அஸீஸ் எப்போதும் பிறர் நலம் கருதுபவர். தனது ஆழ்ந்த அறிவும், சிந்தனை சக்தியும் கொண்டவர். எப்போதும் கறைபடாத கையாக வாழ்ந்தவர்.
இந்திய வம்சாவளி என்ற மேலான உணர்வைக் கொண்டவர். தொழிலாளர் துயர் துடைக்க பணம் பெறாத மிகப் பெரிய வழக்கறிஞர். 50 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலாளர்களுக்காகவும் இந்திய வம்சாவளியினர்களுக்காகவும் தனது அயராத போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றவர்.
தலைவர்களுக்கெல்லாம் முன்மாதிரியானவர். போராட்டத்தை எப்போதும் முன்னின்று நடத்தி வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்.
அரசியல் தொழிற் சங்கத்துறையில் கலங்கரை விளக்காக இருந்து சமுதாயத் தொண்டில் தன்னை எப்போதும் ஈடுபடுத்தி வந்தவர். பெருந்தோட்டத் துறையில் பலாங்கொடை பெட்டியாகெல தோட்டம், மஸ்கெலியா பனியன் தோட்டப் போராட்டங்களும் அக்கரப்பத்தனை டயகம போராட்டமும் அவரை என்றுமே நினைவு கூரும். 1750 பஞ்சப்படி போராட்டம் 1966ம் ஆண்டு இலங்கை நாட்டையே கதிகலங்க வைத்தது. ஒன்றரை மாதங்கள் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் போராடினர். இது போன்ற சம்பவங்களின் கதாநாயகன் அஸீஸைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது. மிகப்பெரிய செல்வந்தர். ஆனால் ஏழைத் தொழிலாளிகளின் தோழனாக நாட்டில் பயணித்த இவர் பெருமைக்குரியவர்.
1951-1952ம் ஆண்டுகளில மஸ்கெலியாத் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது அஸீஸ் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலிருந்து சிலவற்றை அவதானிப்போம்.
எகிப்திய நாட்டில் பிரித்தானிய சாம்ராச்சியம், அந்த நாட்டு மக்களை கொன்று குவிக்கிறது. பிரித்தானிய இராணுவத்தினர் பயங்கரமாக மக்களை அழித்து வருகின்றனர். அவர்களது நாட்டிலுள்ள சுயஸ் கால்வாயை தனது ஆதிக்கத்தில் வைத்துக் கொள்வதற்காகவும் கப்பல் வாணிபத்தை நிலைநாட்டி சுரண்டலை வெற்றிகரமாக நடத்துவதற்கும் பிரித்தானிய சாம்ராச்சியம் எகிப்தில் குடிகொண்டுள்ளது.
சுயஸ் கால்வாயில் வெளிநாட்டவர் ஆதிக்கம் செலுத்தி அந்த நாட்டை அடிமையாக்குவதில் எம்மைப் போன்ற சிறிய நாட்டினரும் பாதிக்கப்படுவோம்.
ஆச்சரியமான சம்பவங்கள் நடைபெறுவதை நமது வெளிவிவகார அமைச்சு பார்த்துக் கொண்டு இருப்பதையிட்டு நான் கவலை அடைகிறேன். இந்தப் பிரச்சினை சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதிசயிக்கும் முறையில் நடந்த பாரதூரமான சம்பவங்களுக்கான நடவடிக்கையை நாங்கள் எடுத்தாக வேண்டும். இதனால் என்னென்ன பாதிப்புகள் நமக்கு ஏற்படும் என்பதையும் ஆராய வேண்டும். துருக்கியர்கள் சுல்தான் ஆட்சியில் இதனைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தனர். 1932ம் ஆண்டு சுல்தான் அரசுக்கு எதிராக புரட்சி ஏற்பட்டது. எகிப்து சுந்திர நாடானது. துருக்கிய இராச்சியத்திலிருந்தும், சுல்தான் பிடியிலிருந்தும் விடுபட்டது. புரட்சியாளர்கள் கை ஓங்கியது. அதனைக் கண்டிப்பதோடு உடினடியாக பிரித்தானியர் அங்கிருந்து வெளியேற வேண்டும். அத்தோடு அங்கு நடக்கும் மனித கொலையையும் நிறுத்த வேண்டும்.
இவ்வாறு தனது தீர்மானத்தை முன் மொழிந்து பாராளுமன்றத்தில் பேசினார். இலங்கை அரசு சரியான தூதுக்குழு ஒன்றை அனுப்பி பிரித்தானிய அரசாங்கத்திடம் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும் எனவும் கோரினார்.
உலகப் பிரசித்திபெற்ற சுயஸ் கால்வாயை அந்த நாட்டு ஜனாதிபதி கேர்ணல் அப்துல் நஸார் தேசியமயமாக்கி எகிப்து நாட்டின் அரசுடமையாக 1956ம் ஆண்டு ஆக்கினார். அதனால் காலனித்துவ பிடியிலிருந்து எகிப்திய சுயஸ் கால்வாய் தேசியமயமான வரலாற்றுச் சம்பவத்திற்கு கால்கோல் விழாவை ஆரம்பித்து வைத்தவர் அஸீஸ்.
அப்துல் அஸீஸ் 1939ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸின் முதலாவது இணைச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1940ம் ஆண்டு இலங்கை இந்திய காங்கிரஸின் தலைவரானார். இவர் ஆங்கில மொழியில் தலைசிறந்த அறிவாளியுமாவார்.
50 ஆண்டுகள் தொழிற்சங்க அரசியற் துறையில் அளவற்ற சேவைகளை இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு செய்து வந்ததோடு, தொழிலாளர்களின் தோழராகவும் சேவை செய்த பெருமைக்குரியவர்.
தொழிலாளர்களின் பிரச்சினைக்கு முகம் கொடுத்து வந்ததால் அவரை அரசியற் கட்சித் தலைவர்களும் மிகவும் கௌரவமாக மதித்தனர். தொழிலாளர்களின் அன்றாடப் பிரச்சினைகளை ஆராய்ந்து அறிந்து கொண்டதோடு, பேச்சுவார்த்தையில் கலந்து கொள்கின்ற போது புள்ளி விபரங்களை முன்வைத்து பேச்சுவார்த்தையை பெருகூட்டியதோடு அப்பேச்சுவார்த்தையில் வெற்றி வீரனாகத் திகழ்ந்தார்.
மலையக தொழிற்சங்க அரசியலில் ஒரு முடிசூடா மன்னனாகவே அவர் மறையும் காலம் வரை பிரகாசித்தார். அதே நேரத்தில் சர்வதேச தொழிற்சங்கங்களின் மாநாடுகளில் அவரின் குரல் மகுடஞ் சூட்டியே வந்துள்ளது.
பி. எம். லிங்கம்
நன்றி - தினகரன்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...