“எக கே கேம” (Eka Ge Kaema - එකගෙයි කෑම) என்பதை தமிழில் “ஒரே வீட்டில் புசித்தல்” என்று நேரடியாக பொருள் கொள்ளலாம். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களுக்கு ஒரே பெண்ணை மணம்முடித்து வைப்பது சிங்கள சமூக அமைப்பில் குறிப்பிட்ட சமூகப் பிரிவினர் மத்தியில் காலாகாலமாக பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வந்த ஒரு வாழ்க்கைமுறை.
ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் சகோதர்களுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ளும் மணமுறை நெடுங்காலமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாக நிலவி வந்திருக்கிறது. அந்தப் பெண் ஆண் சகோதர்களுடன் அன்பையும், பாலுறவையும் பகிர்ந்துகொள்வார். அதேவேளை ஆண்கள் “பொது மனைவி” என்று கூறுவதை தவிர்த்தார்கள். அதற்குப் பதிலாக “ஒரே வீட்டில் உண்கிறோம்” என்கிற சொல்லைப் பயன்படுத்துவார்கள். அதுபோல மனைவி “நான் மூவருக்கும் உணவு சமைத்துப் போடுகிறேன்” என்பார் என்று ருல்ப் பீரிஸ் தனது “சிங்கள சமூக அமைப்பு: கண்டி யுகம் (1964)” என்கிற நூலில் குறிப்பிடுகிறார். இதை சேர் பொன் அருணாச்சலமும் எழுதியிருக்கிறார்.
"பலகணவர் மணம்" அல்லது "பல்கொழுநம்" (Polyandry) என்று அகராதிகள் இதற்கான பதங்களை அறிமுகப்படுத்துகின்றன. நேபால், சீனா, வடஇந்திய பகுதிகளிலும் பல்வேறு சமூகக் குழுமங்களிடையே இந்த வழக்கம் இருந்து வந்திருக்கிறது.
“பண்டைய தாய்வழிச் சமூகத்தில் பல ஆண்கள் ஒரு பெண்ணை பொதுவில் அனுபவித்தார்கள். பிறக்கும் குழந்தைக்கு தாய் யார் என்று தெரிந்திருந்தது. தந்தை யார் என்று தெரிந்திருக்கவில்லை. பெண்ணைச் சுற்றியே வம்சாவளி அமைந்தது. எனவே ஆணை விலக்கிவிட்டு பெண்வழியில் மட்டுமே இரத்த உறவு கணக்கிடப்பட்டது” என்று எங்கெல்ஸ் "குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்" என்கிற நூலில் குறிப்பிடுவார். காலப்போக்கில் இவை எப்படி எல்லாம் மாறி இன்றைய குடும்ப அமைப்பு முறை நிறுவப்பட்டது என்பது தனிச்சொத்துடைமையின் நீட்சியே.
மகாபாரதக் கதையில் பாஞ்சாலி பஞ்சபாண்டவ சகோதர்கள் ஐவருக்கு மனைவியாக இருந்த கதை இன்றும் ஒரு வியப்பான கதையாக நோக்கப்படுகிறது.
சிங்கள சமூகத்தில் நிலவும் குடும்ப – மண உறவுகள் பண்பட்டதாகவும், இனிமையானதாகவும் இருகிறது. இது போல மனித சமூகத்தில் சொற்பமாகவே காணப்படுகிறது.” என்று ஜோன் டேவி என்கிற ஆங்கிலேய ஆய்வாளர் தனது நூலில் தெரிவிக்கிறார். (Davy, John (1821), An Account of the interior of Ceylon).
பாலுறவு, விவாகம், விவாகரத்து போன்றவை மிகுந்த தாராளவாத, திறந்த, சுதந்திரமான ஒரு முறைமை சிங்கள சமூகத்தில் ஒரு காலத்தில் நிலவியிருப்பதை இனங்கான முடிகிறது.
ஓர் ஆண் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வதை பொலிஜினி (Polygyny) என்பார்கள். ஒரு பெண் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களை ஒரே சமயத்தில் மணந்து கொள்வதை பொலியாண்டரி (Polyandry) என்பார்கள். கண்டிய சிங்கள சமூகத்தில் இந்த இரண்டும் வழக்கத்தில் இருந்திருக்கிறது.
