கருப்புச் சட்டை ஒன்றுகூடல் (கவனயீர்ப்புப் போராட்டம்)
”குழு 24″” (மலையக இளைஞர்கள்)
இடம் : கொழும்பு, காலிமுகத்திடல்திகதி : 24.10.2015 புதன்கிழமை (பௌர்ணமி தினம்)நேரம் : காலை 10.00
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி, கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்படவுள்ள ”கருப்புச் சட்டை”” ஒன்றுகூடலுக்கு (கவனயீர்ப்புப் போராட்டம்) அனைத்து இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு கருப்புச் சட்டை ஒன்றுகூடல் ஒன்றை நடத்த இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படைக் கோரிக்கையை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
1. வாழ்வாதாரத்திற்கு ஏற்ப அடிப்படைச் சம்பளத்தை அதிகரி,
2. தீபாவளி முற்பணததை உரிய நேரத்தில் வழங்கு,
3.கூட்டு ஒப்பந்தத்தை உரிய வகையில் நடைமுறைப்படுத்து,
4.கூட்டு ஒப்பந்தத்தை மீறி, உரிமைகளைப் பறிக்காதே,
5. தோட்டத் தொழிலாளியை கௌரவமாக நடத்து,
ஆகிய கோரிக்கைளை முன்வைத்து இந்த கருப்புச் சட்டை ஒன்றுகூடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளத்தில் இணைந்த இளைஞர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்கின்றனர். வெளிநாடுகளில் தொழிலுக்குச் சென்றாலும், இந்த ஒன்றுகூடலுக்கு உணர்வுபூர்வமாக வெளிநாட்டு வாழ் மலையக நண்பர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
அரசியல் சார்பற்ற, அமைப்புக்கள் சார்ப்பற்ற வகையில் அனைத்துத் தரப்பில் உள்ள இளைஞர்களும் ஆதரவு வழங்கி, உணர்பூர்வமாக ஒன்றிணைந்திருப்பதை அவதானிக்கிறோம். இதுவே எமக்கான முதல் வெற்றியாக கருதுகிறோம். இதனை இன்னும் பலப்படுத்தி, எமது உறவுகளின் உழைப்பை சுரண்டவிடாது, உழைப்பிற்கேற்ற ஊதியைப் பெற்றுக்கொடுக்க இளைஞர்கள் இதனை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலில், அமைப்புக்கள் சார்பாகவும், அரசியல்கட்சிகள் சார்பாகவும் அனைவரையும் அழைக்கிறோம். காலிமுகத்திடலிலுக்கு வந்தவுடன் அமைப்பு, அரசியல் ரீதியான வேறுபாடுகளை மறந்து, இளைஞர் சமூகமாக, உணர்வுபூர்வமாக இணைந்து செயற்பட வேண்டும் என்று இளைஞர்களை அழைக்கிறோம்.
இந்த ஆர்ப்பாட்டம் ஒக்டோபர் 24ஆம் திகதி நடத்தப்படுவதால் ஏற்பாட்டுக் குழுவினருக்கு ”24″” குழு என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தனர். எனவே, இந்த ஆர்ப்பாட்டத்தை ”குழு 24″” ஏற்பாடு செய்வதை உறுதிப்படுத்துகிறோம்.
இணைந்து இளைஞர்களாக இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, மலையகத்தில் காடுகளிலும், மலைகளிலும், உழைப்பை மட்டுமே நம்பிவாழும் எமது உறவுகளைக்கு நம்பிக்கையைக் கொடுக்க ஓரணியில் திரள்வோம். கொழும்பில் உள்ள அனைத்துத் தரப்பினரும், குறிப்பாக பல்கலைக்கழக சிங்கள இளைஞர்களும் இதற்கு ஆதரவு தருவதாகக் கூறியுள்ளனர்.
எமது மக்களின் உழைப்பை சுரண்டுவோருக்கெதிராக யாழ்ப்பாண சொந்தங்களும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கருப்புச் சட்டை ஒன்றுகூடல்
”குழு 24″” (மலையக இளைஞர்கள்)
குறிப்பு :உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பு சுரண்டப்படுவதற்கு எதிராக நடத்தப்படும் இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு உங்களின் ஊடக பங்களிப்பை பெரிதும் எதிர்பார்த்துள்ளோம். இதுகுறித்த செய்திகளை உங்களின் ஊடகத்தில் பிரசுரித்து, ஒலி, ஒளிபரப்பி, இணையத்தளத்தில் பதிவிட்டு, ஒடுக்கப்படும் ஒரு சமூகத்தின் உரிமைக்கு வலுசேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...