என்.சரவணன். கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகையாளராக ஓயாது எழுதிவருபவர். அதிகமாக பேரினவாதத்தை நுட்பமாக அம்பலப்படுத்துவது அவரது எழுத்துக்கள். புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்து வரும் அவருக்கு கடந்த மாதம் 1915: கண்டி கலவரம்” நூலுக்கான சாகித்திய விருது கிடைத்தது. அவ்விருது சார்ந்த நேர்காணல் இது.
இந்த நூலுக்கு அரசு விருது கொடுத்திருப்பதால் நூலின் நடு நிலைமை பற்றி சந்தேகிக்கப்படுகிறதே?
இந்த நூலை வாசிக்காதவர்கள் அப்படி சந்தேகம்கொள்ள முடியும்.
சாகித்திய விருது இந்த நூலை திரும்பிப் பார்த்தவர்களை சந்தேகிக்கச் செய்திருக்கிறது. சந்தேகித்தவர்களைத் திரும்பிப் பார்க்கவும் செய்திருக்கிறது. இந்த நூலின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமுள்ளவர்கள் முழுமையாக வாசித்துவிட்டு கருத்து கூறுவதே நேர்மையானதாக இருக்கும். நெருங்கிய நண்பர்கள் சிலர் நான் அரச விருதொன்றை எற்றுகொண்டாமை குறித்து தமது அதிருப்தியை தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் எனது எழுத்தில் கொண்டிருக்கும் எதிர்ப்பார்ப்பினாலும், என் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையினாலும் உரிமையுடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.
25 வருடத்துக்கும் மேலான எனது எழுத்துப் பயணத்தில் ஒரு போதும் விருதுகளை இலக்காக வைத்து எழுதியதில்லை. எதிர்பார்த்ததுமில்லை.
அப்படியென்றால் ஏன் தேவைப்பட்டது?
ஆதிக்க சித்தாந்தங்களால் கட்டுண்ட சமூக அமைப்பில் என் போன்றவர்களுக்கு மரியாதையும், கௌரவமும், மதிப்பும் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. குறைந்தபட்சம் அவர்களுக்காகவும் எழுதப்படும் என் எழுத்துக்கான மரியாதை எங்கு கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. இது இந்த எழுத்துக்களை மக்கள் முன் கொண்டு செல்வதற்கான ஒரு காவியாகவும் இருக்கிறது.
மக்களிடம் கொண்டு செல்ல முடியாத எந்த படைப்புக்கும் எத்தனை விலை கொடுத்தான் தான் என்ன பயன். இந்த விருது கொடுத்திருக்கிற அங்கீகாரம் நூலையும், எனது எழுத்துக்களையும் வாசகர்களிடம் மேலும் பரவலாகக் கொண்டு செல்வதற்கான வழிகளைத் திறந்திருக்கிறது. இந்த நூலை விற்பனை செய்வதற்கு சில கடைகளில் தயங்கிய செய்தியையும் அறிந்திருக்கிறேன். இப்போது முழு அங்கீகாரத்துடன் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.
விருதைக் கொண்டாடுகிறீர்களா?
நான் சார்ந்த ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட குறிப்பட்ட சமூகத்தில் முதல் தடவையாக பெற்ற விருது. பின்தங்கிய சமூகத்தவர்கள் பலர் கல்வி கற்ற எனது பாடசாலையில் இவ்விருது பெற்ற முதலாவது மாணவன். இதனை அவர்கள் கொண்டாடுகிறார்கள். என்னை ஒரு முன்மாதிரியாக அந்தச் சமூகத்துக்குக் காட்டுகிறார்கள். இந்த விருது அதற்காகவும் தேவைப்பட்டது.
பணத்துக்காக நான் எழுதியதில்லை. புலம்பெயர்ந்ததன் பின்னர் சம்பளம் பெற்று நான் எதையும் எழுதியதில்லை. இந்த நூலின் மூலம், அல்லது செய்யப்பட்ட ஆய்வின் மூலம் நான் பொருள் ரீதியில் எதையும் சம்பாதிக்கவில்லை. இழந்திருக்கிறேன். ஆனால் சோர்ந்ததில்லை. சமூக மாற்றத்துக்கான எனது இலட்சிய பயணத்துக்கு என்னிடம் இன்று எஞ்சியிருப்பது இந்த எழுத்தாயுதம் தான். இன்று செய்யப்படாமல் இருக்கின்ற; கட்டாயம் செய்யப்பட்டே ஆக வேண்டிய வேலையொன்றைத் தெரிவு செய்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு நான் கொடுத்த, கொடுத்து வருகின்ற விலையும் அதிகம். எனவே இந்த விருதுகள் எனது இலட்சியப் பயணத்துக்கு இடையூறு செய்ய விடமாட்டேன்.
நூலின் உள்ளடக்கத்தைப் பற்றி...?
1915 கலவரத்தைப் பற்றிய பல புனைவுகள் சிங்களச் சூழலில் பரப்பப்பட்டிருப்பதை நான் நெடுங்காலமாக அவதானித்து வந்திருக்கிறேன். அது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டிருகின்றன. முஸ்லிம்களே அக் கலவரத்தின் காரணகர்த்தாக்கள் என்கிற புனைவை உடைப்பது இந்நூலின் முக்கிய நோக்கமாக இருந்தது. அக்கலவரத்துக்கு முன்னரான நூற்றாண்டு முழுவதும் சிங்கள பௌத்த பேரினவாதம் சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கு எதிரான உணர்வை எப்படி கட்டியெழுப்பி வந்திருக்கிறது என்பதை முதல் 18 அத்தியாயங்களில் விளக்குகிறேன். அதன் பின்னர் தான் கலவரத்துக்குள்ளும், அதன் பின்னரான இராணுவச் சட்ட அடக்குமுறைகளும், அதன் மீதான விசாரணைகளைப் பற்றியும் மொத்தம் 60 அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறேன்.
அரசு தரும் நேர்மையான விருது என்கிறீர்களா?
இது அரசாங்கம் தரும் விருதல்ல. உலகில் உள்ள ஏனைய அரசுகளைப் போலவே இங்கும் இலக்கியங்களை கௌரவித்து ஊக்குவிப்பதற்காக வைத்திருக்கும் வழிமுறை இந்த சாகித்திய விருது. அதில் அரசியல் உள் நோக்கம் இருக்கிறது என்கிற கொஞ்ச சந்தேகம் இருந்தாலும் நான் இதனை பெற்றிருக்க மாட்டேன். கூடவே எனக்கான விருதை அரசியல் தலைவர்களால் பெறாமல் நான் மதிக்கும் இலக்கிய அறிஞர்களான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன மட்டும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் கைகளால் பெற்றதில் ஆறுதலும் மகிழ்ச்சியும்.
விருதுக்குரியவை எப்படி தெரிவாகின்றன என்கிற விபரங்களை நான் கேட்டு அறிந்துகொண்டேன். அந்தத் தெரிவு முறை மிகவும் நீதியான பொறிமுறையில் நிகழ்ந்திருப்பதை அறியக் கூடியதாக இருந்தது.
இல்லையென்றால் அரச எதிர்ப்பு இலக்கியவாதியாக அறியப்பட்ட மு.பொன்னம்பலம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருக்காது. அது போல சிங்கள பௌத்த பேரினவாதத்தின் புனைவுகளை உலகம் முழுவதும் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கும் சிங்களப் பேராசிரியர் கனநாத் ஒபேசேகரவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருக்காது. கடந்தகால அரசாங்கத்தால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாட்டை விட்டு தப்பியோடி ஜெர்மனில் வாழ்ந்து வருபவர்கள் பத்திரிகையாளர்களான தேவிகா வடிகமங்காவ, சனத் பாலசூரிய தம்பதிகள். தேவிகா வடிகமங்காவவுக்கு இம்முறை சாகித்திய விருது கிடைத்தது. இவர்கள் எவரும் விருதுகளால் விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள். சரணடையச் செய்ய முடியாதவர்கள். இவர்களின் இலக்கியங்களையும், படைப்புகளையும் மேலும் கொண்டு சேர்க்க இவ்விருது உதவும்.
ஒரு வேளை மகிந்த அரசு ஆட்சியில் இது கிடைத்திருந்தால் எடுத்திருப்பீர்களா?
நிச்சயம் இல்லை. நேரடியாக இனப்படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒரு ஆட்சியில் அதைப் பெற்றிருக்கவே மாட்டேன். அதேவேளை நாம் விரும்புகிற; நமக்கான ஒரு பொதுவுடைமை மக்களாட்சி அரசு வரும்வரை சகல அரச சேவைகளையும் புறக்கணிக்கலாம் அல்லது மற்றவர்களையும் புறக்கணிக்கச் சொல்லலாம் என்கிற “உடோபியா” (Utopia) சிந்தனை எனக்கில்லை. எனவே இந்த விருதுகளால் நமது கடமைகள் தோற்காது. நமது லட்சியத்தின் வீரியத்தைப் பாதிக்காது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...