உலகம் முழுவதும் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்துகொள்வதை அத்தனை பெரிய அதிசயமாக பார்ப்பதில்லை. ஒரு வகையில் பல இனக்குழுமங்களில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டே இருக்கிறது. ஆனால் பெண்கள் பல ஆண்களை திருமணம் செய்துகொள்வதை ஆணாதிக்க சமூக அமைப்பு ஆச்சரியமாகவும், அதிசயமாகவும், கலாசார சீர்கேடாகவும் பார்க்கிறது. வெறுக்கத்தக்க ஒன்றாகவும், ஒழுக்க மீறலாகவும் புனைந்தே வருகிறது.
கணவனின் இறப்பு, விவாகரத்து, விலகல் என்பவற்றின் பின்னர் செய்துகொள்ளும் மறுமணத்தையே ஏற்றுக்கொள்ளாத சமூகம் ஒரே சமயத்தில் பல ஆண்களுடன் வாழ்கையைப் பகிர்வதை ஏற்றுக்கொள்ளுமா என்ன? ஆனால் சிங்கள சமூக பண்பாட்டில் நெடுங்காலமாக பொதுவழக்கில் எற்றுகொள்ளப்பட்டிருந்தது. அந்த சமூக் வழக்கை முறைகேடான ஒன்றாக பார்க்கவில்லை.
இலங்கையில் பலதாரமணம் சட்டவிரோதமான ஒன்று. ஆனால் கண்டிய திருமணச் சட்டத்தில் ஒரு பெண் குடும்பத்தில் மூத்தவனை முறைப்படி திருமணம் செய்தாலும் அவள் அவனது சகோதரர் அனைவருக்கும் மனைவியாகிற முறை ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இந்தத் திருமணம் சகோதர்களுடன் ஒன்றாக செய்துகொள்ளப்படுவதில்லை. ஒருவர்; குறிப்பாக மூத்தவர் தான் திருமணம் முடித்து பெண்ணை அழைத்துவருவார்.
குடும்பத்தின் சொத்துக்கள் அக்குடும்பத்திலேயே தொடர்ந்தும் வழிவழியாக பாதுகாக்கப்படுவதற்காக இது தொடர்ந்து வந்திருக்கிறது. சொத்துக்களைப் பாதுகாப்பது பற்றிய அச்சம் கொண்ட நிலவுடைமைச் சமூகத்தினர் மத்தியில் அதிகம் இருந்திருக்கிறது. ஆக கொவிகம சாதியினர் மத்தியிலேயே இந்த வழக்கம் அதிகமாக இருந்துவந்ததை நாம் ஊகிக்கலாம். அதேவளை சிங்கள சமூகத்தில் சகல சமூக மட்டத்திலும் இந்த வழக்கம் இருக்கவே செய்தது அதையே பல்வேறு ஆய்வாளர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
ரொபர்ட் நொக்ஸ் தனது நூலில் 17 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் கைதியாக வாழ்ந்தனுபவித்து பின்னர் எழுதிய (Historical Relation of Ceylon) நூலில் இதை உறுதிப்படுத்தும் வகையில் கண்டிய சமூகத்தில் ஒரு பெண் இரு கணவர்மாருடன் ஒன்றாக குடித்தனம் நடத்துவது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்ததாகவும் குழந்தைகள் அந்த இருவரையும் சொந்தத் தகப்பனாக ஏற்றுக்கொண்டிருந்தார்கள் என்பதையும் குறிப்பிடுகிறார்.
“பல கணவர் முறை” இருந்ததற்கான ஒரு நிகழ்வாக “மகுல்மகா விகாரை ஓலைச்சுவடிகள்” வெளிப்படுத்திய ஆதாரம் குறிப்பிடத்தக்கது. 14ஆம் நூற்றாண்டில் ருகுணு தேசத்தை ஆண்ட பராக்கிரமபாகு சகோதர்கள் ஒரே பெண்ணை திருமணம் முடித்திருந்தார்கள் என்கிறது. கோட்டை பகுதியை ஆண்ட 6வது விஜயபாகு தன்னுடைய சகோதரனுடன் மனைவியைப் போது மனைவியாக ஆக்கி வாழ்ந்து வந்தார் என்கிறது வரலாறு.
