Headlines News :
முகப்பு » , , » இயக்க வாழ்வில் எனது மலையக அனுபவங்கள் - பஷீர் சேகு தாவூத்

இயக்க வாழ்வில் எனது மலையக அனுபவங்கள் - பஷீர் சேகு தாவூத்

தோழர் பஷீர் சேகு தாவூத் அவர்கள் தனது முகநூலில் பகிர்ந்துகொண்ட இந்த வரலாற்றானுபவத்தை நன்றியுடன் மீள இங்கு பதிவு செய்கிறோம்.
1
இற்றைக்கு 33 வருடங்களுக்கு முன்பு 1985 இன் இறுதிக் காலாண்டில் ஒரு நாள், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்துக்கு அண்மையாகப் பரமேஸ்வரா சந்தியில் அமைந்திருந்த முடி திருத்தும் கடையில் எனது தலை மயிரின் வழமையான வடிவத்தை மாற்றியமைக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. நீண்ட தூரம் ஒரு முக்கிய வேலைக்காக பேரூந்தில் போகவேண்டி இயக்கத்தால் பணிக்கப்பட்டிருந்தேன். இக்காலத்தில் நான் ஹுசைன் என்ற பெயரில் ஒரு தேசிய அடையாள அட்டை வைத்திருந்தேன். பஷீர் என்ற பெயரில் உள்ள அடையாள அட்டை பாவிக்காமையால் கிடைக்கும் பாதுகாப்பு முக அடையாளயாத்தால் பறி போய்விடக் கூடாது என்ற அக்கறையில் எனது முடி திருத்த வேலை நடைபெற்றுக்கொண்டிருந்தது.

அப்பிரயாணத்தின் போது என்னை எவரும் அடையாளம் கண்டுகொள்ளாதிருக்கச் செய்யப்பட்ட எளிய முயற்சியை அந்தத் தொழிலாளர் முடித்த அடுத்த நாள் காலை நான் ஹற்றன், மல்லியப்பூ பஜார் நோக்கிப் புறப்பட்டேன்.

மல்லியப்பூ பஜாரில் உள்ள கோயில் ஒன்றில் பாலநடராச ஐயர் என்ற இயற் பெயரைக் கொண்ட, இளையவன் என்ற பெயரில் எழுத்தாளராக அறியப்பட்ட உரும்பராயைச் சேர்ந்த தோழர் சின்ன பாலாவின் மாமா "குருக்களாக" பணியில் இருந்தார். அவரோடு கோயில் அறை ஒன்றில் இயக்கப் பணிகளின் நிமித்தம் சின்ன பாலா தங்கியிருந்தார். இவரோடு இணைந்து செயலாற்றுவதற்காகவே நான் அங்கு சென்றேன். வழியில் எந்தத் தடங்கலும் இன்றிப் போய் பாலாவுடன் இணைந்துகொண்டேன். இரவு வேளைகளில் அவருடனேயே தங்கிக்கொண்டு பகலில் இயக்க வேலைகளில் இருவருமாக ஈடுபட்டோம்.

சில நாட்களில் பாலா, உணவகம் ஒன்றில் கோழிக் கறி சாப்பிடுவதை அவரது ஐயர் மாமா கண்டு விட்டார். அன்றிலிருந்து கோயில் வளவுக்குள் எங்களது கால் படுவதற்கு மட்டுமல்ல, எம்மில் உராய்ந்து செல்லும் குளிர் காற்றுக்கூட கோயிலுக்குள் போக அனுமதிக்கப்படவில்லை. பாலாவின் மிகக் கடுமையான போக்குக் கொண்ட ஐயர் மாமாவினால் உடுப்புப் பைகள் கோயில் எல்லைக்கு அப்பால் கொண்டு வந்து அழுகி முடை நாற்றமெடுக்கும் இறந்த ஏதோ பறவைகளை எறிவது போல தரப்பட்டது. அதுதான் முதன் முதலில் தான் சாப்பிட்ட 'மச்சம்' என்றும், இதற்கு முன்னர் சாப்பிட்டதே இல்லை என்றும், மாமா துரத்தினாலும் பரவாயில்லை கோழிக் கறி மிகவும் சுவையாக இருந்தது என்றும் பின்னொரு நாளில் நாமிருவரும் மட்டக்களப்பில் மலையக நினைவுகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது பாலா நகைச்சுவையாகக் கூறினார்.
2
1986 இல் மீண்டும் மக்களை விழிப்பூட்டும் வேலைத்திட்டங்களுக்காகவும், இயக்கம் தொடர்பாக மலையகத் தமிழ் இளைஞர்களுக்குள் பிரச்சாரங்களை மேற்கொண்டு அணிதிரட்டுவதற்காகவும் மலையகத்துக்குச் செல்லவேண்டி ஏற்பட்டது.

இம்முறை நுவரெலிவை இலக்கு வைத்த பயணத்துக்குத் தயாரானேன். 1977 இல் மலையகத்து தமிழர்களை இலக்கு வைத்து கலவரம் என்ற பெயரில் நடாத்தப்பட்ட தாக்குதல்களினாலும், கொள்ளையினாலும் பாதிக்கப்பட்டு செங்கலடிக்கு வந்தார் சிவா. இவர் அங்கு எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்னாலுள்ள கடைத் தொகுதியில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து " லவினி மெடிக்கல்" என்ற பெயரில் ஒரு பார்மஸியைத் திறந்து வியாரம் செய்து வந்தார்.இவருடன் அப்பிரதேச ஈரோஸ் போராளிகள் நட்பை ஏற்படுத்திப் பழகி வந்தனர். இந்த நட்பு வட்டத்துக்குள் நானும் ஒருவனாயிருந்தேன். எங்கள் கருத்துக்களை உள்வாங்கிய சிவா எந்த இழப்புக்கும் தயாரான உறுதி படைத்த ஈரோஸ் அமைப்பின் ஆதரவாளரானார். இவரது கடையின் முன்னால் மறைந்த தியாகத் தோழர்கள் ரமேஷ், வேணு, மனோகரன் மற்றும் இன்னும் மறையாத நான் ஆகியோர் பிரதான வீதியின் இரு புறத்தையும் திரும்பிப பார்த்த வண்ணம் கதைகள் பேசிக் கழித்திருப்போம். ஏதாவது பாதுகாப்புத் தரப்பு வண்டிகள் வந்தால் மெல்ல லவினி மெடிக்கலுக்குள் புகுந்து பின்னால் வேலிகள் பாய்ந்து ஒடி பிள்ளையார் கோயிலுக்குள் தஞ்சமடைந்துவிடுவோம். இவ்வாறான தருணங்களில் கடை முதலாளிக்கு ஆபத்துகள் நிகழும் என்றெண்ணி ஒரு போதும் எம்மைக் கண்டு சிவா முகம் சுழித்தது கிடையாது. ஈரோஸ் மலையகத் தமிழர்களின் விடுதலை பற்றி முதன்மையான அக்கறையைக் கொண்ட அமைப்பு என்பதை சிவா முழுமையாகப் புரிந்திருந்ததே அவரது திடகாத்திரமான ஆதரவுக்குக் காரணமாகும்.

சிரேஷ்ட மலையகத் தோழர் கணேஷ் 1984 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏறாவூரில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் 'தூக்கப்பட்டு' இக்கினியாகலைக்குக் கொண்டு செல்லப்படார். அங்கு சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு, பூசா தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்டார். கணேஷ் தளத்தில் இன்மையால் நான் மலையகத்துக்கு மீண்டும் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது.

நுவரெலியா செல்வதற்கு லவினி சிவாவிடம் உதவி கோரினோம். மனமுவந்த அவர் என்னையும் தோழி சுகிர்தாவையும் தொடரூந்தில் கண்டிக்கு அழைத்துப் போய் அங்கிருந்து பேரூந்தில் நுவரெலியா கொண்டு சேர்த்தார்.

தோழி சுகிர்தா அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த, யாழ் பல்கலைக் கழக விஞ்ஞானப் பட்டதாரியாவார். அந்தக் காலத்தில் பல்கலைக் கழகத்தில் இருந்து பட்டம் பெற்று வெளியேறியவுடன் வேலை வாய்ப்புக் காத்திருக்கும். அதுவும் விஞ்ஞானப் பட்டதாரி என்றால் வெளியேறும் போதே வாயிலில் வந்து நின்று வாய்ப்புகள் அரவணைத்து வரவேற்கும். அனைத்து வாய்ப்புகளையும் உதறிவிட்டு ஈழப் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்ட சுகிர்தா, பெரும் மனிதாபிமானியும், கொள்கைப் பற்றுள்ளவரும், புத்திஜீவியுமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக இவர் ஒரு துணிகரமான பெண்ணாகும்.

நாம் மூவரும் தொடரூந்தில் கண்டியை நோக்கிச் செல்கையில் மன்னம்பிட்டியில் தரித்த வண்டிக்குள் அதிரடிப் படையினர் சோதனைக்காக ஏறினர். விசிலையும், புகையையும் ஊதிய தொடரூந்து நகரத் தொடங்கியது. சுகிர்தா அமர்ந்திருந்த இருக்கைக்குப் பக்கத்தில் இடமிருந்த போதும் வெவ்வேறு இடங்களில் அமர்வது பாதுகாப்பாக இருக்குமென்று கருதிய நாங்கள் வெவ்வேறாக அமர்ந்திருந்தோம். நாங்கள் ஒருவருக்கொருவர் தொடர்பில்லாதவர்கள் போல அமர்ந்திருந்தோம்.சிவா மாட்டிக்கொள்ளக் கூடாது என்பதில் நாமிருவரும் கவனமாக இருந்தோம்.

அதிரடிப் படையினரோடு முகமூடி அணிந்த "காட்டிக் கொடுக்கும்" நபரொருவரும் வந்ததைக் கண்ட சுகிர்தா கண்ணைக் காட்டி என்னைத் தன்னருகே அழைத்தார். சுகிர்தாவை யாரும் அடையாளம் காண மாட்டார்கள் முகமூடி அணிந்தவரைக் கண்ணுற்றதும் என்னை முகமூடி அடையாளம் காணக்கூடும் என்று பயந்துதான் ஒரு திடீர் திட்டத்தோடு என்னைத் தன்னருகே வருமாறு சுகிர்தா அழைத்தார் என்பதை அப்போது நான் நினைத்துப் பார்க்கவில்லை. அருகில் சென்ற என்னிடம் " நீங்கள் எனது மடியினுள் முகத்தைப் புதைத்தபடி தூங்குவது போல நடியுங்கள் மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன் " என்று மெல்லக் கூறினார். அப்படியே செய்தேன். சிவா தனது அடையாள அட்டையைக் காண்பித்தார், அவரது நரைத்த மீசையும் அவரைச் சந்தேகப்படாமலாக்கிற்று. எம்மிருவரது இருக்கைகளுக்கருகிலும் சோதனைக்காக வந்தவர்களிடம் 'இவருக்கு சரியான சுகமில்ல நான் பேராதெனிய பெரிய ஆசுபத்திரிக்கு கொண்டு போறன்' என்று சுகிர்தா சொன்னது முகம் புதைத்துக் கிடந்த என் செவிகளில் கேட்டது.சுகிர்தாவின் முகத்தில் இழையோடிய சோகத்தையும், நாத்தழும்பும் பாவத்திலான கதையையும் கேட்ட படையினர் நகர்ந்து விட்டனர். படையினர் ஹபறண நிலையத்தில் இறங்கிய பின்னர் மூவரும் புன்சிரிப்போடு முகங்களை மாறி மாறிப் பார்த்துக் கொண்டோம். இந்நிகழ்வை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன், எண்ணிலடங்கா நன்றிகள் தோழி சுகிர்தா!

எங்களை சிவா நுவரெலியா நகரின் மத்தியில் லேடி மெக்லம்ஸ் வீதியில் அமைந்திருந்த முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வீட்டில் கொண்டு ஒப்படைத்துவிட்டு அவர் கிளம்பி எங்கோ அவருக்குத் தெரிந்த இன்னொருவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
3
தோட்டத் தொழிலாளிகளின் பிள்ளைகள் கற்கும் முன்பள்ளியில் கற்பித்துக் கொண்டிருந்த இவ்வாசிரியைக்கு சொற்ப சம்பளமே கிடைத்தது. ஈரோஸ்காரரின் வழமைக்கிணங்க நாம் தங்கியிருந்த வீட்டுக்காரரைப் பற்றி விசாரிக்கத் தொடங்கினோம். இவரது கணவன் சந்திரமோகன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் முக்கியஸ்தராக இருந்தவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போனார். இறப்பின் பின் மனைவிக்கு காங்கிரஸ் இந்த ஆசிரியைத் தொழிலை வழங்கியிருந்தது. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனுமாக மூன்று பிள்ளைகள் இருந்தனர். மூத்த பெண்ணுக்கு 18 வயதாகவும், இளைய பெண்ணுக்கு 15 வயதாகவும், மகன் அம்மாவுடன் முன் பள்ளிக்குச் செல்லும் சிறுவனாகவும் இருந்தான். தனது சிறிய சம்பளத்தில் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைச் சுமந்திருந்த இந்தத் தாய்க்கு மேலதிக சுமையாக ஒரு தங்கையும், தம்பியும் போய்ச் சேர்ந்திருந்தோம். எவ்வளவு வற்புறுத்தியும் இவ்வாசிரியை எங்களிடம் பணம் பெற்றுக்கொள்ளவே இல்லை. தோட்டமொன்றுக்குச் சொந்தமான வீடு இவர்களால் வாடகைக்கு பெறப்பட்டிருந்தது. அடிக்கடி வீட்டைக் காலி பண்ணுமாறு தொந்தரவு வேறு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். தொழிலாளர் காங்கிரசில் முன்னர் பிரபல்யமான பிரமுகராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து தற்போது விலகி வேறு கட்சி ஒன்றில் மத்திய மாகாண சபை உறுப்பினராக இருக்கும் சதாசிவம் ஐயாவுக்கும் இந்த ஆசிரியையின் கணவருக்கும் இடையில் இருவரும் காங்கிரசில் ஒன்றாக இருந்த காலத்தில் பலத்த போட்டி நிலவியதாக அறிந்தோம்.

லேடி மெக்லம்ஸ் வீதியின் முடக்கில் ஒரு பெரிய வெளி, இந்த வெளியின் மேலே இருக்கும் வானத்தின் பரப்பை மறைக்கும் வல்லமையுடன் கிளைகள் பரப்பிப் பரந்திருந்த நூற்றாண்டு பழமையான புளிய மரத்தின் கீழால் சென்று சில படிகள் ஏறி அந்தப் பழைய இருண்ட இரண்டறை வீட்டுக்குள் நுழைவது அலாதியான அனுபவத்தைத் தந்தது.ஒரு விறகு அடுப்பும் கம்பளிப் போர்வைகளும் அந்த வீட்டில் எமக்கான குளிர்க்காவலர்களாயிருந்தன. வீட்டின் முன்னால் ஒரு இரட்டைக் கழிவறையும்,குளியலறையும் இருந்தன. பல குடும்பங்கள் இவ்விரண்டையும் பயன்படுத்தின. 1986 ஏப்பிரல் 17 ஆம் திகதி காலையில் அந்தக் குழியலறைகளையும், கழிவறைகளையும் தீவிரமாகத் துப்பரவு செய்து கொண்டிருந்தேன். வெளியில் வந்து இதனைக் கண்ட சுகிர்தா என்ன இன்றைக்கு தீவிரமான சுத்திகரிப்புத் தொழிலாளராக மாறிவிட்டீர்கள் என்று கேட்டார். ஆமாம் எனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறேன் என்று பதிலிறுத்தேன். அன்று எனது 26 ஆவது பிறந்தநாள் பிறந்திருந்தது.

நாம் தங்கியிருந்த இந்த வீட்டின் பின்புறத்தால் இறங்கி மேலே செல்லும் ஒற்றையடிப் பாதையால் ஏறினால் வெகு தூரத்தில் உள்ள மலை உச்சியில் அரச ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் கோபுரம் அமைந்துள்ளது. மூச்சிரைக்க அக்கோபுரத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். இக்கோபுரத்தை ஈரோஸ் குண்டு வைத்துத் தகர்த்திருந்தது. இதில் மலையக மூத்த தோழர் கிருஷ்ணனும் பங்குபற்றியிருந்தார். இந்த தாக்குதல் நடந்து சில நாட்களில் தாக்குதல் பற்றிய வீரப் பிரதாபங்களை தோழர் கிருஷ்ணன் நுவரெலியா நகருக்குள் கொட்டித் தீர்த்தமையால் கைது செய்யப்பட்டார். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த பொது மன்னிப்பினால் அவர் விடுதலையானார். இப்போது இவர் கடும் நோய்வாய்ப்பட்டவராக தனிமையிலும் வறுமையிலும் உழல்வதாக அறிகிறேன். இவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் வேலைகள் தோழர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. 

தங்கிய வீட்டுக்கு அருகாமையில் புளியமரத்துக்கு பக்கவாட்டில் சற்று உயரமான மேட்டில் ஒர் அகலமான பெரிய மாடிகளற்ற தள வீடு இருந்தது. இந்த வீட்டின் உரிமையாளர் மறைந்த முன்னாள் அமைச்சர் எம். எச் முஹம்மத் ஆவார். நாம் நுவரெலியாவில் இருந்த காலத்தில் இவ்வீட்டை வாடகைக்கு எடுத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அலுவலகம் நடாத்திக்கொண்டிருந்தது. அன்றைய காலகட்டத்தில் இவ்வலுவலகத்தின் பொறுப்பாளராக திரு சதாசிவம் இருந்தார். நாங்கள் அந்தக் காரியாலயத்துள் நுழைந்து அங்கு வேலை செய்த இளைஞர்கள் சிலரை நண்பர்களாக்கிக்கொண்டோம். நாட்போக்கில் அரசியல் வகுப்பெடுத்து அவர்களைத் தோழர்களாக்கி ஈரோஸ் உறுப்பினர்களாக உள்ளீர்த்தோம். பின்னென்ன, இரவு வேளைகளில் எனது உறக்கம் இந்த அலுவலகத்தில் இருந்த பெரிய மேசையின் மீதுதான் கழிந்தது. சுகிர்தா ஆசிரியை வீட்டில் தங்குவது தொடர்ந்தது. அங்கு வேலை செய்த தோழர்கள் ஓரிருவர் என்னோடு கூடவே தங்குவர். இவர்கள் இரவில் நெய் பூசி சுட்டுத் தந்த கோதுமை ரொட்டி போல் சுவையுள்ள ரொட்டியை நான் இன்று வரை வேறெங்கும் உண்டதில்லை. காலையில் எழுந்து ஆசிரியையின் வீட்டுக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துக் குளித்துவிட்டு தோட்டங்களுக்கு ஏறத்தொடங்கி விடுவேன். இங்கு பிடித்த எனக்குப் பிடித்தமான தோழர்கள் நுவரெலியாவில் உள்ள நிறையத் தோட்டங்களுக்கு என்னை அழைத்துச் சென்று இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் வகுப்புகள் எடுக்கப் பெருந்துணை புரிந்தனர். சுகிர்தாவைத் தோட்டப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதில்லை. தோட்டங்களைத் தெரிந்து கொண்டோம், அங்கெல்லாம் போகும் வழி தெரிந்து கொண்டோம், பலரை அமைப்பின் உறுப்பினர்களாக்கினோம், எமக்குத் தெரிந்தவர்களும் எம்மைத் தெரிந்தவர்களும் - எமது கொள்கைகளைப் புரிந்தவர்களும் பெருகினர், ஒருகட்ட வேலையைப் பூர்த்தி செய்துவிட்டு பதுளையூடாக அம்பாறை வந்து அக்கரைப்பற்றை அடைந்தோம்.
4
1977 இல் டெவன் தோட்டத்தை நட்சாத் திட்டத்திற்காக இல்லாமல் செய்ய அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்ட போது, இதனை எதிர்த்து ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் போராட்டத்தில் குதித்தனர். இப்போராட்டத்தில் தீவிர பங்கெடுத்த வட்டகொட ஒக்ஸ்போர்ட் தோட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவணுலட்சுமணன் பொலிசாரினால் மே மாதம் 11 ஆம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

மட்டு வந்து ஒரு வாரத்தில், சிவணுலட்சுமணனின் ஒன்பதாவது நினைவு தினம் தொடர்பான மக்கள் வேலைத் திட்டத்தினை மேற்கொள்வதற்காக மீண்டும் நுவரெலியா செல்லுமாறு இயக்கத்தால் பணிக்கப்பட்டேன்.

படுவான்கரைப் பாவற்கொடிச் சேனையில் இருந்து அக்கரைப்பற்றினூடாக அம்பாறை போய் பதுளையில் இறங்கி, அங்கிருந்து நுவரெலியா போகும் நோக்கோடு வந்த வழிப் பயணம் தொடங்கிற்று.

அக்ரைப்பற்றூரைச் சேர்ந்த ஈரோஸ் ஆதரவாளரான சலாஹுதீன் வட்டவிதானையார் அவரது உந்துருளியில் பாவற்கொடிச் சேனை வந்து என்னை ஏற்றிக்கொண்டு அம்பாறை பேருந்து நிலையத்தில் பாதுகாப்பாக இறக்கி பதுளை போகும் பேரூந்தில் அவரது பணத்தில் நுழைவுச் சீட்டும் எடுத்துத் தந்தார். நான் பதுளையூடாக நுவரெலியா சென்று ஆசிரியையின் வீட்டையடைந்தேன்.

இம்முறை பாதுகாப்பு விடயத்தில் அவதானமாக இருக்கவேண்டும் என்ற முன்முடிவோடு செயலாற்றத் தொடங்கினேன். எனது முன்னைய மலையக வேலைத்திட்டங்களில் ஒன்றாக அனைத்து மதத்தலங்களுக்கும் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தேன். ஒரு நாள் நுவரெலிய நகரப் பள்ளிவாயிலிலின் கவுழில் மிகவும் குளிரான நீரில் வுழூஉ செயது லுகர் தொழுகையை நிறைவேற்றிய பின் புவாத் என்ற ஒருவரை சந்தித்து நண்பராக்கிக் கொண்டேன். இவர் ஐ.தே. கட்சியின் தொழிற்சங்கமான ஐக்கிய தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் நுவரெலியக் காரியாலயத்தில் இலிகிதராக வேலை செய்து கொண்டிருந்தார்.அப்போது இம்மாவட்டக் காரியாலயத்தின் பொறுப்பாளராக முன்னாள் பிரதியமைச்சர் புத்திரசிகாமணி இருந்தார். நான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் தொழிற்சங்கக் காரியாலயத்தைப் பயன்படுத்திய போது அதன் பொறுப்பாளராக இருந்த சதாசிவத்துக்கோ, புவாத்துடனான தொடர்பு பற்றி புத்திர சிகாமணிக்கோ தெரியாதவாறே காய்களை நகர்த்தினேன். ஆனால் மலையகத்தில் நடமாடிய காலத்தில் பாதுகாப்பின் நிமித்தம் அமைச்சர் தொண்டமானின் புகைப்படத்தை எனது சட்டைப் பைக்குள் வைத்தவனாகவே நடமாடினேன்.அடிக்கடி புவாத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து உறவாடத் தவறவில்லை.
5
மட்டக்களப்பிலிருந்து புறப்படும் போது சிவணு லட்சுமணனின் நினைவாக மக்களை விழிப்பூட்டும் வகையிலான சுவரொட்டி வாசகங்களை தோழர்களோடு கலந்து வடிவமைத்து அரபு எழுத்துக்களில் தமிழ் கருத்துப்பட எழுதி வைத்துக்கொண்டேன்.

நுவரெலியாவை அடைந்தவுடன்
முன்னைய தொடர்புகளினால் கிடைத்த தோழர்களினூடாக மே 11 சிவணுலட்சுமணனின் நினைவுச் சுவரொட்டிகளைத் தமிழில் தயாரித்தேன். 63 தோட்டங்களில் நானும் தோழர்களும் ஏறி இறங்கி சுவரொட்டிகளை ஒட்டினோம். அடுத்த நாள் காலை தோழர்கள் எல்லோரும் முதல்நாள் இரவு நடந்தவை எவையும் தெரியாதவர்களாக நடித்து அவரவர் வேலைகளுக்குத் திரும்பினோம். நான் ஓர் அப்பாவி சுற்றுலாக்காரனாக புவாத்தின் காரியாலயத்துக்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பகல் போசனத்துக்கான நேரம் நெருங்கியது.கீழே இருந்த ஒரு முஸ்லிம் உணவகத்துக்குச் செல்வோம் என்று கூறி என்னை அழைத்துக்கொண்டு புவாத் இறங்கினார். நாமிருவரும் போகும்போது வெள்ளை உடையணிந்த திடகாத்திரமான இருவர் எம்மைப் பின் தொடர்வதை அவதானித்தேன். எதுவுமே தெரியாத 'பச்சப்புள்ள' புவாத் உணவகத்தினுள் சென்று அமர்ந்து இரண்டு சோற்றுச் சாப்பாட்டுகளைக் கொண்டு வருமாறு பணித்தார். நான் கூர் உணர்திறனுடனும்,அவதானத்துடனும் புவாத்தின் அருகில் அமர்ந்திருந்தேன். எம்மைக் பின்தொடர்ந்த வாட்டசாட்டமான அந்த இருவரும் உணவகத்தினுள் நுழைந்தனர். கதிரைகளில் அமர்ந்த அவர்கள் ஆளுக்கு ஒரு கால் இறாத்தல் பாணும் கறியும் கொண்டு வருமாறு வேலையாளைப் பணித்தனர். நான் உசாரானேன் பகலுணவுக்காக எவர்தான் காலிறாத்தல் பாண் எடுப்பர்? நிச்சயப்படுத்திக் கொண்டேன், இவர்கள் என்னைப் பின் தொடரும் அரசபடையைச் சேர்ந்த சிவில் உடையில் உலவும் அதிகாரிகளென்று. நான் கழிவறைக்குச் சென்று வருகிறேன் என்று புவாத்திடம் சாக்குச் சொல்லிவிட்டு உணவகத்தின் பின் வழியாக வெளியேறி விரிந்து கிடந்த 'கொல்ப்' மைதானத்தைத் தாண்டி பிரதான வீதியை அடைந்தேன். தங்கிநிருந்த வீட்டையடைந்து பிரயாணப் பையை எடுத்துக்கொண்டு பேரூந்து நிலையத்தை நோக்கி நடந்தேன்.
6
வீட்டை அடைந்தவுடன் எனது தடிப்பான மீசையை அவசரமாக மழித்து எறிந்திருந்தேன். பயணப் பையை எடுக்கும் போதே அணிந்திருந்த மேற்சட்டையையும், காற்சட்டையையும் மாற்றி வேறு ஆடைகளை அணிந்து கொண்டேன். என்னை ஓரிரு முறைகள் பார்த்தவர்கள் அடையாளம் காண்பதற்கு சிரமப்பட வேண்டும் என்பதை நோக்காகக் கொண்டே இவ்வாறு செய்தேன்.

பேரூந்து நிலையத்தை அடைந்து பதுளைக்குச் செல்லும் பேரூந்துகளைத் தேடினேன், ஆனால் அந்நேரம் அங்கு பதுளை செல்ல வண்டிகள் எதுவுமிருக்கவில்லை.அங்கு தாமதிக்க விரும்பாமல் சற்றுத் தள்ளியிருக்கும் தனியார் வேன்கள் தரித்திருக்கும் நிலையத்துக்கு நடையைக்கட்டினேன். நான் அவ்விடம் போய்ச் சேரவும் ஒரு பழைய வேன் வெலிமடைக்கு புறப்படவும் சரியாக இருந்தது. எம்பி ஏறி வேனுக்குள் தொங்கினேன். தரிப்பிடத்தில் இருந்து உயரமான மேட்டில் உறுமியபடி ஏறிய வேனின் இயந்திரம் நின்று போனது. சாரதி ச்ச்சிர்ர் என்று மீண்டும் மீண்டும் ஸ்டார்ட் செய்தார். ம்ஹூம் இயந்திரம் இயங்க மறுத்தது. வெளியில் எட்டிப் பார்த்தேன், பேரூந்து நிலைய வளாகத்துக்குள்- உணவகத்துக்கு என் பின்னால் வந்த இருவரும் வேகமாகத் தேடிக்கொண்டிருப்பது தெரிந்தது. உடனே இயங்கினேன். Bபஹின்ட, தள்ளுவக் தாமு (இறங்குங்க தள்ளு ஒன்று போடுவோம்) என்று கூறியவாறு நான் முதலில் இறங்கினேன். தொடர்ந்து அனைவரும் இறங்கினர். பலங்கொண்டமட்டும் வேனைத் தள்ளினோம், ஸ்டார்ட் வந்து விட்டது. எல்லோரும் உள்ளே ஏறியதும் வேன் வெலிமடையை நோக்கிப் பயணித்தது.

வெலிமடையை வந்தடைந்த வேனிலிருந்து இறங்கினேன். பதுளை செல்லவேண்டும் பொது மற்றும் தனியார் வாகனத் தரிப்பிடங்களில் பதுளை செல்ல எந்த வண்டிகளும் இருக்கவில்லை.மாலை ஆறு மணிக்குத்தான் பதுளை செல்லும் வண்டிகள் புறப்படும் என்றார் அங்கிருந்த நேரக்காப்பாளர். இந்தப் பொது இடத்தில் நிற்பது பாதுகாப்புக்கு உசிதமல்ல என்று எண்ணியவுடன் வெலிமடையில் இருந்த "சத்தார்ஸ்" என்ற காத்தான்குடி முதலாளிக்குச் சொந்தமான துணிக்கடை நினைவுக்கு வந்தது. இக்கடை பேரூந்து நிலையத்துக்கு அண்மையிலேதான் அமைந்திருந்தது. கடைக்குள் நுழைந்தேன். அங்கிருந்த சிலருக்கு என்னைத் தெரிந்திருந்தது. ஏறாவூரைச் சேர்ந்தவன் என்பதையும் அறிந்திருந்தார்கள். வாங்க.. வாங்க.. என்று அன்புடன் வரவேற்றார்கள். சாப்புட்டீங்களா? சாப்பிடாட்டி வாங்க சாப்மிடலாம் என்று அழைத்தார்கள். வேண்டாம் நான் பகல் சாப்பிட்டுட்டுத்தான் வாறன் என்று பொய் சொன்னேன். பசியா பசி.. சிறு குடலைப் பெருங்குடல் தின்னத் தொடங்கியிருந்த நேரம் அது. ஒரு கோப்பை தேத்தண்ணி தந்தால் குடிப்பேன் என்றேன்.தந்தார்கள், குடித்தேன். பதுளைக்குச் செல்லும் வண்டிக்கான நேரம் நெருங்கும் வரை பாதுகாப்பாகக் கடைக்குள்ளே இருந்துவிட்டு தரிப்பிடம் சென்று அரச பேரூந்தில் ஏறி அமர்ந்து கொண்டேன். சரியாக ஆறுமணிக்கு வண்டி பதுளையை நோக்கிக் கிளம்பிற்று.
7
ஒரு மணி நேரம் வண்டி ஓடியிருக்கும்,திடீர் சோதனைக்காக வெலிமட- பதுளைப் பிரதான வீதியில் பொலிசார் வண்டியை நிறுத்தினர். நுவரெலியாவில் இருந்து ஒரு பயங்கரவாதி தப்பியமையால் இந்த திடீர் சோதனை நிகழ்த்தப்பட்டது.

வீதியோரத்தில் தனி நபர் வரிசை வகுக்கப்பட்டிருந்தது." அனைவரும் ஒவ்வொருவராக பிரயாணப் பைகளைத் திறந்தவாறு அடையாள அட்டைகளை கையிலேந்திக்கொண்டு தனியாளாக வரிசையில்" வருமாறு கேட்கப்பட்டோம்.என்னைப் பிடித்தால் துப்பாக்கியைப் பறித்துச் சுடுவது என்பது எனது அப்போதைய உறுதியான தீர்மானமாகும்.

ஈரோஸ் 1983 இல் நூரளை சீத்தா எலிய கோவிலின் பின்புறமாக இறங்கி நெடுந்தூரம் பயணித்தால் வெல்லவாய ஊடாக மட்டக்களப்பு உன்னிச்சைக் குளத்தை அடையலாம் என்று வரைபடத்தினூடாக கணிப்பிட்டிருந்தது. இதனடிப்படையில் சீதா எலிய ஊடாக கீழிறங்கி உன்னிச்சையை அடையும் முயற்சியில் தோல்வியே கிடைத்தது. போகும் வழியெங்கும் அனுமதியின்றிக் களவில் மாணிக்கக் கல் தோண்டும் சிங்களவர் நாட்டுத் துப்பாக்கிகளோடு காவலில் இருந்தமையால் எமது முயற்சி கைகூடவில்லை. இது கைகூடியிருந்தால் இந்தக் கஷ்டம் இல்லையே என்று நினைத்துக் கொண்டேன்.
8
வரிசையில் செல்லும் போது சோதனை செய்பவருக்கு அலுப்புத் தட்டும் நேரத்தில்தான் எனது 'தவணை' வரவேண்டும் என்பதற்காக வரிசையில் பின்புறமாக நின்றுகொண்டேன். ஹுசைன் என்ற பெயரிலான தேசிய அடையாள அட்டையை அவசரத்தில் எடுக்க மறந்திருந்தேன். கைவசம் பஷீர் என்ற பெயரிலான எனது ஆசிரியர் அடையாள அட்டையே இருந்தது. நான் சோதனையிடும் பொலிஸ் உத்தியோகத்தரின் முன்னிலைக்கு வந்தேன். அடையாள அட்டையை மூடியபடி கையில் ஏந்தியவனாக பயணப் பையின் ஸிப்பைத் திறந்து காட்டினேன். கையில் இருந்த அரச அடையாள அட்டையைக் கண்ட அதிகாரி அதனை விரித்துப் பார்க்கவில்லை,பையை மட்டும் கிண்டிவிட்டு என்னை அனுப்பிவிட்டார். மீண்டும் அதே பேரூந்தில் பயணம் தொடர்ந்தது.பதுளை பேரூந்து நிலையத்தில் இறங்கினேன். இரவில் பதுளையில் இருந்து கிழக்கிற்குச் செல்ல வாகனங்கள் இல்லை. கடையில் இரவுணவு உண்டேன். எங்கே தங்குவது? பதுளைப் பள்ளிவாயிலுக்குப் போனேன், அங்கே ஒரு பீரங்கி என்னை வரவேற்றது. ஒலி பெருக்கி பாவனையில் இல்லாத காலத்தில் தொழுகைக்கான அழைப்பாக பீரங்கியை வெடிக்க வைப்பார்களாம்.

கால்களைக் கழுவிய பின்னர் பள்ளிக்குள் சென்று ஒரு மூலையில் பயணப் பையைத் தலைக்குக் கீழே வைத்துப் படுத்தேன். சிறிது நேரத்தில் பள்ளி முஅத்தின் வந்து எழுப்பி நீங்கள் எந்த ஊர் என்று கேட்டார். மட்டக்களப்பு போக வாகனமில்லை அதனால் இங்கு தூங்கி காலையில் போகலாம் என்றிருக்கிறேன் என்றேன் அவரிடம். அப்படியா வாங்க மேலே போய் என்னுடைய அறையில் தங்குவோம் என்று அழைத்தார். நானும் மகிழ்வோடு சென்று மனிதனோடு தூங்கினேன். அசதியினாலும், களைப்பினாலும் மெய் மறந்து தூங்கிய என்னை முஅத்தினார் அதிகாலை மூன்றரை மணிக்கு எழுப்பினார். அன்று தலை நோன்பு என்பது என் நினைவில் இருக்கவில்லை. சஹர் உணவு தந்தார், சாப்பிட்டுவிட்டு சுபஹ் கூட்டுத் தொழுகையில் கலந்துகொண்டபின் முஅத்தினாரிடம் விடைபெற்று பேரூந்து தரிப்பிடம் சென்றேன். அம்பாறைக்குச் செல்லும் வண்டியில் ஏறி அமர்ந்தேன். அம்பாறையில் இறங்கி வழமையான பாதுகாப்பான வழியால் பாவற்கொடிச் சேனையை அடைந்தேன்.
9
சில வாரங்களின் பின்னர் அமைப்பாக்கப் பணிகளுக்காக மீண்டும் மலையகப் பயணம், ஆனால் இம்முறை நுவரெலியாவுக்கல்ல கண்டிக்குச் சென்றேன்.

கண்டியைச் சேர்ந்த தோழர் குணசீலன் மட்டக்களப்பு சென்ற் மைக்கல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது ஈரோஸ் அவரைக் கருத்துக்களால் கவ்விப் பிடித்திருந்தது. இவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர், முத்தையா முரளிதரனின் உறவுக்காரர். இவரோடு கண்டியில் உள்ள கந்தானைத் தோட்டத்துக்குச் சென்றேன். இங்குதான் சீலனின் அக்கா குடும்பம் வாழ்ந்துவந்தது. அக்காவின் கணவர் தோட்டத்தில் இலிகிதராக வேலை செய்தார். இவர்களோடு தங்கியிருந்து கொண்டு பல தோட்டங்களுக்கும் சென்று அப்பிரதேசத்தில் அமைப்பாக்க வேலைகளைச் செய்தோம். வகுப்புகள் எடுத்தோம், உறுப்பினர்களைச் சேர்த்தோம். சில வாரங்கள் கடந்தன. நுவரெலியாவில் ஏற்கனவே செய்த வேலைத் திட்டங்கள் முடங்கிக் கிடந்தமை கவலையைத் தந்தாலும் அச்சம் அங்கு செல்வதற்கு தடையாக இருந்தது. இது மட்டுமல்லாமல் மடத்தனமாகச் சென்று மாட்டிக்கொள்ளவும் கூடாது என்ற அவதானமும் நுவரெலியா செல்வதைத் தடுத்தது. எதற்கும் தொழிலாளர் காங்கிரசின் நுவரெலியா அலுவலகத்தில் வேலை செய்யும் தோழர்களோடு தொலைபேசிப் பார்ப்போம் என்று முடிவெடுத்தேன். அலுவலகத்தில் இருந்து முக்கியத்தர்கள் கடமை முடிந்து போன பின்னர், இரவானதும் அங்கு தங்கி இருக்கும் தோழர்களொடு பேசினேன். விலாவாரியாக வினாக்களை எழுப்பினேன். அந்தப் பக்கமோ நான் தங்கியிருந்த வீட்டுக்கோ எந்தப் பாதுகாப்புத் தரப்பினரும் வரவோ விசாரிக்கவோ இல்லை என்று சொன்னார்கள். அடுத்த நாள் காலை புவாத்துடன் தொலைபேசினேன். நான் உணவகத்தில் இருந்து சாப்பிடாமல் போன பின்பு அவர் என்னைத் தேடிப் பார்த்தார். நான் எங்கும் கிடைக்காததால் அவர் சாப்பிட்டு விட்டு அலுவலகம் சென்றாராம். பின்னேரம் நாலு மணி போல் இருவர் வந்து உங்களோடு கடைக்கு சாப்பிட வந்தவர் யார்? அவரது விபரங்களைத் தரவேண்டும் என்று கேட்டார்களாம். அவர் ஒரு தொழிற்சங்க வேலையாக வந்தார், தோட்டங்களில் இருந்து அலுவலகத்துக்கு வந்து இருப்பவர்களுக்கு உணவு வேளை வந்தால் சாப்பாடு கொடுப்பது எமது வழக்கம், அவருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக அழைத்துச் சென்றேன். ஆனால், திடீரென வயிற்று வலி வர அவர் சாப்பிட முடியாமல் போய்விட்டார்.அவரது பெயர் ஷியாம் என்று சொன்னாராம் புவாத். ஆம் மலையகத்தில் நான் ஷியாம் என்ற பெயரில்தான் நடமாடினேன். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி புரிந்த காலமது, ஆளும் கட்சியின் தொழிற்சங்கத்தில் ஏடாகூடமாகப் பேசவும் முடியாது என்பதால் அவர்கள் கதையைக் கேட்டபின் சென்றுவிட்டார்களாம்.
இக்கதைகளை எல்லாம் கேட்டபின் அச்சம் நீங்கி நுவரெலியா போகும் ஆவல் ஓங்கியது.
10
கண்டியில் இருந்து நுவரெலியா சென்றேன். தோழர்களுடன் தொடர்பு கொண்டு விடுபட்ட வேலைகளில் இறங்கினேன். ஆயுதப் பயிற்சி வழங்குவதற்காக ஏற்கனவே சில இளைஞர்களைத் தெரிவு செய்திருந்தோம். இவர்களோடு இன்னும் மேலதிகமாகச் சிலரையும் இணைத்துக் கொண்டு அவர்களைப் பாதுகாப்பாக மட்டக்களப்புக்கு கொண்டு சேர்க்கும் சிக்கலான பொறுப்பை ஏற்றேன். போர்க்கப்பல்களைத் தோற்கடிக்கும் வல்லமையுள்ள தோணிகளைத் தயாரிக்கும் பணி தொடங்கிற்று. இலங்கையில் 200 ஆண்டுகளாக ஒடுக்குமுறைக்கு உட்படும் மலையகத் தமிழர்களே போராடத் தகுதியுள்ள முதன்மையான தேசிய இனமாகும். இவர்களுக்கல்லாமல் வேறு யாருக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது?

18 இளந்தோழர்களுடன் நுவரெலியாவில் இருந்து பேரூந்தில் கண்டி சென்றேன். கண்டியிலிருந்து தொடரூந்தில் மாஹோ சந்தி சென்று மட்டக்களப்பு செல்வது வரையப்படாத திட்டமாகும். கண்டியில் நின்ற தோழர் குணசீலன், நான் அறிவுறுத்தியதற்மைய தொடரூந்துக்கான 19 நுழைவுச் சீட்டுக்களை வாங்கி வைத்திருந்தார். தொடரூந்தில் 19 பேரின் பயணம் தொடங்கிற்று, எமக்கு அச்சம் நீக்கும் மருந்தாகவும், எதிரிகளுக்கு எம்மைப் பற்றிய சந்தேகம் ஏற்படாத வகையிலான உத்தியாகவும் பாட்டும் நடனமுமாகப் பயணித்தோம். குருநாகல் எனும் பெருநகரை அடையும் முன்பான பொல்கஹவெல நிறுத்த நிலையத்தில் வண்டி நின்றது. உடனே துப்பாக்கி ஏந்திய பொலிஸ் படையினர் பலர் கூட்டாக வண்டிக்குள் ஏறினர்.துரிதமாகச் செயற்பட்டு தோழர்களோடு வண்டியைவிட்டு நான் கீழிறங்கினேன். படையினரை ஏமாற்றிய வண்டி கிளம்பிற்று.

நாங்கள் பேரூந்தில் ஏறி குருநாகல் நகரை வந்தடைந்தோம்.அங்கிருந்து வேறொரு பேரூந்தில் பொலன்னறுவை நகருக்கு வந்தோம். எங்களுக்கா படையினரை ஏமாற்றத் தெரியாது? பொலன்னறுவையில் இருந்து மீண்டும் தொடரூந்தில் ஏறி எந்த தொந்தரவுகளுமின்றி மட்டுநகர் நிலையத்துக்கு வந்து சேர்ந்தோம். "கோச்சில எந்த பயங்கரவாதிகளும் பயணிக்கவில்லை."
மட்டக்களப்பு நிலையத்தில் இறங்கி கடவைகளைக் கடந்து பின்னால் செல்லும் பாதைகளூடாக நடந்து பார் வீதியில் இருந்த தோழர் கண்ணனிடம் மலையகத் தோழர்களை "பாரப்படுத்திவிட்டு" நான் நடந்தே மறைந்தேன். தொடரூந்துப் பயணத்தில் எஞ்சின்கள் மாறும், பெட்டிகள் மாறும், இலக்குகள் மட்டுமே மாறாது. இனி மீதியை கண்ணன் பார்த்துக்கொள்வார். கண்ணன் கச்சிதமாகச் செயற்பட்டு மலையகத் தோழர்களை ஆயுதப் பயிற்சிக்காக ஈரோஸின் பாவற்கொடிச்சேனை முகாமுக்கு அனுப்பி வைத்தார்.
11
தோழர் கண்ணன் 1990 இல் ஈரோஸ் தற்காலிகமாகக் கலைக்கப்பட்ட போது செய்வதறியாது திணறினார். ஆனாலும், அவசரமாக சுதாகரித்துக் கொண்டு பரம்பரையினரின் ஏடுகளைக் கையிலேந்தி ஆயுர்வேத வைத்தியத்தைக் கற்றுத் தேர்ந்தார். இலங்கை அரச ஆயுர்வேதக் கூட்டுத்தாபனத்தின் பரீட்சை எழுதி சித்தியடைந்தார்.தமது மனைவியின் குடும்பத்துக்குச் சொந்தமான வளவுக்குள் மூலிகைச் செடிகளை நட்டு பெரிய தோட்டத்தை உருவாக்கி வைத்தியத்தை சமூக சேவையாக செய்யத் தொடங்கினார். ஆங்கில வைத்தியத்தால் கைவிடப்பட்டவர்களை சவாலாக ஏற்று பலரைக் குணமாக்கினார். கிழக்கு முழுக்க அவரது புகழ் பரவியது. தமிழ் முஸ்லிம் மக்கள் அவரைச் சூழ்ந்தனர். நிறைவாக சேவை செய்தார். தம்மைச் சந்திக்க வருவோர்க்கு இயற்கை உணவை உட்கொள்வதற்கான ( Organic food) ஆலோசனைகளையும், மற்றும் மனோவலிமைக்கான உளவளப் பயிற்சிகளையும் வழங்கினார். விரைவில் செத்தும் போனார். மட்டக்களப்பில் கண்ணனின் மகளுக்கூடாக இன்னும் வாழ்கிறது அவரது வைத்தியமும், ஆலோசனைகளும். ஆம் இவரது மகள் இப்போது ஆயுர்வேத வைத்தியராக அப்பாவின் இடத்தை நிரப்பி பணி புரிகிறார்.

நான் மலைகத்தில் இருந்து புரட்சிகரமான செயல்களைப் பயிற்றுவிக்க மட்டக்களப்புக்கு அழைத்து வந்த தோழர் தினேஷ் கண்ணனின் தங்கையை திருமணந்து பார் வீதியில் வாழ்கிறார். விதைகளை நீரூற்றுக் கிடைக்கும் இடத்தில் பதியமிட்டால் அவை முளைக்கத்தானே செய்யும்.வளர்ந்து வளத்தை வழங்கத்தானே செய்யும்.
12
தோழர் கணேஷ் 1986 இறுதிக்காலத்தில் சிறையிலிருந்து விடுதலையாகி வந்துவிட்டார். மீண்டும் கணேஷோடு மலையேறினேன்.1987 ஜனவரி முதல் வாரத்தில் ஹற்றன் சோமசெட் தோட்டத்தின் கணக்கப்பிள்ளையின் வீட்டின் தொடர்பை கணேஷ் நீண்ட காலமாகப் பேணியிருந்தார். இம்முறை கணேஷ் இந்த வீட்டாரை எனக்கு அறிமுகப்படுத்தி என்னையும் அங்கு தங்கவைத்தார். கணேஷ், கண்டி திகண உடிஸ்பத்துவத் தோட்டத்தில் பிறந்து, கலகெதரவில் கல்வி கற்றிருந்தாலும் சிறை செல்வதற்கு முன்பு நுவரெலியா எங்கணும் இயக்க வேலைகள் செய்து பல இடங்களில் தொடர்புகளைப் பேணியிருந்தார். மறைந்த அமைச்சர் சந்திரசேகரம் தொழிலாளர் காங்கிரசில் முக்கிய தொழிற்சங்கப் பிரமுகராக இருக்கையில் கணேஷ் அவருடன் பல தடவைகள் ஈரோஸ் பற்றி விளக்கமாக உரையாடியிருந்தார். சந்திரசேகரத்துக்கு காங்கிரசுடன் முரண்பாடுகள் ஆழப்படத் தொடங்கிய காலத்தில் நான் ஒரு பத்திரிகை நிருபர் என நடித்து அவரை நேர்காணல் கண்டு அவரது நாடியோட்டத்தை அறிந்து ஈரோஸின் பக்கம் ஈர்க்க முயன்றிருக்கிறேன். ஈரோஸின் கொள்கை போட்பாடுகள் பற்றி ஏற்கனவே கணேஷ் மூலம் அனிந்திருந்த இவர் இக்காலத்தில் ஈரோஸ் ஆதரவாளராக மாறியிருந்தார். அவ்வருடம் தொழிலாளர் காங்கிரஸ் நடாத்திய மே தினக் கூட்டத்தில் சந்திரசகரம் தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களோடு அந்தக் கூட்டத்தில் ஆரவாரமான தனித்துவக் கோசங்களை எழுப்பிய வண்ணம் போய் ஏறினார். சூழ்நிலையை அவதானித்து இயக்கத்துக்கு அறிக்கையிடுவதற்காக இக்கூட்டத்துக்கு நானும் போயிருந்தேன். இந்நிகழ்வுக்குப் பின் சந்திரசேகரத்தார் தனிக்கட்சி தொடங்கி விட்டார்.இவரின் வலது கரமாகவும், தத்துவாசிரியருமாக தோழர் காதர் செயற்பட்டார். காதர் தமிழ்நாட்டில் இருந்த போது எழுதிய "இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்துவம்" என்ற மலையக மக்கள் பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புத்தகத்தை ஈரோஸின் பொதுமை வெயீட்டகம் பதிப்பித்து வெளியிட்டிருந்தது. சென்னையில் கண்ணன் என்ற பெயரில் இயங்கிய அக்கரைப்பற்றைச் சேர்ந்த தோழர் யோகராசாவின் அச்செழுத்து தோற்றுப்போகும் அழகிய கையெழுத்தாலான இப்புத்தகப் பிரதியைப் படித்திருக்கிறேன்.

இடையில் சந்திரசேகரம், ஏனோ தெரியவில்லை புளட் இயக்கத்துடன் உறவாடத் தொடங்கினார். இதனால் ஈரோஸ் இவரில் இருந்து கொஞ்சம் விலகி நின்றது. இந்த நிலைமையினால் 1989 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சந்திரசேகரத்தை, தோட்டங்களில் ஆழக் காலூன்றி நின்று அகலமான ஆதரவுத் தளத்தைக் கொண்டிருந்த ஈரோஸ் இரகசியப் பிரச்சாரத்தின் மூலம் தோற்கடித்தது. பின்னர் ஈரோஸ், பாடசாலை அதிபராக இருந்த தனது ஆதரவாளரான மறைந்த இராமலிங்கத்தை தேசியப் பட்டியல் மூலம் மலையக மக்களுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக்கியது.
ஒரு வாரமளவில் சோமசெட் தோட்டத்தில் வேலைத்திட்டங்களில் ஈடுபட்டபின் இரண்டாவது வாரம் கணேசைவிட்டுப் பிரிந்து தனியாக நான் நுவரெலியா வந்தேன். மீண்டும் முன்பள்ளி ஆசிரியையின் வீட்டில் தங்கியிருந்து நுவரெலியாத் தோழர்களோடு இணைந்து வேலைகளில் ஈடுபட்டேன். 1987 ஜனவரி 14 ஆம் நாள் மாலை கடுங்குளிரில் நடுங்கியபடி ஆசிரியையின் வீட்டு விறகு அடுப்பில் கைகளைச் சூடேற்றிக் கொண்டடே இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் அன்றைய மாலைச் செய்தியை கேட்டுக்கொண்டிருந்தேன். செய்திகள் முடிவடைந்ததும், மரண அறிவித்தல் வந்தது. அதில் ஏறாவூரைச் சேர்ந்த மீராசாஹிப் என்பவர் இன்று காலமானார். ஆசிரியரான இவர் செய்த்தூன் பீவியின் கணவரும், ஆயிஷா ரமீஷாவின் தகப்பனும்.... ஆவார் என்று சொல்லப்பட்டது.எனது இரத்த ஒட்டம் அதிகமாயிற்று. மீராசாஹிப், தோழர் றகுமானின் மூத்த சகோதரியின் கணவனாகும்.எனது நெருங்கிய உறவினராகவும், தோழர்களுக்கு உதவுபவராகவும் இருந்த இவர் இளமையில் மரணத்தைத் தழுவியது எனக்கு பெருந்துயரைத் தந்தது. அடுத்த நாள் அதிகாலை புறப்பட்டு வழமையான வழிகளினூடாக வாகனங்களிலும் நடையுமாக ஏறாவூரை அடைந்து, நள்ளிரவில் மரணவீட்டுக்குள் பிரவேசித்தேன். கண்டவுடன் சத்தமிட்டு அழத்தொடங்கிய குடும்பத்தாரை பொறுமையாக இருங்கள் இல்லாவிட்டால் நான் இங்கு வந்திருப்பது அனைவருக்கும் தெரிந்துவிடும். தகவல் பாதுகாப்புப் படையினர் வரை சென்றால் எனக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும் என்று கூறி அவர்களை அமைதி காத்தேன். 

நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் நீங்கள் எங்கிருந்தாலும் வானொலிச் செய்தி கேட்பீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். நடந்த மரணத்தை உங்களுக்கு அறிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் மரண அறிவித்தலை வானொலிக்குக் கொடுத்தோம் என்று அங்கிருந்த தோழர் றகுமான் கூறினார்.

அன்று
அதிகாலை வெளிக்கிட்டு ஈரோஸின் உறுதியான கிராமத் தளமான தன்னாமுனைக்கு நடந்து போய்ச் சேர்ந்தேன். மதியம் தோழர்கள் விஜி, கவி ஆகியோரும் நானும் தோணியில் மட்டக்களப்பு ஆற்றைக் கடந்து படுவான்கரை விளாவட்டவானுக்குச் சென்றோம்.மீராசாஹிப் ஆசிரியர் என் மனதோடே பயணித்தார். மீண்டும் நான் வேலைகளில் தீவிரமாக இறங்க மீராசாஹிப் என் மனதில் இருந்து இறங்கிச் சென்றுவிட்டார். மச்சானின் மரணம் நிகழ்ந்து ஒரு வாரத்தில் றகுமான் அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கிடைத்தது. இச்செய்தி குடும்பத்தினருக்கும் எனக்கும் வேதனையை இரட்டிப்பாக்கியது. பாவற்கொடிச் சேனையில் இருந்து கன்னன்குடா வழியாக மட்டக்களப்பு எருமைத் தீவைத் தோணியில் கடந்து போவது எனது திட்டமாக இருந்தது. ஆனால் நான் ஒரு யமஹா ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிளில் தனியாகப் போவதை அவதானித்த வான்படையின் உலங்கு வானூர்தி தாழப்பறந்து என்னை நோக்கி HMG என்ற பாரிய ஆயுதத்தால் தாக்கியது நான் மோட்டார் சைக்கிளை கீழே கிடத்திவிட்டு ஒரு பனை மரத்தின் கீழே ஒதுங்கினேன். இதனைத் தொலைத் நோக்கியூடாகப் பார்த்த மேலிருந்த சிப்பாய் பனை மரத்தை நோக்கிச் சுட்டார் மரத்தின் வட்டு பிழந்தது. நான் படுத்து உருண்டு அங்கே இருந்த சிறிய கொன்க்றீட் பாலத்தின் கீழே புகுந்துகொண்டேன். சுற்றிவர சரமாரியாகச் சுட்டுவிட்டுப் வட்டமடித்துப் பறந்து சென்றது உலங்கு. நான் வெளியில் வந்து, நகரையடைந்து மீண்டும் ஏறாவூர் வந்தேன்.
13
சில நாட்களில் மூதூர் சோமண்ணையும், நானும், யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தோழர் முருகனும் வெருகல் ஊடாக நடந்து கிளிவெட்டியை அடைந்து அங்கிருந்து மூதூர் சென்றோம். மல்லிகைத் தீவில் ஒரு நாள் இரவு தங்கி அடுத்த நாள் சோமண்ணையின் வழிகாட்டலில் புல்மோட்டைக்குச் சென்று கடல் மார்க்கமாக முல்லைத்தீவு சென்றோம். அங்கே ஈரோஸ் முகாமில் சிறிது நேரம் தரித்த பின் வடமராட்சிக்குப் பயணமான நாம் நடுநிசியில் நெல்லியடியில் இறங்கினோம். அங்குள்ள ஈரோஸ் காரியாலயத்திலிருந்த தோழர்கள் எம்மை வரவேற்று அழைத்துச் சென்றனர். எமக்கு எல்லையில்லாப் பசி எடுத்திருந்தது. காரியாலயத்திலும் அந்நேரம் உண்ண எதுவுமில்லை.எங்கள் நிலையைப் பார்த்த தோழர்கள் சாமம் என்றும் பாராது பக்கத்து வீடுகள் இரண்டைத் தட்டி எழுப்பி சோறும் மீன் குழம்பும் கொண்டு வந்தனர்.இரவுணவை முடித்து தூங்கி நீண்ட நேரமானதனால் அந்த வீடுகளிலும் எஞ்சியிருந்த கொஞ்ச உணவையே வழங்கினார்கள். மீன்குழம்புக்குள் மீன் துண்டுகள் இருக்கவில்லை. குழம்பை சோற்றில் விட்டு சாப்பிட்டோம். குழம்புக்குள் சிதிலமாகி ஒரு பெருவிரல் நகத்தின் பிரமாணத்தில் கிடந்த மீன் சதை எனது உணவுத் தட்டுக்குள் தட்டுப்பட்டது, அதை எடுத்து நுணைத்தேன். ஆஹா அதுபோலொரு சுவையான மீன்குழம்பை இந்த 31 வருடமாக எங்கும் உண்டதில்லை நான். உப்பு, புளி,உறைப்பு எல்லாம் கன கச்சிதமான அளவுத்திட்டத்தோடு பாவிக்கப்பட்டு ஊறி சுவை ததும்பிய ஒரு குழம்பை இன்னும் தேடுகிறேன்! அதிக பசி அந்த சுவைக்கான காரணமாக இருக்கும் என்று நண்பர்கள் பலர் அபிப்பிராயப்பட்டனர்.அப்படியாயின் இதன் பின்பும் அதீத பசியிலிருக்கும் போது மீன் குழம்பும் முழு மீன் துண்டும் உண்டிருக்கிறேன், இதிலெல்லாம் நெல்லியடி உருசி வரவில்லையே! 

அடுத்த நாள் நாம் மூவரும் யாழ்நகர் வைத்தியசாலை வீதியில் அமைந்திருந்த அமைப்பின் தலைமைக் காரியாலயத்துக்கு வந்தோம். முருகன் கல்வியங்காட்டில் உள்ள தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையைக் காண வீட்டுக்குச் சென்றுவிட்டார். சோமண்ணையும் நானும் யாழ் திருநெல்வேலியில் இருந்த ஈரோஸின் மணவர் அமைப்பான 'கைஸ்' (GUYS) இன் அலுவலகத்துக்குச் சென்று அங்கு நின்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த தோழர் ஜெமீலைச் சந்தித்து அளவளாவினோம். பின்னேரம் ஐந்து மணிபோல் பாலகுமாரன் அண்ணன் வேண்டிக்கொண்டதற்கு அமைவாக, நான் கிளம்பி மிருசுவில்லில் அமைந்திருந்த இயக்கத்தின் பண்ணைக்குப் போனேன். அங்கிருந்த தோழர்களோடு எனது மலையக அனுபவங்களைப் பகிர்ந்தேன். மேலும் அந்த இரவின் பெரும் பகுதியை அரசியல் நிலைவரங்களையும், இயக்கங்களுக்கிடையிலான முரண்களையும் பேசியபடி கழித்தோம். 

விடிந்ததும் புறப்பட்டு அக்கரைப்பற்றைச் சேர்ந்த தோழர் முகைதீன் மௌலவியையும் அவரது குடும்பத்தையும் பார்ப்பதற்காக கொண்டாவிலில் அவர்கள் தங்கியிருந்த வாடகை வீட்டிற்கு வந்தேன். அவர்களோடு பழைய அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசிக் களித்தேன்.அடுத்த நாள் முருகன் வந்து என்னை அவரது வீட்டுக்கு அழைத்துப் போனார்.

முருகன் மலையக வேலைத்திட்டங்களைப் பார்க்க விரும்பினார்.இரண்டு நாட்கள் கழிந்து நானும், முருகனும் யாழிலிருந்து கொழும்பு ஊடாக நுவரெலியா சென்றோம்.

தோழர் முருகன் தேர்ந்த வாசகர்,புதுக்கவிதைகளில் நாட்டமுடையவர், மக்கள் நேசன், என்னோடு நிறையப் பேசுகிறவர்- தோழமைகயைக் கடந்தும் பாசத்தைக் கொட்டியவர். 1989 ஆம் ஆண்டு ஏறாவூரில் எமது வீட்டில் தங்கியிருந்த முருகனும், திருமலையைச் சேர்ந்த சிரேஷ்ட தோழர் கஜனும் செங்கலடியை நோக்கிப் போகையில் காணாமலாக்கப்பட்டார்கள். இது நடந்ததைக் கேள்வியுற்றவுடன் கொழும்பில் இருந்த நான் அவசரமாக ஊர் திரும்பினேன். ஏனைய தோழர்களோடு இணைந்து இவர்களை மும்முரமாகத் தேடினேன். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர்கள் செங்கலடி போகும் வழியில் ஏறாவூர் செங்கலடி எல்லையில் அமைந்திருந்த தமிழ்த் தேசிய இராணுவத்தின் ( TNA) அலுவலகத்தில் இருந்தவர்கள் இவர்களை வழி மறித் கடத்திச் சென்று கடற்கரையோரமாகக் கொன்று புதைத்துவிட்டனர் என்ற தகவல் மக்களிடமிருந்து இரகசியமாக எமக்குக் கிடைத்தது. இந்தக் கொலைகளை தமிழ்த் தேசிய இராணுவத்தைச் சேர்ந்த தாஸ் என்பவன் செய்ததாகப் பின்னர் ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.
14
நானும் முருகனும் நுவரெலியா, ஹற்றன், கண்டி பிரதேசங்களில் உள்ள தோழர்களைக் கட்டங்கட்டமாகச் சந்தித்து உரையாடினோம். முருகனை அதிகமாப் பேசவிட்டோம். அவர் தனது அனுபவங்களைச் சுவைபடப் பகிர்ந்தார்.முருகன், தேசியத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்து மறைந்த வெள்ளையன் பற்றி பெருமதிப்பு வைத்திருந்ததை அவரது மலையகத் தோழர்களுடனான கருத்துப் பரிமாறல்களின் போது கவனித்தேன். வெள்ளையனின் நூறாவது பிறந்தநாள் அண்மிக்கிறது. இந்நேரத்தில் கதை பகிர முருகன் இல்லையே!

இக்காலத்தில் இந்திய - இலங்கை ஒப்பந்தம் பற்றிய செய்திகள் ஊடகங்களை நிறைத்திருந்தது.

முருகன் ஒப்பந்தம் நிறைவேறும் என்பதில் அவ்வளவாக நம்பிக்கை வைக்கவில்லை, ஒப்பந்தம் இடம்பெற்றாலும் மலையக வேலைத்திட்டங்கள் மேலும் வேகத்துடன் முன்னெடுக்கப்படல் வேண்டும் என்று முருகன் தோழர்கள் மத்தியில் வேண்டிக்கொண்டார்.

ராஜிவ் காந்தியின் கொழும்பு வருகையும் ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வும் நாங்கள் மலையகத்தில் நின்ற போதே நடந்தது. ஒப்பந்தத்தில் அனைத்து இயக்க உறுப்பினர்களுக்கும் பொது மன்னிப்பளிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளமையைக் கருத்தில் எடுத்திருந்தோம். ஒப்பந்தம் கைச்சாத்தாகி இரண்டாம் நாள் நாமிருவரும் கொழும்புக்கு வந்து மருதானை பஞ்சிகாவத்தைப் பகுதியில் ஒரு சிறிய விடுதியில் தங்கியிருந்தோம். ஒப்பந்தத்தை எதிர்த்து நூற்றுக்கணக்கான சிங்கள இளைஞர்கள் வீதிகளில் இறங்கி வன்முறைகளில் ஈடுபட்டனர். இவ்வன்முறை தமிழர்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்ற ஐயம் எமக்கிருந்தது. ஆயினும் கொழும்பு எங்கணும் வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டதையும், அரச பேரூந்துகளுக்குத் தீ வைப்பதையும் வீதியின் மருங்குகளில் நின்று பார்த்தோம். இந்த வன்முறைகளில் இளம் தேரர்களும் பங்குபற்றியதைக் கண்டோம், அங்கு குழுமியிருந்த வெகுமக்கள் வன்முறையாளர்கள் ஜே.வி.பி யைச் சேர்ந்தவர்கள் என்று பேசிக்கொண்டார்கள். இன்னும் சிலர், இளம் தேரர்கள் போல் தெரிபவர்கள் உண்மையில் தேரர்களல்ல அவர்கள் மொட்டையடித்துக் காவி அணிந்து தேரர்கள் போல் வேசமிட்ட ஜேவிபி உறுப்பினர்கள்தானோ என்றும் சந்தேகப்பட்டனர். ஆனால் அக்காலத்தில் தேரர்கள் ஜேவிபியில் உறுப்பினர்களாகவும் இருந்தனர், மட்டுமல்ல இலங்கையில் தேரர்கள் பல சந்தர்ப்பங்களில் வன்முறகளில் ஈடுபட்ட வரலாறும் உண்டு என்று விடுதி திரும்பியதும் முருகன் அங்கிருந்தவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார்.

கொழும்பில் மேலும் தங்குவது உசிதமல்ல என்று நினைத்த நாங்கள் அடுத்த நாள் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் புண்ணியத்தில் பகிரங்கமாக மட்டக்களப்புக்குப் பிரயாணமானோம். பாதுகாப்பாக மத்திய வீதிக் காரியாலயத்தை அடைந்தோம்.
15
இதன் பின் இந்திய இராணுவத்தால் கைது, இலங்கை அதிரடிப்படையால் கைது என்பனவும், இந்தியப் படைக்கும் புலிப்படைக்கும் இடையிலான யுத்த நெருக்கடி காலத்தில் மட்டக்களப்பில் நிற்கவேண்டிய அவசியம், எனக்கும் ராணிக்கும் திருமணம் நடந்தேறியமை, ஈரோஸ் பங்குபற்றாவிட்டாலும் வடகிழக்கு மாகாணசபைத் தேர்தல் காலத்தில் கூர்மையான அவதானிப்புத் தேவைக்காக கிழக்கில் நிற்கவேண்டியிருந்தமை, யாழ்ப்பாணத்தில் 29 நாட்கள் தொடர்ந்தேர்ச்சியாக நடைபெற்ற ஈழந்தழுவிய முக்கிய தோழர்கள் பங்கு கொண்ட மாநாட்டில் பங்குபற்றியது மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றமை ஆகிய காரணங்களால் என்னால் மலையகத்துக்குச் செல்ல முடிந்திருக்கவில்லை. அதனாலென்ன, ஈழப் புரட்சி அமைப்பு மலையகத்தில் பதியமிட்ட விதைகள் முளைத்து மரமாகிக் கிளைபரப்பி நின்றன.1988, 1989 ஆகிய இரண்டு வருடங்கள், மே தினம் மலையக ஈரோஸ் தோழர்களால் ஆயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றலுடன் மேடையமைத்துக் கூட்டமிட்டுக் கொண்டாடப்பட்டது. ஈழப்போராட்டத்தில் மலையகத் தமிழ் மக்கள் சம பங்காளிகள் என்று தத்துவ ரீதியாக நிரூபணம் செய்த ஈரோஸின் நிறுவுனர் தோழர் இரத்தினசபாபதி 1989 ஆம் ஆண்டைய மே தினக் கூட்டத்தில் பிரதம பேச்சாளராகக் கலந்து கொண்டார்.

1990 ஆம் ஆண்டு நோர்வூட்டில் ஈரோஸ் நடாத்திய மே தினக் கூட்டத்தில் கொட்டும் மழையிலும் அணி திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றினேன். எத்தனையோ மேடைகளிலும், அரங்குகளிலும், தொலைக் காட்சி நிகழ்ச்சிகளிலும் உரையாற்றியிருக்கிறேன். ஆனாலும், நோர்வூட் மே தின மேடையில் உரையாற்றிய போது எனக்கிருந்த உச்சந்தொட்ட மனவுணர்வையும், நிறைவையும் வேறெந்த மேடைகளிலும் நானடையவில்லை. நான் பேசிக்கொண்டிருந்த வேளை மேடையின் முன்னால் வந்து நின்று தோழர் கணேஷ் இன்னும் பேசு, இன்னும் பேசு என்று என்னை ஊக்கப்படுத்தியதை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.

மே தினக்கூட்டம் முடிவடைந்ததும் இரவோடிரவாக நானும் இரண்டு தோழர்களும் கொழும்பை நோக்கி காரில் பயணித்தோம். எமது நூறுக்காக்கா வண்டியைச் செலுத்திக்கொண்டிருந்த போது இடை நடுவில் வைத்து "தம்பி பிறேக் வேலை செய்தில்ல" என்று பதட்டத்துடன் கூறினார். வளைவுகளும் நெளிவுகளும் நிறைந்த மலைப் பாதைப் பயணம், என்ன செய்வதென்றே தெரியவில்லை." மெதுவாக ஓரமாக நிறுத்துங்க காக்கா" என்றேன். அவ்விடத்தில் இருந்து நான் சாரதியாகி மெல்ல மெல்ல அவதானமாக பிறேக் இல்லாமலே வண்டியை ஓட்டிக்கொண்டு கொழும்பு வந்து சேர்ந்தோம்.
16
எம்பியாகிய பின்னர் தும்பியாகிப் பறந்த கதை சுவாரசியமானது. 
ஈரோஸின் அலுவலகம் இல: 39, பகதல வீதியில் அமைந்திருந்தது. 1990 இல் இந்திய இராணுவம் வெளியேறிய பின்னர் அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் உரசல்கள் தொடங்குமாப் போல் இருந்த காலத்தில் பிரேமதாச அரசாங்கத்துக்கும் புலிகளுக்குமிடையில் சமாதானத் தரகராகச் செயற்பட்ட முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.சீ.எஸ் ஹமீதுக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்பாடல் செய்வதற்கான ஏற்பாட்டை ஈரோஸ் செய்து கொடுத்தது. கொழும்பு பகதல வீதி அலுவலகத்தின் பாதாள அறையில் சக்திவாய்ந்த தொலைத் தொடர்பு சாதனத்தை வைத்திருந்தோம். அக்காலத்தில் கைத் தொலைபேசிகள் பாவனையில் இருக்கவில்லை. புலிகளிடம் சட்டர்லைட் தொலைபேசி வசதியும் இருக்கவில்லை. ஆனால் புலிகளிடமும், அரசாங்கத்திடமும், ஈரோஸிடமும் வயர்களற்ற தொடர்பு சாதனம்(wireless Communication set) இருந்தது. புலிகள் அரசாங்கத்தின் சாதனங்களூடாகப் பேச விரும்பவில்லை. ஆகவே, ஹமீட் அவர்கள் புலிகளுடன் தொடர்பாட ஈரோஸ் தனது சாதனத்தைக் கொடுத்து உதவியது.அமைச்சர் 70 வயதை எட்டியிருந்த காலமது. அவரை நான் கைகளில் பிடித்த வண்ணம் கீழே மேலே மறுபடியும் கீழே மேலும் கீழே பின்னர் மேலே இன்னும் கீழே என்று பல தடவைகள் அழைத்துச் சென்று புலிகளும் அரச பிரதிதிதி ஹமீட்டும் பேசுவதற்கு உதவியிருக்கிறேன். அமைச்சர், ஜனாதிபதி பிரேமதாசாவின் அனுமதியுடன்தான் பேசுவதற்கு வந்தார்.அவர் மரப் படிக்கட்டுகளில் மேலும் கீழுமாக ஏறி இறங்கி மேலும் இறங்கி ஏறி இறங்கும் போது மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குவதைப் பார்க்கையில் எனக்குக் கவலையாக இருக்கும். ஹமீட் இறுதியாகப் புலுகளுடன் நேரடியாகப் பேச விரும்பி உலங்கு வானூர்தியில் வடக்கு சென்றார். அவரது முயற்சி தோல்வியில் முடிந்தது. யாழ்ப்பாணம் முழுவதும் துப்பாக்கிப் பிரயோகம் நடப்பதாக கொழும்புக்குத் தகவல் கிடைத்த வண்ணமிருந்தது. அன்றைய நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர் எம். எச் முஹம்மத் பாதுகாப்பாகக் கொழும்பு திரும்பவேண்டும் என்று பகிரங்கமாக வேண்டினார். ஹமீட்டைப் புலிகள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

இவை நிகழ்வதற்கு முன்பு பாலகுமாரன், பரராஜசிங்கம்(பரா) ஆகியோரும் இன்னும் சில சில தோழர்களும் யாழ்ப்பாணம் சென்றுவிட்டனர். பாலா அண்ணன் யாழ் சென்று சில நாட்களில் ஈரோஸ் யாழ் காரியாலயத்தில் வைத்திருந்த இதே வகையான தொடர்பு சாதனமூடாக கொழும்பு அலுவலகத்துக்குப் பேசி ஈரோஸின் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பதவிகளைத் துறக்குமாறு கடுமையான தொனியில் கூறினார். அடுத்த நாளே அனைவரும் இராஜினாமாச் செய்தோம். பின்னொரு நாள் பாலா அதே தொலைத் தொடர்பூடாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேசி உடனடியாக அனைவரும் கிளம்பி யாழ்ப்பாணம் வருமாறு "கட்டளையிட்டார்" பதவிகளைத் துறந்த பெரும்பாலானவர்கள் சாதனத்தின் முன்னால் எதுவும் பேசாமல் தொடைகள் நடுங்க நின்றிருந்தனர். அல்பா போர் ( Alpha four) எங்கே என்று கர்ச்சித்தார். சுற்றியிருந்தவர்கள் விழி பிதுங்கி நின்றனர். தொடர்பு சாதனத்தினூடாகப் பேசும்போது ஆளடையாளத்தைக் காட்டாத வகையிலான என்னக்குரிய குறியீட்டுச் சொல் அது. தொடர்பு சாதனத்தின் இயக்கத்துக்குப் பொறுப்பாய் இருந்த தோழர் எனது முகத்தைப் பார்த்தார்.

ஒம் அண்ணே!- நான்

என்ன செய்யிறா அங்க இவ்வளவு நாளும்! எல்லாரையும் கூட்டிட்டு இங்க வா- பாலா

அண்ணே இங்க கொழும்புல பாதுகாப்பில்லாம 112 தோழர்கள் நிக்கிறாங்க நானெப்பிடி இவங்கள இங்க விட்டுட்டு வாறது? - நான்

பாலா பக்கமிருந்து சத்தமில்லை அவரின் தோழமையுணர்வும் மனிதாபிமான மனதும் அழுவதை நானுணர்ந்தேன். எனது கண்கள் கொஞ்சம் பனித்தன, அண்ணே நீங்கள் வடக்கு சூழலின் அழுத்தத்திற்கு ஏற்ப செயல்படுங்கள், நான், இங்கு தோழர்களின் பாதுகாப்பைக் கையாளுகிறேன் என்று சொன்னேன். தொடர்பு அறுந்தது. இதனை பாலாவின் அங்கீகாரமாகக் கருதி செயல்படலானேன்.

பெரும்பாலான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐரோப்பா பயணமானார்கள். நான் கொழும்பில் நின்றேன். மீண்டும் நாடாளுமன்று புகுந்தேன். மீண்டும் நாடாளுமன்ற உறுப்பிரானதன் நிமித்தம் எனக்கு அரசு தந்த ஜீப்பை விற்றுவிட்டு கொழும்பு அலுவலகத்தில் செய்வதறியாது திகைத்து நின்ற தோழர்களில் அநேகரை, தோழர் சுதா மாஸ்டரும் நானும் இணைந்து தாய்லாந்துக்கு அனுப்பினோம். அங்கே உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான சபை (United Nations Human Rights Council) அலுவலகத்தில் அவர்கள் தம்மை அகதிகளாகப் பதிவு செய்தனர்.சொற்ப காலத்தில் அவர்கள் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அச் சபையால் அனுப்பிவைக்கப்பட்டனர். 

இக்காலத்தில் நான் முன்பு நுவரெலியாவில் தங்கியிருந்த முன்பள்ளி ஆசிரியை ஏதோ ஒரு தேவை நிமித்தம் எமது கொழும்பு அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த தோழர்கள் அவர்களை பசீர் எம்பியை சந்தியுங்கள் என்று என்னிடம் அனுப்பிவைத்தனர். நானும் எனது மனைவியும் அந்த அலுவலகத்தில்தான் தங்கியிருந்தோம். என்னை வந்து கண்ட அவர்கள், இது எங்க சியாம் அண்ணனல்லவா என்று சத்தமிட்டவாறு ஒடிவந்து என்னைக் கட்டிப்பிடித்தனர். எனது இயற்பெயர் பஷீர் என்பதும் நான் ஒரு முஸ்லிம் என்பதும் அன்றுதான் அவர்களுக்குத் தெரியவந்தது.

1990 ஆம் ஆண்டு இயக்கம் தற்காலிகமாகக் கலைக்கப்பட்ட பின்னரும் மலையகத் தோழர்களுடன் தத்துவார்த்தத் தொடர்பாடலை வைத்திருத்தோம்.

இன்று ஈரோஸ் மலையகத்தில் மீளமைக்கப்பட்டு ஈழவருக்குத் தலைமை தாங்கும் தகுதியோடு இயங்குகிறது.

Share this post :

+ comments + 1 comments

7:58 PM

இது வரை காலமும் நான் முக நூலில் வாசித்த மிகப்பெரிய ஆக்கம்.
இறந்த காலம் பற்றிய பின்னோக்கும்,ஏதிர் காலம் பற்றிய முன்னறிவிப்பும் அடங்கியுள்ள அனுபவத்தலைவனின் அற்புதமான அனுபவங்கள்

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates