தற்போது நடந்துமுடிந்துள்ள ஒக்டோபர் 24 கறுப்புச் சட்டைப் போராட்டம் ஆளும்வர்க்கத்தையும் ஏனையோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை சாத்தியபடுத்தியவர்களுக்கு மிகப்பெரும் வாழ்த்துக்கள். அதேவேளை நாம் வாழ்த்துக்களோடும், பரவசத்தோடும் சுருங்கிவிடாத - பெருமிதம், துதிபாடுதல் என்பவை நமது பலவீனங்களை மறைத்துவிடாதபடி ஒரு சுயமதிப்பீடும், சுயவிமர்சனமும் அவசியம். அத்தகைய சுயவிமர்சனம் மட்டுமே நம்மை உரிய வழியில் அடுத்த கட்டத்தை வழிநடத்த உதவும்.
இதனை மலையகத்தின் எழுச்சியாக கொண்டாட முடியும் என்று தோன்றவில்லை. அந்த சொல் ஒரு மிகையானது. அந்த சொல் பெரும் அரசியல் உள்ளடக்கம் சார்ந்தது. ஆனால் இது ஒரு நல்ல தொடக்கம். இளைஞர்கள் பலர் இப்படி ஒன்றுக்கு முன்வந்திருப்பது நம்பிக்கை தருகிறது. பல இளைஞர்கள் பொறுப்புடனும் பிரக்ஞையுடன் நடந்துகொண்டதாயும் பலர் பதிவு செய்திருக்கிறார்கள்.
தன்னெழுச்சியான இயக்கம் என்றால் எந்த அமைப்பும் அறைகூவல் விடுக்காமல், பெருமளவு திட்டமிட்டதாகவும் இல்லாமல் நடக்கும் இயக்கம் என்று பொதுவாக எடுத்துக் கொள்ளலாம். தன்னெழுச்சி இயக்கம் எதற்காக வேண்டுமானாலும் நடக்கலாம். வர்க்க, சமூக, பண்பாட்டு பிரச்னைகள் அல்லது பொதுப் பிரச்னைகளை ஒட்டி உருவாகும் தன்னெழுச்சி இயக்கங்களை எவ்வாறு அணுகுவது என்பதை ஆய்ந்து நோக்குவது இன்றைய தேவை.
கடந்த 5 ஆண்டுகளுக்குள் மாத்திரம் மலையகத்தில் பல்வேறு இளைஞர் அமைப்புகளும், பண்பாட்டு அமைப்புகளும், அரசியல் அமைப்புகளும் தொடங்கப்பட்டிருக்கின்றன. அதுபோல மலையகத்துக்கான ஊடகங்களும், ஏற்கெனவே இருந்த ஊடகங்களில் மலையகத்துக்கான இடமும் சற்று பெருகியிருக்கின்றன. மலையகத்தின் கல்வி நிலையும் கூட முன்னேற்றம் கண்டிருக்கிறது. அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் மலையகத்தின் நலன்புரி சேவைத்திட்டங்கள் விரிவாகியிருக்கின்றன. இவை அனைத்தும் மலையகத்தின் விடிவுக்கு வலு சேர்க்கக் கூடியவை தான்.
அதே வேளை தீர்க்கப்படாது இருக்கின்ற பிரச்சினைகள் பெருந்தொகை. தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை அவற்றில் பிரதானமானது.
தன்னெழுச்சி அனுபவங்கள்
மக்களின் தன்னெழுச்சி சதா காலமும் இருந்துவிடுவதில்லை. அது அவ்வப்போது தான் அரிதாக வெளிப்படும். அதனை சரியாக இனங்கண்டு உரிய வகையில் அங்கீகரித்து, ஒருமுகப்படுத்தி, அரசியல் திசைவழி கொடுத்து, கருத்தேற்றி, ஆதரவு சக்திகளை திரட்டி முன்னேடுக்கப்பட வேண்டிய ஒன்று. அப்படியான தன்னெழுச்சியை கிளர்ச்சியாகவும், போராட்டமாகவும், முன்னெடுக்கும் தார்மீக சுயசக்தியை பலப்படுத்தும் பலமும் தகுதியும் இன்று யாருக்கு இருக்கிறது?
தன்னெழுச்சி நமக்கு புதியதல்ல. உலகம் முழுதும், வரலாறு நெடுகிலும் தன்னெழுச்சியாக மக்கள் வீதியில் இறங்கியிருக்கின்றனர். இது தவிர்க்க முடியாதது. சிக்கலான சூழல் காரணமாக மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்தியை, எதிர்ப்பு உணர்வை, இத்தகைய தன்னெழுச்சி பிரதிபலிக்கிறது.
தன்னெழுச்சி போராட்டங்களை அதன் சகல பரிமாணங்களுடனும் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. தன்னெழுச்சி என்பதால், ஏதோ தானாக (chance) நடந்து விட்டது; அது ஒரு விபத்து என்று பார்த்துவிடக் கூடாது. தற்செயல் என்பதற்கும், கட்டாயமான உந்துதல் அல்லது தேவை என்பதற்கும் (chance and necessity) இயக்கவியல் உறவு இருக்கிறது என்று எங்கல்ஸ் கூறுகிறார். சின்னச் சின்ன, முக்கியமற்றதாகத் தோற்றமளிக்கும் அளவு ரீதியான மாற்றங்கள் சேர்ந்து கொண்டே வந்து, ஒரு கட்டத்தில் பாய்ச்சலான குணாம்ச மாற்றமாக உருமாறும். மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்புக்கும் அரசின் கொள்கைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்து கொண்டே இருக்கின்றன. பலவற்றில் ஏற்படும் அதிருப்தியும், கோபமும் பல்வேறு காரணங்களால் மட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றன. சகிக்கப்படுகின்றன. ஒரு கட்டத்தில், வேறு வழியில்லை; இனியும் பொறுக்க முடியாது என்ற நிலை (necessity) உருவாகிறது, அப்போது ஒரு சின்ன விரிசல் கூட தன்னெழுச்சியாக வெடிக்கும்.
இத்தகைய தன்னெழுச்சிக் காலங்களில் மக்கள் கொடுக்கும் கால அவகாசம் குறைந்ததே. அந்தக் கால எல்லைக்குள் அதனை உரிய அரசியல் கிளர்ச்சியாக மாற்றியமைப்பது எளிமையான காரியம் இல்லை. குறைந்தபட்சம் தீவிர பிரக்ஞை உள்ள சக்தியால் மாத்திரமே அதனை உரிய முறையில், உரிய காலத்துக்குள் மாற்றியமைக்க முடியும். அத்தகைய சக்தி இன்று நம்மிடம் இல்லை என்பது அப்பட்டமான உண்மை. கடந்த கால அரசியல் தலைமைகள் அந்த ஓர்மத்தை நலமடித்து வைத்திருந்தார்கள்.
"என்ன செய்ய வேண்டும்?"
தன்னெழுச்சி மனநிலையைப் பற்றி “என்ன செய்ய வேண்டும்?” என்கிற நூலில் லெனின் விரிவாக விளக்குகிறார்.
தன்னெழுச்சியைத் துதிபாடி, அதனிடம் சரணாகதி அடைவது உதவாது எனவும் அவர் வலுவாக எச்சரிக்கிறார். தொழிற்சங்கத் தலைவர்களின் பிடியிலிருந்து, தொழிலாளிகள் “விடுதலை” பெற்று, தங்கள் விதியைத் தாங்களே கையில் எடுத்துக் கொண்டார்கள் என்பது போன்று முன்வைக்கப்பட்ட கருத்தாக்கங்களை விமர்சிக்கிறார். தொழிலாளிகளுக்கு புரட்சிகர அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது; அதை உணராமல், தன்னெழுச்சியான பொருளாதாரவாதப் போராட்டத்துடன் நிறுத்திக் கொள்ளும் கண்ணோட்டத்தை லெனின் கடுமையாக எதிர்க்கிறார். இந்த மிக ஆரம்ப கட்ட உணர்வு மட்டத்தை உயர்த்தி, புரட்சிகர அரசியல் உணர்வைத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊட்ட வேண்டும்; இது தொழிற்சங்கங்களால் செய்ய இயலாது, அவற்றுக்கு ஓர் எல்லை உண்டு. தொழிலாளிகளின் பொருளாதார நலனைப் பாதுகாப்பதே அவற்றின் முக்கிய நோக்கம். எனவே அரசியல் உணர்வூட்டும் பணி வெளியிலிருந்து வர வேண்டும் என்று தொழிலாளி வர்க்கக் கட்சியின் (கம்யூனிஸ்ட் கட்சியின்) அவசியத்தையும், அதற்கான கோட்பாடுகளையும் லெனின் முன் வைக்கிறார்.
இலங்கையின் வரலாற்றில் மாபெரும் தொழிலாளர் போராட்டமாக கருதப்படுவது 1960 ஓகஸ்ட் 12 ஹர்த்தால் போராட்டம். நாடளவில் நடத்தப்பட்ட அந்த ஒரே நாள் போராட்டம் ஆட்சியையே கவிழ்த்தியது. அவர்கள் அந்தப் போராட்டத் தயாரிப்புக்கு எடுத்துக்கொண்ட காலம் நான்கே வாரங்கள் தான். இந்த நான்கு வாரங்களுக்குள் பல்வேறு கூட்டங்கள், பேச்சுவார்த்தைகள், திட்டமிடல்கள், தயாரிப்புகள் என நடத்தினார்கள். வெகுஜன கிளர்ச்சிக் கொதிநிலையை தக்கவைத்துக்கொண்டிருந்தார்கள். அதை கலக உணர்வு மேலிடும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை நடத்தினார்கள். ஆட்சியை உடனடியாகவே கைப்பற்றும் அளவுக்கு இடதுசாரிகளுக்கு பலம் இருந்தது. அவர்கள் அந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விட்டுவிட்டார்கள் என்றும் மக்கள் தயாராக இருந்தும் தலைமை கொடுக்க இடதுசாரிகள் தயாராக இருக்கவில்லை என்றும் இன்று வரை இடதுசாரித் தலைமைகள் மீது குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
வரலாறு என்பது ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் நினைவுக் கொண்டாட்டமல்ல. அவை படிப்பினைகள். 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நாம் இந்த அனுபவத்தில் கற்றுக்கொண்டது தான் என்ன?
எழுச்சியிலிருந்து கிளர்ச்சிக்கு
ஆசியாவில் பெரும் தொழிற்சங்கங்களில் ஒன்றாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கருதப்பட்ட காலத்தில் கூட குறிப்பிடும்படியான பாரிய தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதில்லை. ஆனால் இலங்கை ஆட்சியாளர்கள் மலையகத் தொழிலாளர்களின் பலத்துக்கு பயந்தே இருந்தார்கள். அந்த பயம் தொழிற்சங்க பலத்துக்கும், வாக்கு பலத்துக்கும் தான்.
ஆனால் மலையகத் தொழிலாளர்களை இ.தொ.கா தலைமை வெறும் தொழிற்சங்கமாக குறுக்கிவைத்திருந்தது. வெறும் தனிபட்ட அரசியல் லாபங்களுக்கு அரசியல் உரிமைகளை விட்டுக்கொடுத்தார்கள். காலத்துக்கு காலம் அற்ப சலுகைகளுக்கு சமரசம் செய்துகொண்டும், மக்களுக்கு சிறிய சிறிய வெற்றிகளைக் காண்பித்தும் அடிப்படைத் தேவைகளை ஒத்திவைக்க உடந்தையானார்கள். அதன் விளைவுகளை அடுத்தடுத்த மலையகத் தலைமுறைகளும் அனுபவிக்கிறது. தொழிற்சங்கங்கள் மலையகத்தில் அரசியல் விழிப்புணர்வூட்டும் இயக்கங்களாக வளர்த்தெடுக்கப்படவில்லை என்பது கசப்பான உண்மை.
அதையும் மீறி சுயமாக வளர்ந்த மக்கள் இன்று தன்னெழுச்சியுடன் நிமிர்கின்ற போதும் அதற்கு உரிய தலைமை கொடுத்து இயக்க, வழிகாட்ட எவரும் மிச்சம் வைக்கப்படவில்லை.
மலையகத்தில் இப்போது ஏற்பட்டிருக்கும் உணர்ச்சிபூர்வமான தன்னெழுச்சி அரசியல் விழிப்புணர்ச்சியாக மாற்றமுறும் காலத்தில் தான் ஆளும்வர்க்கத்துக்கு சிம்மசொப்பனமாக ஆக முடியும். பிரக்ஞையான கிளர்ச்சியாக உருவெடுக்க முடியும். நமது பலத்தை நிரூபிக்க முடியும். நீதியான கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்.
தமிழகத்தில் மெரினாவில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் தனியொரு அமைப்பால் முன்னெடுக்கப்படாதது தான். அங்கிருந்த பல சக்திகளும் தத்தமது நிகழ்ச்சிநிரலை பிரயோகிக்கவில்லை. ஒருமித்த குரலுக்காக ஒன்றுபட்டார்கள். அது வெற்றிபெற்றதற்கு பல்வேறு காரணங்கள் இருக்க முடியும். ஆனால் அவர்கள் பெருவாரி தமிழர் சனத்தொகையைக் கொண்ட மக்கள் கூட்டத்தினர் என்பது முக்கியமானது. காலிமுகத்திடல் மெரீனாவோடு ஒப்பிடுகையில் மிகச் சிறியதே. அதில் மிகச் சிறிய பகுதிக்குள் அடக்கிவிடக்கூடிய அளவில் தான் ஒக்டோபர் 24 போராட்டத்தில் அணிதிரட்ட முடிந்திருக்கிறது. மலையக இளைஞர்களே அணிதிரளுங்கள் என்கிற கோஷம் மட்டுமே இதற்குப் போதாது என்கிற உண்மையை நாம் உணரவேண்டும். இலங்கையில் பிரதான நான்கு இனங்களில் நாம் நான்காவது இருக்கும் ஒரு இனமே. நமது புவியியல் இருப்பும் கொழும்பல்ல. நாம் மட்டுமன்றி இனம், மதம், பால், வயது வித்தியாசமின்றி ஆதரவாளர்களைத் திரட்ட வேண்டியவர்கள் நாங்கள். பெரும் மக்கள் சக்தியை ஆதரவு சக்திகளாக திரட்டும் அவசியமும் இத்தகையை போராட்டங்களுக்கு உண்டு. மலையகத்தின் பிரதான தொழிற்படையான பெண்களின் பங்குபற்றலை ஏன் ஊக்குவிக்கவில்லை, உருவாக்கவில்லை என்கிற கேள்விகளும் தவிர்க்கமுடியாதவை.
கடந்த காலங்களில் மலையகத்தில் தொழிலாளர் பிரச்சினைகளை வெகுஜனமயப்படுத்தி அணிதிரட்டுவதில் கடும் பாதுகாப்பு பிரச்சினைகள் இருந்தன. சாதாரண ஒரு சிறிய அளவிலான ஆர்ப்பாட்டத்தையோ, ஒன்று கூடலையோ செய்வதை சட்டங்கள் தடுத்தன. யுத்தத்தைக் காரணம் காட்டி அரசு இரும்புக்கரம் கொண்டு அவற்றை அடக்கியது. மலையகத்தில் பல இளைஞர்கள் தாம் சந்தேகத்துக்கு உள்ளாவோம், கைதுக்கு உள்ளாவோம் என்கிற பயத்துடன் பொதுவிடயங்களில் மட்டுப்படுத்தியே இயங்கினர்.
சாதாரண சமூக, பண்பாட்டு விடயங்களைக் கூட ஒழுங்குசெய்வதில் நிறைய தயக்கம் இருந்தன. இதனால் மலையகத்தின் தொழிற்சங்கப் பிரச்சினைகள் மட்டுமல்ல பண்பாட்டு வளர்ச்சியும் கூட ஸ்தம்பிதமானது. பின்னடைவை சந்தித்தது.
கருங்காலிகள் ஜாக்கிரதை
வெறும் முகநூல் செல்பிக்காக கூடிக்கலைந்து போகும் ஒன்றாக இது அமைந்துவிடக்கூடாது. ஆளும்வர்க்கமும், முதலாளிமார் சம்மேளனமும், நமது அரசியல் தலைவர்களும் இந்தக் கோரிக்கைகளை அலட்சியம் செய்யும் பட்சத்தில் அல்லது கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அடுத்த என்ன நடவடிக்கை என்பதை யார் முடிவுசெய்வது, அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் முடிவை நடைமுறைப்படுத்த உரிய சக்திகளை முகாமைப்படுத்தி முன்னெடுக்கும் வலிமை உண்டா? அதற்கான வழிகளை உருவாக்கியாயிற்றா? இது வெறும் ஒரு ஆர்ப்பாட்டமாக சுருங்கிவிடப்போகிறதா? அல்லது தொடர் போராட்டமாக முன்னெடுக்கப்படப் போகின்றதா?
நமது சிக்கல்களுக்கு தீர்வு தேடும் நோக்கில் ஆரம்பிக்கப்படும் அமைப்புகள் அலட்சியத்துடன் நடந்துகொள்ளாது முறையான திட்டமிடலுடன், பொறுப்புணர்வுடன் இவற்றை ஒழுங்கமைப்பது முக்கியம். இவை பிசுபிசுத்து சப்பென்று போய்விடச்செய்ய முடியாது.
சுயவிளம்பரத்துக்காகவும், ஆர்வக்கோளாறாலும், தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காகவும், சீசனுக்கு முளைத்து காணாமல் போகும் அமைப்புகளாகவும் இவை சுருங்கிவிடச் செய்ய முடியாது. ஆனால் அத்தகைய சக்திகளும் இதில் இருப்பதை தவிர்க்கவும் முடியாது.
இவை ஒழுங்காக ஒப்பேற்றாவிட்டால் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் சீரியசான எழுச்சிகளுக்கும் மக்களை ஒன்று திரட்டுவது கடினமாகிவிடும். மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது எந்த சீரியசான முன்னெடுப்புகளுக்கும் அவசியமானது.
ஆனால் இது ஒரு நல்ல ஆரம்பம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...