இலங்கையில் இந்த சம்பிரதாயம் பற்றி சமீபகாலத்தில் அறியத்தந்தது ஒரு தொலைக்காட்சி நாடகமே. 1993 இல் வெளியான “பெத்தேகெதர” (Baddegedara) என்கிற பெயரில் ஜயசேன ஜயக்கொடி எழுதி வெளியிட்ட நாவல் 1996இல் தொலைக்காட்சித் தொடர் நாடகமாக வெளியானது. கிராமத்தில் அண்ணனுக்கு திருமணமுடித்துக் கொடுக்கப்பட்ட பெண் தம்பிக்கும் மனைவியாக்கப்பட்டு நடத்தும் வாழ்க்கைப் பற்றியது அந்தக் கதை. பல ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கொழிந்து போயிருந்த ஒரு மரபை மீண்டும் நினைவுக்கு கொண்டு வந்து பேசுபொருளாக்கியது இந்த நாடகம் தான்.
மிகச் சமீபத்தில் தொலைக்காட்சிக்காக ஒரு பாடல் தயாரிக்கப்பட்டது (Eka Gei Kema). அந்தப் பாடலில் மூத்த சகோதரனுக்கு திருமணம் முடித்து கொடுக்கப்பட்ட பெண் இளைய சகோதரனுக்கும் மனைவியாக்கப்பட்டபோதும் அந்தப் பெண் கூடுதலாக ஈடுபாடு காட்டுகின்ற இளைய சகோதரன் படும் வேதனை, ஏக்கம், தவிப்பு, காதல் பற்றியதாக அமைக்கப்பட்டிருந்தது. யூடியுபில் இந்தப் பாடல் மிகவும் பிரசித்தம்.
சகோதரர் ஒருவர் மனைவியுடன் ஒன்றாக உறவுகொள்ளும் போது வெளிக்கதவின் வாசலில் தனது உள்ளாடைத் துண்டை (கோவணம்) சமிக்ஞைக்காக தொங்கவிட்டிருப்பார். மற்றவர் அதைப் புரிந்து கொண்டு விலகிச் செல்வார். இந்தக் காட்சியும் அந்தப் பாடலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டிருக்கும்.
வழக்கொழிந்தது எப்போது?
காலப்போக்கில் இந்த மரபு சமூக அளவில் கேலிக்குரிய ஒன்றாக மாறியபோது மெதுமெதுவாக வழக்கொழிந்து போனது.
1815இன் பின் இலங்கையில் படிப்படியாக ஆங்கிலேய விக்டோரியா சட்டங்கள் அறிமுகமாயின. 1819இல் நீதிமன்ற ஆணையாளர்களால் “பல கணவர்” முறையை பின்பற்றும் சிங்கள அரச அதிகாரிகளை சேவையிலிருந்து நீக்கும்படி அறிவித்திருக்கிறார்கள். பிரிட்டிஷார் பல கணவர் முறையை 1859 இல் தடை செய்தத்துடன் மூன்று வருட சிறைத்தண்டனையை அறிமுகப்படுத்தினார்கள். 1907ஆம் ஆண்டின் 19இலக்க விவாகப் பதிவு சட்டத்தின் படி (ஒரே கணவர் – ஒரே மனைவி) சம்பிரதாயபூர்வமான பல கணவர் முறை முற்றிலும் முடிவுக்கு வந்தது. “Twentieth Century Impression of Ceylon (1907)” (பக்கம் 337) என்கிற நூலில் சேர் பொன் அருணாச்சலம் “கண்டிய சமூக அமைப்பில் நிலவிய ஒரே பெண்ணை பல சகோதர்கள் மணமுடிக்கும் முறை இனிமேல் சட்டபூர்வமானதில்லை. அவ்வாறான விவாகத்தை பதிவு செய்ய சட்டத்தில் இனி இடமில்லை” என்று குறிப்பிடுகிறார்.
இந்த வழக்கம் தாராளவாத முறை என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டபோதும் பெண்ணடிமைத்தனம் நிறைந்த ஒன்று. திருமணம்-மணமகன் தெரிவு பெண்ணுக்கு உரிய ஒன்றாக இருக்கவில்லை. பெரியவர்கள் தீர்மானித்து முடித்து வைப்பார்கள். பெண் அந்த வீட்டுக்கு சகல ஆணுக்கும், அவரின் குடும்பத்துக்குமான பணிப்பெண்ணாக செல்கிறார். அந்த ஆண்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் பணிவிடையோடு, பாலுறவுத் தேவையையும் நிறைவு செய்யும் ஒரு பாலியல் இயந்திரமாக அப்பெண்கள் நடத்தப்பட்டிருக்கின்றனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...