரப்பு வாதங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதே யதார்த்தம். ஏனெனில் கம்பனி தரப்பு வழமைபோல தமது சாகசங்களைக் காட்டி கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொள்ளவே முயற்சிக்கும்.

இதுவரை காலமும் இதுவே நடந்தது. ஆனால் இனி அப்படி செய்துவிட்டுத் தப்பிவிட முடியாத சூழ்நிலை மலையகத்தில் உருவாகியுள்ளது. குறைந்தத் தொகைக்கு கையொப்பமிட்டுவிட்டு வெளியே வந்து வேறு யார்மீதாவது பழியைப்போட இந்தத் தொழிற்சங்கங்களால் இயலாது போகும். இச்சம்பளம் அதிகரிப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இ.தொ.கா. மட்டுமே இருக்கின்றது என்பதை அதன் உறுதிமொழிகள் சுட்டுகின்றன. இணக்கம் காணப்படும் தொகையைப் பொறுத்துத்தான் யார் வகையாகச் சிக்கிக் கொள்ளப் போகின்றார்கள் என்பது அமையும்.

கடந்தாண்டுகளை விட இவ்வாண்டு பொருளாதாரச் சுமை அதிகரிப்பு என்பது மலையக மக்களை கதிகலங்க வைத்துக்கொண்டிருக்கின்றது. இமை மூடித்திறக்குமுன் அதன்விலை எகிறிவிடுமென்ற அச்சம் பாடாய்ப்படுத்துகிறது. எரிபொருள் விலை உயர்வால் எல்லாவித அத்தியாவசியப்பொருட்கள் விலையும் ஏற்றம் கண்டுள்ளன. போக்குவரத்துச் செலவைக் காரணம் காட்டி கண்டபடி பொருட்களின் விலை தீர்மானிக்கப்படுவதால் அரசின் கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் என்பது கைக்குக் கிட்டாத சமாச்சாரமாகிப் போயுள்ளது. எரிபொருள் விலை ஏற்றம் பஸ், ரயில் பயணக்கட்டண அதிகரிப்பு எரிவாயு விலைக் கூட்டல் என்பன சாமானியரை சகட்டு மேனிக்குப் பாதிக்கின்றன. உணவுப் பண்டங்கள் தன்னிச்சையாக விலை அதிகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. 15 ரூபாவுக்கு விற்கப்பட்ட தேனீர் 20 ரூபாவாக உயர்ந்துள்ளது. எதிர்வரும் நாட்கள் இன்னும் நுகர்வோருக்கு நெருக்கடி தருவதாக அமையலாமென ஊடகங்கள் எச்சரிக்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் விலை அதிகரிக்கப்படும் அறிகுறிகள் தெரிகின்றன. இதனால் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களான சீனி, மா, எரிவாயு விலைகள் மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் எழலாம் என்னும் ஐயம் தோன்றியுள்ளது. இதனால் பெருந்தோட்ட மக்களே பெரும் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறார்கள்.

ஏனெனில் பிற துறைசார் ஊழியர்கள் விலைவாசி அதிகரிப்புக்கேற்ப வாழ்க்கைச்செலவு புள்ளி கொடுப்பனவுகளை பெறும் உரிமையைக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஏற்பாடு பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களுக்கு இப்போது இல்லை. 1992 இல் அரசு துறை பாரமரிப்பின் கீழ் இருந்த பெருந்தோட்டங்கள் யாவும் தனியார் மயப்படுத்தப்பட்டன. இதனையடுத்து சம்பள நிர்ணய சபை மூலம் சம்பள அதிகரிப்பு வழங்கப்பட்ட முறைமை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. இதனால் வாழ்க்கைச் செலவு புள்ளிக் கொடுப்பனவுகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன. தோட்ட மக்களின் சம்பள விவகாரம் கூட்டு ஒப்பந்தத்துக்குள் கெண்டுவரப்பட்டது.

இந்தக் கூட்டு ஒப்பந்தம் இதுவரை காலமும் வாழ்க்கைச் செலவு புள்ளியைச் சமாளிக்கும் வண்ணம் சரியான சம்பள உயர்வை வழங்கவே இல்லை. எனவே தான் கூட்டு ஒப்பந்த முறைமைக்கு எதிரான ஒரு உணர்வு தோட்ட மக்களிடம் கிளம்பியுள்ளது. இன்று அரசு ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் 32 ஆயிரம் ரூபாய். தோட்டத் தொழிலாளி ஒருவரின் அடிப்படைச் சம்பளம் வெறும் 500 ரூபாய் மட்டுமே. 1999க்குப் பின் கடந்த 19 வருடங்களில் தோட்டத் தொழிலாளரின் சம்பளம் 399 ரூபாய் மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருடாந்தம் 21 ரூபா சம்பள அதிகரிப்பு மட்டுமே இவர்களுக்கு கிடைத்துள்ளமை அண்மையில் பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில் பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை இரண்டு கோரிக்கைகளையே முன்வைக்க முடியும். முதலாவது நாளுக்கு நாள் அதிகரித்துவரும் விலைவாசி அதிகரிப்பு வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் வேதன உயர்வு வேண்டும். அப்படி இல்லாவிட்டல் அத்தியாவசியப் பொருட்களின் விலையை அதிரடியாகக் குறைக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலையில் விலை குறைப்பு என்பது சாத்தியமானதாக இருக்கப்போவது இல்லை. இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கம் அரசாங்கத்துக்கு ஓர் இக்கட்டான நிலையை எற்படுத்தியிருக்கின்றது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வினாலும், இங்கு ஏற்பட்டுள்ள பதற்றமான வர்த்தக பின்புலம் காரணமாகவும் இலங்கை ரூபாவின் பெறுமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலை தொடருமானால் மேலும் மேலும் பொருட்களின் விலை உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே பொருளியல் வல்லுனர்களின் கருதுகோள் காணப்படுகின்றது. இக்கருது நிலை மெய்ப்பெறும் நிலையில் பெருந்தோட்ட மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டி நேரிடும். இதிலிருந்து விடுபட இவர்களுக்கு எஞ்சியிருப்பது கூட்டு ஒப்பந்தம் மூலம் சம்பள அதிகரிப்புப் பெற்றுத்தரும் வழியே ஆகும். ஆனால் அந்தக்காரியம் உரியமுறையில் ஆகுமா என்பதே இன்று எழுந்துள்ள கேள்வி. வழமைபோல நியாயமான சம்பள அதிகரிப்பை வழங்க கம்பனிதரப்பு இணங்காது போய்விட்டால் அதன் அடுத்த நகர்வு என்னவாக இருக்கப்போகிறது? பேச்சுவார்த்தை தொடரும் என்ற அறிவிப்போடு கடந்த முறைபோன்று கண்துடைப்பிலான இழுத்தடிப்பென்றால் இதை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்ளப் போகின்றார்கள்? கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் வெளியேறி வேறு வழி காணப்போகின்றனவா? என்றெல்லாம் கேள்விகள் இன்று முன்வைக்கப்படுகின்றன.

தமிழ் முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் பங்காளி கட்சி. அதனால் அரசாங்கத்தோடு பேசி சம்பள அதிகரிப்பை வாங்கிக் கொடுக்கலாமே என்று இ.தொ.கா. கூறுகின்றது. உண்மையில் த.மு.கூட்டணி இதுகுறித்து தேர்தல்கால மேடைகளில் பேசியதாக ஞாபகம். கூட்டு ஒப்பந்தம் தோல்வியுறும் பட்சத்தில் த.மு.கூட்டணி இப்படியொரு அழுத்தத்துக்கு தள்ளப்படவே செய்யும்.

இதே நேரம் சம்பள நிர்ணயம் சம்பந்தமாக தாம் ஜனாதிபதியோடு பேசவிருப்பதாக இ.தொ.கா தெரிவித்திருந்தது. மலையக சமூக ஆர்வலர்களின் கேள்வி என்னவெனில் இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து தோட்ட மக்களின் சம்பள அதிகரிப்புப் பற்றி ஆராயவென ஓர் ஆணைக்குழுவை நியமிக்கும்படி அரசாங்கத்துக்கு ஏன் அழுத்தம் கொடுக்க முடியாது? ஏனைய அரசுதுறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அவசர அவசரமாக அதுபற்றி ஆராய ஆணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு சம்பள உயர்வுக்கான பரிந்துரையை வழங்குவதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால் தோட்ட மக்கள் வாட்டமுற்ற நிலையில் போராட்டம் நடத்தினால் எவருமே ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. இதற்குக் கூட்டு ஒப்பந்தமே அடிப்படையில் வைக்கிறது ஆப்பு.

எனவேதான் இம்முறை கூட்டு ஒப்பந்தம் மூலமான சம்பள அதிகரிப்பு சறுக்கினால் இறுக்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் கூட்டு ஒப்பந்த தொழிற்சங்க தரப்புக்கு ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களைப்போல சாக்குப் போக்குகளைச் சொல்லி சமாளிக்கக்கூடிய நிலைமை இன்று இல்லை. ஏனெனில் ஒன்று சம்பளத்தைக் கூட்டு. அல்லது சாமான் விலையைக் குறை என்று முறை வைத்துக் கோரிக்கை எழுப்பத் தலைப்பட்டு விட்டார்கள் தோட்ட மக்கள். தற்போது தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்திட்டம் தொடர்பில் வெளிப்படைத் தன்மை அவசியம் என்பதே பொதுவெளி எதிர்பார்ப்பு. தவிர பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் கூறுவதுபோல தற்போதைய கூட்டு ஒப்பந்த முறைமையைக் கைவிட்டு புதிய முறைமை யொன்றைக் கண்டு பிடிப்பதே சரியானதாக இருக்க முடியும். ஏனெனில் மக்களின் மன உணர்வுகளைப் புரிந்து செயற்படும் பக்குவம் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு வரவேண்டிய காலக்கட்டம் இது.

கடந்த 25 வருடகால பெருந்தோட்டத்துறையின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி உற்பத்தித்திறன் மிக்கதும் வாழ்வாதார மேம்பாடு கொண்டதுமான புத்தெழுச்சி பெற்ற துறையாக இதனை மாற்றியமைப்பது அவசரத் தேவையாக ஆகிவிட்டுள்ளது. இதனை கருத்திற்கொண்டு பெருந்தோட்ட மக்களின் தலையை அழுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார சுமையை இறக்கிவைக்க ஏற்ற வழிவகைகளைத் தேடுவதே சாலச்சிறந்தது.

பன். பாலா

நன்றி - தினகரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates