Headlines News :
முகப்பு » , , , , , » பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஜே.ஆர் செய்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி !? - என்.சரவணன்

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஜே.ஆர் செய்த ஆட்சிக் கவிழ்ப்புச் சதி !? - என்.சரவணன்


இலங்கை சுதந்திரம் தொடக்கம் எத்தனையோ ஆட்சி கவிழ்ப்பு சதிகள் அரசியல் ராஜதந்திர மட்டத்திலும், ஆயுதப் போராட்டத்தின் மூலமும் முயற்சி செய்யப்பட்ட வரலாறை நாம் அறிவோம். அது போல மாலைதீவு என்கிற நாட்டையே ஆக்கிரமித்து ஆட்சியை கவிழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியும் புளொட் இயக்கத்தால் சரியாக 30 வருடங்களுக்கு முன்னர் (03.11.1988) மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்போது இங்கு சொல்லும் கதை சுதந்திரத்திற்கும் முற்பட்ட கதை.

இரண்டாம் உலக யுத்தம் (1939-1945) உலக வரைபடத்தையே திசைதிருப்பிப் போட்டதுடன் அந்த யுத்தம் ஏற்படுத்திய பாரிய சரவதேச அரசியல் உறவுகளின் திருப்புமுனையையும் நாம் அறிந்திருக்கிறோம்.

யுத்தத்தில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியம் உலக அளவில் தன் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருந்த நாடுகளை இந்த யுத்தக் களத்தில் இறக்கியது. காலனித்துவ நாடுகளில் இருந்து திரட்டப்பட்ட படையினர் பொதுநலவாய இராணுவத்தின் பெயரின் கீழ் தான் இணைக்கப்பட்டார்கள். பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் தலைவியாக அப்போது பிரித்தானிய அரசி எலிசபத் மகாராணி இருந்தார்.

2ஆம் உலகயுத்தத்தில் பிரிட்டிஷ் படைக்கு ஆட்சேர்ப்பு பிரச்சாரத்துக்காக அன்று வெளியிடப்பட்ட சுவரொட்டி.
இலங்கையில் இருந்தும் கரிசன் இலங்கை பீரங்கிப் படை (Ceylon Garrison Artillery (CGA)), இலங்கை பாதுகாப்புப் படை (Ceylon Defence Force (CDF)) இலங்கை காலாட் படை (Ceylon Light Infantry -CLI), இலங்கை தொண்டர் வைத்தியப் பிரிவு (Ceylon Volunteer Medical Corps) என்பன ஆரம்பிக்கப்பட்டு வெவ்வேறு நாடுகளில் போரிலும், பாதுகாப்பிலும் இறக்கப்பட்டன.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கின்ற கோகோஸ் தீவுகளில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்த இலங்கை கரிசன் பீரங்கிப் படை அங்கிருந்த பிரித்தானிய படையினருக்கு எதிரான ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்தது. அந்தக் கிளர்ச்சி ஒரு வகை இராணுவ ஆட்சி கவிழ்ப்பு சதிக்கான ஒரு தொடக்கமாக கருதப்பட்டது. எவ்வாறாயினும் இறுதியில் அந்த சதிமுயற்சி முறியடிக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட இலங்கைப் படையினர் பலர் பிரித்தானிய விசேட நீதிமன்றத்தினால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லபட்டார்கள். இரண்டாம் உலக யுத்தத்தில் பிரித்தானிய சாம்ராஜ்ஜியத்தின் இராணுவத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஒரே இராணுவ சதி முயற்சியாக இந்த சம்பவம் பதிவானது.

ஜப்பானின் பலம்

1941 டிசம்பர் ஜப்பான் அமெரிக்காவின் பேர்ல் துறைமுகத்தை தாக்கி பலத்த சேதத்தை உண்டுபண்ணியதோடு பசுபிக், மற்றும் ஆசிய பிராந்தியங்களில் தனது ஆக்கிரமிப்பையும் செல்வாக்கையும் வேகப்படுத்தியது. அதே டிசம்பர் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஹொங்கொங்கில் போர் தொடுத்து அதையும் கைப்பற்றியது.

1942 பெப்ரவரியில் பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சிங்கப்பூரையும் கைப்பற்றுகிறது. பிரித்தானியா இவற்றை பெருத்த தோல்விகளாக கருதியது.  2ஆம் யுத்தத்தில் அது மிகவும் மோசமானதொரு தோல்வி என்று அன்றைய பிரதமர் வின்சன்ட் சேர்ச்சில் வெளிப்படையாக கருத்து வெளியிட்டார்.

அதே பெப்ரவரியில் ஜாவா தீவுகளில் ஜப்பான் மேற்கொண்ட தாக்குதலில் பிரித்தானியாவுக்கும் அதன் நேச நாட்டுப் படைகளுக்கும் அதிக இழப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜப்பானிய தற்கொலைப்படைகள் நடத்திய விமானத் தாக்குதலின் மூலம் பல போர்க்கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டன.

அதே ஆண்டு ஏப்ரலில் பிரிட்டிஷ் காலனித்துவ நாடான நமது இலங்கையின் கொழும்பு, மற்றும் திருகோணமலை துறைமுகங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் பிரித்தானிய போர்க்கப்பல்கள் அழித்து மூழ்கடிக்கப்பட்டன.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஜப்பான், ஜேர்மன் போன்ற நாடுகளின் ஆதரவுடன் இந்திய தேசிய இராணுவத்தை (INA) அமைத்து அவர்களுடன் சேர்ந்து பிரித்தானியாவுக்கு எதிரான போரில் இந்திய வீரர்களை களமிறக்கியிருந்த தருணம் அது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்து எதிராக ஜப்பானுடன் சேர்ந்து 1943இல் நடத்திய கிழக்காசிய நாடுகளின் மாநாட்டில் ஜப்பான் சக்கரவர்த்தி ஹிடேகி தோஜோ, சுபாஷ் சந்திரபோசுடன் பிலிப்பைன்ஸ், மியான்மார், தாய்லாந்து, மஞ்சூரியா, சீனத் தலைவர்கள்.
ஜே.ஆரின் வகிபாகம்?

இப்படிப்பட்ட பின்னணியில் தான் இலங்கையின் அரசியலில் அன்று தீவிர செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த சிவில் குழுக்கள் மத்தியில் பிரித்தானியாவிடமிருந்து இலங்கையை விடுவிக்க ஜப்பானால் உதவ முடியும் என்கிற கருத்து தலைதூக்கியது. அதற்கான முயற்சிகளிலும் இறங்குகிறார்கள். இந்த காலப்பகுதியில் இளம் அரசியல் தலைவராக இருந்த ஜே.ஆர். ஜப்பான் ராஜதந்திரிகளுடன் தொடர்புகொள்கிறார். ஆனால் இந்த முயற்சியை முதிர்ந்த தலைவரும் பிரிட்டிஷ் விசுவாசியுமான டீ.எஸ்.சேனநாயக்க எதிர்க்கிறார். ஜே.ஆருக்கு புத்திமதி கூறித் தடுத்தார். ஜே.ஆருடன் சேர்ந்து டீ.எஸ்.சேனநாயக்கவின் மகன் டட்லியும் இந்த சதியில் சம்பந்தப்பட்டு இருந்ததாக பிறகாலத்தில் அவுஸ்திரேலிய இராணுவ சஞ்சிகை (The Indian Connection at the AWM - Nr.97) ஒன்று தெரிவிக்கிறது.

கோகோஸ் தீவுகள் ஜப்பானின் போர் நடவடிக்கைகளை கண்காணித்து, எதிர்க்கும் கேந்திர அரணாக பிரித்தானியாவுக்கு இருந்துவந்தது. அருகில் இருந்த நாடு என்கிற வகையில் அங்கு இலங்கையில் இருந்து கரிசன் பீரங்கிப் படையை உதவிக்காக ஈடுபடுத்தியிருந்தது.

ஜப்பான் நம்மை விடுவிக்கும்

அங்கு பிரிட்டிஸ் கப்டன் ஜோர்ஜ் காடினர் என்பவரின் தலைமையில் இலங்கைப் படையினர் 56 பேர் மட்டுமே ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். இலங்கைப் படையைச் சேர்ந்த கிரேசன் பெர்னாண்டோ என்பவரின் தலைமையில் அந்த தீவை ஜப்பான் இராணுவம் கைப்பற்றுவதற்கான சதிகளை செய்கிறார்கள். அதற்காக 08.05.1942 ஆம் திகதியை நிர்ணயிக்கிறார்கள். கிரேசன் பெர்னாண்டோவுக்கு ஆதரவாக இலங்கைப் படையினர் 30 பேர் தமது ஆதரவை தெரிவித்திருக்கிறார்கள்.

கிரேசன் லங்கா சமசமாஜ கட்சியின் ஆதரவாளர். ஆனால் அக்கட்சியின் உறுப்பினராக இருக்கவில்லை. ஒரு ட்ரொஸ்கியவாதி. ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்.

முதற் கட்டமாக அங்கிருந்த பிரித்தானிய கட்டளைத் தளபதிகள் இருவரை கைது செய்து அவர்களின் மூலம் அங்கிருக்கும் ஏனைய படையினரை நிராயுதபாணிகளாக்கி அவற்றை கைப்பற்றுவதே திட்டம். இந்து சமுத்திரத்தில் இத்தீவுக்கு சற்று தொலைவில் இருந்த கிறிஸ்மஸ் தீவை அப்போது மார்ச் 3 அன்று ஜப்பான் கைப்பற்றியிருந்தது. ஆக கோகோஸ் தீவு கைப்பற்றப்பட்டதும் கிறிஸ்மஸ் தீவிலிருந்த ஜப்பான் படையினருக்கு சமிக்ஞை கொடுப்பதன் மூலம் ஜப்பானை வரவழைத்து ஒப்படைப்பது, அதன் பின்னர் ஜப்பானின் உதவியின் மூலம் இலங்கையை பிரித்தானியாவிடமிருந்து விடுவிப்பது என்பதே திட்டம்.

தோல்வியில் முடிந்த புரட்சி

ஆனால் மார்ச் 8 ஆம் திகதி முதல் கட்ட நடவடிக்கையின் போது இரண்டு தரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சண்டை நீடிக்கிறது. சரியான இலக்கை தாக்கமுடியாது போனமையாலும், தானியங்கி துப்பாக்கிகள் சரியாக தொழிற்படாததாலும் அந்த சண்டை தோல்வியில் முடிகிறது. இலங்கைப் படையினனான சமாரிஸ் ஜயசேகர என்பவரும் அங்கு கொல்லப்படுகிறார். பிரித்தானிய படையினரும் காயமுற்றனர்.

கிளர்ச்சி தோல்வியுற்ற நிலையில் கிரேசன் பெர்னாண்டோ தலைமையிலான குழு சரணடைந்தது. கொழும்பில் வைத்துத் தான் சரணடைவும் விலங்கிடப்படலும் நிகழ வேண்டும் என்று அவர்கள் நிபந்தனை விதித்தார்கள். ஆனால் ஆனால் அது நடக்கவில்லை. சில வேளை அவர்கள் உரை நிகழ்த்தி தேசபக்தர்களாக காட்ட முயற்சிப்பார்கள் என்று பிரிட்டிஷ் அரசு கருதியிருக்கக் கூடும். அவர்கள் அனைவரும் இலங்கைக்கு கைதிகளாக அனுப்பப்பட்டார்கள்.

சமாரிஸ் ஜயசேகர (வயது 23) உள்ளிட்ட ஏழு பேருக்கு கோகோஸ் தீவிலேயே மரணதண்டனை வழங்கப்பட்டு மே 10 அன்று இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டார்கள். 1950 ஆம் ஆண்டு அவ்வுடல்கள் எடுக்கப்பட்டு சிங்கப்பூரிலுள்ள கிராஞ்சி போர் நினைவு மயானத்தில் மீளவும் புதைக்கப்பது.

ஏனையோருக்கு மன்னிப்பு வழங்கும்படி அன்றைய சிங்கள அரசியல்வாதிகள் பலர் பிரித்தானியாவைக் கோரியபோதும் அன்றைய ஆளுநர் சேர் அன்ரூ கல்டேகொட் (Sir Andrew Caldecott) அக்கோரிக்கையை நிராகரித்தார். கிரேசன் பெர்னாண்டோவின் தந்தை அன்றைய சிவில் பாதுகாப்பு ஆணையாளராக இருந்த சேர் ஒலிவர் குணதிலக்கவுக்கூடாக இராணுவத் தளபதி சேர் கொப்றி லேட்டனுக்கூடாக முயற்சித்தார். சேர் ஒலிவர் குணதிலக்க இந்த விவகாரத்தைக் கையாண்ட போது தன்னை சேர் கொப்றி லேய்ட்டன் (Sir Geoffrey Layton) “கறுப்புத் தேவடியா மகன்” (Black bastard) என்று திட்டியதை முறையிட்ட செய்திகளும் பதிவாகியுள்ளன.

கிரேசன் பெர்னாண்டோ தனக்கு அப்படிப்பட்ட ஒரு மன்னிப்பு தேவையில்லை என்று நிராகரித்தார். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு பெற்று அவமானப்படமாட்டேன் என்று தனது குடும்பத்தினரிடம் தெரிவித்திருக்கிறார்.

இராணுவ நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் 1942 ஓகஸ்ட் மாதம் மூன்று வெவ்வேறு தினங்களில் கிரேசன் பெர்னாண்டோ (ஓகஸ்ட் 5), கார்லோ ஒகஸ்டின், பெனி த சில்வா ஆகியோர் வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கிட்டு கொல்லப்பட்டார்கள். அக்கிளர்ச்சியில் சம்பந்தப்பட்ட மேலும் 7 பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சமீபத்தில் வெளியாகிய உண்மைகள்
கிரேசன் பெர்னாண்டோவும் அவரின் தோழர்களும் இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்களாக இன்று வரை முன்நிறுத்தப்படவில்லை. ஆனால் உலகளவில் இந்த சம்பவம் “கொகோஸ் தீவு கிளர்ச்சி” (Cocos Islands mutiny) என்கிற பேரில் அழைக்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரில் நிகழ்ந்த இத்தகைய சம்பவங்களை 2012 ஆம் ஆண்டு ஒரு “இரண்டாம் உலகப்போரில் தேசப்பற்றற்றவர்களின் கதை” (Unpatriotic History of the Second World War) என்கிற பேரில் ஒரு நூலாக வெளியிட்டார் ஜேம்ஸ் ஹார்ட்பீல்ட் என்பவர் அதிலும் இந்த சம்பவம் தகவல்பூர்வமாக (பக்கம் 261-262) தொகுக்கப்பட்டிருக்கிறது.

நொயல் குரூஸ் என்பவர் எழுதிய “கோகோஸ் தீவு கிளர்ச்சி” (The Cocos Islands Mutiny - Noel Crusz – 2000 dec) என்கிற நூல் இது பற்றி விரிவாக பேசும் இன்னொரு தனி நூல். அதில் ஓரிடத்தில் இப்படிக் குறிப்பிடுகிறார்.
“சமசமாஜிகளின் பிரச்சாரங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் அவர்கள். அதுபோல படையில் இருந்த வெள்ளை அதிகாரிகளின் துவேசத்தால் பாதிக்கப்பவர்கள். ஹிட்லரின் பாசிசத்துக்கு எதிராக போராட தொண்டர்களாக அவர்கள் முன்வந்தபோதும் சக ஆசிய நாட்டவர்களுக்கு எதிராகவும் போராடத் தள்ளப்பட்டார்கள்.”
அந்த நூலில் இன்னொரு முக்கிய தகவலையும் அவர் வெளியிட்டிருக்கிறார். சிங்கப்பூரிலிருந்து செயற்பட்ட சுபாஷ் சந்திரபோசின் இந்திய தேசிய இராணுவத்தில் இலங்கைப் படையினரும் இருந்தார்கள் என்றும் அந்த அணிக்குத் தலைமை தாங்கியவர் சேர் ஜோன் கொத்தலாவலவின் சகோதர முறையைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிடுகிறார். 

நொயல் குரூஸ் இலங்கையில் காலி பிரதேசத்தில் பிறந்து 1974இல் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தவர். ஆய்வாளராகவும், பத்திரிகையாளராகவும், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பணியாற்றியவர். 

இலங்கையைச் சேர்ந்த இந்த வீரகளுக்கு நேர்ந்த சம்பவங்களால் பிரித்தானியாவுக்கு எதிரான பொதுமக்களின் மனவுணர்வு மேலும் மோசமடைந்தது. அதேவளை அன்றைய போர்க்கால செய்தித் தணிக்கை போதிய அளவில் இந்த செய்தி மக்களிடம் பொய் சேர்வதற்குத் தடையாக இருந்ததால் அது ஒரு மக்கள் மத்தியில் எழுச்சியொன்று உருவாக வாய்ப்பிருக்கவில்லை.

இக்கிளர்ச்சியின் பின்னணியில் அவர்களைத் தூண்டிவிட்ட அல்லது, அவர்களை பின்னணியில் இருந்து இயக்கிய அரசியல் தலைவர்கள், சக்திகள் யார் என்பது பற்றி அப்போது பகிரங்கமாக உண்மைகள் எதுவும் வெளிவரவில்லை.

ஆனால் பிற்காலத்தில் அப்பேர்பட்ட ஒரு ராஜதந்திர சதியில் ஜப்பானுடன் ஜே.ஆர். ஈடுபட்டிருந்தார் என்கிற உண்மைகள் வெளிவந்தன. பல இடங்களிலும் பதிவாயின. அதுபோல ஜப்பானுக்கு ஜே.ஆர் செய்த இன்னோர் மகத்தான உதவிக்காக இன்றும் ஜப்பானிய மக்கள் ஜே.ஆரை வணங்குகிறார்கள். ஜே.ஆரின் நினைவு இல்லம், சிலை என்றெல்லாம் அங்கு வைத்திருக்கிறார்கள். அதனை தனியாக அடுத்த வாரம் பார்ப்போம்.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates